எஸ்.பாயிஸா அலி
கிண்ணியா
மூக்கும்முழியுமாய் குடும்பத்தில் அவன்மட்டுந்தான் பேரழகு
ஆனாலும் 2ம்மாதம் முகம்பார்த்துச் சிரிக்கவில்லை
கழுத்தும் நேராய் இருந்ததில்லை
சளியும்காய்ச்சலும் பின் வெட்டிவெட்டி இழுக்கும் வலிப்புமாய்
அடிக்கடி சுகயீனம்.
ஆஸ்பத்திரியும் வீடுமென……
கண்ணீருஞ் சோறுமென……
அவள் ஒடிஓடியே உடைந்துபோனாள்.
மின்விளக்கை இமைவெட்டிவெட்டிப் பார்ப்பான்
காகங்களோடு கரைவான்
கோழிக்குஞ்சுகளோடு நடனமிடுவான்
அவனழகில் கரைந்து அள்ளியெடுத்து முத்தமிடுகையில்
என்முகம் முழுக்க எச்சிலை வழியவிட்டுச் சிரிப்பான்
மார்பை விரல்களால் நசித்து உணவுதேடுவான்
‘’பரம்பரையில் இருக்குதா….’’
‘’மூளைமுடக்குவாதமாயிருக்கலாம்…..’’
‘’நாய் பூனைக்கிருமிகள்
தொப்பூழ்நாண் மூலங்கூடத் தொற்றியிருக்கலாம்’’
‘’ஒருபக்க மூளைக்கலங்கள் செத்திருக்கவும் கூடும்’’
மருத்துவர் அவள் இதயத்தசை கீறிக்கிளறிப்
புதிதுபுதிதாய் மருத்துவம் பயின்றனர்
ஆசையாய் வெளியே அழைத்துப்போகையில்
பொதுஜனம் விநோதமாய் மொய்ப்பதாய்
நொருங்கிப்போகிறாள்
‘’பெரியபடிப்பெல்லாம் வேணாம்…அவன் தேவைகளை அவனே நிறைவேற்றுமளவுக்காவது……’’.முடிக்கமுடியாது விம்முகிறாள்
‘’ஒருபக்கற் பம்பஸுக்கும் உதவாத குடும்பம்…..’’
புகைகிறாள்
ஆனாலும் அவன் வளர்ந்து கொண்டேயிருக்கிறான்
இயல்பேயற்ற இயல்புகளுடன்
அவன் தாயின்…….என் ஒரே தங்கையின்…..
கண்களினோரம் பெருஞ்சமுத்திரமொன்றை வளரவிட்டபடி.