“கருக்கொலை” மையங்களால் காணாமல் போகும் பெண் இனம்

– ப.கவிதா குமார்

 girls_347

“தினமும் 2 ஆயிரம் சிசுக்கள் அழிப்பு”

பிறக்கும் முன்பே கருவில் கொல்லப்படும் எண்ணிக்கையில் இந்தியாவில் தினமும் 2 ஆயிரம் சிசுக்கள் அழிக்கப்படுவதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் சிசு கொலைக்கு முடிவு கட்ட வேண்டிய மத்திய, மாநில அரசுகளின் போதாமையால், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

 கருக்கலைப்பு மையங்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆண்டுக்காண்டு பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் கடுமையாக குறைந்து வருகிறது. மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள சேக்கிப்பட்டியில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 716 பெண் என்ற வகையில் எண்ணிக்கை குறைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

girls_347

கரு உருவாவதற்கு முன்பாக மற்றும் பிறக்கப்போகும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறிய உதவும் மருத்துவத்தொழில் நுட்பம் அதிவேகமாக மனித சமுதாயத்தில் இருந்து பெண் இனத்தைக் கறுவறுக்கும் வேலையைச் செய்து வருகிறது. “சமுதாயத்தில் சமமாக இருக்க வேண்டிய பெண் இனம் குறைந்தால் பல கட்ட சீரழிவுகளை வருங்கால சமுதாயம் சந்திக்க வேண்டியிருக்கும். அதிகரித்து வரும் பெண் கருக்கொலை, நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமையும். அப்படிப்பட்ட சூழ்நிலை உருவானால், குழந்தைகளும், பெண்களும் வன்புணர்ச்சிகளுக்கு ஆளாவார்கள். ஒரு பெண்ணை பலர் மனைவியாக பங்கிட்டு கொள்ளும் நிலையும் உருவாகும்” என்று ஐ.நா.சபையின் எச்சரிக்கை இப்படியாக உள்ளது.

தினமும் 2 ஆயிரம் சிசுக்கள் அழிப்பு

பிறக்கும் முன்பே கருவில் கொல்லப்படும் எண்ணிக்கையில் இந்தியாவில் தினமும் 2 ஆயிரம் சிசுக்கள் அழிக்கப்படுவதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் சிசு கொலைக்கு முடிவு கட்ட வேண்டிய மத்திய, மாநில அரசுகளின் போதாமையால், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2001ம் ஆண்டு பாலின விகிதாச்சாரப்படி 1 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஆயிரம் சிறுவர்களுக்கு 927 சிறுமிகள் மட்டுமே இருந்தனர். இப்போது வெளியாகியுள்ள 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஆயிரம் சிறுவர்களுக்கு 914 சிறுமிகள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் 1.2 கோடி பெண் சிசுக்கள் கருவில் அழிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு நாளும் 2 ஆயிரம் பெண் சிசுக்கள் சட்டத்துக்கு புறம்பாக கருவில் அழிக்கப்படுவதாக ஐ.நா. வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கேன் மையங்களின் செயல்பாடுகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய தலைநகரங்களான நகர்ப்புறங்களில் 48 சதவீத மக்கள் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் எண்ணிக்கை 3 கோடியே 71 லட்சத்து 89 ஆயிரத்து 229. பெண்கள் எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 49 ஆயிரத்து 729 என்ற அளவிலேயே உள்ளது.

தமிழகத்தில் 2011 மார்ச் மாதத்தின்டி 560 ஸ்கேன் மையங்கள் அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. 8 மரபணு சோதனை ஆராய்ச்சி கூடங்கள், 3943 அல்ட்ரா சவுண்ட் மருத்துவமனைகள், 38 செயற்கை கருத்தரிப்பு மையங்கள், 11 ஆம்னியோ சென்டிசிஸ் மையங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையால் மொத்தமாக 4560 மையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், நாமக்கல், கரூர், தர்மபுரி, ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், விருதுநகர், விழுப்புரம், திருப்பூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கருவுருவதற்கு முன்பு மற்றும் பிறக்கப்போகும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறிய உதவும் மருத்துவத்தொழில்நுட்பங்கள் சட்டத்தின்படி பதிவு செய்யாமலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன. தாய்மைப்பேற்றின் மகப்பேறு முதற்கட்டமாக அதை உறுதிப்படுத்திக்கொள்ள மகப்பேறு மருத்துவரை கர்ப்பிணிப் பெண்கள் அணுகி ஆலோசனை பெறும்போது அந்த மகப்பேறு மருத்துவர் கருத்தரிப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகளைக் கொடுக்கக்கூடிய எந்த ஒரு மருத்துவரும், மருத்துவமனையும் மரபணு ஆலோசனை மையத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிகளை பெருமளவு மதிப்பதேயில்லை.

2 ஆண்டுகள் கூட்டம் நடத்தப்படவில்லை

உதாரணத்திற்கு மதுரை மாவட்டத்தில், மரபணு ஆலோசனை மையம், மரபணு கிளினீக், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மையம் என 222 உள்ளன. ஆனால், ஏராளமான குழந்தை கருத்தரிப்பு மையங்கள் மதுரையில் இயங்கி வருவது இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சேவை மையங்கள், ஒவ்வொரு மாதமும் 5 ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டிய விபரங்கள் உரிய படிவத்தில் சமர்பிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா கூறியுள்ளார். ஆனால், இவற்றைக் கண்காணித்து 60 நாட்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்த வேண்டிய ஆலோசனைக்குழு ஒழுங்காக கூட்டத்தைக் கூட கூட்டுவதில்லை.

கடந்த 2009, 2010 ஆம் ஆண்டுகளில் கூட்டமே நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு ஒரு கூட்டம் தான் நடைபெற்றுள்ளது. அக்கூட்டத்திலும் 28 புதிய மையங்களுக்கு அனுமதி தருவது குறித்து தான் முடிவு செய்யப்பட்டுள்ளதே தவிர விதிமுறை மீறுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில் உள்ள 222 ஸ்கேன் சென்டர்களில் 101ல் தான் சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆணா, பெண்ணா என பார்த்து சொல்லப்படும் என மேலூரில் விளம்பரம் செய்யும் ஸ்கேன் சென்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவரை தமிழகத்தில் 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் எந்த மருத்துவர் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுகிறது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவதற்கு பெருமளவு அல்ட்ரா சவுண்ட் மருத்துவமனைகளே காரணமாக உள்ளன.

குறையும் எண்ணிக்கை

girls_tn_380

மதுரை மாவட்டத்தில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 716 பெண் குழந்தைகள் என்ற நிலைக்கு பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் 2010 ஆண்டு பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. கள்ளந்திரியில் 897, ஒத்தக்கடையில் 914, சக்கிமங்கலத்தில் 921, காஞ்சாரம்பேட்டையில் 909, குலமங்கலத்தில் 953, மேலக்காலில் 878, கருங்காலக்குடியில் 758, சேக்கிப்பட்டியில் 716, வெள்ளலூரில் 749, திருவாரூரில் 748, ஏ.வல்லாளப்பட்டியில் 740,  உத்தப்பநாயக்கனூரில் 718 என பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. நகராட்சி பகுதியில் திருப்பரங்குன்றத்தில் 885, திருமங்கலத்தில் 889 எனவும் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 2009 ஆம் ஆண்டு பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 953 ஆக இருந்தது. அது 2010 ஆம் ஆண்டில் 924 ஆக குறைந்துள்ளது. ஒரு வயதிற்குள் இறக்கும் குழந்தைகளின் விகிதம் கடந்த 2009 ஆம் ஆண்டு 0.1 என்ற நிலையில் இருந்து 1.6 என்ற விகிதத்தில் கூடியுள்ளது.

கருவுற்ற போது கருவின் தன்மையை கணிக்கும் தொழில்நுட்ப முறைகள் சட்டத்தை மீறுபவர்கள் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா சமீபத்தில் அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார். ஆனால், அந்த சட்டங்கள் ஏற்கனவே உள்ளவைகள் தான். மதுரை மாவட்டத்தில் இதுவரை அப்படி எத்தனை பேர் இச்சட்டத்தை மீறியுள்ளனர் என்றோ, யார் மீதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற பதிவோ இதுவரை இருந்த மதுரை மாவட்ட நிர்வாகங்களால் சொல்ல முடியவில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏன் பெண் குழந்தைகள் பிறப்பு குறைகிறது என்ற ஆய்வையும் மேற்கொண்டதில்லை. இதன் காரணமாகவே ஒவ்வொரு பகுதியிலும் குறையும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் குறைந்து வருகிறது.

ஆன்லைன் மூலம் பதிவு

திருச்சியில் கர்ப்பிணி பெண்கள் குறித்த பதிவு என்பது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டது. இப்படி செய்வதன் மூலம் புள்ளிவிபரக்கணக்கில் தவறு செய்ய முடியாது. ஆனால், தற்போது நிதியில்லை என்று ஆன்லைன் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் கருவுறும் தாய்மார்கள் குறித்த பதிவை மேற்கொள்வதன் மூலம் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்ற விபரங்கள் முழுமையாகக் கிடைக்கும். அதுவரை அரசு தரும் புள்ளி விபரங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு தான் வரும் என்று தமிழ்நாடு பெண் கருக்கொலைக்கு எதிரான பிரச்சார அமைப்பின் நிர்வாகி ஜீவா கூறினார்.

ஒரு பெண் முதல்வராக ஆளக்கூடிய மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் என்பது குறைந்து வருகிறது என்கிற அபாயத்தை அவரிடம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பெண்ணை பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என ஏழு பருவங்களாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.ஆனால், பிறக்கும் முன்பு கொல்லப்படும் இலட்சக்கணக்கான பெண் சிசுக்கள், ஏழு பருவங்களில் ஒன்றைக் கூட அடைய முடியவில்லை என்பது தான் பெரும் சோகம்.

http://keetru.com/



1 Comment on ““கருக்கொலை” மையங்களால் காணாமல் போகும் பெண் இனம்”

  1. மிகவும் பயனுள்ள பதிவு.சீதனக் கொடுமையும் இதற்கான முக்கிய காரணமே. இவ்விடயத்தில் மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும். அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *