அதிகார வெளியை ஊடறுத்து நகர முனைபவளாக நானும்….
மகிழ்வுடன்
இலங்கையிலிருந்து..
ஸர்மிளா ஸெய்யித்,
அதிகார வெளியினை ஊடறுத்துப் பாயும் களம் தந்த ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துக்கள்.
அதிகாரவெளியை ஊடறுக்கும் பெண் குரலாக ஊடறு ஒலிக்கத் தொடங்கி ஏழு ஆண்டுகள் பூர்த்தியடைந்துவிட்டன. தனித்துவமும் காத்திரமும் பொறுப்புணர்வுமாக பெண்களின் குரல்களுக்கான ஒரு களமாக ஊடறு, ஊடறுத்துப் பாய்கிறது. வலைப்பூக்களும், இணைய சஞ்சிகைகளும் மலிந்துவிட்ட இக்காலத்தே, ஊடறு தனித்துவத்துடன் காலூன்றி நிற்கின்றது. இன, மத சாதி பேதங்களுக்கு அப்பால் அதிகாரம், அடக்குமுறைகளை சீர்தூக்கிப் பார்ப்பதில், சீற்றம் கொள்வதில் ஊடறுவின் பங்களிப்பு காத்திரமானது. ஈழத்துப் பிரச்சினைகளை, சிறுபான்மை மக்களை அடக்கும் அதிகாரங்களை வெளிக்கொணர்வதில் ஊடறு என்றுமே பின்நின்றதில்லை.
அதிகாரத்தின் குரல் எப்பக்கத்தைக் கொண்டதாக இருந்தாலும், யாரினுடையதாக இருந்தாலும் அவற்றின் பின் ஒளிந்துகொள்வதை விட்டு ஒடுக்கப்பட்ட உரிமைக்கான, பாதிக்கப்பட்ட மக்களுக்கான குரலாக ஊடறு தொடர்ந்தும் நிலைபெற்று வருகின்றது.
67பெண் கவிஞைகளின் கவிதைகள், ஓவியங்கள், குறும்படங்கள், பெண்ணிய நூல்களுடன் ஊடறு தனியிடம் பெற்றுத் திகழ்கின்றது.
அதிகாரங்களை எதிர்க்கும் ஈழத்துப் பெண் படைப்பாளிகளின் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது ஊடறு நிறுவப்பட்டதன் பின்னர்தான் என்பதை ஊடறுவின் பதிவுகளை தொடர்ந்தும் வாசிக்கும் எவராலும் மறுக்க முடியாதென்றே நம்புகிறேன். மேலும், ஊடறுவியின் வெளியீட்டுப் பிரிவு பெண் படைப்பாளிகளுக்கு ஏற்படுத்தியளிக்கும் சந்தர்ப்பங்களையும் நினைவிற் கொள்ளவேண்டும். எல்லா வழிகளிலும் ஊடறு ஆற்றுவது மகத்தானதோர் பணியே.