பெண்களது உரிமைகளும் அபிவிருத்தியும் முதன்மைப்படுத்தப்பட வேண்டியது அவசியம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பால்நிலைசார் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன’ என யாழ். மகளீர் செயற்பாட்டு வலையமைப்பு வெளியிட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக பெண்கள் தினத்தினை முன்னிட்டு யாழ். மகளீர் செயற்பாட்டு வலையமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை ஊரவலம் ஒன்று யாழில் நடைபெற்றது.
இதன்போது, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் மகளீர் செயற்பாட்டு வலையமைப்பின் பெண்கள் மகஜரை கையளித்தனர்.
இந்த மகஜிரில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்
‘ ஒரு சமூகத்தில் வாழும் அனைவரதும் நன்னிலைகளை உறுதிப்படுத்துவது அச்சமூகத்தின் அபிவிருத்தியாக அமையும். அந்த அடிப்படையில் பெண்களது உரிமைகளையும் அபிவிருத்தியும் முதன்மைப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பால்நிலைசார் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில், யாழ். மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு 100 முறைப்பாடுகளுக்கு மேல் கிடைக்கின்றன.
முறைப்பாடுகள் செய்யப்படாமல் பரவலாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் காணப்படுகின்றன.
இத்தகைய சூழலில் அபிவிருத்தியின் பூரணத்துவம் என்பதனை சமத்துவ அடிப்படையிலான பகுப்பாய்வுக் கண்ணோட்டத்ததுடன் பார்க்கப்பட வேண்டியதற்கான கேள்வி அதிகரித்துள்ளது.
பால்நிலை சார் வன்முறையை இல்லாதொழிப்பதற்கு ஆண்கள் மத்தியில் வன்முறையற்ற வாழ்க்கையை ஊக்கிவிக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகளில் 95 வீதமானது ஆண்களினாலே ஏற்படுகின்றது என்பதை கடந்து ஏற்படுத்துபவர்களுடனான வேலைத்திட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.
இம் முன்னெடுப்புக்களால், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான ஆண்களின் பங்களிப்பு என்ற வகையில் அமைதல் வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
‘யாழ். பஸ் நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்வலம் யாழ். ஆஸ்பத்திரி வீதி வழியாக யாழ். மாவட்ட செயலகம் வரை சென்றது.