கெகிறாவ ஸலைஹா
நெஞ்செல்லாம் வலித்தது எனக்கு
நெடுஞ்சாலைப் புனரமைப்பாம்
பெருமலையை வீழ்த்தினாற்போல்
பேரிரைச்சலோடு வீழ்த்தினர்
பூப்பூத்துச் சிரித்த
தெருவோர வாகை மரத்தை.
கூத்துப் பார்க்க ஓடிய சிறார்கள்
கூப்பாடு போட்டுச் சொல்லினர்
பல கதைகள்.
கூடுடைந்த கவலையில்
ரீங்காரித்த குளவிகள்
குத்திப் போயினவாம்
குழுமியிருந்தோரை.
குஞ்சுகளைக் காணாது
சித்தம் குலைந்தலைந்த
கிளியைப்பிடித்து வந்து
வீராதீரம் பேசினானாம் ஆங்கொருவன்.
பழங்காலக் கதைகளில் உலவும்
பசிகொண்ட எச்சிற் பிசாசுகள்
பிராண்டிப்போக
பிரளயம் கிளம்பிற்று மனப்பூமியெங்கணும்…
வருஷம் வருஷமாய் உயிர்வாசம் செறிந்த
தண்டு
கேட்பாரற்றுக் கிடந்தது சீவனின்றி.
அது கம்பீரமாய் நின்றவிடத்தே
இன்று நிலவும் பாலைவன வெற்றிடத்தை
இட்டு நிரப்பிடுமா
கறுப்பாய், அகலமாய் நீளும்
நம் ‘கார்பெட்’ போட்ட வீதிகள்…..?