-நன்றி – எல்.முருகராஜ் http://www.lankaviews.com/ta
என் முகத்தில் ஆசிட் வீசிய போது சிதைந்து போனது என் முகம் மட்டுமல்ல, என் கனவுகளும்தான், இனிமேலாவது காதலிப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தை அன்பால் நிரப்ப பாருங்கள், ஆசிட்டால் அல்லஞ் என்று அந்த இளம் பெண் தனது உருக்குலைந்த முகத்துடனும், உருக்கமான வார்த்தைகளாலும் பேசியதை கேட்ட போது மேடையில் இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர்.ஆனால் கண்ணீரைப் பெறவோ,யாருடைய கருணையையும் பெறவோ அவர் வரவுமில்லை பேசவுமில்லை.காரணம் அவர் ஒரு சாதாரணமான பெண் அல்ல, மனதில் வீரம் மிகக்கொண்ட தைரிய லட்சுமி.
இந்த ஆண்டிற்கான உலகின் தைரியமான பெண்ணிற்கான விருதை கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றவர். இதற்காக அமெரிக்காவில் அதன் வெளிவிவகாரத்துறை சார்பில் வாஷிங்டன் மாகாண சபையில் நடந்த மாபெரும் விழாவில், நாட்டின் பிரமுகர்கள் பலரும் கூடியிருந்த மேடையில், அந்நாட்டின் முதல் பெண்மணி மிக்கேல் ஒபாமா கையால் விருது பெற்றார்.
விருது பெற்ற கையோடு அவர் பேசிய வார்த்தைகள்தான் மேலே சொன்னது. அவர் பேசிய மேலும் சில வார்த்தைகள் பலரை யோசிக்கவைத்தது. அவை என்ன வார்த்தைகள் என்பதை பார்ப்பதற்கு முன்னால் அவர் யார் என்பதை பார்த்துவிடலாம்.டில்லியை சேர்ந்தவர் பள்ளிக்கு துள்ளியபடி சென்று வந்தவர் படிப்பில், விளையாட்டில் இன்ன பிற துறைகளிலும் ஆர்வமும் திறமையும் கொண்டவர் கூடுதலாக அழகும் மிக்கவர். ஒரு சின்ன நந்தவனம் போல இருந்தவரை, தந்தையின் ஸ்தானத்தில் இருந்து பார்த்து பெருமைப்பட வேண்டிய வயதைக்கொண்ட உறவினர் ஒருவர் வயதையும், தகுதியையும் மீறி லட்சுமியிடம் மோகம் கொள்ள லட்சுமி மிரட்டி, விரட்டி இருக்கிறார். அப்படியே போயிருக்க வேண்டிய அந்த ஆண் என்ற நாகம் உடம்பெல்லாம் பொறாமை தீ பற்றி எரிய விஷத்தை கக்க, தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. அந்த நாளும் வந்தது அனைவருக்கும் அது வியாழன் என்றால் லட்சுமிக்கு மட்டும் மறக்கமுடியாத ஒரு கறுப்பு நாள் அது.
கல்விக்கூடம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று இருந்தவரை விசாரிப்பது போல நெருங்கிவந்த அந்த உறவுக்கார மிருகம் கண்ணிமைக்கும் நேரத்தில் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை லட்சுமியின் முகத்தில் வீசிவிட்டு ஓடிவிட்டது.
இந்த சம்பவம் நடந்த ஆண்டு 2005ஆகும், அப்போது லட்சுமிக்கு வயது 16.முகமும், உடலும் பற்றி எரிய வேதனையால் துடிதுடித்து உருண்டு புரண்ட அந்த பதினாறு வயது சின்னஞ்சிறுமியை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடிய போது அங்கே உயிரைக் காப்பாற்ற முடிந்தது ஆனால் அழகான முகத்தை காப்பாற்ற முடியாமல் போனது.
ஒரு நிலைமை ஏற்பட்டால் ஒன்று ஒளிந்து மறைந்தே தனது வாழ்க்கையை நடத்துவார்கள், வெளியில் வர அவமானப்பட்டு இருட்டிலும் தனிமையிலும் ஒடுங்கிக் கிடப்பார்கள், ஒரு நடைப்பிணமாக வாழ்வார்கள் அதுவும் முடியாத போது தற்கொலை செய்து கொள்வார்கள்.
இந்தியாவில் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகும் சராசரி பெண்களின் நிலமை.
ஆனால் லட்சுமி இந்த நிலையை உடைத்தெறிய முடிவெடுத்தார். தனது கோரமான முகத்துடன் எல்லா இடங்களுக்கும் போய்வந்தார். காரணம் ஆசிட் வீச்சின் கொடூரம் எப்படி இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியட்டும் என்பதற்காக.
கத்தி துப்பாக்கியைவிட கொடூரமான இந்த ஆசிட்டை சாதாரணமாக யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற நிலையை மாற்ற மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்பதற்காக 27ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தார், அதன் அடிப்படையில் நீதிமன்றம் இது பற்றிய ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்டது.
மேலும் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண்கள் ஏதோ தப்பு செய்தவர்கள் போல ஒளிந்து வாழும் நிலமை மாற வேண்டும் அவர்களுக்கு உரிய இழப்பீடு, அரசு வேலை, சமூக அங்கீகாரம், சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தியதன் மூலம் வெற்றியும் பெற்றார்.
முதல் கட்டமாக தன் மீது ஆசிட் வீசியவரை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தந்தார்.
இப்போது 24வயதாகும் லட்சுமி தன்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு அரணாக இருந்து வருகிறார், இனியும் இப்படி ஒரு சம்பவம் நம் நாட்டில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதையெல்லாம் பார்த்த பிறகுதான் இந்த ஆண்டிற்கான உலகின் தைரியமான பெண் என்ற விருதினை இவருக்கு வழங்கி அமெரிக்கா தன்னை கவுரவித்துக் கொண்டுள்ளது.எனக்கு விருதை விட இது தரும் வெளிச்சம் பிடித்திருக்கிறது காரணம் எனக்கு ஏற்பட்ட வலியும், வேதனையும் வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நான் மேற்கொண்டுள்ள விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு இந்த நிகழ்வு உதவும் என்பதால்.இறங்கிய லட்சுமியை அனைவரும் ஓடிப்போய் கைகுலுக்கி பாராட்டினார்கள், பெண்கள் கட்டி அனைத்து முத்தமிட்டு பாராட்டினார்கள். அப்போது அந்த அவையிலேயே அழகான முகமாய் பிரகாசித்தது நமது தைரிய லட்சுமியின் முகம்தான்.