எஸ்.ஐ.கே.மஹரிபா உதவி விரிவுரையாளர், தமிழ்த் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
சிறுகதைத் தொகுப்புக்களை ஆதாரமாகக் கொண்டது
நவீனத்துவத்தின் அடையாளமாகவும் பிற நாடுகளின் தொடர்புகளினாலும் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமான ஓர் இலக்கிய வடிவமே புனைகதை இலக்கிய வடிவமாகும். இந்த வகையில் சிறுகதை இலக்கிய வடிவமானது இன்று ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முக்கிய இடத்தினைப் பிடித்துள்ளது. இத்துறையில் ஆண் எழுத்தாளர்களைப் போன்றே பெண் எழுத்தாளர்களும் தங்களது பங்களிப்புக்களைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் குறிப்பாக முஸ்லிம் படைப்பாளர்கள் பலரும் தங்களது பங்களிப்புக்களைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேபோன்று முஸ்லிம் பெண் படைப்பாளிகளும் தங்களது ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும் செய்து வருகின்றனர். சிறுகதைத் துறையிலும் இவர்கள் பிரகாசித்து வருவது நோக்கத்தக்கது.
குறிப்பாக 1940களுக்குப் பின் முஸ்லிம் பெண்கள் சிறுகதைகளை எழுதி வந்தாலும் கூட 1980களுக்குப் பின்பே அதிகமான பெண்கள் சிறுகதைகளைப் படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 1980களுக்குப் பின் முஸ்லிம் பெண்கள் கற்கும் வீதம் அதிகரித்துக் காணப்படுவதனாலும், பல் துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருப்பதனாலும், உயர் பதவிகளை வகித்து வருவதனாலும், நவீன யுகத்திற்கு ஏற்றாற் போல் சிந்திக்கத் தலைப்பட்டதனாலும் பலர் கலைத் துறைகளில் தங்களது பங்களிப்புக்களைச் செய்து வருகின்றனர். இவ்வாறே சிறுகதை இலக்கியத்திலும் இவர்களது பங்களிப்புக்கள் காணப்படுகின்றன.
ஈழத்து முஸ்லிம் பெண் சிறுகதையாசிரியர்களாக, நயீமா சித்தீக், புசல்லாவ இஸ்மாலிகா, ஹஸீனா வஹாப், கெகிராவ சஹானா, புர்கான் பீ இப்திகார், சுலைமா சமி இக்பால், றியாஸா ஆப்தீன், இர்பானா ஜப்பார், மரீனா இல்யாஸ், எம்.ஏ.ரஹீமா, பாத்திமா ரஜர், ஸனீரா காலித், மஸீதா புன்னியாமீன், சுல்பிகா, கலைமகள் ஹிதாயா, றஸீனா புஹாரி, மஸ§ரா, ஏ.மஜீத், பௌசியா யாசீன், ஜ§னைதா ஷெரீப், பாத்திமா ரஜப், பரீதா, சாஹ§ல் ஹமீத், ஹைருன்னிஸா, நூருல் அய்ன், றுவைதா மதீன், ஸமீனா ஸஹீட், ரதீமா ஆமர் போன்ற பலர் சிறுகதைத் துறையில் ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றனர்.
1980களுக்கு முன்பு பலர் எழுதத் தொடங்கினாலும் அவை நூலுருவில் வராது பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி ஒலிபரப்புக்களுடன் மட்டுப்பட்டதாகக் காணப்படுகின்றன. முஸ்லிம் பெண்களில் பலர், சிறந்த சிறுகதைப் படைப்புத் திறன்களைக் கொண்டிருந்தாலும் கூட குடும்ப சூழ்நிலைகளால் இடைநடுவில் இத்துறையிலிருந்து விலகிவிடும் போக்கு காணப்படுகின்றது. இதுவரையில் குறிப்பிடத் தக்க சிலரின் சிறுகதைத் தொகுப்புக்களே வெளிவந்துள்ளன. ஏராளமான சிறுகதைகள் பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்பவற்றில் வெளிவந்;து கொண்டிருக்கின்றன. பல புதிய எழுத்தாளர்கள் தோன்றிய வண்ணமுள்ளனர்.
குறிப்பாக 1980களுக்குப் பின்பே பல முஸ்லிம் பெண் சிறுகதையாளர்கள் சிறுகதை உலகிற்கு அறிமுகமாகினர். இவர்களின் சிறுகதைகளில் தொகுப்புக்களாக வெளி வந்துள்ளவை சொற்பமானவை. நயீமா சிசித்தீக்கின் வாழ்க்கைச் சுவடுகள் (1987), சுலைமா சமி இக்பாலின் வதங்காத மலரொன்று (1988), மனச்சுமைகள் (1987) போன்ற சில தொகுப்புக்களே எண்பதுகளில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1980களில் வெளியான சிறுகதைகளை எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் சமூக அவலங்களே சிறுகதைகளில் வெளிப் படுத்தப்பட்டுள்ளன. பெண்களால் எழுதப் பட்ட இலக்கியம் என்ற வகையில் இவர்கள் பெண்களின் சுதந்திரம், சமத்துவம், கல்வி, சமூகப் பாங்கு குறித்த தமது ஆதங்கங்களை சிறுகதைகளினூடாக பிரதிபலித்திருப்பதனைக் காணலாம். இர்பானா ஜப்பாரின் சிறுகதை களில் பெண்ணுரிமை மீறல் தொடர்பான பிரச்சினைகளின் பிரதிபலிப்புக்களைக் காணலாம். இதே தன்மைகளுடன் குடும்பப் பெண்கள், சமூகப் பெண்கள் அனுபவிக்கின்ற அவல நிலைகள் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளை கருப்பொருள்களாகக் கொண்டு சிறுகதைகள் படைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான சிறுகதைகளின் கருப் பொருட்கள் குடும்பம், பெண், திருமணம், குடும்ப வாழ்க்கை,தொழில் வாழ்க்கை, கல்வி நடவடிக்கைகள் போன்றவற்றை மையமாகக் கொண்டு காணப்படுகின்றன. வைகறைப் பூக்கள், மனச்சுமைகள் போன்றவையும் இத்தன்மைகளுடன் காணப்படுகின்றன. மேலும் பெண்கல்விக்கு வரையறையிட்டு வைத்துள்ள சமூகத்துக்கு விழிப்பூட்டும் முகமாக பெண்கல்வியின் அவசியம் வலியுறுத் தப்படுகின்றது. வாழ்க்கைச் சுவடுகள் சிறுகதைகளும் பெண் சித்தாந்தங்களைப் பேசுவதைக் காணலாம். 80களில் வெளியான சிறுகதைகளில் பிரச்சாரப் போக்குகள், தீவிரமாக கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கும் தன்மைகள் என்பவற்றினைக் காணலாம்.
தொண்ணூறாம் ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் இம்முயற்சிகள் சற்று அதிகரித்திருப்பதனைக் காணலாம். இக்கால கட்டத்தில் மரினா இல்யாசின் குமுறுகின்ற எரிமலை(1998), ஹஸீனா வஹாபின் வதங் காத மலரொன்று (1992), கெக்கிறாவை ஸஹானாவின் ஒரு தேவதைக் கனவு (1997), முஸ்லிம் மாதர் அமைப்பின் மனச்சுமைகள் (1992), புர்கான் பீ.இப்திகாரின் பிறந்த மண்(1999), இர்பானா ஜப்பாரின் புதுமைப் பெண், காத்தான்குடி பாத்திமாவின் பொய்த் தூக்கங்கள் ஆகிய தொகுதிகள் வெளி வந்துள்ளன.
90களில் வெளியான சிறுகதைத் தொகுப்புக்களை நோக்கின் குமுறுகின்ற எரிமலைகள், ஒருதேவதைக் கனவு, வதங்காத மலரொன்று என்பன குறிப்பிட்டுக் கூறப் படக்கூடிய தொகுதிகளாகின்றன. இவற்றில் ஹஸீனா வஹாபின் கதைகள் அபரிமிதமான உணர்ச்சிகள் இன்றி இயல்பான போக்கில் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கதையில் பாத்திரங்கள் லாவகமாக, சிறப்பாக நடமாட விடப்படுகின்றன. இலட்சிய நோக்கை இவரது கதைகளில் காணலாம். மரீனா இல்யாசின் கதைகளிலும் பெண்களே பேசப்படுகின்றனர். சீதனக் கொடுமை உட்பட ஆண்கள் பெண்களை உணர வேண்டும் என்ற நோக்கில் பல கதைகள் எழுதப்பட்டுள்ளன. பெண்களின் மனவுணவுர்கள் அழகாகப் படம் பிடித்துக்காட்டப்பட்டுள்ளன. துன்பங்களை வார்த்தைகளால் வடித்துள்ளார். கெக்கிறாவை சஹானாவின் ஒரு தேவதைக் கனவு என்ற சிறுகதைத் தொகுப்பானது இன்னல்களை சுமக்கும் பெண்களின் இயல்புகளைக் காட்டி நிற்கின்றது. இவர் அற்புதமான புரிதல் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். கதை மரபு சிறுகதை பிரக்ஞை, பாத்திர வார்ப்பு போன்றன சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளன. நுணுக்கமான முறையில் இயல்பாக மண வாழ்வின் முரண்பாடுகளை, சிக்கல்களை வெளிப்படுத்தியுள்ளார். வளர்ந்துவரும் வளர்ந்துவரும் ஒரு வளர்ந்துவரும் ஒரு தரமான சிறுகதை ஆசிரியராக கெக்கிராவை சஹானாவைக் குறிப்பிடலாம். சிறுகதை உத்திகளை அழகாகக் கையாண்டுள்ளார். இவரது நடை கூட அழகாகக் காணப்படுகின்றது.
குறிப்பாக தொண்ணூறுகளுக்குப் பின் 2000ஆம் ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் சலைமா சமி இக்பாலின் திசை மாறிய தீர்மானங்கள் (2003), லரீனா ஏ.ஹக்கின் எருமைமாடும் துளசிச் செடியும் (2003), கெக்கிறாவை சஹானாவின் ஒரு கூடையும் இரு முட்டைகளும் (2009), நயீமா சித்தீக்கின் வாழ்க்கை வண்ணங்கள் (2005), மஸீதா புன்னியாமீனின்; மூடுதிரை (2008), ஜெனீரா அமானின் பிரியமான சிநேகிதி (2009), ஹாறாவின் மல்லிகை இதயங்கள்(2010) போன்ற சில தொகுப்புக்களே இதுவரையில் வெளிவந்திருப்பதனைக் காணலாம். இவர்களில் நயீமா சித்தீக், சுலைமா சமி இக்பால் போன்ற பெண்மணிகள் எண்;பதுகள் முதல் இன்று வரை சிறுகதைகளைப் படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
2000ஆம் ஆண்டுகளுக்குப் பின் குறிப்பிடத்தக்களவு தொகுப்புக்களே வெளிவந்துள்ளன. சுலைமா சமியின் திசை மாறிய தீர்மானங்கள், சமூக ஒற்றுமை, மனிதாபிமான உணர்வு, ஏமாற்றப்பட்ட எதிர்பார்ப்புகள் என்பவற்றை சிறப்பாகக் காட்டுகின்றன. மேலும் சமூகத்தில் புதிதாகத்; தோன்றும் பிரச்சினைகள், அநாதையின் அவலம், வெளிநாடு செல்வதால் குடும்பம் குட்டிச்சுவராதல், போன்ற பல கருக்களை மையமாகக் கொண்டு காணப்படுகின்றன. சமூக பிரச்சினைகளே அதிகமாக பேசப்படு கின்றன. முதிர் கன்னியின் மன வுணர்வுகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
இலக்கியம் சமூகத்தின் விழிப்புணர்வு ஊடகம் என்ற வகையில்
முஸ்லிம் பெண்களும் தம்முடைய சமூகத்தின் விடிவை நோக்கி
பல்வேறு சிறுகதைகளைப் படைத்து வருகின்றனர். என்றாலும்
இவர்களது சிறுகதைகளின் எடுத்துரைப்பு, உருவ, உள்ளடக்கங்களில்
சிற்சில குறைபாடுகளும் காணப்படுகின்றன.
கெக்கிறாவை சஹானாவின் ஒரு கூடையும் இரு முட்டைகளும் என்ற சிறுகதைத் தொகுதியானது வெளிச் சொல்ல முடியாத மனப் போராட்டங்கள், குடும்ப மேலாதிக்க வன்முறைகள், கல்வி, தொழில்நுட்ப நிறுவனங் களில் எதிர்கொள்ளப்படுகின்ற பிரச்சினைகள் என்பவற்றை எடுத்தியம்புவதாகக் காணப்படுகின்றது. பெண்கள் சுமுகமாகப் பிற ஆடவருடன் பழகுவதால் ஏற்படும் சிக்கல்கள், அகதிகளின் அவலங்கள் இவைபோன்ற நவீன உலகுக்கு எற்றாற் போன்ற பல சிந்தனை உணர்வுகளை சிறுகதைகளினூடாகப் பிரதிபலித்துள்ளார். சமூக அடக்குமுறைகளுக்கு தீர்வு காணும் பாங்கில் இவரது கதைப்பாங்கு காணப்படுகின்றது.பெண்ணியம் பல கோணங்களில் வளர்ச்சிபெற்று வருகின்ற வேளையில், பெண்கள், பெண்ணிய சிந்தனைகளை உள்வாங்கியவர்களாக அதிகமான சிறு கதைகளைப் படைத்துள்ளனர். 1990களுக்கு முன் வெளியாகிய சிறுகதைகளில் பெண் சமூகத்தின் விழப்புணர்வை நோக்கி உணர்ச்சிவசப்பட்டு கதை கூறப்பட்டிருப் பதனைக் காணலாம். 90களுக்குப் பின் வெளியாகிய சிறுகதைகளில், பெண் பிரச்சினைகள் மாத்திரமன்றி விழிம்பு நிலை வாழ்க்கை, முதுமையின் தவிப்பு, அகதி வாழ்வு, வறுமையின் வடுக்கள், குடும்ப வாழ்வின் வேறு பக்கங்கள் போன்ற பல விடயங்களும் அலசப்பட்டு வந்துள்ளன.
பொதுவாக 80, 90களில் முனைப்புப் பெற்ற பெண்ணிய சிந்தனைகளின் தாக்கம், பெண்ணியக் கொடுமைகள், ஆணாதிக்க வெறிகள், தொழில் நிறுவனங்களில் எதிர் நோக்கும் பிரச்சினைகளின் தாக்கம் என்பவற்றினை வெளிப்படுத்தும் போக்கினை அக்கால சிறுகதைகளிலே அதிகம் காணலாம். 90களுக்குப் பின்பு பெரும்பாலும் சமூக விடயங்கள், பெண்ணிய சித்தாந்தங்கள் கூறப்பட்டாலும் கூட அவை தீவிரமாகவன்றி இயல்பான வாழ்க்கைப் புரிதல்களுடன் சுவைபட எடுத்தியம்பப்பட்டிருப்பதனைக் காணலாம். இச்சிறுகதைகள் புதிய விடயங்களை நோக்கிய நகர்வின் பிரதிபலிப்புக்களே ஆகும். கதையின் கருக்கள் ஒன்றாயினும் புதிய சிந் தனைகளுக்கு ஏற்ப எடுத்துரைப்பு முறையில் இவர்களது வளர்ச்சி நிலையினைக் காணலாம். ; பாத்திரங்களை உயிரோட்டமாகப் ;துள்ளனர். ஒரு கரு பலகோணங்களில் ஆராயப்படுவதனைக் காணலாம். பெண்மொழி என்பது, பெண்களது உணர்வுகளை பெண்களே கூறுவதாகும். இப்பெண்மொழி பெண் சிறுகதையாசிரியர்களால் அழகாகக் கையாளப்பட்டுள்ளது.
லரீனா ஹக் தனது சிறுகதைகளில் பெண்மனவுணர்வு போராட்டம், போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் உணர்வுகள், அநாதைச்; சிறுவர்களின் பரிதாபநிலை, ஆணாதிக்கம், பெண்களே பெண் களுக்கு எதிரிகளாக இருக்கின்ற நிலை, வெளிநாட்டுக்குச் செல்லும் பெண்கள் ஞானம் – கலை இலக்கியச் சஞ்சிகை – மார்ச் 2013 25எதிர் நோக்கும் பிரச்சினைகள், சிறுவர் துஷ்பிரயோகம், விதவைகள், கைவிடப்பட்ட பெண்களின் நிலைமைகள் என்பவற்றை அழகிய பாணியில் எடுத்தியம்பியுள்ளார். ‘கற்பு என்றும் கற்பூரமில்லை’, ‘வீதிக்கு வந்த சீதை’ என்பவை குறிப்பிடத்தக்க இவரின் சிறுகதைகளாகும்.
முற்போக்குச் சிந்தனைகளின் தாக்கம், வர்க்கப் போராட்டம், என்பவற்றின் எதிரொலிப்புகளையும் சிறுகதைகளினூடாகக் காணலாம். ‘ஒரு கந்தூரி நடந்து முடிகிறது’, ‘ஊமைகள் பேசுகின்றனர்’, ‘அவனுக்கென்ற ஒரு ஆசை’ போன்ற நயீமா சித்திக்கின் சிறுகதைகளிலும், இர்பானா ஜப்பாரின் ‘ஒருவன் காத்திருக்கிறான்’, ‘நிஜங்களின் தரிசனம்’, போன்ற சிறுகதைகளிலும், சமி இக்பாலின் ‘கருணையுள்ளவன்’, ‘விடியலைத் தேடி’ போன்ற சிறுகதைகளிலும், ஸஹானாவின், ‘இரு வேறு பார்வைகள்’, மஸீதா புன்னியாமீனின் ‘நெருடல்கள்’ போன்ற சிறுகதைகளிலும் இத்தன்மைகளைக் காணலாம். இதே போன்று ஆணாதிக்கத்தின் எதிரொலிப்புகளையும் காணலாம். மரீனா இல்யாசின் சிறுகதைகளில் இத்தன்மைகளை அதிகம்; காணலாம். ஸஹானாவின் ‘சந்தேகக் கோடு’ இத்தன்மைகளைக் கொண்டது. சமி இக்பாலின் வைகறைப் பூக்கள், கருணையுள்ளவன், லரீனாவின் புள்ளிகள் போன்ற பல சிறுகதைகளில் வறுமையின் வடுக்களைக் காணலாம்.
மேலும் சிறுவர் துஷ்பிரயோகங்களின் பிரதிபலிப்புக்களும் இவர்களது சிறு கதைகளின் கருப்பொருளாய் அமைந் துள்ளன. நயீமா சித்திக்கின் ‘இவளுக்கென்று ஓர் ஆசை’, சமி இக்பாலின் ‘விடியலை நோக்கி’, மஸீதா புன்னியாமீனின் ‘முகவரியில்லா முகம்’, ‘துருவங்கள்’, லரீனாவின் ‘புள்ளிகள்’ போன்ற சிறுகதைகளிலே இவற்றைக் காணமுடிகின்றது. மேலும் சாதி இன வேறுபாடுகளைக் கடந்த நிலையை சமி இக்பாலின் ‘புலரும் புதிய உறவுகள்’, லரீனாவின் ‘வரட்டு வேதாந்தம்’, மஸிதா புன்னியாமீனின் ‘கரும்புள்ளி’ போன்ற சிறுகதைகளிலே காணலாம்.
சமுதாயத்தில் புரையோடிப் போயுள்ள அவலங்களை பெண்கள் தொடர்பான சீர்கேடுகளை வெளிக்கொண்டு வருவதில் முஸ்லிம் பெண் சிறுகதையாளர்கள் அதிக அக்கறை செலுத்தியுள்ளமையை அவர்களது சிறுகதைகளின் வாயிலாக அறிய முடிகின்றது. அதாவது பெண்ணிய சித்தாந்தங்கள், பெண்களின் பிரச்சினைகள் (குடும்பம், தொழில் சார்), உள்ளக்குமுறல்களின் வெளிப்பாடுகள், வர்க்கப் போராட்டம், புரட்சி, தீவிரம், சமயம், மனிதநேயம், சமூக எழுச்சிக்கான உணர்வு பூர்வமான சிந்தனைப் போக்குகள், ஆணாதிக்கக் கொடுமைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், கணவனையிழந்த பெண்களின் அவலங்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் அவலங்கள், பெண்களின் சுயாதீனமற்ற நிலை போன்ற இன்னோரன்ன பல்வேறு விடயங்களையும் வெளிக்கொண்டு வருவதாக இம்முஸ்லிம் பெண் சிறுகதையாளர்கள் காணப்படுகின்றனர்.
பெண்ணிய வேட்கையுடன் அதிகமான சிறுகதைகள் காணப்படுவதுடன் சமூக நடப்புக்களை பாத்திரங்களின் வாயிலாக உலாவ விட்டுள்ளனர், தேவைக்கேற்ப பிரதேச வழக்குகளையும், கச்சிதமான வருணனைகளையும் கொண்டு சிறுகதைகளைப் படைத்துள்ளனர். பிரதேசப் பேச்சு வழக்கின் பிரதிபலிப்புக்களை இவர்களது சிறுகதைகளில் காணலாம். பாத்திரப்படைப்பு உருவ உள்ளடக்கங்கள் சிறப்பாகக் கையாளப் பட்டுள்ளன. இவர்களது சிறுகதைகளில் தலைமைப் பாத்திரம் பெண் பாத்திரமாகவே காணப்படுவதனைக் காணலாம். முஸ்லிம் பெண்கள் புதிய விடயங்களையும் தங்களது சிறுகதைகளிலே புகுத்தியுள்ளனர்.
இலக்கியம் சமூகத்தின் விழிப்புணர்வு ஊடகம் என்ற வகையில் முஸ்லிம் பெண்களும் தம்முடைய சமூகத்தின் விடிவை நோக்கி பல்வேறு சிறுகதைகளைப் படைத்து வருகின்றனர். என்றாலும் இவர்களது சிறுகதைகளின் எடுத்துரைப்பு, உருவ, உள்ளடக்கங்களில் சிற்சில குறைப்பாடுகளும் காணப்படுகின்றன. என்றாலும் இவர்கள் இடைநடுவில் விலகி விடாது தொடர்ந்தும் தரமான படைபுக்களை தரக்கூடியவர்களாகவும், வளர்ந்துவரும் படைப்பாளிகளை ஊக்கப்படுத்துபவர் களாகவும் திகழ வேண்டியது காலத்தின் தேவையாகும்.
ஞானம் இதழுகாக எழுதப்பட்டது ஊடறுவுக்காக சந்தியா
பூரணமான தகவல்கள் வரவில்லை. அத்துடன் பல தகவல்கள் பிழையாகவும் உள்ளது. கவனிக்கவும்.