கையில் ஊமை

– மாலதி மைத்ரி-

கடந்த ஒன்பது மாதங்களாக இந்த புத்தகத்தை மட்டுமே என் கைப்பையில் சுமந்து திரிந்தேன். ஈழப் படுகொலை காட்சிகளை முழுமையாக பார்க்க முடியாமல் ரத்தம் உறைந்து போக நேர்ந்த அதே தளத்திற்கு பெயரிடாத நட்சத்திரங்களும் என்னைக் கொண்டு வந்து நிறுத்தியது. தீராத துயரத்தை சுமந்தலையும் பைத்தியமாக்கியது. என் கனவையும் நினைவையும் இவ்வெழுத்துகள் நிர்மூலமாக்கின.

இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழீழ விடுதலைக்காக ஆயுதம் தாங்கிப் போராடும் பெண்களைப் பற்றிய முழுமையான வரலாற்றுப் பதிவுகள் இல்லாத நிலையில் தமிழ் பெண்போராளிகளின் கவிதைத் தொகுப்பான ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ தமிழ் இலக்கிய வரலாற்றில் பேச முடியாத அரசியலின் குரலாகப் பதிவாகியிருக்கிறது. இத்தொகுப்பு தமிழ் அரசியல் மற்றும் கலாச்சார கருத்தாக்கங்களையும் நம்பிக்கைகளையும் நேரடியாகத் தாக்குகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பெயரிடாத நட்சத்திரங்கள் தொகுப்பை ரஞ்சி விடியல் பதிப்பகம் மூலமாக அனுப்பி வைத்திருந்தார். ஏற்கனவே கொந்தளித்துக் கொண்டிருந்த எனது மனதை இத்தொகுப்பு ஊழி பெருங்காற்றெனத் தாக்கி நிலைகுலையச் செய்தது. படிக்கத் தொடங்கும் போதெல்லாம் சில பக்கங்களுக்கு மேல் படிக்க முடியாமல் ஈழத்தில் தமிழின அழித்தொழிப்புப் போர் அரசியல் தொடர்பான சிந்தனைகள் மேலெழுந்து கண்ணீருடன் நூலை முழுமையாகப் படிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தேன்.

கடந்த ஒன்பது மாதங்களாக இந்த புத்தகத்தை மட்டுமே என் கைப்பையில் சுமந்து திரிந்தேன். ஈழப் படுகொலை காட்சிகளை முழுமையாக பார்க்க முடியாமல் ரத்தம் உறைந்து போக நேர்ந்த அதே தளத்திற்கு பெயரிடாத நட்சத்திரங்களும் என்னைக் கொண்டு வந்து நிறுத்தியது. தீராத துயரத்தை சுமந்தலையும் பைத்தியமாக்கியது. என் கனவையும் நினைவையும் இவ்வெழுத்துகள் நிர்மூலமாக்கின. சுதந்திர வாழ்வியல் தேர்வு, சுதந்திர பாலினத் தேர்வு, பாலியல் சுதந்திரம். வெளிப்பாட்டு சுதந்திரம், அடிப்படைவாத கலாச்சாரம், அரசியல், கருத்தியல், காவல்-கண்காணிப்பு சமூக நிறுவனங்களின் தளைகளிலிருந்து விடுபடுவது மற்றும் காலம்-வெளி சார்ந்த பேதமற்ற தளத்துக்கு நகர்வது. இந்த கருத்தியல்கள் யாருக்குப் பொருந்தும். இப்பெண்கள் யாருடைய கனவை சுமந்தார்கள். எதற்காக தங்கள் உயிரைக் கொடுத்து போராடினார்கள். தமிழ்ச் சமூகத்தில் இவர்களுக்கான வரலாற்று பாத்திரமும் அடையாளமும் அங்கிகாரமும் என்ன. இதற்கான பதிலை அளித்துவிட்டுதான் தமிழர்கள் இனிமேல் தமிழ்த் தேசிய அரசியலைப் பேச வேண்டியிருக்கும்.

தமிழ் நிலத்தில் சங்க காலத்திலிருந்து புனைவாகக் கட்டமைக்கப்பட்டு போற்றப்பட்ட வீரத்தாய் அல்லது மறத்தமிழச்சி பிம்பம் எந்த அளவுக்கு இப்பெண் போராளிகளை அடையாளப்படுத்த உதவியது. தமிழ் அரசியல் மேடைகளில் மட்டும் இவர்களின் புகழ்பாடுவது பெண் போராளிகளை அங்கீகரிப்பதாகி விடுமா. ஈழப் போராட்டக்களத்தைத் தாண்டி தமிழ் அரசியல் கலாச்சார சமூகப் பரப்பில் இவர்களுக்கான இடமென்ன. தமிழ்த் தேசிய விடுதலைக் கனவைத் தாங்கி போர்க்களம் கண்ட இப்பெண் போராளிகள் எப்போது கைவிடப்பட்டார்கள். கேள்விகள் என்னைத் துரத்திக்கொண்டிருந்தன.   

ஊடறு மற்றும் விடியல் வெளியீடாக 26 பெண் போராளிகளின் 70 கவிதைகள் தமிழிலக்கியத்தில் பேசப்படாத ஒரு வாழ்வைச் சுமந்து வெளிவந்திருக்கின்றன. எல்லோரையும் போல யதார்த்த வாழ்வை நேசிக்கும் எளிமையான பெண்கள் என்பதை அவர்கள் பதிவு செய்கிறார்கள். ஆனால் தங்களின் மேல் யுத்தம் திணிக்கப்படும் போது, தங்கள் வாழ்வைத் தீர்மானிக்கும் முடிவை எதிரிகள் கையிலெடுக்கும் போது சராசரி மனிதர்களாக தாங்கள் எப்படி வாழ முடியும், தம் மண்ணை விட்டு வேறுநாடுகளுக்கு எப்படித் தப்பி ஓட முடியும் என்று கேட்கிறார்கள். இதற்காக இவர்கள் கொடுத்த விலையை யாரும் கற்பனையாகக் கூட எழுதிப் பார்க்க முடியாது. என்ன கைமாறு எதிர்பார்த்து தாங்கள் நம்பிய  தேசவிடுதலைக்காக தம்மைப் பலியிட முன்வந்தார்கள்.

யுத்தம் எனக்குப் பிடிக்கவில்லை’ என்று கூறும் அம்புலி போராளிப் பெண்களில் மிக அதிகமாக எழுதியவர். ‘நான் எப்போதும் மரணிக்கவில்லை’ எனத் தன் கவிதை மூலம் பிரகடனம் செய்கிறார். ‘யுத்த பிசாசால்’ சூறையாடப்பட்ட ஈழத்தமிழர்களின் கொடும் வாழ்வைக் காட்சிப்படுத்தும் இக்கவிஞர்கள், அதே வேளையில் பலராலும் கற்பனை செய்யமுடியாத எப்போதும் நிச்சயமற்ற போராளி வாழ்க்கையைப் பெருமையுடன்; பேசவும் செய்கிறார்கள். யுத்தச் சூழலையும் தம் பல்வேறு உணர்வுகளையும் கவித்துவம் தளும்ப பாடும் இவர்கள் எவ்வளவு உயிர்ப்புடன் வாழ்வை ரசித்திருப்பார்கள் என கனத்த மௌனத்துடன் நினைவுக் கொள்கிறேன்.

‘அந்த புளியமரத்தடியில்தான்
ஐஸ்கிரீம் விற்கும் தாத்தா நிற்பார்’

நிழல் விரிக்கும் நினைவுகளில் தன் கிராமத்தின் அன்றாட நிகழ்வை ஒரு சிறுமியின் பார்வையில் விவரிக்கும் கவித்துமிக்க இக்கவிதையில் இந்திய அமைதிப்படை வந்திறங்கியபின் சூறையாடப்பட்ட தங்கள் பால்யத்தையும் வாழ்க்கையையும் நிதானமாக பதட்டமின்றி சொல்கிறார் ஆதிலட்சுமி. இக்கவிதையில் சொல்லாத செய்தியாக இதற்கெல்லாம் நாங்கள் பழித்தீர்ப்போம் என்கிற சூளுரையும் பொதிந்துள்ளது. அதற்கான எதிர்த் தாக்குதல் நடவடிக்கை பற்றிய நிகழ்வுகளை இந்நூலில் பல கவிதைகள் பேசுகின்றன.

ஜெயாவின் நிமிரும் எங்கள் தேசம் கவிதையில் நீண்ட கடற்பரப்பில் நிலையெடுத்து காலம் பாராது காவலிருக்கும் பெண்களைப் பார்த்து பேசும் மூதாட்டியின் குரலைக் கேட்கிறோம்:
………
“பிள்ளைக்கு சாப்பாடு வேளைக்கு வந்ததுவோ?
சோறும், புளிமாங்காய் போட்ட
சிறுமீன் குழம்பும்
நான் தரட்டோ? வாங்கோ’’ என்று நின்றாள்
“நாளைக்கு நானிந்த மண்ணில்
நாறிப்போகாமல் என்
வீட்டில் தலைசாய
சுடுகாட்டில் நான் வேக
……”
பெண் போராளிகளுக்கும் சமூகத்துக்குமான மிக நுட்பமான அரசியல் உணர்வு இங்கு பதிவாகியிருக்கிறது. இந்த மூதாட்டியைப் போன்ற லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களின் கனவை மெய்ப்பிக்க வந்த ‘நட்சத்திரங்களாக’ யுத்தகாலத்தில் போராளிகள் பார்க்கப்பட்டார்கள். இத்தொகுப்பில் பேசும் அனைத்துக் கவிஞர்களுமே தம் மண்ணின் விடுதலைக் கனவை மெய்யாக்க தங்கள் உடலை ஆயுதமாக்கியவர்கள். இதற்காக தங்கள் வீட்டை, உறவுகளை, பால்யத்தை, படிப்பை, காதலை, நட்பை, எளிய மகிழ்ச்சிகரமான கணங்களை, தங்கள் ஊர் உறவுகளுடன் கூடிக்களிக்கும் பொழுதுகளைத் துறந்தவர்கள். இவர்களிடமிருந்து சூறையாடப்பட்ட காலத்தையும் வாழ்வையும் யாராலும் ஈடு செய்யவோ திருப்பியளிக்கவோ முடியாததன் குற்றம் தமிழ் நிலப்பரப்பை கொடும் சாபமாக இனி கவிந்திருக்கும்.
……..
‘தோழனே நேற்று நீ
இன்று நான்’
……..
கண்மூடி ஒரு கணம்
விழிகசிய விடைகொடுத்த தலைவனை
எண்ணி மீள்கிறேன் ……..
தற்கொலைப்படை போராளியின் துணிந்துவிட்ட மனவோட்டத்தையும் பெருமிதத்தையும் பயணம் தொடர்கிறது என்ற கலைமகளின் கவிதை பேசுவதாக இருந்தாலும் அந்த வாக்கியங்களின் இடைவெளிகளில் மறைந்திருக்கும் உள்மன சிக்கல்கள் வரலாற்றின் மனசாட்சியைத் துளைக்கின்றன.

தற்கொலைபடையாகி மரணித்த பெண் போராளியை நினைத்து பெயரிடாத நட்சத்திரமேயென அழைக்கும் நகுலா
‘கல்லறையில்லா காவியமே உன் தணியாத காதலை நானறிவேன்’ என்கிறார். சக பெண்போராளிகள் மீதான நேசமும் இழப்பின் துயரும் இன்மையின் வெற்றிடமும் ‘உடல் சிதறி’ சாவும் கொடூரமும் அச்சாவை களத்தில் எதிர்கொள்ளப் புறப்படும் பெண்கள் தங்கள் உயிர்த்; தோழிகளிடம்கூட சொல்லாமல் போவது குறித்தும் இக்கவிதை ரத்தமும் சதையுமாகத் துடிதுடித்துக் கதறுகிறது. தன் தோழியின் மரணத்தை எண்ணி அழுகிறவள் தோழியின் பெயரைச் சொல்லிக்கூட அழ முடியவில்லை என்கிறாள். தன் தோழியின் பெயர் சொல்லி வாய்விட்டழுதால், தன் மனதிடம் குறைந்துவிடுமோ என்று மௌனமாக அழுகிறாள். இது அவளது தோழிக்கான மௌன அழுகை. கண்ணைப் பறிக்கும் பிரகாச ஒளிவீசும் நட்சத்திரமே ‘கடந்த உன் தடத்தில் என் பாதம் பதியும்’  காத்திரு என்னும் இக்கவிதை தான் தேர்ந்தெடுத்துக்கொண்ட மரணத்துக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் நிலைகுலையாத உறுதிப்பாட்டைச் சொல்ல நினைக்கிறது.

‘கண்ணுறக்கம் தவிர்த்த நடுநிசி
எல்லை வேலியில்
நேருப்பேந்துகிறது என்னிதயம்
ஓராயிரம் விழிகளின் உறக்கத்துக்கான என் காவலிருப்பு
நாளையும் நான் வாழ வேண்டும்’ என்கிறார் அம்புலி.
சாக்குத் தொப்பியில்
மழைநீர் ஊறி
தலையெல்லாம் கனக்க
கருவியோடு தானும் நனைந்தே
குளிரில் பல் கிடுக்க
மரத்தின் மறைவிலிருந்து
பகைத்தளம் நோக்கி தன்
விழி விரிந்த வீரி ஒருத்தி

என்னும் மலைமகள் வீரம் செரிந்த பெண்ணுக்கு ‘வீரி’ என்ற பெண்பால் பெயரை உருவாக்கி விளிக்கிறார்.
எல்லைகளில் நேரம் காலம் பாராது, காடுமேடுகளில் கொட்டும் மழையிரவில் சகதியில் மாற்றுடையின்றி நிற்கும் தங்கள் தீரமிக்கக் காவலைப் பற்றி. தன் சக போராளிக்கு தோள் கொடுத்துத் துணை நிற்கும் யுத்தகள நெருக்கடிகள் பற்றி. ஊனமாகி கட்டிலில் கிடக்கும் போதும் போருக்குச் செல்ல முடியவில்லை என்ற போராளியின் உணர்வெழுச்சி பற்றி எனப் பலவற்றை இக்கவிதைகள் சொல்கின்றன. போராளிகளுக்கான நினைவஞ்சலிகள் அஞ்சலிகள் மற்றும் எதிரிகளை நோக்கி ஆவேசமான சூளுரைகள், கொல்லபட்ட தன் குழந்தைகளை, உறவுகளை மனம் கனக்க நினைவுகொள்ளல், தமது தாய்களின் நினைவு பொங்க மெல்லிய விசும்பலை மறைத்தபடி எழுதப்படும் ஆறுதல்கள், தங்கள் ஊர் உறவுகளைப் பற்றிய மகிழ்ச்சியும் வலியும் மாறி மாறி மின்னலும் இருட்டுமாக இடைவெட்டும் நினைவுகள், போராளிக் காதலனை எதிர்கொள்ளும் நெகிழ்ச்சியான சிறு மகிழ்ச்சி குமிழ்விடும் கணங்கள், சக போராளிகளின் மரணம் குறித்த கண்களில் நீர்முட்டும் பேச்சுகள், ‘சிங்கள ஆக்கரமிப்பு’ ‘இந்திய அமைதிப்படையின் பயங்கரவாத நடவடிக்கைகள்’ ‘ஓயாத அலை’, ‘செம்மணி’, ‘ஆனையிறவு’, ‘சூரியக் கதிர்’ போன்ற யுத்த நடவடிக்கை பற்றிய பதிவுகள், தற்கொலைப்படையாக எதிரியை வீழ்த்த வழியனுப்பப்படுவதை பெருமைப்படுத்தும் பேச்சுகள் எனத் தொடரும் போரும் வாழ்வும் இதுவரை தமிழில் பேசப்படாத பெண்களின் உலகமாகும். 21-ஆம் நூற்றாண்டு  தமிழிலக்கியத்தின் புறத்திணையும் அகத்திணையும் இப்பெண்களின்  மொழியிலிருந்து தொடங்குகின்றன.  
இரண்டாயிரம் ஆண்டுகளாக ‘அழகிய பெண்களை’ குறித்த காதல் புனைவுகளைப்  பெருக்கிக் கொண்டிருந்த தமிழ் கலை இலக்கிய உலகம் தங்கள் உடல்களில் வெடிமருந்துப் பொதிகளைக் கட்டிக்கொண்டு அடுத்தகணம் வெடித்துச் சிதறப்போகும் நினைவை மறைத்துச் சிரித்தபடி கையசைத்துச் செல்லும் போராளிகளை எதிர்கொள்ளத் துணிவின்றி பதுங்கிக்கிடக்கிறது. இனியான படைப்புகளை இப்பெண்போராளிகளின் மொழியிலிருந்துதான் தொடங்க வேண்டியிருக்கும். அலையிசை சொல்வதைப் போல் ‘வெற்று கோதாக’ வாழ விரும்பாதவர்கள் இவர்கள். ‘தங்கைகள்’ தாங்களாகவே படையணியில் இணைந்து போராடும் போது குற்றவுணர்வடைந்த மூத்த பெண்கள் பின்பு தங்களையும் போராட்டத்தில் இணைத்து கொள்வதைப் பற்றி சொல்கிறார் தூயவள்:  

‘தம்பியோடு கூடி
சோத்தரி தன்னை
நிலம் கிண்டி விதைத்து விட்டு
முளைக்குமென்று காத்திருந்த
…..
கனவுகள் கண்டிருந்த
கவலையற்ற அந்த நாட்கள்
…..
எனச் சொல்லும் தூயவளின் ‘சோத்தரி’ என்ற கவிதையை வரலாற்றின் முன் வைக்கப்பட்ட முறையீடாகவே பார்க்கிறேன். விடுதலைக் கனவு சிறு குழந்தைகள் விதைத்த சோத்தரியா….. தமிழுலகம் ‘கையில் ஊமையாக’ இவர்கள் முன் நின்றுகொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் தொகுக்கப்படும் ஈழப்படைப்பாளிகளின்; தொகுதிகளின் ஆதாய அரசியலுக்கு மத்தியில் ஊடறு ரஞ்சி ஈழத்தில் அடையாளம் காணப்படாத பெண் எழுத்துக்களைத் தொகுப்பதை அதிக சிரத்தையுடன் தொடர்ந்து செய்து வருகிறார். ‘இசை பிழியப்பட்ட வீணை’ மலையகப் பெண் கவிஞர்களின் தொகுப்புக்குப் பிறகு தமிழர்களால் மறக்கப்பட்ட பெண்போராளிகளின் எழுத்துகளை மீட்டுக் கொண்டுவந்த அரிய பணி நன்றிக்குரியது.

தொகுப்பிலுள்ள கவிஞர்களைப் பற்றி மேலும் சில குறிப்புகளை சேர்த்திருக்கலாம். அடுத்த பதிப்பில் சேர்ப்பாரென நம்புகிறேன்.
(பெயரிடாத நட்சத்திரங்கள் – ஈழப் பெண்போராளிகளின் கவிதைகள், ஊடறு – விடியல் வெளியீடு, 2011. ப.166.  கிடைக்குமிடம்: விடியல் பதிப்பகம், 88 – இந்திரா கார்டன், 4வது தெரு, உப்பிலிபாளையம், கோயம்பத்தூர் – 641015. இந்தியா.)

3 Comments on “கையில் ஊமை”

  1. உறைந்து போனதாய் நாம் நினைக்கும் காலம் – உறையாது தொடரும் யதார்த்தம்…..

    போரும் போருக்கு பின்னான வாழ்வும் இரு வேறு பிறப்புகளில் நிகழ்ந்ததுவாய் – இறந்தவர்கள் போக இன்னும் எஞ்சி இருப்பவர்கள் பலர், எஞ்சியுள்ள தோழிகளுக்கு யாரை நினைதழுவது என்பதற்கும் மேலான இழப்புக்கள்….

    ஊனமுற்ற உடல்களுடன் ஆடு வளர்ப்பிலும் கோழி வளர்ப்பிலும், அரச அலுவலக வாசல்களில் வரிசைகளின் காத்திருப்பிலும் தம் நம்பிக்கைகளை மீண்டும் கோர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தமிழ் சமூகம் கனவிலும் நினைக்க முடியாத பங்கு பாத்திரங்களை வகித்த சகோதரிகள் இன்று ‘புனர் வாழ்வளிக்கப்பட்ட’ – ‘கைவிடப்பட்ட’- ‘பெண் தலைமைத்துவ குடும்பங்கள்’ என்ற பெயர்களுடன் வாழ்வது பற்றிய கவிதைகள் வரும் போது அதை தாங்கிக் கொள்வதற்கான மனத்திடத்தையும் சேர்த்து வைத்து கொள்ளுவோமாக…

  2. தமிழ்நாட்டில் தொகுக்கப்படும் ஈழப்படைப்பாளிகளின்; தொகுதிகளின் ஆதாய அரசியலுக்கு மத்தியில் ஊடறு ரஞ்சி ஈழத்தில் அடையாளம் காணப்படாத பெண் எழுத்துக்களைத் தொகுப்பதை அதிக சிரத்தையுடன் தொடர்ந்து செய்து வருகிறார். ‘இசை பிழியப்பட்ட வீணை’ மலையகப் பெண் கவிஞர்களின் தொகுப்புக்குப் பிறகு தமிழர்களால் மறக்கப்பட்ட பெண்போராளிகளின் எழுத்துகளை மீட்டுக் கொண்டுவந்த அரிய பணி நன்றிக்குரியது.

    முற்றிலும் உண்மை தங்களின் சுய லாபங்களுகப்காக வும் தங்களின் பெயர்களை தக்கவைப்பதிலும் இருப்பவர்களுக்கு மத்தியில் ஊடறுவும் றஞ்சியும் செய்யும் பணி பாராட்தற்குரியது. மாலதி நீங்கள் மனம் திறந்து பாராட்டியது உங்கள் பெருந்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. ஊடறுவின் பணி அளற்பரிüயது. தொடர்ந்து ஊடறு இப்படியான முயற்சிகளில் மேற்கொள்ளவேண்டும்.

    வாசீகன்

  3. நீண்ட காலத்துக்குப் பின் வாசித்த மிக அற்புதமான நூல் விமர்சனம் இது. என்றாலும், அதனை வெறுமனே ஒரு நூல் விமர்சனமாக மட்டுமே பார்க்க முடியாதவாறு, சமூகப் புனர்நிர்மாணம் குறித்த நம்முடைய கடப்பாட்டையும் பொறுப்பையும் கன்னத்தில் அறைந்து சொல்லியிருக்கிறது.

    நம்முன் கிடக்கும் பணி பாரியது; செல்லவேண்டியது நெடுந்தூரப் பயணம் என்பதை அழுத்தமாய் உணர்த்தியுள்ள மாலதி மைத்ரிக்கும் அதனை நம்மோடு பகிர்ந்துகொண்ட ஊடறுவுக்கும் நன்றி.

    மிக்க அன்புடன்,
    லறீனா அப்துல் ஹக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *