இசைப்பிரியாவுக்கு இதயத்திலிருந்து….
ஒரு மானுட வதை
மகளே…….
பிறக்கும் போது யாருக்கும்
பிறப்பின் அருமை தெரிவதில்லை
நீ பிறந்த போதும் அப்படித்தான்.
நீ மட்டுமல்ல…
லும்பினியில் மாயாவின் மடியில்
சித்தார்த்தன் பிறந்தபோதும்
அவன் பிறப்பை
யாரும் உணரவில்லை….
மாட்டுத் தொழுவத்தில்
மரியாளின் மடியில்
உதித்தபோது…
ஏசுவையும் எவரும்
கண்டுகொள்ளவில்லை….
மக்காவில் நபிகள் பிறந்து
40 வயதாகும் வரை அவர் பெருமை
யாருக்கும் புரியவில்லை…
சரவணப் பொய்கையில்
தாமரைப் பூக்களாய் தோன்றிய போது
சூரனை வதம் செய்ய வந்தவன் என
முருகனை யாரும் நினைக்கவில்லை
அப்படித்தான்…..
நீ பிறந்தபோதும்
உலக மனசாட்சியை நீ
உலுப்புவாய் என்றோ
தமிழர்களின் வரலாறாய்
மாறுவாய் என்றோ
யாரும் நினைக்கவில்லை
ஒரு பெண்ணாக அல்ல
ஒரு தாயாக நான்
துடிக்கிறேன்…..
நீ வதைக்கப்பட்டு
சிதைக்கப்பட்டு நான்கு ஆண்டுகள்….
மன்னம்பேரி… கோணேஸ்வரி…கிரிசாந்தி
வரிசையில் நீ
இப்போதும்
அவர்கள் சொல்கிறார்கள்
உன் மரணம் பொய்யென்று..
நெறி பிறழ்ந்த பிறவிகளின்
கைகளில் நீ
கசங்கினாய்….
குருதி குடிக்கும்
அவர்களின் பசி
இன்னமும் தீரவில்லை
இனிமையான இசையாய்
இதயங்களில் இறங்கிய உன்குரலை
உள்வாங்கினோம்…
நீ …இறுதியாய்
அழைத்த குரல் இப்போது தான்
உலக முற்றத்தை வந்தடைகிறது….
தமிழனின் வலியை, வேதனையை…
வெளியே சொல்ல முடியாத
துயரங்களை
நீ ஒற்றை ஆளாகவே
உணர்த்தியுள்ளாய்…
மகளே…..
உனக்கு மட்டும் நேர்ந்த
அவலமல்ல இது…
உலகிலுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும்
இழைக்கப்பட்ட அநீதி…
இனத்தை மொழியை
மதத்தை கடந்து….
ஒரு மானுட வதை என்பது
உணரப்பட வேண்டும்…
நிச்சயமாக….
நிச்சயமாக……
மகளே …..
இது நிகழும்.
– ஆதிலட்சுமி – குளோபல் தமிழ்ச் செய்திகள்
.
மகளே…..
உனக்கு மட்டும் நேர்ந்த
அவலமல்ல இது…
உலகிலுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும்
இழைக்கப்பட்ட அநீதி
கவிதைக்கு நன்றி ஆதி லட்சுமி.இசைப்பிரியாவின் மரணத்துக்குப்பின்தான் அவர் எங்கள் உறவினர் என்பதே எனக்கு தெரிந்தது.தர்மம் வெல்லும் என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை