பாரதிதம்பி.(நன்றி : ஆனந்தவிகடன் [10 – அக்டோபர் – 2012])
போரால் பாதிக்கப்பட்டு மறுபடி யும் வாழத் தொடங்கி உள்ள மக்க ளுக்கு, உழைத்து வாழ்வதற்கான வாய்ப்புகளே இல்லாத நிலை ஒரு பக்கம் எனில், உழைப்பதற்கான திறனுள்ள ஆண்களும் வெகுவாக குறைந்துபோய்விட்டனர். பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஆண்கள் இல்லை. அவர்கள், போரில் கொல்லப்பட்டுவிட்டனர். எஞ்சி இருப்பதில் பாதிப் பேர், உடல் உறுப்புகளை இழந்து மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து வாழ வேண்டிய நிலை. மேலும் பல்லா யிரக்கணக்கானோர் இறந்துவிட்டார்களா, இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. |
இலங்கையில் இப்போது முகாம்கள் இல்லை. ‘முள்வேலி முகாம்கள்’ என்று நாமும் ‘நலன்புரி மையங்கள்’ என்று இலங்கை அரசும் அழைத்த அகதி முகாம்கள் முழுமையாக மூடப்பட்டுவிட்டதாக அறிவித்திருக்கிறது இலங்கை அரசு. ‘இது ஒரு வரவேற்கப்பட வேண்டிய முக்கியமான நடவடிக்கை’ என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. ஆனால், உண்மை என்ன? –
வனாந்தரத்தில் மக்கள்…
இலங்கை இறுதி யுத்தம் நிகழ்ந்த 2009 மே மாதத்தில் வவுனியா மெனிக்ஃபார்ம் பகுதியில் காடுகள் வெட்டி வீழ்த்தப்பட்டு அகதி முகாம்கள் உருவாக்கப்பட்டன. சுமார் 1,750 ஏக்கர் நிலப் பரப்பில் உருவான இந்த முகாமில் அதிகபட்சமாக 2,25,000 தமிழர்கள் இருந்தனர். உலகத்தின் மிகப் பெரிய உள்நாட்டு அகதிகள் முகாம் என ஐ.நா. இதை வர்ணித்தது. அடிப்படை வசதிகள்கூட இல்லாத இந்த முகாம்களில் இருந்த தமிழர்கள், பல கட்டங்களாக பல்வேறு இடங்களில் குடி அமர்த்தப்பட்டனர். அது பெயருக்குதான் ‘மீள் குடியேற்றமாக’ இருந்ததே ஒழிய, மக்கள் வாழ்வாதாரங்களுக்கு வாய்ப்பற்று தத்தளித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், மெனிக்ஃபார்ம் முகாமை முழுமையாக மூட வேண் டும் எனப் பல்வேறு தரப்புகளில் இருந்தும் இலங்கை அரசுக்கு நெருக்க டிகள் வந்தன. மூட வேண்டும் என் றால், அங்கு உள்ள மக்களுக்கு முழுமையான மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்துவிட்டு பிறகு மூட வேண்டும். ஆனால், இலங்கை அரசோ முகாமில் மீதம் இருந்த மக்களை திடீர் என அழைத்துச் சென்று நடுக்காட்டில் இறக்கிவிட்டுவிட்டு, ‘மெனிக்ஃபார்ம்’ மூடப்பட்டுவிட்டதாக அறிவித்து இருக்கிறது. கடைசியாக மெனிக்ஃபார்மில் 161 குடும்பங்களைச் சேர்ந்த 1,135 பேர் வசித்தனர். இவர்கள் அனைவரும் முல்லைத் தீவு மாவட்டம், கேப்பிலாவு பகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்த 24-ம் தேதி அவசரகதியில் இவர்களை வெளி யேற்றிய ராணுவம், ஒரு பகுதி மக்களைப்பள்ளிக் கூடம் ஒன்றில் தங்கவைத்தது. மீதி உள்ளவர்களை சீனியாமோட்டை என்னும் காட்டுப் பகுதிக்குள் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.
சீனியாமோட்டை என்பது மெனிக்ஃபார்ம் போன்ற இன்னொரு காட்டுப் பகுதி. ராணுவ முகாம்கள் தவிர அருகில் எந்த மக்களும்இல்லை. புதர்கள் மண்டிய அந்தப் பகுதியில் குடிக்க, சமைக்க, குளிக்க, இயற்கை உபாதைகளுக்குப் பயன்படுத்த… எதற்கும் தண்ணீர் இல்லை. ஒரு முகாமில் இருந்து அதைவிட மோசமானக் காட்டுப் பகுதியில் மக்களைக் கொண்டு விடுவதற்குப் பெயர்தான் மீள் குடியேற்றமா?
மொய்க்கும் முதலாளிகள்
விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் நவநீதம் பிள்ளை இலங்கை வரவிருக்கும் நிலையில், ‘எங்கள் நாட்டில் முகாம்களே இல்லை’ என்று காட்டுவதற்காகவே அரசு இப்படிச் செய்திருக்கிறது என்கிறார்கள். ஒவ்வொரு பேரழிவிலும் ஆதாயத்துக்கான வாய்ப்புகளைத் தேடும் பெரு நிறுவனங்கள் மெனிக்ஃபார்ம் நிலத்தைக் கைப்பற்றுவதற்காக மொய்க்கத் தொடங்கிவிட்டன. ‘ராணுவப் பயிற்சி முகாம் அமைக்க 200 ஏக்கர் தங்களுக்கு வேண்டும்’ என்கிறது தரைப் படை. தொல்பொருள் ஆய்வுக்காக 40 ஏக்கர் கேட்கிறது இலங்கை தொல்பொருள் ஆய்வு நிறுவனம். தொழிற்சாலை அமைக்க இடம் கேட்கிறது ஒரு சிமென்ட் நிறுவனம். இலங்கை நில விவகாரத் துறை அமைச்சர் ஜானக பண்டார தென்னகோன், ”பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் உள்நாட்டு நிறுவனங்களும் மெனிக்ஃபார்மில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டிவருகிறார்கள். நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறோம்” என்று அதிகாரப்பூர்வ மாகவே அறிவித்திருக்கிறார். அண்மையில், தமிழ்நாடு தொழில் வர்த்தகர் சங்கம் இலங்கையுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் அந்த நாட்டில் சுற்றுப்பயணம் ஒன்றை முடித்து வந்திருக்கிறது. யார் கண்டது? அவர்களேகூட மெனிக்ஃபார்மில் ஒரு தொழிற்சாலை அமைக்கலாம்!
ஆண்களற்ற குடும்பம்
போரால் பாதிக்கப்பட்டு மறுபடி யும் வாழத் தொடங்கி உள்ள மக்க ளுக்கு, உழைத்து வாழ்வதற்கான வாய்ப்புகளே இல்லாத நிலை ஒரு பக்கம் எனில், உழைப்பதற்கான திறனுள்ள ஆண்களும் வெகுவாக குறைந்துபோய்விட்டனர். பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஆண்கள் இல்லை. அவர்கள், போரில் கொல்லப்பட்டுவிட்டனர். எஞ்சி இருப்பதில் பாதிப் பேர், உடல் உறுப்புகளை இழந்து மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து வாழ வேண்டிய நிலை. மேலும் பல்லா யிரக்கணக்கானோர் இறந்துவிட்டார்களா, இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. பல பெண்கள், கைக் குழந்தைகளுடன் தங்கள் கணவரைத் தேடி சிறைச்சாலைகளில் மனு போட்டு அலைகின்றனர். ஈழம், விதவைகளின் தேசம் போல காட்சியளிக்கிறது. இதற்கு இடையே ராணுவக் கண்காணிப்புகளும் கைதுகளும் தொடர்கின்றன.
இந்த மோசமான சூழலுக்குள் இருந்து தப்பித்து வேறு ஏதாவது நாட்டில் தஞ்சம் புகவே பலரும் முயற்சிக்கின்றனர். சட்டப்பூர்வமாக அது சாத்தியம் இல்லை எனும் போது, சட்டத்தை மீறி கடல்வழியே எல்லை கடக்கின்றனர். திறந்த கடலில் எவ்விதப் பாதுகாப்பும் இல்லாத கடல் பயணத்தில் உயிரைப் பணயம்வைக்க வேண்டும். மரணத்தை கண் முன்னால் கண்ட அம்மக்கள் எதற்கும் துணிந்துதான் கிளம்புகின்றனர். பல நாடுகள் தமிழர்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ளாமல் தடுத்துவைக்கின்றன. இப்போதுகூட ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் சில நூறு ஈழத் தமிழர்கள் தங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டிக் காத்திருக்கிறார்கள். தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை இலங்கை அரசே ஊக்குவிப்பதாகவும் சொல்லப் படுகிறது. ஆனாலும், அவ்வப்போது கைதுகளும் நடக்கின்றன. கடந்த ஒன்பது மாதங்களில் இப்படி இலங்கையில் இருந்து வெளியேற முயன்று கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,608. இந்த தப்பிக்கும் முயற்சிக்குக்கூட படகுக்கு செலுத்த லட்சக்கணக்கில் பணம் வேண்டும். அது இல்லாதவர்களால் இதையும் யோசித்துப் பார்க்க முடியாது.
போராளிகள் இப்போது?
விடுதலைப் புலிகளை ஈழத் தமிழினம் ஒரு காலத்தில் கதாநாயகர்களாக பார்த்தது. புலிகள் மக்களால் கொண்டாடப்பட்டனர். ஆனால் இப்போதைய நிலை, அதற்கு நேர்மாறாக இருக் கிறது. முன்னாள் விடுதலைப் புலிகள் நிராதரவாக விடப்பட்டுள்ளனர். அவர்களுடன் பழகுவது தங்களுக்கு ஆபத்தைக் கொண்டுவரலாம் என்று மக்கள் அஞ்சுகின்றனர். மறுபுறம் அரச உள வாளிகளின் இடைவிடாத கண்காணிப்பும் அவர்களைத் துரத்துகிறது. அவர்களுக்கு வேலை இல்லை, வருமானம் இல்லை, தொழில் இல்லை, வீடு இல்லை, குடும்பம் இல்லை. உறுப்புகளை இழந்தவர்களும் காயம்பட்டவர்களும் அதற்கான சிகிச்சைக்குக்கூடப் பணம் இன்றி இன்றும் தத்தளிக்கின்றனர். பலருக்கு மூன்று வேளை உணவே சிக்கல்.
மட்டக்களப்பு அருகே, தான் சந்தித்த ஒரு முன்னாள் பெண் போராளி இப்போது பாலியல் தொழில் செய்வதாக வேதனையுடன் சொல்கிறார் சஞ்சயன் செல்வமாணிக்கம். தற்போது நார்வேயில் வசித்துவரும் இவர் சமீபத்தில் இலங்கைக்குச் சென்று வந்திருக்கிறார். ”அந்தப் பெண் போராளிக்கு ஒரு கால் இல்லை. இன் னொரு காலும் அழுகிவிட்டது. அந்தப் பெண் ணின் கணவரும் ஒரு போராளிதான். அவர் போரில் இறந்துவிட்டார். இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கே வழி இல் லாமல் பாலியல் தொழிலுக்கு வந்துவிட்டார் அந்தப் பெண். தன் இளமைக் காலம் முழுவதை யும் தேச விடுதலைக்காக அர்ப்பணித்த ஒரு போராளியின் நிலை இது. இன்னோர் ஆண் போராளிக்கு இடுப்புக்குக் கீழ் இயங்கவில்லை. வருமானத்துக்கும் வழியில்லை என்பதால், தினமும் அவரை ஒரு படகில் தூக்கி உட்கார வைக்கின்றனர். அவர் மீன் பிடித்து மாலை திரும்புகிறார். மறுபடியும் படகில் இருந்து கரைக்குத் தூக்கிக்கொண்டு வருகின்றனர். அதில் கிடைக்கும் சொற்பப் பணத்தில் குடும் பத்தை ஓட்டுகிறார். இப்படி, கால்களை இழந்து வீதியோரத்தில் சுண்டல் விற்கும் போராளி, திருமணமாகி பத்தே மாதங்களில் கடலில் காணாமல்போன கணவனுக்காக குழந்தையுடன் காத்திருக்கும் போராளி, அம்மா அப்பா யாரும் இல்லாமல் தம்பி, தங்கைகளை வைத்துக் காப்பாற்றத் தடுமாறும் பெண் போராளி, கைகளை இழந்த முன்னாள் போராளியைக் காப்பாற்றும் வயதான தந்தை, இரு கண்களையும் இழந்த போராளி என காணச் சகிக்காத காட்சிகளை அங்கு கண்டேன்.
எங்களால் முடிந்த உதவியாக ஒவ்வொரு போராளிக் குடும்பத்துக்கும், ஒரு புலம்பெயர் குடும்பத்தைப் பொறுப்பேற்றுக்கொள்ள வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். தொடர்ச்சியான வருமானத்துக்கு வழிசெய்யும் கைத்தொழில்களை அவர்களுக்கு ஏற்படுத்தித் தருகிறோம். இப்படி இதுவரை 10 குடும்பங்களுக்கு உதவியிருக்கிறோம். இதில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை. முழுக்க, முழுக்க மனிதாபி மானம் மட்டுமே. தவிரவும் இன்று வெளிநாடு களில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் ஒவ்வொரு வருக்கும் இலங்கையில் சிரமப்படும் போராளிகளுக்கு உதவ வேண்டிய கடமை இருக்கிறது.
இலங்கையில் குறைந்த முதலீட்டில் செய்யக் கூடிய உள்நாட்டுத் தொழில்கள் நிறைய இருக்கின்றன. உதாரணமாக, கோழி முட்டையில் இருந்து குஞ்சு பொரிக்கவைக்கும் எந்திரம் இலங்கை பணத்தில் 50 ஆயிரம் ரூபாய் ஆகும். ஒரு முட்டை 10 ரூபாய். 21 நாட்கள் கழித்து கோழிக் குஞ்சாக விற்றால், ஒரு குஞ்சு 100 ரூபாய். 50 ஆயிரம் செலவில் இதை அமைத்துக்கொடுத் தால், குறைந்தது இரண்டு குடும்பங்கள்பிழைத்துக் கொள்ளும். இப்படி, கயிறு தயாரிக்கும் மெஷின், மாவு அரைக்கும் மெஷின் எனப் பல வழிகள் இருக்கின்றன. புலம்பெயர் குடும்பங்கள் மனது வைத்தால், ஒரே மாதத்தில் போராளிகளின் அவல வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரலாம்!” என்கிறார்.
எதுவும் தானாக இங்கு நடப்பது இல்லை. ஈழத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் என அனைத்து வகையினரும் ஏதேனும் ஒரு வழியில் தீர்வுக்கான தடத்தை நோக்கி அடியெடுத்துவைக்க வேண்டும்!