சுல்பிகா
– ஊடறு + விடியல் வெளியீடு
இந்நிகழ்வுகளுக்குப்பின்னால் நாம் எல்லோரும் கொண்டிருக்கும் மௌனத்தையும், அலட்சியத்தையும் ஏன் சுயநலப்போக்கையும் கூட அவள் கோள்விக்கு உட்படுத்துகிறாள். இதற்குப் பதிலளிக்க வேண்டிய வரலாற்றுக்கடப்பாடு எம் எல்லார்க்கும் உண்டு.
—
இலங்கையில் ஈழவிடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் நேரடியாகவும் முழுமையாகவும் தம்மை ஈடுபடுத்திய பெண்போரளிகள் இருபதுபேர் 1991-2007 இற்கு இடைப்பட்ட 17 வருடகால இடைவெளிக்குள், போரட்டத்தின் வௌ;வேறு பிண்ணனியில் எழுதிய கவிதைகளை இத்தொகுதி உள்ளடக்கியுள்ளது.
குறிப்பாக இக்கவிதைகள் இருந்தவைகள், இழந்தவைகள் இனிப்பெற இருப்பவைகள் பற்றிய அவர்களது அநுபவங்கள், நினைவுகள், கனவுகள், ஆதங்கங்கள், எதிர்பார்ப்புக்கள் மற்றும் அவர்களது அக்கறைகளையும் அவர்களது பார்வையில் பதிவு செய்கின்றன. இவை ஒரு வகையில் திட்டவட்டமாக அடக்குமுறைக்குட்ட ஒரு சமூகத்தின் போர்க்கால கட்டத்திற்குரிய சமூக, அரசியல் இயங்கு நிலைகள், மக்கள் அனுபவங்கள் பற்றிய வரலாற்று ஆவணப்பதிவு என்பதில் யாருக்கும் ஐயமிருக்க இடம் இல்லை. அதற்கும் மேலாகவும் இக்கவிதைகளுக்கும் அதனை ஆக்கியோர்க்களுக்கும் பலமுக்கியத்துவங்கள் உண்டு.
முன்னொரு போதுமில்லாதவாறு பெருமளவில் பெண்கள் குறிப்பாக இளம் யுவதிகள், இலங்கையில் ஆயுத போராட்டத்தில் தமது தனிப்பட்ட இருப்பு, சமூக வாழ்க்கை போன்றவற்றைத் தியாகம் செய்து போர்க்களத்திலும் போர் தொழில்நுட்பம், போர் முகாமைத்துவம் போன்றவற்றிலும், பங்கு கொண்டு அதனிடைவெளிக்குள் அவர்களுக்குள் எழுந்த உணர்வலைகளை தமது வார்த்தைகளுக்கூடாக வெளிப்படுத்தியிருப்பது இங்கு மிக முக்கியமான விடயமாககும். ஒரு புறத்தில் அர்ப்பணத்துடன் தாம் தெரிவு செய்து கொண்ட விடுதலை வழிமுறைமைக்குள் நிகழ்கின்ற போராட்ட விடயங்களுடன் தொடர்பான உணர்வலைகளையும் அதன் பாற்பட்ட நியாயப்படுத்துதல்களையும், எதிர்பார்ப்புக்களையும் நேர்மையாகவும்;, ஒரு சாதகமாக நோக்கிலும் அவர்கள் பதிவு செய்கின்றனர். மறுபுறத்தில் தமது தனிப்பட்ட இருப்பு சமூக வாழ்தல் தொடர்பாக துன்பமான உணர்வலைகளைகளையும் அதுசார்ந்து தமது மனத்துவள்தல்களையும் முன்வைக்கின்றனர்.
இக்கவிதைகளை ஆக்கியுள்ள பெண்போராளிகள், மற்றொருவகையில் தமக்கேயுரிய விசேட விடயங்கள் பற்றியும் தமது கவிதைகளில் ஆங்காங்கே பதிவு செய்திருப்பதையும் பலரது கவிதைகளில் காணக்கூடியதாக இருக்கின்றது. பெண்ணிய விடயங்கள் குறித்த வாசிப்பை நான் இக்கட்டுரையில் ஆழமாக மேற்கொள்ள விளையவில்லை. அதன் காரணமாக அதுபற்றிய எனது கருத்துக்கள் இப்போதைக்கு இங்கு தவிர்க்கப்பட்டிருக்கின்றது. மிகப்பெரும் சிக்கலான, கடினமான ஆயுதப்போராட்ட வாழ்வியல் ஒன்றுக்குள் தம்மை இணைத்துக் கொண்ட இப்பெண் கவிஞர்களின் உணர்வலைகள் Emotions அவர்களுக்குள் இயல்பாக எழுந்தவையாகவோ அல்லது அவர்களது அனுபவ வீச்சுக்கள் கற்றுக்கொள்ளப்பட்டு உருவமைக்கப்பட்டதாகவோ இருக்கலாம். எது எப்படி இருப்பினும், அவர்கள் தம்முடையதாகப்பதிவு செய்கின்ற இந்த உணர்வலைகள் பற்றியே நான் சிறிது கட்டவிழ்த்துப் பார்க்கலாம் என நினைக்கின்றேன்.
உணர்வலைகள் என்பது சிக்கலான சமூகஉளவியல் அனுபவமாகும். ஓவ்வொரு உணர்வலையும் உணர்வுகளையும் (feelings) அதன் வெளிப்பாட்டு வடிவங்களையும் (expressions)) உள்ளடக்குகிறது. இது தனிப்பட்டதும் (subjective) அகவயமானதும் private) ஆகும். மேலும் முற்றுமுழுதாக இரசாயனஉயிரியல் இயக்கத்தாலும், சமூக இயங்கியலுக்குரிய விசைகளாலும் கட்டமைக்கப்படுகின்ற வேறுபட்ட மனநிலைமைகள் (states of mindஎனக் கொள்ளலாம். இம்மனநிலைமைகள் உணர்வுகளாக வெளிப்படுத்தப்படும் போது அவை வேறுபட்ட சக்தி நிலைகளையும் கொண்டிருக்கின்றது. உதாரணமாக துக்கமாக உள்ளபோது மனம் சோர்ந்து போகின்றது. அவ்வாறே சந்தோசமாக உள்ளபோது மனம் குதுகலிக்கின்றது. இவ்வகையில் உணர்வலைகளுக்கு சக்தியுடன் கூடிய அளவீட்டு (quantitative) பரிமாணம் ஒன்றும் அதன் இயல்புகளுடன் கூடிய பண்புப் (quantitative) பரிமாணம் ஒன்றும் உண்டு. எனவே உணர்வலைகளை எமது இயங்குநிலைக்குரிய சக்தியாகவும் வரையறுக்கலாம் (Energy in motion = Emotion). இச்சக்தி சாதகமான சக்தியாகவோ அல்லது பாதகமான சக்தியாகவோ இருக்கலாம். உணர்வலைகளை முகாமை செய்வது ஒவ்வொரு நிலமைகளிலும் வேறுபட்டதாகவுள்ளது. இதன் காரணமாக உணர்வலை நண்ணறிவு பற்றிய கோட்பாடுகள் (Emotional Intelligence Theory) ) பல முன்வைக்கப்படுகின்றன. உணர்வலைகளை உணர்தல், உணர்வலைக்களுக்கான காரணங்களை அறிதல், அக்காரணங்களை விளங்கிக் கொள்ளுதல், உணர்வலைகளை முகாமைசெய்தல் போன்ற உணர்வலை நுண்ணறிவுக் கூறுகள் உள்ளதாக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
உணர்வலைகள் குறித்த மேற்கூறிய விளக்கங்களின் அடிப்படையில் நோக்கும் போது இக்கவிதைத் தொகுதியில் பெயரிடாத நட்சத்திரங்களால் இரு தொகுதிக்குள் உள்ளடக்கக்கூடிய உணர்வலைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
1. விடுதலை வேட்டை அல்லது தாகத்துடன் தொடர்பான எழுகின்ற உணர்வலைகள்.
2. தமதும், தாம் சார்ந்த சமுகத்தினதும் இருப்பு, வாழ்தல் தொடர்பான எழுகின்ற உணர்வலைகள்
விடுதலை வேட்கையுடன் தொடர்பான உணர்வலைகள். வைராக்கியம், திடம், உறுதிநிலைப்பாடு, காப்புணர்வு, வன்மம், பழிக்குப்பழி, எதிர்பார்ப்பு போன்றவையாக வெளிப்படுத்தப்படுகின்றன. தாம் ஏற்றுக்கொண்ட போராளிப்பாத்திரத்தினூடாக தமக்குள்ள காவலர் பொறுப்பை பல கவிதைக்கைகளுடாக இப்பெண்கள் வெளிப்படுத்துகின்றனர். இதிலுள்ள வீரம், திடம், வைராக்கியம் போன்ற உணர்வுகள் சாதகமான சக்தியுள்ள, மனவலிமையைத்தரக்கூடிய, அவர்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியும் வழங்கக்கூடிய அம்சங்களாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
“அன்பான அம்மா” என்ற கவிதையில் பாரதி பின்வருமாறு இதனைப் பதிவு செய்துள்ளார்.
இன்று
நான் வரவில்லையென நீ
அழுது கொள்வதாக நான் கேள்விப்படுகின்றேன்.
அன்பான அம்மாவே
நான் உன்னை
அளவு கடந்து நேசிக்கின்றேன்.
அதனிலும் பார்க்க
நான்ஓடி விளையாடிய
என் விட்டு முற்றத்தை
நான் கால் பதித்த
ஒற்றையடிப்பாதைகளை…
——-
——-
இப்படி இப்படியாய்
எத்தனையோ
மொத்தத்தில் எனது தேசத்தை.
வானதியின் “புறப்பட்டு வா” என்ற கவிதை, அவளது ஆயுதப் போராட்டத்தினூடாக கிடைக்கப்பெற இருக்கும் விடுதலை தொடர்பான அவளது எதிர்பார்ப்புக்களையும் பதிவு செய்கின்றது. அது எல்லா வகையான தேசிய, சமூக, பெண்ணிய விடுதலைகளையும் அது பெற்றுத்தரும் எனத்திடமாக அவள் நம்புகின்றாள்.
எம் இதயம் நேசிக்கும்
தேசத்தின் விடுதலை
எமக்கு எட்டும் போது – அங்கு
பெண்ணடிமைக்கும் சமாதி கட்டப்படும்.
சமுதாயத்தின் பிற்போக்குச் சிந்தனைகளுக்கும்
புதைகுழி தோண்டப்படும்.
மலைமகள் தனது போராட்ட உணர்வினை பின்வருமாறு “உயரும் என் குரல்” என்ற கவிதையில் மிகஉறுதியாக எடுத்துக் கூறுகின்றாள்.
வாய் கிழிந்து
நரம்பு பிழந்து
குருதி வழிகையிலும்
என் குரல் அதிரும்
ஆதிக்கக் கோட்டைகள்
உதிரும் வரையில்
எனது குரல் உயரும்.
அவ்வாறே பரவலாக அநேகரது கவிதைகளில் பழிக்குப்பழி உணர்வுகள் மிக வெளிப்படையாக வெளிப்படுத்தப்படுகிறது. இழப்புக்கள் ஏற்படுத்திய வடுக்கள், வன்முறைகளுக்கு எதிராக எழும் நியாயமாக கோப உணர்வில் இப்பழிவாங்குதல் உணர்வலைகள் விரவிக்கிடக்கின்றன.
சூரியநிலா “தீயினால் தீயை” என்ற கவிதையில்,
இரும்புக் குழல்களின்
இலக்குகளாக்கப்பட்டு
இரத்தம் சிந்துகின்றது எம்வாழ்வு
——-
——
நாங்களும் தீ வளர்ப்போம்
கண்ணிலும் நெஞ்சிலும் – என்கிறாள்.
“உண்மைகளைத்தேடி” என்ற கவிதையில் பிரமிளா,
நீ தோண்டிய புதைகுழிகளில்
உன்னைப் புதைத்திட
இதோ வருகிறோம்
என்று கோபக்கனல் பொங்கும் உணர்வலையை ஏந்திவருகின்றாள்.
விடுதலைப்போராட்ட வாழ்வியல், குறிப்பாக ஆயுதப் போராட்ட வாழ்வியலுக்குள் எழுந்த எந்த விடயங்களிலும், பாதகமான சக்தியுடைய, மனவலிமையைப் பாதிக்கின்ற, திருப்தியற்ற அல்லது மகிழ்ச்சியற்ற எந்த உணர்வுகளும் எந்தக் கவிதைகளிலும் பதிவு செய்யப்படவில்லை. இதற்கு அவர்களுக்கிருந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய போராட்ட வாழ்வியலுக்குரிய மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம், சுயாதீனம், சுயாதிக்கம் போன்றவை காரணமாக இருந்திருக்கலாம்.
மறுபுறத்தில் தமதும், தமது சமுகத்தினதும் இருப்பு, வாழ்தல் தொடர்பாக அவர்கள் வெளிப்படுத்துகின்ற உணர்வலைகளும் சமஅளவில் முக்கியத்துவமுடையவை. இந்த வகையில் முக்கியமான 4 வகையான உணர்வலைகளைத் தங்கள் கவிதைகளுக்கூடாக அவர்கள் முன்வைக்கின்றனர்.
1. ஏக்கவுணர்வுகளும் எதிர்பார்ப்பும்
2. வேதனையுணர்வுகளும் வெறுப்பும்
3. காதலுணர்வும் களிப்பும்
4. சுயபரிதாபஉணர்வும் சுயஇரக்கமும்
ஆயுதம், வண்முறை சார்ந்த போராட்டமுறைமை ஒன்றினை ஏற்றுக்கொண்டு இயந்திரங்களுடன் செயற்பட்ட அதேவேளை, சாதாரண மனித உயிரியல் மெண்ணுணர்வுகளுக்குள் அவர்கள் ஒரு சிறு கணத்திலாவது வாழ்ந்திருப்பதைப் பதிவு செய்திருக்கின்றார்கள். அவர்களுக்குள் எழுந்த இவ்வகையான உணர்வுக்கலவைகள் ஆயுதம் போரட்டத்தின் வீரம்ஃதிடம்ஃவன்மம் நிறைந்த சடத்துவச் சட்டகங்களுக்கு அப்பால் தசையும் என்பும் குருதியும் கொண்ட ஒரு மானுட அம்சங்களுக்குள் உறைந்து கிடந்திருக்கின்றது. அவர்கள் இவ்வெதிரான உஇயல்பான உணர்வு விசைகளுக்குள் சிக்குண்டு பேராடியிருக்கிறார் என்பதையும் நாம் நோக்குதல் வேண்டும்.
பொதுவாக எல்லாக் கவிஞைகளினதும் கவிதைகளிலும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஏக்கவுணர்வுகள் பதிய செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வேக்க உணர்வை, மனம் நாடுகின்ற ஒரு விடயம் இடம் பெறாதிருக்கும் நிலையில் ஏற்படுகின்ற மனநிலை எனக்கொள்ளலாம். தெரியாத எதிர்காலம் பற்றியும் தெரிந்தே தொலையும் நிகழ்காலம் பற்றியும் அவர்களது ஏக்கம் இங்கு பதிவாகின்றது.
ஆதிலட்சுமி இதனை மிகத் தெளிவாகவே பதிவு செய்கிறார்
காலம் என் தலையில் தினமும்
துயரமாய் விடிகிறது
நினைவுகளை எடுக்கமுடியாதபடி
ஏக்கம் நெருங்க
நொருங்கிக் சிதறுகிறது என் மனது
கழற்றி வைத்த மாலைகளிலிருந்து
கழன்று விழுந்த ப+வாக
கால்களிலே நசிகிறது என் உரிமம்.
எதிர்காலம் பற்றிய என்
எண்ணங்கள் கருகி உதிர
நிகழ்காலமும் நிதர்சனமற்றுக்கருகின்றது
இழுத்துப் பிடித்திருக்கும் என்
உயிருக்கும் உத்தரவாதமற்று
இருளில் தேய்கிறதென் யுகங்கள்
இது இன்னமும் எத்தனை நாட்களுக்கு?
“தேடி அடைவாய்” என்ற கவிதையில் அம்புலி – வாரியணைக்க முடியாத தாயானேன் என ஏங்குகிறார்
வெறுப்புணர்வை வெளிப்படுத்துகின்ற பெரும்பாலான கவிதைகளில் ஒரு பொது எதிரியோ அல்லது பொது வெறுப்புக்குரிய விடயேமோ இனங்காணப்படுகின்றது. அடக்கு முறையாளர்கள் மீதான வெறுப்புணர்வு பெருமளவு பதிவு செய்யப்பட்டபோதும் யுத்தத்தின் மீதான, அதன் அழிவுகளின் மீதான வொறுப்பும் வெளிப்படையாகவே பேசப்படுகின்றது.
யுத்தக் களங்கள்
வீட்டிலிருந்து புறப்பட்டு
நாடுகள் உலகமென்று வியாபித்து
ஏன் விரிந்து போய் கிடக்கின்றது?
—–
—–
அன்புப் பாலையே
எனக்கு முதலில் ஊட்டுங்கள்
என்று தயவாய் கேட்கிறாள்; அம்புலி “வாழ்க்கை ஓர் இனிய பாடலாக” என்ற கவிதையில்.
மற்றொரு கவிதையில் அம்புலி போரில் ஊனமுற்றுப்போன தன்நிலை குறித்தும் நெகிழும் தன்மையற்றுத் தொடரும் போராட்டம் குறித்தும் வெறுப்படைந்து விரத்தியுடன் பேசுகின்றரர்.
வளையாத பாதை
முடியாத பயணம்
நானோ முடியாமல் முடமாக
மண் மீட்க மடிந்தோர்
இல்லத்தில் துயில்கிறார்
சாதாராண பிணமாக
நானிங்கு நிலையானேன (எரிமலை குமுறல்)
காதலுணர்வை வெளிப்படுத்தும் அல்லது அதீத சிநேகத்தையும் களிப்பையும் வெளிப்படுத்தும் கவிதைகளில், இப்பெண்ளை அவ்வுணர்வலைகளை இயல்பாகவே தெட்டுக் செல்வதைக் காணலாம். “காதலின் புதிய பரிமாணம்”; என்ற கவிதையில் நாமகள் ஆயுதம் போராட்ட முன்னெடுப்புக்களுக்கிடையிலும் கூட தன்னுணர்வுக்குள் முளைவிட்டுச் செல்லும் மென்மையான காதல் உணர்வையும் அதன் களிப்பையும் இவ்வாறு பதிவு செய்கிறாள்.
இப்பொமுதெல்லாம் அவனை
அடிக்கடி காண முடியதில்லை
——
—–
——
எல்லாவற்றையும் தாண்டியும்
தேடலாய் என் பார்வை விரியும்
சற்றே தொலைவில் வேறொரு முகாமுக்கு
அவன் மாற்றப்பட்டிருந்தான்
எப்போதாவது தெருவில்;
அவசர இயக்கத்தில்
கண்டுவிட நேர்கையில்
சந்திப்பை வரவேற்பதாய் அவள்
கண்கள் ஒருமுறை விரியும்
மறுகணம் ஆழ்ந்து முடிக்கொள்ளும்
அவனுக்குத் தெரியும்
எனக்கு அது போதுமென்று
சுயபரிதாபஉணர்வும் சுயஇரக்கமும் பலரது கவிதைகளில் வேவ்வேறு பிள்னணியில் இடம் பெறும்வதைக் காணலாம்.
“உயரம் என் குரலில்” என்ற கவிதையில் இதைனை மலைமகள் இவ்வாறு தான் ஆரம்பிக்கிறார்.
ஏன் இது இப்படி?
எவருக்கென்ன துரோகம் செய்தேன்?
எனக்கிந்தத் துன்பம் நேர?
என் மனதறிந்து, கனவில்கூட
எவரையும் புண்;படுத்தியதில்லை
ஏனிந்த அவலம் எனைச் சூழ்ந்தது?
——
—–
வியர்வைத் துவராங்களில்
இரத்தம் கசிய
கதறியழுது அலையும் வாழ்வு
ஏன் எனக்கு வந்தது?
தூயவள் “எனது வசந்தம”; என்ற கவிதையில் தான் அனுபவிக்க முடியாத வசந்தம் தொடர்பாக தனது சுயபரிதாப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.
வறாண்டு கிடக்கும் என்
மனதின் வசந்தமே
நீ ஏன்
வந்து வந்து போகிறள்
—–
—–
என்னுடைய வசந்தமே நீ
என்னுடனேயே
இரங்கியேலும்
தங்கிவிடு
ஆயுதங்களை ஏந்தி, எதிரிகளைக் கொன்று குவித்து, வெற்றிக்கொடி நாட்ட தம்மையே அர்ப்பணிக்க அவர்கள் தயாராக இருந்த போதும், மரணத்தை மக்கள் இயல்பானதாக ஏற்றுக்கொள்ளுகின்ற நிலமை, மனத்துயரத்தை அளிப்பதை நாமகளின் தனது “யதார்த்தம்”; கவிதை மூலம் வெளிப்படுத்துகிறார். இக்கவிதையில் நிகழும் மரணம் ஒரு போராளியினுடையதா அல்லது எதிராளியினுடையதா எனப்பாகுபடுத்தாமல் இருப்பதுதான் இதிலுள்ள மிக மிகச் சிறப்பான அம்சமாகும். இக்கவிதையிலுள்ள மனிதாபிமான உணர்வும் ஒரு வகையில் சுயபரிதாப உணர்வும் வன்முறைச்சமூகத்தினுள் இறந்து போன மற்றும் இறந்து கொண்டிருக்கும் மனிதத்துவத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டி நிற்கின்றது.
ஒரு கணம் தான்
அதிலும் குறைவாகக்கூட இருக்கலாம்
யாருமே எதிர்பாராமல்
அது நிகழ்ந்தது.
அந்தச் சந்தியை
நடந்து கொண்டிருந்தவர்கள்
தேநீர்க் கடையினுள்ளே
அமர்ந்திருந்தவர்கள்
மண்ணெண்ணெய்க்காய்
வரிசையில் நின்றவர்கள்
எல்லோரையும் தாண்டி
அவன் முன்பாய் நிகழ்ந்தது
அந்த வெடிப்பு.
மேலே விமானங்கள் இல்லை
ஷெல்தான்.
அவன் மேலெழும்பி
கீழ விழுந்தான்
எந்தச் சத்தமுமில்லை
கத்த நினைப்பதற்குள் அவன்
இறந்திருக்க வேண்டும்
வெடிப்பின் அதிர்வில், கத்தல்
கேட்காமலும் போயிருக்கலாம்
எதுவும் சொல்தற்கில்லை
சனங்கள்
திடீரென ஒதுங்கிப் போனார்கள்
தேநீர்க் கடையின் பாட்டுக்கூட
நின்றுபோயிருந்தது
வெறிச்சோடிய வீதியில்
அவன் மட்டும்
தனியாகக் கிடந்தான்.
கையொன்று வீதியின் மறுகரையில்
விரல்களை நீட்டியபடி
யாரையோ குற்றஞ்சாட்டுவதாய்.
சில நிமிடங்கள்தான்
அம்புலன்ஸ் எல்லாவற்றையும்
அள்ளிக்கொண்டு போனது
எஞ்சியதாய்
அவனது இரத்தம் கொஞ்சம்
ஒன்றிரண்டு சைக்கிள் கம்பிகள்
ஷெல் துண்டுகள்
அவ்வளவுதான்.
வாகனங்கள் அவற்றையும்
துடைத்துக்கொண்டே கடந்தன.
வீதியில் இப்போ எதுவுமேயில்லை
எல்லாமே பழையபடி.
மண்ணெண்ணெய் வரிசை
முன்பைவிட நீண்டிருக்கிறது
தேநீர்க் கடையிலும்
புதிதாய் ஒரு பாட்டு ஆரம்பமாகிறது
சனங்கள் விரைந்து கொண்டிருக்கிறார்கள்.
எதுவுமே நிகழாத மாதிரி.
இந்நிகழ்வுகளுக்குப்பின்னால் நாம் எல்லோரும் கொண்டிருக்கும் மௌனத்தையும், அலட்சியத்தையும் ஏன் சுயநலப்போக்கையும் கூட அவள் கோள்விக்கு உட்படுத்துகிறாள். இதற்குப் பதிலளிக்க வேண்டிய வரலாற்றுக்கடப்பாடு எம் எல்லார்க்கும் உண்டு.
நன்றி வீடு
பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற இந்த தொகுப்புக்கு இது வரை வந்த விமர்சனங்கள், நேர்காணல்கள்.
வெளியீட்டு நிகழ்வுகள்
********
பெயரிடாத நட்சத்திரங்கள்” போர்ப் பாடல்கள் – ஈழத் தமிழச்சிகளின் வீர வாழ்க்கை(ஜெயப்பிரகாஷ், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி )
நிலாச்சோறில் பெயரிடாத நட்சத்திரங்கள் : பெண் போராளிகளின் கவிதைகள் குருபரன், (யமுனாராஜேந்திரன்-)
நிலாச்சோறில் பெயரிடாத நட்சத்திரங்கள் : பெண் போராளிகளின் கவிதைகள் (http://www.globaltamilnews.net)
மரணத்தின் பின்பான வாழ்நிகழ்வு வு : பெயரிடாத நட்சத்திரங்கள்–(யமுனாராஜேந்திரன்-)
கனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு! (காலம் ஆதரவில்)
பெயரிடாத நட்சத்திரங்கள்: ஈழப் பெண்போராளிகளின் கவிதைகள்” கனடா அறிமுகவிழாவில் வாசித்த கட்டுரை)
அருண்மொழிவர்மன் (நன்றி கீற்று.கொம்)
மும்பை, சயான் , தமிழ்ச் சங்கத்தில் “பெயரிடாத நட்சத்திரங்கள்” என்ற கவிதை தொகுப்பு குறித்தக் கருத்தாடல்கள் போரிலக்கிய வரலாற்றில்….. பெயரிடாத நட்சத்திரங்கள்
மும்பையில் பெயரிடாத நட்சதிரங்கள் தொகுப்பு புதியமாதவி
ஆனந்தவிகடனில் பெயரிடாத நட்சத்திரங்கள் பற்றி
பெயரிடாத நட்சத்திரங்கள் – பன்முக பார்வைகள்…எனது நினைவுகளில்…..மீராபாரதி
பெயரிடாத நட்சத்திரங்கள்”, “Mit dem Wind fliehen” ஆகிய இரு நூல்களினது அறிமுகமும் -தமிழ் சிங்கள மொழியில்- கலந்துரையாடலும் சுவிஸ் சூரிச் இல் இடம்பெற இருக்கிறது.
சுவிஸில் “பெயரிடாத நட்சத்திரங்கள்” – அறிமுக, விமர்சன உரைகள் (ஒலிவடிவில்)
பெயரிடாத நட்சத்திரங்கள்” – சூழும் அரசியல்-–ரவி
பெயரிடாத நட்சத்திரங்கள்” ஈழப் பெண் போராளிகளின் கவிதைத் தொகுதி வெளியீடும் அதன் மீதான எதிர்வினைகள், முக்கியத்துவங்கள் குறித்தும்…யோகா-ராஜன்
டென்மார்க் இல் 21.4.12 நடந்த பெயரிடாத நட்சத்திரங்கள் நூல் நிகழ்வின் ஒலிவடிவம்
அவுஸ்திரேலியாவில் “பெயரிடாத நட்சத்திரங்கள்” கவிதை நூல் வெளியீடு மதுபாசினி, சௌந்தரி, பாமதி
29.4.12 சிட்னியில் நடைபெற்ற பெயரிடாத நட்சத்திரங்கள் வெளியீட்டு நிகழ்வு பற்றிய குறிப்பும் நன்றி தெரிவிப்பும் – சிட்னி நூல் வெளியீட்டுக்குழு
கையில் ஊமை – மாலதி மைத்ரி-
உயிரின் வாசம் – “பெயரிடாத நட்சத்திரங்கள்” – சு. குணேஸ்வரன்
இருப்புக்கும் இன்மைக்கும் இடையே சில குரல்கள்– அன்பாதவன்.- நன்றி வார்ப்பு .கொம்