ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 22 வருடங்கள்

sivaramani

சிவரமணி  யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியை பிறப்பிடமாக கொண்டவர் சிவரமணி மிக இளையவராயிருந்போதே எண்பதாம் ஆண்டுகளின் முற்பகுதியில் தந்தையார் இறந்துவிட்டார் சிவரமணி சுண்டிக்குழி மகளிர் கல்லூரியிலும் பின்னர் வேம்படி மகளிர் கல்லூரியிலும் கற்றவர். 1987ம் ஆண்டு யாழ் பல்கலைகழகத்தில் கலைப்பிரிவிற்கு அனுமதி பெற்ற அவர் அரசறிவியல், ஆங்கிலம் மொழியியல் ஆகிய பாடங்களை கற்றார். பொது கலைமாணி இறுதிப் பரீட்சைக்குத் தோற்ற முன்னரே அவரது வாழ்வு முடிந்தது. சிவரமணி ஆக்கத்தில் மாத்திரமன்றி ஓவியம், இசை,முதலியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

அவரது நினைவாக அவரின்  தலைப்பிலிக் கவிதை ஒன்று

மாலை நேரங்களில்

எல்லாச் சுமைகளும் அதிகரித்துப் போய்விடும்

செத்துப்போன பகல்களின் மீது
தவிர்க்க முடியாதபடி
உரசிக் கொண்டிருந்து ஒளியும் வெப்பமும்
சிலேட்டில் கிறுக்கப்பட்ட எழுத்துக்களைப் போன்று
அடையாளமற்று அழிந்து மறையும்போது
எனது மூச்சை
எண்ணி எண்ணி வெளியே விடுவது
நேரத்தை போக்க மட்டுமல்ல

விளக்கின் அருகில்
ஈசல்கள் ஒவ்வொன்றாக விழுந்து இறந்து கொண்டிருந்தன
எதை எண்ணுவது புத்திசாலித்தனம்-
ஈசல்களையா?
இறந்து போனவர்களின் கண்களைப்போன்று
விளக்கமற்ற அர்த்தங்களை
விடுத்துக் கொண்டிருக்கும்
நட்சத்திரங்களையா?

எனக்கு உண்மைகள் தெரியவில்லை
பொய்களை கண்டுபிடிப்பதும்
இந்த இருட்டில் இலகுவான காரியமல்ல
ஆனால்
பரீட்சைக்கு புத்தகம் படிக்கும்
என் தங்கையிடம்
உனது பழக்கத்திற்கான
அர்த்தங்களைத் தேடு என்று கூறமுடியாது

மொத்தத்தில்
எல்லோரும் அவசரமாயுள்ளனர்
என்னிடம்
ஞாபகங்கள் மட்டும்  எஞ்சியுள்ளன
வெளியே
பந்தமற்று மௌனமாய் நிற்கும்
மரங்களின் நிழல்கள்
கீழே கிழிந்து போயுள்ளன

தெருவில்
அவலமும் பதற்றமுமாய்
நாய்கள் குரைக்கும் போது
பூட்டப்பட்ட கதவுகளை
மீண்டும் ஒரு முறை சரிபார்த்து விட்டு
எல்லோரும் தூங்கப் போகும்  நேரத்தில்
நான்
நாளைக்குத் தோன்றுகின்ற சூரியன் பற்றி
எண்ண முடியாது.

இரவு எனக்கு முக்கியமானது
நேற்றுப் போல்
மீண்டும் ஒரு நண்பன் தொலைந்து
போகக் கூடிய
இந்த இருட்டு
ஏனக்கு மிகவும் பெறுமதியானது
1989

*******

சிவரமணியின் நினைவாக ஊடறுவில் வெளியாகிய பதிவுகள்

2006  – சேலை கட்டிக் காப்பாற்றிய  சில நாகரீகங்களைத் தவிர…

 2007 – சிவரமணி வாழ்ந்த ,விகசித்த, இறந்த

2008 – நீங்கள் உறங்க வேண்டாம்.

2009 – குருதி தோய்நத முகமற்ற மனித உடலும் 

 2010 – சிவரமணி” என்ற பெரும் கவிஞர் இறந்த நாள் “மே 19″

2011 – 20 வருடங்கள் – தொலைவில் ஒரு வீடு

2012 –  இருட்டு அவசர அவசரமாக ஆடைகளைக்கழற்றி விட்டு நிர்வாணமாகிக் கொண்டிருக்கிறது.-சிவரமணி

2 Comments on “ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 22 வருடங்கள்”

  1. சிவரமணியின் நினைவாக ஊடறுவில் வெளியாகிய பதிவுகள் வரிசை இல் இக்கவிதை மிக சிறப்பான கவிதை

    //இரவு எனக்கு முக்கியமானது
    நேற்றுப் போல்
    மீண்டும் ஒரு நண்பன் தொலைந்து
    போகக் கூடிய
    இந்த இருட்டு
    எனக்கு மிகவும் பெறுமதியானது//

  2. கொஞ்சம் கொஞ்சமாக எம்மவர்களின் சுவடுகள் அழிக்கப்படுகின்றன.அவற்றுள் இருந்து தேடி எடுத்து தரும் தகவல்களுக்கு நன்றி.வளர்க உங்கள் பணி,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *