கவிதா (நோர்வே)
சமுத்திரம் தாண்டிக் கண்ட தரையெங்கும்
பரந்து கிடக்கிறது மேடை
உதிர்ந்த கனவொன்றை விடிந்த பகலொன்றில்
ஒட்டும் முயற்சியாக
ஆதிகால முதல் மனிதராய்
நிறம் பூசிய கூத்தர்கள்
வினோத ஒலிஎழுப்பி நிர்வாண நடமிட
மேடை நிகழ்வ தொடர்கிறது
என்றோ முளைக்கும் இலைகளுக்காகக்
காத்திருக்கும் நிர்வாணிகளின்
மரம் வேண்டிக் குழுநடன வீச்சு
அதிர்ந்து அதிர்ந்து விழுகிறது
யாழும், முழவும் அவரவர் நடையில்
இசைத்தொழுக
அதன் அதிர்வில் ஒரு குழந்தை அழுகிறது
பொறுமையிழந்த ரெட்டைபின்னல்ச் சிறுமி
வெளியே ஓடி மறைகிறாள்
கர்பவதியோ உட்கார்ந்தபடியே அசைகிறாள்
ஒரு கிழவன் காத்திருக்கிறான்
ஒரே மேடையில் ஒரே ஆடுபொருளோடு
தனித்தனியாக மோதியாடும்
வினோதஆட்டம் தொடர்கிறது
இலைகளுள் மறைத்துகொள்ளலாமெனக் காத்திருந்த
இரசிகரெல்லாம்
மரம் தேடி தெருக்களுக்குத் தாவியலைய
கனவுகளோடு காலாவதியாகிக் கொண்டிருக்கிறான் கிழவன்
ஒரு மரத்தின் அடியில் காத்திருக்கிறாள் ரெட்டைபின்னல்ச் சிறுமி
நெருக்கி அமர்வதற்காய் குழந்தை அவளிடம் தவழ்ந்து செல்கிறது
கர்ப்பவதியின் பெரும் கூச்சலோடு
புதிய வெற்றுடலாய் வந்து விழுகிறது
ஒரு புதிய குழுந்தை
இது இலைகளற்ற பனிகாலம்
ஊடறுவுக்கு இக்கவிதையை அனுப்பித்தந்த சர்மிதா (நோர்வே) க்கு எமது நன்றிகள்