‘நம்பிச் சென்றேன் இறுதியில் இப்படிச் செய்துவிட்டார்கள்’
வேராவில் கிராமத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவரின் மனக்குமுறல் –
‘ஒரு மாலைப்பொழுதில் மருத்துவ மாது ஒருவர் எனது வீட்டுக்கு வந்து, எனது ஐந்து வயதுக்குட்பட்ட பெண்பிள்ளையின் நிறை பார்க்க வேண்டும் எனவே கிளினிக் கொப்பியுடன் நாளை ஆசுப்பத்திரிக்கு வருமாறு கூறினார். அப்போது நான்; எனது மகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதால் நிறை பார்க்க வேண்டியதில்லை எனக் கூற அதற்கு அவர் இல்லை கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து பெரியாட்கள் வருகினம். அவைக்கு எல்லாம் தெரியும் நீர் வாரும் உங்களுக்குத் தான் நல்லது என்றார். நானும் இது நல்ல சந்தர்ப்பம் என்று நம்பிச் சென்றேன் இறுதியில் இப்படிச் செய்துவிட்டார்கள்’
இது கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட வேராவில் கிராமத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவரின் மனக்குமுறல்.
கடந்த ஆவணி மாதம் 31ம் திகதி கிளிநொச்சி வேராவில் அரசினர் வைத்தியசாலையில் 50 இளம் தமிழ்த்தாய்மாருக்கு கட்டாயத்தின் நிமிர்த்தம் கருத்தடைச் சிகிச்சை அளிக்கப்பட்டு இன்றுவரை அதிகம் கவனம் கொடுக்கப்படாத ஒரு சம்பவம் தொடர்பில் நமது முரசொலி தனக்குக் கிடைத்த தகவல்களை பதிய விழைகின்றது.
வேராவில்,கிராஞ்சி, வலைப்பாடு,உமையாள்புரம்,மலையாளபுரம் போன்ற கிளிநொச்சியின் பின்தங்கிய கிராமங்களில் பிள்ளைகளின் போசணைக்குறைபாடு தொடர்பிலான மருத்துவமுகாம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட ஐம்பது தாய்மாருக்கு அவர்களது சம்மதமின்றியும் கணவர்மாரின் அனுமதி இன்றியும் சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்ட துயுனுநுடுடுநு எனும் கருத்தடை ஊசி ஏற்றப்பட்டுள்ளது. இக் கருத்தடை ஊசியைப் பாவிப்பதற்கு இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் பல கருதத்தக்க பக்கவிளைவுகள் இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தும் இவ் கருத்தடைசிகிச்சை முகாமுடன் தொடர்புடைய மருத்துவர் ஒருவர் யாழ்.ஆயர் அவர்களைச் சந்தித்த வேளையில் குறித்த கருத்தடை ஊசி மலையகப்பகுதியில் முன்னர் பாவிக்கப்பட்ட போது ஒவ்வாமை காரணமாக ஒரு தாய் மரணமடைய நேர்ந்ததாகவும் அதனால் தற்காலிகமாக தடைசெய்யப்பட்ட இவ் ஊசியை பின்னர் பாவிக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். உண்மைநிலை குறித்து அறிய நமது முரசொலி சம்பந்தப்பட்ட மருத்துவ வட்டாரங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.