கலாவதி கலைமகள் (இலங்கை)
‘பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக குரல்கொடுப்போம்’
நவம்பர் 25 தொடக்கம் டிசம்பர் 10 வரையான காலப்பகுதியானது பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் செயல்வாதத்துக்கான 16 நாட்களாக கடந்த சில தசாப்தங்களாக உலகெங்குமுள்ள பலவித அமைப்புக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
1981இல் கொலம்பியாவில் நடாத்தப்பட்ட இலத்தீன் அமெரிக்கப் பெண்நிலைவாதிகளின் மாநாட்டில் நவம்பர் 25ஆனது பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிரான தினமாகத் தீர்மானிக்கப்பட்டது. பின்னர் 1991 இல் பெண்களின் பூகோளத் தலைமைத்துவத்துக்கான மையமும், பெண்கள் – வன்முறை மற்றும் மனித உரிமைகளுக்கான பெண்களின் பூகோள நிறுவனமும் இணைந்து 16 நாள் செயல்வாதத்தை அறிவித்தன.
1999இல் ஐநாசபையின் பொதுச்சபை தீர்மானம் 54\134 இன்படி நவம்பர் 25ஆனது பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான தினமாக அறிவிக்கப்பட்டது.
16 நாள் செயல்வாதமானது பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிரான தினமான 25இல் ஆரம்பித்து சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10இல் முடிவடைவதானது பெண்களுக்கெதிரான வன்முறைகளும் மனிதஉரிமை மீறல்களே என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. மேலும் நவம்பர் 29ஆனது சர்வதேச மனிதஉரிமைக் காப்பாளர்களான பெண்களுக்கான தினமாகவும் டிசம்பர் 1ஆனது சர்வதேச எயிட்ஸ் தினமாகவும் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தவகையில் தெற்காசிய – பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கெதிரான செயல்வாதத்துக்கான தினமாக நவம்பர் 30 ஆனது தெற்காசியப் பெண்கள் அமைப்புக்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
‘மூடிக்கிடந்த கதவுகள் முற்றுகை தளர்ந்தன
தேடித்தேடி அலுத்த வாழ்வில் பாதை ஒன்று தெரியுது
யுகங்களின் மௌனத்தை இன்று நாம் கலைக்கின்றோம்
சேருவோம் தோழி நாம் சோர்வகற்றிச் சேருவோம்
சேருவோம் தோழி நாம் சோர்வகற்றிச் சேருவோம்’