வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் அமைப்பான ‘எம்.ஆர்.ஜி இண்டர்நேசனல்’ எனப்படும் சிறுபான்மையின உரிமைகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இலங்கை படையினர் மேற்கொண்ட பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களில் ஒரு குறித்த போக்கைக் காணக்கூடியதாக இருப்பதாகவும், இதற்கு வடக்கில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னமும் முக்கிய காரணம் எனவும் இவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் போர் முடிவடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், மோசமான பாதுகாப்பின்மையையும் எதிர்கொள்வதாக இவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
போர் காரணமாக தமது கணவர்மாரை இழந்துள்ள ஆயிரக்கணக்கான பெண்களுக்கு எதிராக பாலியல் வன்செயல்கள் முதல் அவர்களின் காணிகள் அபகரிக்கப்படுவது வரை எதிரான பல்வேறு முறைகேடுகள் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கில் காணப்படுகின்ற மிகவும் அதிகமான இராணுவ பிரசன்னமும் இதற்கு ஒரு காரணம் என்று தாம் கண்டறிந்துள்ளதாக இவ்வமைப்பின் இயக்குனர் மார்க் லட்டிமர் தெரிவித்துள்ளார்.
‘பெருமளவிலான சிறிலங்கா படைத்தரப்பினரின் இருப்புக் காரணமாக அந்த பிராந்தியம் பெருமளவில் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குறிப்பாக தமிழ்ப் பெண்களும், சில இடங்களில் முஸ்லிம் பெண்களும் மிகவும் மோசமான பாதுகாப்பின்மையை எதிர்கொள்கிறார்கள்’ என்றும் மார்க் லட்டிமர் பி.பி.சியிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பில் தாங்கள் மேற்கொண்ட ஆய்வுக்கு பல வகையான ஆதாரங்களை திரட்டியதுடன், மன்னார், திருகோணமலை போன்ற இடங்களில் வாழும் சிறுபான்மையின பெண்களை நேரடியாகச் செவ்வி கண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘2012ஆம் ஆண்டில் ஒரேயொரு மாதத்தில் இளம்பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு அல்லது பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளான 56 சம்பவங்கள் யாழ் வைத்தியசாலையில் பதிவாகியுள்ளன.
அனுமானத்தில் அல்லாமல் ஆதாரங்கள் மற்றும் பதிவுகளின் அடிப்படையில் அங்கு பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்து வருவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
சிறுபான்மைப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இந்த எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து வந்திருப்பதை நாங்கள் புள்ளிவிவரங்கள் வாயிலாக கண்டிருக்கின்றோம்.
இவை குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இலங்கை படையினர் மேற்கொண்ட பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களில் ஒரு குறித்த போக்கைப் காணக்கூடியதாக இருந்தது’ என சிறுபான்மையின உரிமைகளுக்கான சர்வதேச அமைப்பின் இயக்குநர் மார்க் லட்டிமர் மேலும் தெரிவித்துள்ளார்.