எஸ்.பாயிஸா அலியின் இரண்டு கவிதைகள்
அந்தக்கணங்கள் அழகானவை
வெகு அபூர்வமானவை
நம் பிஞ்சுக்குழந்தையின் பூஞ்சிரிப்புக் கீடானவை
ஞாபகிக்குந்தோறும் உணர்வுகளுக்குள்
மெல்லிய பரபரப்பையும் தவிப்பையும் பிரவாகிக்கச் செய்பவை
சாடிக்குள் அடைபடாத இளமூதாப்புகை
மேலெழுந்து வானமுகடுகளுக்குள் புதைகிறது.
ஒருபோதுமே அறியப்படாத அதன்
பிரமாண்டங்களை…..
ரகசியங்களை…..
மர்மங்களையெல்லாம் புகை தன் சுருள்களுக்குள்
அள்ளியள்ளி நிறைக்கிறது.
சூரியக்கடலை முழுசாய் உறிஞ்சிய சூரியகாந்தியென
மஞ்சளாய்ப் பூரிக்கும் என்னிதயமோ
வாடாது
இனியோருபோதுமே.
கடல்முற்றம்
ஒளிகசியும் கத்தரிப்பூக்கண்ணாடி ஜன்னலை
மெல்லத் திறக்கிறேன்.
கடல்முற்றத்தின் நீரலைகள் யாவுமே
ஊசிக்காற்றலையாய் உருமாறி
சரேலென முகம் மோதிற்று.
முன்நெற்றி வரைக்குமாய் படர்ந்த முந்தானை
அதனோடு போராடித்தோற்று
படபடத்துக் கீழிறங்கி பின்கழுத்துக்குள் ஒடுங்கிற்று.
உடல் சிலிர்த்து மனசுமுழுக்க பனித்தூறல்.
இதே ஜன்னலூடேதான் முன்னரும்
எரிகாற்றென எதிர்கொண்டிருந்தேன்
முந்நூற்றுச்சொச்சம் பேரைத்தின்று தீர்த்த சுனாமியை………….
தொடராய் கடற் தளத்திலிருந்து எனதூருக்கூடாய்
சம்பூர்க்காடுகள் வரைக்குமாய் ஏவப் பட்டதில்
வீட்டுச்சுவர்களையும் துளையிட்ட சில தீப்பொறிகளை.
பிறிதொரு ரம்ஸான் இரவில்
அனேகப்பெண்கள் நெஞ்சப் பரப்பெங்கிலும்
அச்சத்தைக் கீறிச்சென்றவனின் தனித்த காலடிகளையும்
அதைத்துரத்தி வந்த ஆத்திரக் கொந்தளிப்புகளையும்
எந்த வல்லரசின் யுத்தக்கப்பலோ தெரியவில்லை
இரண்டுமூன்று இரவுகளாய்……
யுத்தம் தீர்க்கப்பட்விட்டதாய் சொல்லப்ப்டும்
கீழ்க்கரையோரமாய்……
கலியாணவீட்டின் மின்னொளி அலங்காரங்களோடு
மிடுக்காய் மிதந்தொளிர்கிறது
அதன் பிரமாண்டங்களுக்குள் கரைந்தவளாய் நினைக்கிறேன்…..
‘வெக்கை நிறைந்த என் சமையலறைக்குள்
நெற்றியிலும் கழுத்திலும் பெருக்கெடுத்தோடிய வியர்வையை
முந்தானையால் ஒற்றியபடியே நான் துருவிக் குவித்த
தேங்காய்ப்பூக் குவியலை நிறைக்கவே
இது போதாமலிருக்குமாக்கும்.’