மித்ரா
![]() |
முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பாரிய பிரச்சினைகளான விவாக விவாகரத்தும், பின்னரான பெண்களின் பிரச்சினைகளும் சவால்களும், சமூக கடமைகள் பலவற்றுக்குப் பொறுப்பான தளங்களில் இருப்பவர்களால் முழுமையாக விளங்கப்படாமலும் பிரச்சினைகளின் ஆரம்ப தளங்களை ஆராயாமலும் பெண்களைக் குற்றம் காணும் நோக்கிலும் வெளிப்படுத்தப்படுவதென்பது மிகப்பின்தங்கிய நிலையையே காட்டுகின்றது. |
“எமக்கு வருகின்ற வழக்குகளில் 96 வீதமான விவாகரத்துகளுக்கு பெண்களே காரணமாக இருக்கின்றனர்”.
முஸ்லிம் பெண்களை ஆச்சரியத்திலும், ஆண்களின் குற்றங்களை நியாயப்படுத்தும் அல்லது பூசி மறைக்கும் விதத்திலுமான இந்தக் கருதுகோளானது பொறுப்பு வாய்ந்ததும், சமூகக் கடமையை நிறைவேற்றும் நிலையிலுமுள்ள ஒரு ஹாதி நீதிபதியினால் எடுத்துரைக்கப்பட்டதென்பது மீளமுடியாத ஏமாற்றத்தை தருகின்றது.
சீடோ என அறியப்பட்ட பெண்களுக்கெதிரான அனைத்துப் பாரட்சங்களையும் இல்லாதொழிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் சமவாயம் மற்றும் 1325 உடன்படிக்கை என்பவற்றை ஆதரித்து வாதாடும் (யுனஎழஉயஉல) இரு நாள் நிகழ்வு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் (ஆறுசுயுகு) ஏற்பாட்டில் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஹாதி நீதிபதிகள், உலமாக்கள் உட்பட்ட பல முக்கியஸ்தர்களும், சமூகப் பணிகளில் ஈடுபடும் பெண் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.
பால்நிலை சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்த இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஹாதி நீதிபதியொருவரே 96மூ விவாகரத்துகளுக்கு பெண்களே காரணம் என்ற ஒரு தலைப்பட்சமான கருத்தை வெளியிட்டார். இக்கருத்தானது மேலோட்டமான கண்ணோட்டத்தில் மிகச்சாதாரணமானதாக தோன்றினும், மிக ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது. சுமார் இரு தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டின் பல பகுதிகளில் ஹாதி நீதிபதியாக கடமையாற்றிய அனுபவமும் தற்போதும் கடமையாற்றிக் கொண்டிருப்பவருமான ஒரு ஹாதி நீதிபதியின் இந்தக் கருத்தின் அடிப்படையில் அவரது வழக்குத் தீர்ப்புகளின் நியாயத் தன்மை மிக ஆழ்ந்த கண்ணோட்டத்தில் ஆராய வேண்டிய தேவைப்பாடுடையது.
இலங்கை முஸ்லிம்கள் 1951ஆம் ஆண்டு 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினால் ஆளப்படுகின்றனர். இதற்கமைய விவாகம், விவாகரத்து, சீதனம், பராமரிப்பு, தத்தெடுத்தல் போன்ற விடயங்களில் விவாகம், விவாகரத்துச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளையும் பல்வேறு காலகட்டங்களில் வழங்கப்பட்ட நீதிமன்ற வழக்குத் தீர்ப்புகளையும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் உள்ளடக்குகின்றது.
திருமணம் என்பது ஆண் – பெண் இருவரினதும் அன்பு, சந்தோசம், நம்பிக்கை, மனநிறைவு என்கின்ற அனைத்திற்குமான கூட்டு அர்ப்பணமாகும். சில சந்தர்ப்பங்களில் திருமண வாழ்வு கசந்ததாக, முடிவற்ற பிரச்சினைகள், தீர்க்கமுடியாத முரண்பாடுகள் நிறைந்த சிக்கலான உறவாக மாறிவிடுகின்றது. மாற்றுவழிகளேயற்ற, தவிர்க்கமுடியாத நிலையில் விவாகரத்தை தீர்வாக மேற்கொள்ளும் நிலைக்கு ஆண் பெண் இருபாலாருமே தள்ளப்படுகின்றனர்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட அனைத்து விடயங்களிலும் அவனால் விரும்பப்படாதது விவாகரத்து என்று கூறப்படுகின்றது. ஆயினும், கணவன் மனைவி இருவரும் மனமொருமித்து வாழமுடியாத நிலையில் விவாகரத்து அவசியப்படலாம் என இஸ்லாம் கருதுகின்றது. விவாகரத்தானது, பல்வேறு தொடரான ஒற்றுமைப்படுத்தல்கள், சமரசங்களின் முடிவாக இடம்பெறுவதே நடைமுறை. அனுமதிக்கப்பட்ட நடைமுறை என்ற காரணத்திற்காக ஆணோ பெண்ணோ தன்னிச்சையாக செயற்படவோ, தக்க காரணமின்றி மனம்போன போக்கில் விவாகரத்தைப் பெறவோ முடியாது என்பதையும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
இந்த அடிப்படையில் குடும்பத்தை ஒற்றுமைப்படுத்துகின்ற, குடும்பத்திற்குள் அமைதியை நிலைநாட்டுகின்ற முடியாத நிலையில் விவாகரத்துத் தீர்ப்பளிக்கின்ற மிகப்பாரிய சமூகக் கடமையைச் செய்கின்ற நீதிபதிகளாக ஹாதி நீதிபதிகள் உள்ளனர். ஹாதி நீதிபதிகளின் தகுதியீனம், விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தத்தின் அவசியம் குறித்த குரல்கள் பல ஆண்டுகளாக ஒலித்துவருகின்ற போதிலும், சட்டத் திருத்தத்தின் தேவையை உணராத மார்க்க அறிஞர்களின் அசட்டையினாலும், சட்டத் திருத்தத்தில் உள்வாங்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற பரிந்துரைகள் பெரும்பாலும் பெண்களுக்கு சாதகமானது என்ற அபிப்பிராயம் காரணமாகவும், சட்டத்தை இயற்றுகின்ற பொறுப்பான நிலையில் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் சமூகப் பொறுப்பற்ற, மார்க்க ஞானமற்ற ஆதிக்க சிந்தனை கொண்ட ஆண்கள் என்பதனாலும் இந்நடவடிக்கை அரங்கேறாத ஒன்றாகவும், திரை மறைவு நாடகமாகவுமே இடம்பெற்று வருகின்றது.
பால்நிலை சமத்துவத்தை வலியுறுத்துகின்ற, பெண்களுக்கான நீதியைக் கோருகின்ற பல அமைப்புகள் ஹாதி நீதிமன்றங்களில் உள்ள ஜூரிக்களில் பெண்கள் பங்கு பற்றுதலின் அவசியத்தையும் வலியுறுத்தி வருகின்றன. பெண்கள் பற்றிய பாரம்பரியச் சிந்தனைகள் என்ற சட்டகத்திற்குள்ளிருந்து சிந்தனைகளை விஸ்தரிக்க முடியாத ஹாதி நீதிபதிகள் தமக்குள் ஊறிக்கிடக்கும் நைய்ந்துபோன சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட கண்ணோட்டத்துடனே விவாகரத்துக் கோரும் பெண்களை நோக்குகின்றனர். சமகாலத்தில் இடம்பெறுகின்ற விவாகரத்துக்களுக்கு சீதனம், திருமணத்திற்கு முன்னரான கொடுக்கல் வாங்கல் உறுதி வார்த்தைகள் மிகப்பிரதான செல்வாக்குச் செலுத்துகின்றன. மேலைத்தேய கலாசாரத்தின் தாக்கமானது விவாகரத்துக்களை நிர்ணயிப்பதில் பல வழிகளிலும் செல்வாக்குச் செலுத்துகின்ற ஒன்றாக மாறிவருகின்றது.
பாலியல் ரீதியான அறிவின்மை அல்லது பாலியல் ரீதியான தவறான புரிந்து கொள்தல்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள் வழியாக ஆண்கள் சிலர் ஏற்படுத்திக் கொள்கின்ற மிதமிஞ்சிய பாலியல் செயற்பாட்டு அனுபவங்கள் என சமகால விவாகரத்துக்களைத் தீர்மானிக்கும் காரணிகளின் பட்டியல்களை நீட்டிக் கொண்டே செல்லாம்.
ஹாதி நீதிமன்றங்கள் முற்று முழுதாக ஆண்களினால் நிர்வகிக்கப்படுகின்ற காரணத்தினால் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகள் குறிப்பாக பெண்கள் சார் பிரச்சினைகள் வெளிக்கொணரப்படுவதில்லை. ஹாதி நீதிமன்றங்களின் விசாரணை முறைகளில் உள்ள குறைபாடுகள், பகிரங்க இடங்களில் பலர்பார்க்க விசாரிக்கப்படுவதனாலும், ஆண்கள் முன்னிலையில் அந்தரங்க விடயங்களை விபரிப்பதில் உள்ள தடங்கல்களாலும் பெண்கள் தங்களது பாதிப்புகளை முழுமையாக வெளிப்படுத்தத் தவறுகின்றனர்.
சமகாலத்தில் விவாகரத்துப் பெறுகின்ற பெண்களில் 55 வீதமானவர்கள் 20 – 30 வயதுக்கிடைப்பட்டவர்கள் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விவாகரத்துக் கோரி விண்ணப்பிப்பவர்களில் இளவயதினரே அதிகம் என்ற ஹாதி நீதிபதிகளின் கூற்றும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறு இளவயதினரிடையே விவாகரத்து இடம்பெற நேர்வதற்கு விகிதாசார அடிப்படையில் அதிக பெண்கள் கல்வி கற்றிருப்பதும் ஒரு காரணம் எனலாம். மரபு ரீதியான சிந்தனைகளிலிருந்து மூளைகைளக் கழற்றிக் கொள்ள முடியாத, பெண்களை பால் அடிப்படையில் போகப் பொருளாகவும், பிள்ளை பெறும் இயந்திரமாகவும் மட்டுமே பரிச்சயப்படுத்திக் கொண்டவர்களால் பால்நிலையில் தனக்கருகில் சமதளத்தில் நிற்கக்கூடியவளாக பெண்ணை ஏற்பதே மானசீகச் சிக்கல்களை ஏற்படுத்தி விடுகின்றன. பால் – பால்நிலை சமத்துவம் என்பவற்றுக்கிடையிலான வேறுபாடும், பால் மாற்றமுடியாதது, இயற்கையானது என்றதும், பால்நிலை மாற்றக்கூடியதும், ஏற்கவேண்டியதும் என்ற நியாயங்கள் அற்ற தன்மையுமே ஆண் பெண் பிரச்சினைகளுக்கு பலத்த அத்திவாரங்களாகின்றது.
இதில் வருத்தமளிப்பது, ஹாதி நீதிபதிகளுக்கோ, ஜூரி சபையில் இருப்பவர்களுக்கோ இதுபற்றி பூரண தெளிவின்றி இருப்பதே. ஹாதி நீதிமன்றங்களில் தங்களது நியாயத்திற்காக குரல் எழுப்புகின்ற பெண்களை “வாயை மூடு” என்று அதட்டுகின்ற சில ஹாதி நீதிபதிகள், பெண் என்பவள் தனக்கெதிரான அனைத்து அநியாயங்களையும் பொறுத்துக்கொள்ள வேண்டியவள் என்ற பாரம்பரிய சட்டகத்துக்குள் தங்களைச் செருகிக் கொண்டவர்கள். தனது ஆதங்கத்தை ஒரு பெண் வெளிப்படுத்த முனைகையில் அவள் ஆணுக்கு அடங்காதவள், கணவனை மதியாதவள், திமிர் பிடித்தவள் என்ற அடைப் பெயர்களை ஹாதி நீதிபதிகளே வழங்கிவிடுகின்றனர்.
விவாகரத்துக்கான அடிப்படைக் காரணங்கள் பல தளங்களில், கால சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டதாகவும், பல்லின சமூகத்தினுள் வாழும் முஸ்லிம் ஆண், பெண்களின் அபிலாi~களை அடிப்படையாகக் கொண்டதாகவும் ஆராயப்படவேண்டியது. ஒட்டுமொத்தமாக விவாகரத்துக்களுக்கு பெண்களே காரணம் என்பது பெண்கள் பற்றிய புரிதலும், நவீன காலத்தின் தேவைகளுக்கு ஏற்றவிதமாகவும், பிரச்சினைகளைத் தீர்க்கும் அடிப்படையிலும் சிந்திக்கத் தவறியதன் வெளிப்பாடாகப் பார்க்கப்படவேண்டியதே.
ஹாதி நீதிபதிகளின் இவ்வாறான பாரபட்சமான போக்கினாலும் ஆண்களை நியாயப்படுத்தும் நிலைப்பாட்டினாலுமே விவாகரத்தின் பின்னர் பெண்ணுக்கும் பிள்ளைகளுக்குமான பராமரிப்புக்களை, ந~;ட ஈடுகளை வழங்குவதில் ஆண்கள் கவனயீனமாக செயற்படுகின்றனர். பெண்கள் முறையான பராமரிப்புக் கிடைக்காமல் வருந்தியலையும் நிலைக்கு இஸ்லாமிய விவாக விவாகரத்துச் சட்டத்தில் காணப்படும் குறைபாடும் மிகப்பிரதான பங்காற்றுகின்றது. மேலே குறிப்பிட்ட இதே நிகழ்வில் ஹாதி நீதிபதிகளால் முன்வைக்கப்பட்ட மற்றுமொரு கருத்தே, விவாகரத்தின் பின்னர் பெண்கள் நெறிபிறழ்கின்றனர் என்பதும். விவாகரத்திற்குப் பின்னரான பெண்களின் “நெறிபிறழ்வு”க்கு முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் காணப்படும் குறைபாடும், சமூகக் கட்டமைப்பும் பல தளங்களில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
விவாகரத்தின் பின்னரான தாபரிப்பு அல்லது இழப்பீட்டுத் தொகை என்பன போதியளவில் வழங்கப்படாமையே, விவாகரத்தின் பின்னரான பெண்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிகளை ஏற்படுத்துகின்றது. விவாகரத்துப் பெற்ற மனைவிக்கான “மத்தா” எனப்படும் இழப்பீடு வழங்குதலானது இலங்கையில் சட்டபூர்வமான அங்கீகாரத்தைப் பெறவில்லை. ஆயினும், சில காதி நீதிபதிகள், தகுந்த சில வழக்குகளில் மொத்தக் கொடுப்பனவுகளை வழங்குமாறு கட்டளை பிறப்பிக்கின்றனர். முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் உள்வாங்கப்பட்டிராத ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்துவது ஹாதி நீதிபதிகளைப் பொறுத்தளவிலும் சவாலானதே.
மேலும் விவாகரத்தின் போதிலான தீர்வுகளில் ஒன்றாக திருமணத்தின் போது வழங்கப்பட்ட அல்லது வழங்கப்படும் என்று வாக்களிப்பட்ட மஹர் கருதப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் மஹரின் பெறுமதி 101 அல்லத 1001 ரூபாவாக வரையறுக்கப்பட்டதாகக் காணப்படுகின்றது. இதனால் பெண்கள் பயனடைவதற்கு எந்த மார்க்கமும் இல்லை.
இலங்கையின் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில், திருமணத்தின் பின்னரான தாபரிப்பு என்பது இத்தாக் காலத்திற்கான தாபரிப்பு அல்லது விவாகரத்தை தொடர்ந்த 3 மாத காலத்திற்கான தாபரிப்பு என மட்டுப்படுத்தப்படுகின்றது. மொத்தமாக அல்லது இழப்பீட்டுக்கான நன்கொடையாக, இத்தாத் தாபரிப்புக்கென மேலதிகமாக வழங்கப்படுவது தொடர்பிலான முழுத்தற்துணிவும் காதி நீதிவான்களுக்கு உண்டு. மஹர் என்பது மிகச் சிறியளவிலான பெறுமானமாக உள்ளதுடன், விவாகரத்தின்போதான தீர்வுகளில் ஒன்றாக அதனை இணைத்துக் கொள்வதற்குப் போதுமானதாக இல்லை.
இவற்றின் அடிப்படையில், விவாகரத்தின் பின்னரான தாபரிப்பானது முஸ்லிம் பெண்களுக்கு நீதியான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாக இல்லை. விவாகரத்தின் போதான தீர்வுகளில் ஏற்படுகின்ற இத்தகு பற்றாக்குறைகள், பெண்களை எத்தகைய வருமானங்களுமில்லாமல் கைவிடுவதுடன், தங்களது தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளும் நிலைக்கு நிர்ப்பந்திக்கின்றது. பெண்கள் கல்வி கற்பதற்கோ அல்லது தொழில் புரிவதற்கோ வாய்ப்பளிக்கப்படாத நிலையில் மிக இளம் வயதில் திருமணம் செய்தவர்களாக இருந்து, விவாகரத்துப் பெற நேரும்போது பொருளாதார ரீதியாக சுதந்திரமாக வாழமுடியாத துர்ப்பாக்கியம் அவர்களைத் துரத்த ஆரம்பித்து விடுகின்றது. விவாகரத்தின் பின்னர் நெறிபிறழ்ந்துவிட்டாள் என்ற குற்றத்திற்கும் சில பெண்கள் ஆளாக நேருகின்றது.
முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பாரிய பிரச்சினைகளான விவாக விவாகரத்தும், பின்னரான பெண்களின் பிரச்சினைகளும் சவால்களும், சமூக கடமைகள் பலவற்றுக்குப் பொறுப்பான தளங்களில் இருப்பவர்களால் முழுமையாக விளங்கப்படாமலும் பிரச்சினைகளின் ஆரம்ப தளங்களை ஆராயாமலும் பெண்களைக் குற்றம் காணும் நோக்கிலும் வெளிப்படுத்தப்படுவதென்பது மிகப்பின்தங்கிய நிலையையே காட்டுகின்றது.
மித்ரா
நன்றி விடிவெள்ளி
நீண்ட விவாதத்தை வேண்டி நிற்கும் பயனுள்ள கட்டுரை. பகிர்வுக்கு நன்றி.
கட்டுரையாளர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கும் விடயங்கள் அனைத்துமே உண்மை.மேற்குறித்த தலைப்புக்கு நெருங்கிய ஆய்வொன்றில் தற்சமயம் ஈடுபட்டிருக்கிறேன்.கள ஆய்வுகளின் போது வெளிவரும் நிதர்சனங்கள் கண்ணீருக்குரியவை மட்டுமல்லாது கவனத்துக்குரியவை.நன்றிகள்.
இத்தகைய குறைபாடுகளை நமது சமூக சட்ட வல்லுனர்களும் புத்திஜீவிகளும் ஒண்றிணைந்து நடைமுறைக்கேற்ற சட்ட ஏற்பாடுகளை வகுப்பதமன் மூலம் நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகளை மேற்கொள்ள முற்படவேணடும். விவாகம் மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பான போதிய விழிப்புணர்வு எமது சமூக பெண்களிடம் காணப்படாமையும் இவ்வாறான நிலைக்கு காரணமாகும்.
மத சிறையில் அடைப்பட்டுகிடக்கும் வரை பெண்ணின விடுதலை என்பது கானல் கனவு