விடுதலைபெற்ற விழுமிய வாழ்தலை நோக்கி…

மிக்க அன்புடன்,
 ஊடறுவின் இனிய தோழி,

 லறீனா அப்துல் ஹக்.(இலங்கை)

I will rise

 இந்தப் பின்னணியில்தான், “பெண்”ணின் தனித்துவமான இருப்பையும் அவளின் தொய்வுறாத ஆளுமையையும் தொடர்ந்து நிலைநிறுத்தும் தொடர் போராட்டத்தில் கடந்த ஏழு வருடகாலமாக அயராது உழைத்துவரும் “ஊடறு”வை, அதிகார வெளியினை ஊடறுத்து உரத்து ஒலிக்கும் அதன் கம்பீரமான குரலை நான் நோக்குகின்றேன்.பெயரைப் போலவே அது தந்துநிற்கும் ஆக்கங்களும் வித்தியாசமானவையாக, தனித்துவமானவையாக இருக்கவே, எத்தகைய வேலைப் பளுவுக்கு மத்தியிலும் அந்தத் தளம் என்னை அடிக்கடி ஈர்த்துக்கொண்டே இருந்தது.

*******

என்னுடைய பாடசாலைப் பருவத்தில் கையில் அகப்படும் வெற்றுக் காகிதத் துண்டுகளில் எல்லாம் படம் வரையும் பழக்கம் எனக்கு இருந்தது. பெரும்பாலும் பக்கவாட்டுத் தோற்றம் கொண்ட பெண்முகமாகவே அது இருக்கும். விசேடம் என்னவென்றால், சொல்லி வைத்தது போல, எல்லாப் படத்திலும் அழகிய நீண்ட விழியின் அடியில் ஒரு கண்ணீர்த்துளியும் கட்டாயம் இருக்கும். அந்தச் சிறு வயதிலேயே பெண்ணையும் கண்ணீரையும் இணைத்துப் பார்க்கும் மனப்பாங்கு எனக்கு ஏன் வந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை, அன்றாடம் நான் கண்ட, சந்தித்த பெண்களின் நெருக்கடியான, துன்பகரமான வாழ்வு என் சின்னஞ்சிறு மனதை வெகுவாகப் பாதித்திருக்கக்கூடும் என நினைக்கின்றேன். 

 

 உண்மைதான். இனம், மதம், மொழி, பிரதேசம் என எல்லா எல்லைகளையுமே கடந்து பார்த்தாலும், அங்கே உலகப் பொதுமையாய் ஒரே ஒரு விடயம் மட்டும் மேலோங்கி நிற்கின்றது. அதுதான் “பெண்”ணின் துயரம். அவளின் வலி. அவளுக்கு எதிரான இரக்கமற்ற அடக்குமுறைகள். அவள் அனுபவிக்கும் கொடுமையான அவமானம். அவளின் இருப்பையே மனித இருப்பாக அங்கீகரிக்க மறுக்கும் அவலமான சூழலில் எப்படியேனும் வாழ்ந்துதொலைக்க வேண்டிய நிர்ப்பந்தம். இப்படியாக, அவளின் ஆதித்துயர் (ஃபஹீமாவுக்கு நன்றி) நீண்டு தொடர்கின்றது.

 

 

karatee
  
“பெண்” என்ற உடனேயே அவளின் “உடல்” மட்டுமே முன்னிலைப்படுத்தப்படும் அசிங்கமான அவலச் சூழலை இன்று சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்ளும் ஒரு நிலை தோன்றியுள்ளமை கசப்பான நிஜம். அதனை நிலைநிறுத்திய “பெருமை(!?)” முதலாளித்துவ பன்னாட்டு நிறுவனங்களையும் கனவுத் தொழிற்சாலை எனப்படும் சினிமாவையும், அதற்கு சற்றும் சளைக்காத சின்னத்திரையையுமே சாரும். அதேவேளை, பெண்ணுக்கான பத்திரிகைப் பக்கங்களிலும், மின்னியல் ஊடக நிகழ்ச்சிகளிலும், இணையதளப் பக்கங்களிலும் சமையல், சிகையலங்காரம், தையல், பூவேலைப்பாடு, வீட்டு அலங்காரம் சார்ந்த குறிப்புக்களே பெரும்பாலும் இடம்பெற்று, அவற்றைத்தவிர வேறு எதற்குமே “பெண்” லாயக்கில்லை என்பதான பிரமையைத் தோற்றுவிக்கும் வேதனை மறுபுறம்!
 I will rise

 

இந்தப் பின்னணியில்தான், “பெண்”ணின் தனித்துவமான இருப்பையும் அவளின் தொய்வுறாத ஆளுமையையும் தொடர்ந்து நிலைநிறுத்தும் தொடர் போராட்டத்தில் கடந்த ஏழு வருடகாலமாக அயராது உழைத்துவரும் “ஊடறு”வை, அதிகார வெளியினை ஊடறுத்து உரத்து ஒலிக்கும் அதன் கம்பீரமான குரலை நான் நோக்குகின்றேன்.பெயரைப் போலவே அது தந்துநிற்கும் ஆக்கங்களும் வித்தியாசமானவையாக, தனித்துவமானவையாக இருக்கவே, எத்தகைய வேலைப் பளுவுக்கு மத்தியிலும் அந்தத் தளம் என்னை அடிக்கடி ஈர்த்துக்கொண்டே இருந்தது. உலகளாவிய ரீதியில் புறச்சூழல் பேதங்களுக்கு அப்பால் பல்வேறு தளங்களிலும் “பெண்” எதிர்கொள்ளும் துயரங்களை, அநீதிகளை அது பதிவுசெய்யத் தவறவில்லை என்பதைக் கண்டேன். அவற்றுக்கு எதிரான தனது குரலை ஒலிக்கச் செய்துவருவதை அவதானித்தேன். பொதுவாக, சமூகத்தில் பிறர் பேசத் தயங்கும், பேச மறுக்கும் சர்ச்சைக்குரிய விடயங்களையும், கட்டாயம் பேசப்பட வேண்டிய பல விடயங்களையும் அது துணிவோடு பதிவுசெய்வதை ஓர் உள்ளார்ந்த வியப்போடு கண்ணுற்றுவந்தேன். அவற்றுள்:
 
 
முதலான பதிவுகளை, சிறப்பான பல்வேறு பதிவுகளில் முக்கியமானவையாகக் கருதுகின்றேன். மேற்படித் தலைப்புக்களில் உள்ள பன்முகத்தன்மையும், அவை உள்ளடக்கியுள்ள விடயங்களில் காணப்படும் பரந்துபட்ட கருத்தியல் தளங்களும் விதந்துரைக்கத் தக்கவை. “ஊடறு”வின் விசாலமான பார்வைக்கும் அணுகுமுறைக்கும் மிகச் சிறந்த சான்றாய்த் திகழ்பவை. அத்தோடு, பிற தளங்களில் பதிவான காத்திரமான ஆக்கங்களையும்கூட வரட்டுத்தனமான “ஈகோ”வுக்கு இடங்கொடுக்காமல், நன்றிகூறி மீள்பதிப்புச் செய்துவருகின்றமை இத் தளத்தின் குறிப்பிடத்தக்க இன்னோர் சிறப்பம்சம் எனலாம்.
 
இந்தத் தளத்தில் 67 பெண் கவிஞைகளின் கவிதைகள் பதிவாகியுள்ளன. அண்மையில், “தூக்கியெறிப்பட முடியாத கேள்வியாய் நம் முன்னே பிரசன்னமாகி இரு”ப்பதாய்ப் பிரகடம் செய்த மாபெரும் கவிஞை சிவரமணியின் கவிதையொன்றைப் பிரசுரித்து அவரது இறப்பின் 21 ஆவது வருடப் பூர்த்தியை நினைவுகூர்ந்துள்ளமை நெகிழ்ச்சிக்குரியது. ஈழத்துக் கவிதை வரலாற்றில் அழுத்தமான தடம் பதித்துச் சென்ற அவர், இன்று நம் மத்தியில் இருந்திருந்தால், “ஊடறு” போன்ற காத்திரமான ஓர் இணையதளத்துடன் இணைந்து செயற்பட்டிருப்பார் என்பது என்னுடைய நம்பிக்கை. எனவே, ஊடறு கவிஞைகளின் பட்டியலில் அவர் பெயரும் இடம்பெற்றால் நல்லது எனக் கருதுகின்றேன். 
 
“ஊடறு”வில் என்னைக் கவர்ந்த மற்றொரு சிறப்பம்சம், இதில் மிக முக்கியமான/கலைத்துவமான திரைப்படங்கள், குறுந்திரைப்படங்கள், நாடகங்களின் காணொளிகள் இணைக்கப்படுவது. ஈரானிய சினிமா, அல் ஜெஸீராவின் ஆவணப்படங்கள் என்பவை இவற்றுள் சிறப்பானவை. அண்மையில் பதிவுசெய்யப்பட்டு இருந்த “பொன்னி அரசு”வின் ஓரங்க நாடகத்தின் காணொளி ஓர் அற்புதமான கலை அனுபவத்தை எமக்களித்தது என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
 
அதுமட்டுமல்ல, பல்வேறு பெண் படைப்பாளிகளின் முக்கியத்துவம் வாய்ந்த பல நூல்களை அது தனது நூலகத்தில் ஆவணப்படுத்தி இருப்பதோடு, “என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை”, “மை”, “இசை பிழியப்பட்ட வீணை”, “பெயரிடப்படாத நட்சத்திரங்கள்” முதலான முக்கியமான நூல்களை வெளியிட்டும் அது தன் பணியை விரிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, “பெயரிடப்படாத நட்சத்திரங்கள்” நூல் வெளியீடு மூலம் கிடைக்கும் வருமானத்தை, ஈழப் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நல்வாழ்வுக்காகச் செலவழிக்கும் அதன் சமுதாய நோக்கு, “வெறுமனே வாய்ச்சொல் வீரராய் இருக்கும் பலர் முன்னே, ஒரு செயல் வீராங்கனையாய் ஊடறு” செயற்பட்டு வருகின்றது என்பதை ஐயந்திரிபற உணர்த்தி நிற்கின்றது.  
 
என்னைப் பொறுத்தவரையில், “பெண்” என்றதும் “தாய்மை”யின் படிமம் உள்ளார்ந்து இருப்பதான உணர்வுநிலை எழுவது தவிர்க்க முடியாதது என்பேன். எந்தவிதமான இலாப நஷ்டங்களுக்கும் அப்பால், எல்லாவிதமான கோபத்தையும் வெறுப்பையும் கடந்தும் அன்பு செலுத்தி அரவணைப்பது அவள் இயல்பு. அவ்வாறே, தன்னை அகழ்வாரையும் இகழ்வாரையும்கூடத் தாங்கி, உலகின் உயிரிகள், உயிரிலிகள் முதலான அனைத்தின் இருப்புக்கும் ஆதாரமாய் இருக்கும், அநீதியின் அழுத்தம் அதிகரிக்கும் பட்சத்தில் எரிமலையாய்க் கொதித்தெழும் பூமித்தாயின் படிமம் எனக்கு மிகப் பிடித்தமானது. “ஊடறு”விலும் நான் அதனைக் காண்கின்றேன். தான் சார்ந்த சமூகம்- மொழி என்பவற்றுக்கு அப்பால் உலகு தழீஇய மனிதநேயத்தைத் தன்வயப்படுத்திச் சிந்திக்கும், சிந்திக்கத் தூண்டும் அதன் சால்புடைமையை நான் பெரிதும் மதிக்கின்றேன். 
 
நாம் வாழும் உலகம் உய்வடைவதற்குப் பணிசெய்வதில் பெண்ணின் பாத்திரம்/வகிபாகம் மிகவும் அழுத்தமானது என்பதற்கு ஊடறுவின் அற்புதமான பதிவுகள்/பணிகள் சான்றாய்த் திகழ்கின்றன. அவ்வாறே, நான்கு சுவர்களுக்குள் அகப்பட்டு, வெறுமனே கண்ணீர் சிந்திக் கொண்டிருக்காமல், பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகரவும், அதனைக் கடந்து செல்லவும் ஊக்கம் தருவதாகவும் அதன் பதிவுகள் அமைந்திருப்பது மிகுந்த போற்றுதலுக்கு உரியது. அவ்வாறே, குறுகிய வட்டங்களுக்குள் நின்றுவிடாமல், அகன்ற வெளியில் சிறகடித்துப் பறந்துதிரிந்து உலகினை உற்றுநோக்கும் வழிகளைத் திறந்துவிடும் முனைப்பில் அது தளராது இயங்கிவருகின்றமை நமக்கெல்லாம் ஒரு சிறந்த முன்மாதிரியைத் தந்துநிற்கின்றது. எனவே, 
 
“பூட்டற்ற கதவுகளுடன்,
சாத்த முடியாத ஜன்னல்களுடன்
எப்பக்கமும் வாயிலாக
வீடொன்று வேண்டும் எனக்கு” (நன்றி: ஆழியாள்) 
 
என்று கேட்கும் பெண் ஆளுமைகளின் தாய் வீடாகத் திகழ்ந்துவரும் “ஊடறு”, தன் ஏழாவது வருட நிறைவை மிகுந்த உத்வேகத்துடன் கொண்டாடும் இத்தருணத்தில், அதற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு, அதன் உன்னதமான பணி இதனிலும் பலபடி மேலோங்கி, “தளைகளற்ற விடுதலைபெற்ற விழுமிய வாழ்தலுக்கு வழிகோலட்டுமாக!” எனப் ப்ரார்த்திக்கின்றேன்.

 

2 Comments on “விடுதலைபெற்ற விழுமிய வாழ்தலை நோக்கி…”

  1. லறீனா நல்ல விமர்சனம் எழுதியுள்ளீர்கள் பாராட்டுக்கள் ஊடறு தொடங்கிய நாளிலிருந்து நான் ஊடறுவை வாசிக்கிறேன். உண்மையில் நான் பல தடவைகள் வியந்திருக்கிறேன். இவ்வளுவு வேலைப்பளுனுவுக்குள்ளும் இந்த தளத்தை தொடர்ச்சியாக கொண்டுவருவது எவ்வளவு கஸ்டம் . நசானும் ஒரு வளத்தளம் வைத்திருக்கிறேன் ஆனால் அதை மெயின்ரெயின் பண்ணுவதற்கு நேரமேயில்லை . உண்மையில் ஊடறு ஆசிய குழுவைப்பார்த்து நான் பொறாமை கொள்கிறேன். என்றாலும் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *