சந்தியா (யாழ்ப்பாணம் )
யுத்தத்திற்குப் பின்னரான இக்கட்டான வாழ்வாதார பிரச்சினையின் சூழ்நிலையில் பெண்கள் ஆட்டோ ஓட்டும் சுயதொழில் முயற்சியில்; இறங்கியுள்ளார்கள். கணவனையிழந்த பெண்கள், மிக வறுமையால் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், தனித்து வாழும் பெண்கள் போன்றவர்களுள் 15 பேரைத் தெரிவு செய்து முயற்சியை பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தினர். முயற்சித்துள்ளனர். அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
யாழ். பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தரும் மாவட்ட இணைப்பாளருமான செல்வி உதயனி . கருத்து தெரிவிக்கையில் யாழ். மாவட்டத்தில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பங்களும் கணவனையிழந்த, குடும்ப வறுமையால் தமது தேவைகளையே நிறைவேற்றிக் கொள்ளமுடியாமல் உள்ள பெண்களும் நிறையவே உள்ளனர்.இப்படியானவர்கள் எமது பிரதேச செயலகத்தை அணுகி தம்முடைய வாழ்வை மேம்படுத்துவதற்கு ஏதாவது ஏதாவது உதவிகளைப் பெற்றுத்தரமுடியுமா? எனக்கேட்டார்கள்.நாங்கள் சுயமாக நின்று உழைக்கக் கூடிய ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கித் தரமுடியுமா? எனவும் வினவினார்கள் அதன் பிரகாரம் நாம் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்ய விருப்பமா என்று கேட்டபொழுது சற்று தயக்கம் காட்டினாலும் பின்னர் 15 அபெர்வரையில் இணக்கம் தெரிவித்தனர். 15 பேருக்கும் பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் உதவியுடன் 6 மாதப் பயிற்சிகளை வழங்கினோம். அத்துடன் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான பயிற்சியையும் பெறுவதற்கு ஒழுங்கு செய்து கொடுத்தோம். 10 பெண்கள் முழுமையான பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டார்கள். அதன்பின்னர் எமது நிறுவனத்தினால் கடனாக அப் பெண்களுக்கு ஆட்டோ வழங்கப்பட்டது. இன்று வரை அவர்கள் அனைவருமே ஆட்டோ மூலம் தொழில்செய்து தமது குடும்பத்தையும் பிள்ளைகளின் படிப்புச் செலவையும் பார்த்து வருகிறார்கள். எமக்கும் திருப்தியாகவும் சந்தோசமாகவும் உள்ளது அவர்களுக்கான நிறைவான தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு என உதயனி தெரிவித்தார்.