லறீனா அப்துல் ஹக் (இலங்கை)
சகியே,
……………
நீயந்தப் பாடலைக் கேட்டிருக்க நியாயமில்லை
சுழல்கள் ஆழிகள் ஆயிரம் இருந்தும்
வெறிதே கிடக்கும் ஆழ்கடல் போலே
குரலற்றவளின் துயரப் பாடலும்
தனக்குள் உழன்றே மடிந்திடும், ஐயோ!
பறவையைப் போலே பாடவும் பறக்கவும் – அதன்
பாடலைப் போலே பாரெங்கும் மிதக்கவும்
ஆயிரம் கனவுகள் இருந்தும் தானென்ன?
அறுந்து கிடக்கும் தொண்டையின் குரலாய்
குரலற்றவளின் ஆழ்ந்த மௌனம் – ஓர்
இரும்பிருட் கூட்டுக்குள் ஒப்பாரி வைக்கும்.
பெண்ணுக்கு அறிவோடு ஆளுமை தந்து
படைத்தவன் சமநிலை தந்துமிப் பாரில்
கிடைத்திட்ட வரமிந்த வாழ்க்கையோ பெண்ணாய்ப்
பிறந்ததை எண்ணியே துயர்கொள வைத்தார்!
காலை எழுந்ததும் நள்ளிரவாம்வரை
வேலை செய்வது மட்டுமோ பெண் பணி?
மானிட உயிர்க்கெலாம் கைகளோ இரண்டுதாம்
மனையுறைப் பெண்ணுக்கோ ஆயிரங்கையென
நினைந்திடும் நிந்திக்கும் கயமை ஆடவர்
நல்லுணர்வெய்திட வழியென்ன சொல்வீர்?
குழந்தை பெறுவதும், பெற்றதை வளர்ப்பதும்
குற்றம் நேர்கையில் பழிகளைச் சுமப்பதும்
குற்றேவல் செய்வதை மட்டுமே பிறவியின்
கட்டாயமென்கின்ற கீழ்மை நீங்குமோ?
பெற்ற நற்கல்வியை பேசரிய திறன்களை
உற்ற சமுதாயத்தின் மேன்மை வளர்த்திட
பெற்றுத் தருவதைத் தடைசெய்தல் நீதியோ?
உடம்பாய் இரும்பாய் உணர்தலைத் தவிர்த்தொரு
உயிராய் உணர்வுகள் கனவுகள் சுமந்த
உன்னத மனுஷியாய்க் கருதிடும் காலம்
இன்னும் எத்தனை யுகத்தினில் தோன்றுமோ?
சமூகத்தைச் சீராக்கும் சூத்திரம் சொல்வார்
சமத்துவம் பேசியே கைத்தட்டல் வெல்வார்
வீடெனும் இருட்குகை வாழ்கின்ற மாடாய்
வாழ்கின்ற தம்பெண்டிர் நிலைமாற்றமாட்டார்
ஏனிந்த வேஷங்கள்> பொய்ம்மையின் கோஷங்கள்
என்கின்ற கேள்வியை கேட்டிடல் அரிது
‘குலப் பெண்கள் எதிர்கேள்வி கேட்பதேயில்லை>
வாயாடி> சீர்கெட்ட மூதேவி’ என்பார்
இப்படியாகத்தான் குரலற்றுப் போனோம்
இயந்திரம் போலொரு உடம்பென்று ஆனோம்
எருமையாய் நடத்திட ,எறும்பென மிதித்திட
பொறுமையின் தாய்நாம் மன்னிப்பின் மறுஉரு
‘பெருமையாய்” (?!) வாழ்கிறோம், ‘வாழ்வதாய்ச்” சொல்கிறோம்
குரலற்றவளின் நெடுந்துயர்ப் பாடலோ
தொண்டைக்குள் நசுங்குண்டு நாள்தொறும் மாயும்
வார்த்தைக்குள் நிரம்பாத் துயர்த்தீ அந்தப்
பாடலின் சிறகினை எரித்திடும், ஐயோ!
ஆதலினால்தான் சொல்கிறேன், சகியே!
நீயந்தப் பாடலைக் கேட்டிருக்க நியாயமில்லை
பாடலின் சிறகினை எரித்த அந்த வார்த்தைக்குள் நிரம்பாத் துயர்த்தீ கவிதையைத் தாண்டியும் பரவிப்பரவி உணர்வுகளைத் தீய்ப்பதைத் தவிர்க்கமுடியவில்லை.சிறப்பான கவிதை.
வாழ்த்துக்கள் சகோதரி.
faiza.kinniya.net