ஆழியாள் (அவுஸ்திரேலியா)
மிளகும், கிராம்பும் கூடின
கவிச்சை வயற்காடாய்
என்னைக் கமிழ்ந்தெழச் செய்த வண்ணம்
வருகிறாய் நீ மாதந்தோறும்
மார்பு இரண்டின் கனம் ஏற
அடிவயிறு அலைந்துளைகிறது
துளித்துளியாய்ப்
பரவும் ஈரலிப்பின் வெதுவெதுப்பில்
நகக் கண்கள் இருபதும் பளபளக்கின்றன
இடுப்போ இளகிக் கிடக்கிறது.
உடன் பகிர
இருபத்தியெட்டு நெடுநாட் கதைகள் உண்டு
(இருப்பதோ மூன்றே நாள்.)
சொல்லி முடிப்பதற்குள்
நெஞ்சு வெம்பித் தொண்டையும் கம்முகிறது.
தொடர்ச்சியாய் என்னுள் எழும் வட்ட வட்டக் கோபத்தை,
ஏனென்றே தெரியாத எதற்கோவான சலிப்பை
தூக்கிப் போட்டு உடைக்கிறேன் –
சலீர் சலீரென அவை சிதறி நம்முன் கிடக்கின்றன.
கதவடியில் அண்ணர் முறைத்துக் கொண்டு
நிற்கிறதையிட்டு நமக்கென்ன கவலை?
இப்போது நம்
குதித்தாடும் அசைவுகளோடான உடலின்
கூத்தாட்டம் தொடங்கிவிட்டது
சிரிப்பும் எம்மை அப்பிக்கொண்டாயிற்று
எம் சிரிப்பின் களி கூடக் கூட
முழுதாய் ஜொலித்துப் பெருவெளியில் பிரகாசிக்கிறது சந்திரன்.
இதோ கால்களிடையே
சந்தோஷத்தின் புதிர்ப்பாதைகளெல்லாம் மடைதிறக்க
ஒரே அள்ளாய் அள்ளுப்பட்டுப் போகிறது
ஒரு துண்டுச் செங்கபிலப் பசுமை.
இந்நாளில் எந்நாட்களிலுமற்ற நிம்மதியுடன்
கழிமுகத்து வண்டற் படிவாய் – உன்
அடிவயிறு கட்டி உறங்குகிறேன் வெதுவெதுப்பாய் – அது
பிறப்புக்கு முன்னதாயும் சாவை மிக அண்மித்ததாயும் இருந்தது.
16/8/2008