பெண்கள் எதிர்ப்பு தினம், 365.25

 புதியமாதவி, மும்பை

பெண்கள் தினம் , மார்ச் 8
——————————————————-
பெண்கள் எதிர்ப்பு தினம், 365.25

மார்ச் 8 இல் காஷ்மீர் பெண்களின் வலிகளையும் அவர்களது   கொடுமைகளையும் கட்டுரையாக குறுகிய காலத்தில் ஊடறுவுக்கு எழுதி அனுப்பிய புதியமாதவிக்கு எமது  நன்றிகள் 

kashmir

இப்பெண்களின் மார்பகங்கள் அடிவயிற்றில் காயங்கள் ஆறாமல்தான் இருந்தன. கிழிந்த யோனிகளின் அவலம் இக்கொடுமையைக் கதறலுடன் காட்டியது என்றால் கர்ப்பிணி பெண்ணும் இக்கொடுமையிலிருந்து தப்பிக்கவில்லை என்பதை அவள் இச்சம்பவத்திற்குப் பின் பிரசவித்த அவள் குழந்தையின் உடைந்துப் போன எலும்புகள் உறுதி செய்தன

மகளிர் தினம் மார்ச் 8. அகிலமெங்கும் பெண்கள் கொண்டாடுகிறார்கள். வாழ்த்துகளைப்  பரிமாறிக்கொள்கிறார்கள். எழுச்சியுடனும் வரலாற்றுப் பார்வையுடனும் அணுக வேண்டிய மகளிர் தினம் வெறும் சடங்காக  மாறிக்கொண்டிருக்கும் சூழலில் பெண்கள் எதிர்ப்பு தினத்தின் குரல்எல்லைகள் தாண்டி  ஆயுதங்களின் காவல்களைத் தாண்டி ஒலிக்கிறது. நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் நடந்த சம்பவங்களில் வடக்கும் தெற்கும் வித்தியாசப்படவில்லை. ஈழத்தின் கொடுமைகளுக்கு நிகரான கொடுமைகளின் கதை காஷ்மீர் மண்ணிலிருந்து தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.

1991களில் ஒலித்த அந்தக் குரலை இந்திய ஊடகம் தன் உரத்தக் குரலால் உடைத்து நொறுக்கியது. அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை, எங்கள் இந்திய இராணுவத்தை உலக அரங்கில் இழிவுப்படுத்தும் நோக்கத்திலும் காஷ்மீரி மக்களுக்கு இந்திய அரசின் மீது வெறுப்பு ஏற்படுத்தும் நோக்கத்திலும் திட்டமிட்டு பரப்பும் வதந்திகள் இவை, இதில் எல்லாம் எதுவும் உண்மை இல்லை ” என்றது அகில இந்திய வானோலி. நம்பத்தான் செய்தோம். அதைப் பற்றி எதுவும் பேசவோ நினைக்கவோ நமக்கு நேரமில்லை. மாதவிடாய் வயித்துவலியை எழுதி எழுதி பெண்ணீயவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களுக்கு இந்தப் பெண்களின் அழுகுரலோ இருபது வருடங்களுக்கும் மேலாக அவர்கள் சுமக்கும் ஆறாதகாயத்தின் வடுவோ எதுவும் பாதிக்கவில்லை. அப்படி பாதிக்கவில்லை என்பதைக் குறித்தோ வெட்கமோ வேதனையோ கூட பாரதமாதாவுக்கு இல்லை.
kashmir
காஷ்மீரின்  ரீநகரிலிருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மலைப்பகுதி குனன் போஸ்பொரா. (KUNAN POSHPORA)அக்கிராமத்தில் வசிக்கும் மக்களிடம் ஆயுதம் ஏந்திய கலகக்காரர்களைப் பற்றி விசாரிக்க இந்திய இராணுவம் நுழைகிறது. விசாரணை என்ற பெயரில் கிராமத்தில் இருந்த ஆண்கள் அனைவரும் இழுத்துச் செல்லப்படுகிறார்கள். 1991, பிப்ரவரி 23ல் (4th Rajpitana rifles of the 68 Mountain division) அக்கிராமத்தின் பெண்கள் தனித்து விடப்படுகிறார்கள். வன்புணர்ச்சி ஒவ்வொரு பெண்மீதும்… சற்றொப்ப 53லிருந்து  100 பெண்கள் வரை வல்லாங்கு செய்யப்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.  இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை இக்கொடுமையை அப்பெண்கள் அனுபவித்தார்கள். 13 வயது பெண் முதல் 82 வயது மூதாட்டி வரை எவரையும் விட்டு வைக்கவில்லை அந்த இரவு. அவர்கள் கதறல் அந்த மலைப்பகுதியில் எதிரொலித்தது. பலர் சேர்ந்து ஒரு பெண்ணை வல்லாங்கு செய்யும் மிருகத்தனங்கள் அரங்கேறியது. .  கதறினோம் நாங்கள், எங்களைச் சுற்றி இரண்டாயிரம் சீருடை அணிந்த மிருகங்கள்.. எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை..” என்று தொடர்கிறது
அவர்களின் பதிவுகள். 1000 இராணுவ வீரர்கள் செய்த இந்த மிருகச் செயலை எதிர்த்து ஐ. நா., மனித உரிமை அமைப்பும் அம்னெஸ்டிக் மனித உரிமை அமைப்பும் தொடர்ந்து போராடி வருகின்றன.

இந்திய தலைநகரில் மருத்துவக்கல்லூரி மாணவி வல்லாங்கு செய்யப்பட்ட  சம்பவத்தால் இந்தியாவே கொதித்து எழுந்தது. இந்திய தலைநகரம் போர்க்கோலம் பூண்டது ஒரு வரலாற்று நிகழ்வு தான். அதன் பின் இந்தியப் பெண்களின் பாதுகாப்பு குறித்து சட்டமியற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அத்துடன்,  பொது இடத்தில் ஓரு பெண் எம்மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை விவாதப் பொருளாக்கிய அறிவுஜீவிகளுக்கு அறிவுரை கூறும் வகையில் “எப்படி ஆடைகள் அணிய வேண்டும் என்று அறிவுரை கூறுபவர்களே,
எம்மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்று உங்கள் புதல்வர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்” என்ற குரல் உரத்து ஒலிக்க ஆரம்பித்தது.  இச்சம்பவங்களைப் பெருமையுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை எனினும் இச்சம்பவம் குறித்து குனன் போஸ்பொரா பெண்களும் அவர்கள் சார்பாகவும் எழுந்த எழுகின்ற கேள்விகளுக்கும் என்னிடம் எந்தப் பதிலும் இல்லை.

ஃப்ரெண்ட்லைன் மற்றும் டெலிகிராஃப் இதழ்களில் அவர்கள் வைத்திருக்கும் கேள்விகள் :

“டில்லி பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்ணின் அனுபவம் ரொம்பவும் கொடுமையானது. அந்தக் கொடுமையான அனுபவத்தை நாங்கள் அறிவோம். ஆனால் அதைவிட கொடுமையை ஒட்டு மொத்தமாக ஒரு கிராமத்தின் பெண்கள் அனைவரும் அனுபவித்தப்போது எங்களுக்காக ஒரு அனுதாபக்குரல் கூட எழவில்லையே! நாங்களும் இந்தியப் பெண்கள் இல்லையா? … குற்றம் செய்ததே இந்திய இராணுவம் என்பதால் எங்கள் கதறல் எவர் காதிலும் விழவில்லையா? எங்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்? ”  HER SUFFERING (DELHI INCIDENT) SHOCKED US DEEPLY BUT EQUALLY SHOCKING FOR US THE SILENCE OF INDIA’s CIVIL SOCIETY ABOUT KUNAN-POSPPHORA.

இக்கொடுமை நடந்தப்பின் அம்மக்கள் உடனடியாக இந்திய இராணுவ மேலதிகாரியிடம் முறையிட்டார்கள். அவர் அப்பகுதி காவல்நிலைய அதிகாரியை விசாரிக்கச் சொன்னார். காவல்நிலைய அதிகாரியோ அப்போது விடுப்பில் போய்விட்டார். விடுப்புக்குப் பின் பணிக்கு வந்தவர் வேறிடத்திற்கு மாற்றலாகி போய்விட்டார். 

சம்பவம் நடந்து இருபது வருடங்களுக்கு மேலாகிறது. தொண்டு நிறுவனங்களும் ஊடகங்களும் அக்கிராமத்திற்கு வருகிறார்கள், அப்பெண்கள் மறக்க நினைக்கும் அக்கொடுமையை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்திவிட்டு தங்கள் வேலையை முடித்துக் கொண்டு போகிறார்கள். வருவதும் போவதும் தொடர்ந்து நடக்கிறதே தவிர இவர்களுக்கான நீதி இமயத்தின் பனிக்கட்டியாய் உறைந்து கிடக்கிறது. பல்வேறு தருணங்களில் இப்பெண்கள் இச்சம்பவம் குறித்து பேசுவதை தவிர்க்கவே விரும்புகிறார்கள். இக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தப் பெண்களைத் திருமணம் செய்ய யாரும் முன்வரவில்லை. பதினாறு வயதுப் பெண்ணை 50 வயதுக்கும் மேற்பட்ட 3 குழந்தைகளுக்கு தகப்பனானவுடன் திருமணம் செய்து வைப்பதை தவிர இப்பெண்களுக்கான திருமண வாசல் அடைப்பட்டுவிட்டது. இக்கிராமத்தைச் சுற்றி இருக்கும் மற்றவர்களின் பார்வை இவர்களின் காயத்தை கொத்தி தின்னும் கழுகின் பார்வையாகவே இருக்கிறது. இந்த 24 வருடத்தில் இக்கிராமத்திலிருந்து 2 பேர் மட்டும் தான் பல்கலை கழகத்தை எட்டிப்பார்த்திருக்கிறார்கள். இவர்கள் வசிக்கும் இடத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படிக்கும் வசதி இருக்கிறது, அதற்கு மேல் படிப்பைத் தொடர வேண்டும் என்றால் அருகில் இருக்கும் ஊருக்குச் சென்றாக வேண்டும்,. அப்படிச் சென்றால் இவர்கள் அனுபவித்த அக்கொடுமையே இவர்களை நிழல் போல துரத்தி வருகிறது இச்சமூகத்தில்.

இச்சம்பவம் நடந்தவுடன் இந்திய அரசு சொன்னதெல்லாம் பொய்யானவை என்பதை அண்மையில் இச்சம்பவம் நடந்து 24 வருடங்கள் கழித்து இச்சம்பவத்தை விசாரிக்க வந்த அதிகாரி மனம் திறந்து பேசி இருக்கிறார். அவர் பேசி இருக்கும் உண்மை நம்மைச் சுடுகிறது. ஒரு இந்தியப் பெண்ணாக என் போன்றவகர்கள் தலைகுனிந்து நிற்கிறோம்.

இச்சம்பவத்தை முதலில் விசாரிக்க சென்ற குப்வாரா டெபுடி கமிஷனர் எஸ். எம். அசின் ( S M YASIN) சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிடுகிறார். இச்சம்பவத்தைப் பற்றி எழுதும் போது THE ARMY MEN BEHAVED LIKE BEASTS என்று குறிப்பிடுகிறார். அசின் தன் விசாரணையை முடித்து அனுப்பியவுடன் வேறொரு பகுதிக்கு மாற்றப்படுகிறார். அந்தப் பகுதியிலிருக்கும் இவருக்கு வேண்டிய நண்பர், இராணுவத்தில் பணிபுரிபவர் அசினை எச்சிரிக்கின்றார். என்னவென்று?  “உண்மையை நீ சொல்லிவிட்டாய். இந்திய இராணுவத்தின் கண்காணிப்பு வளையத்தில் இப்போது நீ. எச்சரிக்கையாக இரு. உனக்கு எதுவும் நடக்கலாம்” அவர் சொன்னது பொய்யல்ல. அசின் உண்மையை வெளியில் சொல்லக் கூடாது என்பதற்காக அசினை மிரட்டினார்கள். மிரட்டினால் பணியவில்லையே என்று IAS பதவி கொடுப்பதாக ஆசைக் காட்டினார்கள்.  இச்சம்பவத்தின் பின்னணியை விவரிக்கும் அசின், ” காஷ்மீர் கவர்னராக இருந்த ஜி. சி. செக்‌ஷேனா எங்கள் அனைவரையும் அழைத்து இது குறித்துப் பேசினார். அன்று காலை வானொலியில் சொன்னார்கள். வஜாகட் ஹபிபுல்லாவின் அறிக்கையின் படி ” இந்திய இராணுவத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன” என்று சொன்னார்கள். அதைக் கேட்ட அசின் , தான் இன்னும் தன் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவில்லையே, எப்படி அரசு இந்தக் கருத்தைச் சொல்கிறது”
என்று கேட்டதாகப் பதிவு செய்திருக்கிறார்.

Kunan-Poshpora, Kashmir

இச்சம்பவம் நடந்து 3 மாதங்களுக்குப் பின் இந்த அரசு இப்பெண்களை மருத்துவச்சோதனைக்குள்ளாக்கியது! அப்போதும் இப்பெண்களின் மார்பகங்கள் அடிவயிற்றில் காயங்கள் ஆறாமல்தான் இருந்தன. கிழிந்த யோனிகளின் அவலம் இக்கொடுமையைக் கதறலுடன் காட்டியது என்றால் கர்ப்பிணி பெண்ணும் இக்கொடுமையிலிருந்து தப்பிக்கவில்லை என்பதை அவள் இச்சம்பவத்திற்குப் பின் பிரசவித்த அவள் குழந்தையின் உடைந்துப் போன எலும்புகள் உறுதி செய்தன. எனினும்… இந்த மருத்துவச்சோதனை மிகவும் காலம் கடந்து நடத்தப்பட்டதால் சட்டம் அதையே காரணமாக்கி நிராகரித்தது.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு தாயின் 18 வயது மகன், வீட்டை விட்டு வெளியேறினான், எல்லை தாண்டினான். ஆயுதப் பயிற்சிகள் பெற்று பழிவாங்கும் நோக்கத்துடன் மீண்டும் தன் ஊருக்குத் திரும்பினான். அவனை என்கவுண்டரில் போட்டு தன் கடமையை நிறைவேற்றிக்கொண்டது இந்திய அரசு.

ஐ. நா. அறிக்கை 1992ல் மட்டும் காஷ்மீர் மண்ணில் 982 பெண்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு இரையாகி இருக்கிறார்கள். (gang rape) என்ற விவரத்தைப் பதிவு செய்திருக்கிறது.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட காஷ்மீர் உயர்நீதி மன்ற  நீதிபதி அடிப்படையான விசாரணைகள் கூட இந்த வழக்கில் அரசு தரப்பிலிருந்து நடக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

எங்கள் பெண்களுக்கு நீதி வேண்டும் என்ற குரல் அடங்கவில்லை. அதிலும் குறிப்பாக டில்லி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்குப் பின் காஷ்மீரின் குரல் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. 23 வருடங்கள் கழித்து இச்சம்பவத்தை விசாரித்த அதிகாரி அசினும் உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார். இச்சம்பவம் நடந்த நாளை பிப்ரவரி 23 ஐபெண்கள் எதிர்ப்பு தினம் என்று நினைவு கூர்ந்து  பெண்களுக்கான நீதியை நோக்கிய பயணம் தொடர்கிறது.

பெண்கள் தினத்தில் பெண்கள் எதிர்ப்பு தின போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம். சாதி, மதம், நாடுகளின் எல்லைகளைத் தாண்டி பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்காகவும் நம் பயணம் தொடரட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *