புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல்

– முனைவர் இரா.செங்கொடி

 

மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை மனிதகுலத்துக்கே அவமானச் சின்னமாக இன்றுவரை இருந்து வருகிறது. போரின் போது முதலாவது பாதிக்கப்படுவதும் பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்ற ஒரு கருத்து உண்டு. போரின் போது பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுக்க பதிவாகியுள்ளது. இதை ஹிட்லரின் நாசிப்படைகள் முதற்கொண்டு அண்மைய ஈழப்போர் வரையிலும் காணமுடியும். போர்க்காலங்களில் பெண்களை சிறையில் அடைத்து கொடுமை செய்தல், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்குதல் உள்ளிட்ட கொடுமைகளைச் செய்வது அன்று முதல் இன்று வரை நடைபெற்ற எல்லா போர்களிலும் இந்நிகழ்வுகள் பதிவாகியுள்ளது.

ஈழத்துப் பெண்களை நோக்கினால், தமிழினத்துக்கு எதிரான சிங்கள அரசின் அடக்குமுறையும், அதன் விளைவான ஆயுதப் போராட்டமும், பெண்களின் வாழ்க்கையை மேலும் கேள்விக்குள்ளாக்கியது. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஈழத்துப் பெண்கள் அனைத்து நிலைகளிலும் தங்களது பங்களிப்பைத் தந்துள்ளனர். இந்திய இராணுவத்தின் ஆதின் ஆக்கிரமிப்பு வெறிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்த அன்னை பூபதி முதல் போர்க்களத்தில் மரணம் அடைந்த பெண்போராளிகள் வரை தமது உயிரை ஏராளமான பெண்கள் அர்பணித்துள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற தேசியவிடுதலைப் போராட்டம் வரையிலும் தம்மை இணைத்துக் கொண்டு போராடிய பெண் போராளிகள் பலரும் மடிந்து போயுள்ளனர். 1983-இல் உச்சத்தை அடைந்த இலங்கை இனக்கலவரமும், அதன் தொடர்ச்சியாக இலங்கையில் நடைபெற்று வரும் தமிழினத்துக்கு எதிரான அரச அடக்குமுறையும், அதன் விளைவான ஆயுதப் போராட்டமும் பெண்களின் வாழ்வியலை பலநிலைகளிலும் துன்பத்திற்குள்ளாக்கி இருக்கிறது. இத்தகு பிரச்சினைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு புகலிடம் தேடிவந்த பெண்களுக்கு தாய்மண் சூழலில் மறுக்கப்பட்ட உணர்வுகள், புகலிடச் சூழல் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பைத் தந்துள்ளது. தாய்நாட்டின் இனப்போராட்டச் சூழல், அது தந்த இழப்பு இந்திய இராணுவத்தின் கொடுமைகள், உள்நாட்டு  இடம்பெயர்வுகள், இவற்றால் அதிகமாகப் பாதிக்கப்படும் பெண்களின் நிலை, போரை எதிர்கொள்ளும் மனநிலை என இப்பாடுபொருள் நீண்டு செல்வதைக் காணமுடிகிறது. ஈழத்துப் பெண்களால் பேசப்படும், படைக்கப்படும் பெண்ணிய இலக்கியம் எவ்விதமான மேற்கத்திய கோட்பாடுகளின் தாக்கமும் இன்றி உண்மையான பெண்விடுதலையைப் பேசுவதாக இருப்பதற்கு காரணம் போரின் வலியை உணர்ந்த அவர்களின் அனுபவமே படைப்பாக வெளிப்படுவதாலேயே ஆகும். இதனாலேயே புகலிட ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகள் தனித்த கவனம் பெறுகின்றன.  இலங்கை இராணுவத்தின் வக்கிரமான செயற்பாடுகளை வெளிப்படுத்தியதன் மூலம் பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. கலாவின் `கோணேஸ்வரிகள்’ என்ற கவிதை தமிழ்ப்பெண்களே இந்தத் தீவின் சமாதானத்திற்காக எதாவது செய்யவேண்டுமென்று நினைத்தால், உடைகளை கழற்றி நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள். என் தாயே நீயும் தான், சமாதானத்திற்காய் போராடும் புத்தரின் வழிவந்தவர்களுக்காய் உங்கள் யோனிதையத் திறவுங்கள், அவர்களின் வக்கிரங்களைத் தீர்த்துக்கொள்ளப்படும்.

``வீரர்களே வாருங்கள்
உங்கள் வக்கிரங்களைத்
தீர்த்துக் கொள்ளுங்கள்
என் பின்னால் என் பள்ளித் தங்கையும் உள்ளாள்
தீர்ந்ததா எல்லாம்
அவ்வளவோடு நின்றுவிடாதீர்கள்
எங்கள் யோனிகளின் ஊடே
நாளைய சந்ததி துளிர்விடக் கூடும்
ஆகவே, வெடிவைத்தே சிதறடியுங்கள்
இனிமேல் எம்மினம் துளிர்விடாதபடி
சிங்கள சகோதரிகளே
உங்கள் யோனிக்கு இப்போது வேலையில்லை’’

இவ்வாறே போர்க்களத்தில் ஒவ்வொரு வீரனிடமும், எதிரியின் தாயை, தாரத்தைத மகளைப் புணரும் விலங்கு மனம் வார்த்தெடுக்கப்பட்டுள்ளது. சிங்கள இராணுவம் இறந்த பெண்ணுடல் மீதான தங்களது பாலியல் வக்கிரங்களைக் கொட்டித்தீர்க்கும் இராணுவமாக அம்பபப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல பாலியல் வல்லுறவு செய்து விட்டு பெண்ணின் பிறப்புறுப்பில் கிரானைட் வைத்துக் கொலை செய்த காட்டுமிராண்டி இராணுவமாகவும் வெளிப்பட்டிருப்பதை இக்கவிதை வரிகள் வெளிப்படுத்துகின்றன. (கர்ப்பிணிப் பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கிய இராணுவமாகவும்) மன்னம்பேரியை நிர்வாணமாக்கி வீதிவீதியாக இழுத்துச் சென்று, பாலியல் சித்ரவதை செய்து, பின் கொலை செய்த வரலாற்று நிகழ்வு இலங்கை இராணுவத்தையே சாரும்.

மணிப்பூர் மாநிலத்தின் பெண்கள் இந்திய இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட மனோரமாவின் படுகொலைக்குப் பின் இந்திய இராணுவத்தை எதிர்த்து நிர்வாணத்தையே ஆயுதமாக ஏந்தி இந்திய இராணுவத்தின் வெறிச்செயல்களை அம்பலப்படுத்தினர். இதே அனுபவத்தையே கலாவின் `கோடுணஸ்வரிகள், கவிதையிலும் நம்மால் காணமுடிகிறது. புறநானூற்றுத் தாயின் வீரத்தை பெருமிதமாகச் சொல்லி ஆண்படைப்பாளர்கள் பேற்ப்பரணி எழுதியுள்ளனர். கலாவின் `விதைத்தவைகள்’ என்ற தலைப்பிலான கவிதை இன்றைய போர்முனையிலிருக்கும் ஒரு தாயின் வலியைக் கூறுவதாக அமைந்துள்ளது. கசாப்புக் கடைக்காரனின் வாசலில் காத்திருக்கும் ஆடுகளைப் போலக் காத்திருக்கிறோம். நம்மையே பலிகொண்டு ஒரு தேவதையின் ஆட்சியை நிலைநிறுத்துவதாகச் சொல்லுவதை நம்ப வேண்டாம்.

“ஆனால் என் தாய்
மண்டியிட்டுக் கதறுகிறாள்
சிதறுண்டு போன
உடலங்களையாவது
தன்னிடம் தரும்படி
அவள் அழுது புலம்புகிறாள்.
இரத்தத்தில் குளித்து
பிய்ந்து போய் இருக்கும்
உடல்களின் மென் நெற்றி
பொட்டுகளில்முத்தமிட்டு
புதைகுழியில் மூடுவதற்காய்.

இப்போதும் மடுமாதா தன்
வயிற்றிலும் மார்பிலும்
அடித்துக் கதறுகிறாள்.
அந்த 38 பேரின் சாட்சியாக
அவள் உள்ளாள்.

நீங்கள் என் தாயின்
வயிற்றில் விதைத்தவைகள்
அவள் கால்களுக்கிடையால்
இரத்தமாய் கொட்டும்
அப்போது நீங்கள்
அதிர்ச்சியடைய வேண்டாம்”

தாய்நிலம்  தன் பெண்களின் உயிர்குடிக்கும் எமனாகிவிட்டதையும், தமிழ்ப்பெண்களை ஈனப்பிறவியாய் நடத்தும் பேரினவாதிகளின் இழிசெயலையும், அவர்களின் கொலைவெறிச் செயலையும் துக்கம் கலந்த குரலில் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்நிலையில் உலக அளவில் யுத்தம் பெண்கள் மீது திணித்திருக்கும் அநீதியைப் பின்வரும் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

*“யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களில் பெண்களும், சிறுவர்களுமே அதிகளவு இருக்கிறார்கள். யுத்தம் இடம் பெறும் பகுதிகளில் இருந்து பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்திச் செல்லப்படுவது 85 சதவீதமாக இருக்கின்றது.

*கொங்கோவின் உள்நாட்டுப் போரில் யுவிரா பிரதேசத்தில் 2002 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 40 பெண்கள் வீதம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

*உகாண்டாவில் 1994இல் இடம்பெற்ற பாரிய இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் 250000 முதல் 500,000 வரையான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

*சியராலியோனில் இடம்பெயர்ந்த பெண்கள் 94 சதவீதத்தினர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

*ஈராக்கில் 2003-இல் இடம்பெற்ற யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் பெண்களும் சிறுமிகளுமாகக் குறைந்தது 400 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகளில் 8வயது நிரம்பிய சிறுமிகளும் அநேகம்.

*கொசோவாவில் 30 முதல் 50 சதவீதம் வரையான பெண்கள் சேர்பிய இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்வாறாக போர்க் காலங்களில் எதிரித் தரப்பின் பெண்கள் இராணுவப் படையினருக்கு விருந்தாக ஆக்கப்படுவதும், பலருக்கான பாலியல் போகப் பொருளாக, பாலுறவு இயந்திரமாக ஆக்கப்படுவதும், உலகம் முழுவதிலும் நடைபெற்ற அனைத்துப் போரிலும் தெரிய வருகிறது. இதைப் போலவே அண்மையில் முடிவுற்ற இலங்கைப் பேரிலும் பெண்கள் மீது வன்மம் திணிக்கப்பட்டுள்ளது பின்வரும் செய்திகள் உறுதிசெய்கின்றன.

இலங்கை வாழும் தமிழர்களை முற்றாக அழிக்கும் இனவெறி நடவடிக்கைகளை மேற்கொண்ட சிங்கள அரசு போரினால் மட்டும் இன்றி பல்வேறு வழிகளிலும் தமிழ் இனத்தின் வளர்ச்சியை முடக்கியது. இலங்கையில் போர் நடைபெற்ற வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வந்த கருவுற்றிருந்த தமிழ் பெண்களின் கருக்களை கலைக்குமாறு சிங்கள இராணுவ அதிகாரிகளால் வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இது தமிழர்களின் வருங்கால சந்ததியினரும் இலங்கையில் இருக்கக்கூடாது என்பதற்காக திட்டமிட்ட நடவடிக்கையாகும். மேலும் அது ஒரு இனத்தை கருவிலேயே அழித்தொழிக்கும் செயலுமாகும். இத்தகு கொடுமையான மனிதகுலச் சீரழிவையே தன் கவிதைகளின் சுட்டுகிறார் ஆஸ்திரேலியாவில் இருந்து கவிதை எழுதி வருகின்ற பாமதி. அவருடைய `சமாதானம்’ என்ற தலைப்பிலான கவிதை பின்வருமாறு,

``சமாதானப் பறவைகளே
உங்கள் இறக்கைகள்
எம் மக்களுக்காய வலுப்பெற வேண்டும்.
விடியாத அகதி முகாமில்
காத்திருக்கும் சிறுவர்களைப் பார்
கூட்டுப் புழுக்களானார்கள் பார்
…………………………………………………..
உடைமைகளையும் குழந்தைகளையும்
தொலைத்துவிட்டுச்
சமாதிகளுக்கு முன் வாய்பொத்தி அழும்
தாயுடன் நீ பேசு!
சமாதானத்தின் தேவை பற்றி
ஊதியத்திற்காய் விடை பெற்றான்
சடலமாய் ஒப்படைக்கப்பட்டான்
அங்கே தலை அடித்து அழும்
அந்தச் சிங்களத் தாயுடன் நீ பேசு!
எங்கள் மண்ணில்
குதறப்பட்டுக் கிடக்கும்
இயற்கையின் பாடலைக்கேள்
அது பேசும்

யுத்தபூமியில் சமாதானத்தின் தேவை பற்றி பார்க்குமிடமெல்லாம் மனித உயிர்கள் அழிக்கப்படுகையில், மனிதநேயமே இப்பூமியில் தொலைந்து விட்டதாக எண்ணிய படைப்புமனம் அமைதி பற்றியும், அமைதியின் தேவை பற்றியும் வலியுறுத்திப் பேசுகிறது.  `யுத்தத்தால் தொலைந்தோம்’ என்ற தலைப்பிலான பாமதியின் கவிதை போரினால் சீரழிந்து கொண்டிருந்த தமிழ்ச் சமுதாயத்தினை அடையாளம் காட்டுகிறது.

“மழலைகளையும் முட்களையும் ஒன்றாகப் புதைத்து
மூடிய குப்பை மேடுகளுடன்
என் தேசம் பிணக்காடாகும்
நானை மனிதர்கள் நடக்கவுள்ள தெருக்களில்
தேசியக் கொடிகள் மட்டுமே மிஞ்சிக் கிடக்கும்
ஆயிரக் கணக்கான இந்தச் சமாதிகளிடமா
விடுதலையைக் கொண்டாட முடியும்?
விட்டு வையுங்கள்
யாராவது ஒரு மனிதனையாவது விட்டு வையுங்கள்
யுத்தத்தால் அடிந்து போன எனது மண்ணையற்றி
எழுதக் குருதி நிரம்பிய பேனாவையும்
மனித நேயத்தை
உணர்த்த விட்டுவையுங்கள்

என்பதாக அமைந்துள்ள வரிகள் போரைத் தமிழ் மக்கள் மீது திணித்தவர்களின் மீதான கோபத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.

“உனது வாழ்வு இனம் மதம் பால்’
அடிப்படையின் கீழ்
இக்கணத்தில் இருந்து நிர்ணயிருக்கப்படும்
உன் காலங்கள்
அக முகாம்களிலோ
ஆயுதங்களுடன் பயிற்சி முகாம்களிலோ?
நாங்கள் வாழ்வதற்கான அர்த்தத்தைத்
தொலைத்துப் பல நாட்கள் ஆகின்றன
எங்களிடம் பகிர்ந்து கொள்ள நம்பிக்கைகளோ
வசந்தங்களோ இல்லை
நீ உறங்கிக் கொண்டிருக்கும்
இப்பரப்பில்
எக்கணமும் குண்டுகள் வீசப்படலாம் என்பதே
இப்போதெல்லாம் உண்மை’’

என்று ஈழத்தில் பரிதவித்துக் கொண்டிருக்கும் எத்தனையோ ஆயிரம் தாய்மார்களின் உள்ளக்குமுறலை, பதட்டத்தை இக்கவிதை வெளிப்படுத்தியுள்ளது.

தெருவில் போகும் ஒவ்வொரு பெண்ணையும், இச்சையான பார்வையுடன் அலையும் ஆண்களை, நாய்மாதிரி வாலை ஆட்டிக்கொண்டு பெண்களின் பின்ன்hல் சுற்றுபபன், இரத்த வெறியுடன் அலையும் ஓநாய் போன்றவன் என்று பல வகைகளாக பிரித்துக் காட்டுகிறது. ஆழியாளின் `மன்னம்பேரிகள்’ என்ற கவிதை. இக்கவிதையில் வரும் பெண்ணுக்கு தெருவில் உலாவும் தன்னைத் துரத்தும் மிருகங்களைக் கண்டவுடன் மன்னம்மேரியையும், கோணேஸ்வரியையும் துரத்திய மிருகங்கள் நினைவுக்கு வருகிறது.

“காலைப் பொழுதுகள் பலவற்றில்
வீதி வேலி ஓரங்களில்
நாற்சந்திச் சந்தைகளில்
பிரயாணங்கள் பலவற்றில் கண்டிருக்கிறேன்……….
அதன் கண்கள்
நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று
அவற்றின் பாலைத்தாகம்
அறியாப் பாஷையை
எனக்குள் உணர்த்திற்று
அழகிய மன்னம் பேரிக்கும்
அவள் கோணேஸ்வரிக்கும்
புரிந்த வன்மொழியாகத்தான்
இது இருக்குமென
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்’’

(கவிதையில் வருகிற மன்னம் பேரி (22), 1971 ஏப்ரல் 16இல் படையினரால் கைது செய்யப்பட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டவர் என்கிற குறிப்பையும், கோணேஸ்வரி (33) அம்பாறைசென்றல் கேம்ப்-1 ஆம் காலனியைச் சேர்ந்தவன். 1997 மே 17ஆம் நாள் இரவு படையினர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியப் பின்னர் அவளின் பெண்உறுப்பில் கிரனைட் வைத்து வெடிக்கச் செய்துச் சென்றனர்.

போர் எந்த அளவிற்கு ஈழத்து பெண்களின் வாழ்வியலைப் பாதித்துள்ளது என்பதை சோகம் ததும்பவெளிப்படுத்துவதாக வறம்சவத்தினியின் `விசும்பும் வாழ்க்கை’ என்ற தலைப்பிலான கவிதை அமைகின்றது.

“மண்ணில் வேர்விட முடியாத
வாழ்க்கை விசும்பிற்று
வேதனைப் புண்களைத் தின்றன
இழவு வீட்டுக்குள் எப்படிச் சோறாக்குவது?
என்பதைக் கற்றுக் கொண்டனர் மக்கள்
இடிவிழுந்த அதிர்வில்தான
இப்போ எல்லாம் நடக்கிறது
துலாக்களுக்கும் வளைகளுக்குமாக
வெட்டப்பட்ட நான்
பதுங்கு குழிகளுக்காகவுந்தான்
பிணங்கள் (அ) அரிசியை வேகவைப்பதற்கும்
கால காலத்துக்கும் சபிக்கப்பட்ட
ஒரு நிலத்தின் மனச்சாட்சியாக
நான் புலம்பிக் கொண்டிருக்கிறேன்’’

போர்ச்சூழலில் தன் உடமைகளை இழந்து வெட்ட வெளியில் குடும்பம் நடத்தும் நிலையிலும், அடிப்படை வசதிகள் கூட இல்லாத அகதிகள் முகாம்களில் வாழும் நிலையில் பெண்கள் மிக மோசமான சூழலையே அனுபவிக்கக்கூடும். ஒரு பெண் வெட்டவெளியில் நின்று குடும்பம் நடத்துவது அவலமான பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். இவ்வாறான ஒரு சூழலில்அதனை அனுபவித்தே ஆகவேண்டிய நிலையில் உள்ள அகதியாக்கப்பட்ட ஒரு பெண்ணின் அவலக்குரலாக இக்கவிதை ஒலிக்கிறது.

இவ்வாறில்லாமல் யுத்தங்கள் பலவற்றின் போது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக பெண் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறாள். இலங்கை அறுராதபுரத்தில் இராணுவத்த்தனரை நம்பியே மிகப்பெரிய அளவில் பாலியல் விடுதிகள் நடத்தப்படுகின்றதாம். எல்லையோர கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களும், கணவனை இழந்தப் பெண்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வாறான விடுதிகள் இராணுவ அதிகாரிகள் சிலரது சொந்த விடுதிகளாகவும் உள்ளதாக பெண்கள் அமைப்பின் அறிக்கைகள் பலவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இவ்வாறான வாழ்க்கை வாழ்கின்ற பெண்களின் வாழ்வியலுக்கு பாலியல்  தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு உக்ரைனைச் சேர்ந்த 19வயது நிரம்பிய அகதிப் பெண் தமாராவின் கூற்றை இங்கே பதிவு செய்யலாம். இவள் இஸ்ரேலின் பழைய தலைநகரமான ரெரல அவின் மசாச் நிலையம் ஒன்றில் பணிபுரியும் பால்வினைத் தொழிலாளி.

“என்னால் முடிந்தாலும், நான் இப்போது திரும்பிப் போவேன் என்பதில் எனக்கு நிச்சயம் இல்லை. நான் அங்கு போய் என்ன செய்வேன்? ஒரு பாலுக்காக கியூவில் நிற்பது அல்லது எந்த கூலியுமற்று ஒரு தொழிற்சாலையில் வேலை செய்வது’’ இப்படியாக அவளுடைய கருத்துக்கள் வெளிப்படுகின்றன.

புகலிடப் படைப்பாளிகளில் முக்கியமான பெண் படைப்பாளியான லஷ்மி சொல்வதைப் போல, அமெரிக்காவில் செவ்விந்தியர்களுக்குப் பின், ஆப்பிரிக்காவில் நீக்ரோக்களுக்குப்பின், ஜெர்மனியில் யூதர்களுக்குப் பின், இன்னும் இன அழிப்புகளுக்குப்பின், இன்று பெண் இனத்திற்கு எதிரான மானிட அழிப்புகள் என்றும் இல்லாதவாறு மிகப்பெரிய பரிமாணத்தை அடைந்துள்ளது என்று கூறுவது நோக்கத்தக்கது. முடிவாக ஒரு பண்பாட்டின் மனச்சாட்சியாக அமைவது கலையும், இலக்கியமுமே என்ற வகையில் இன்றைய காலச்சூழலில், போருக்கு எதிரான குரலாகப் புகலிட ஈழத்துப் பெண்கவிஞர்களின் கவிதைகளை நோக்க முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *