29.4.12 சிட்னியில் நடைபெற்ற பெயரிடாத நட்சத்திரங்கள் வெளியீட்டு நிகழ்வு பற்றிய குறிப்பும் நன்றி தெரிவிப்பும் – சிட்னி நூல் வெளியீட்டுக்குழு

 ஊடறு மற்றும் விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் பெயரிடாத நடசத்திரங்கள் என்னும் கவிதைத் தொகுதி 29.04.12 ஞாயிற்றுக்கிழமை ஹோம்புஸ் உயர்தர ஆண்கள் பாடசாலையில் சிறப்பாக வெளியிடப்பட்டது.

syney 6  syney 2 syney 3JPG

பலரது ஆதரவுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிட்னியில் உள்ள பல்வேறு அமைப்புகளும் கலந்துகொண்டமை இந்நிகழ்வை மேலும் சிறப்படையச் செய்தது.இந்நூலின் விலை 10 வெள்ளிகள் என்று குறிப்பிட்டபோதும் பலரும் மேலதிகமான பணத்தைக் கொடுத்து நூலை வாங்கியிருந்தனர்.

syney 1

இந்நூலின் விற்பனையில் சேகரிக்கப்பட்ட பணம் அனைத்தும் ஈழத்தில் இயங்கிவரும் பெண்கள் நல அமைப்புகளுக்கு வழங்கப்படும் என்பதை ஏற்பாட்டாளர்கள் தமது உரையில் வலியுறுத்தியிருந்தனர்.பெயரிடாத நட்சத்திரங்கள் என்னும் இந்தத் கவிதைத் தொகுதியை அலங்கரிக்கும் கவிதைகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப்புலி அமைப்பில் இணைந்து மண்ணுக்காக தமது உயிரைத் தியாகம் செய்த போராளிப் பெண்களின் கவிதைகளாகும் பெண் போராளிகளின் உணர்வுகளையும், கள அனுபவங்களையும், அவர்களது மன உறுதியையும், துணிச்சலையும், தியாகங்களையும், ஏக்கங்களையும் இயல்பான மொழியில் அழகாக சித்தரிக்கின்றன அவர்களது எழுத்துக்கள்.

அடிப்படையில் இக்கவிதை நூலானது ஈழப் பெண்களுக்கான ஓர் வரலாற்றுப் பதிவாகும். எமது இளம் சந்ததியினருக்கு இன மொழிப்பற்றை வளர்க்கவும் ஈழத்துப் பெண்களின் படிமுறை வளர்ச்சியை அடையாளப்படுத்தவும் இந்நூல் பெரிதும் துணைபுரியும். பெண் போராளிகளின் நம்பிக்கைகளை கனவுகளை அனுபவங்களை சிறிதளவாவது ஆவணப்படுத்திய பெயரிடாத நட்சத்திரங்கள் என்னும் இந்த கவிதை நூல் ஈழத்தமிழர்கள் கைகளில் கிடைக்க வேண்டிய முக்கியமானதோர் ஆவணமாகும்.

syney 4JPG

 மற்றய நூல் வெளியீடுகளைப்போல் வரவேற்புரை அறிமுகவுரை ஆய்வுரை என்பவை இந்நூல் வெளியீட்டிலும் இடம்பெற்றது. கலாநிதி சந்திரலேகா வாமதேவா, மதுபாஷினி ரகுபதி, திரு திருநந்தகுமார், குலம் சண்முகம் மற்றும் சோனா பிறின்ஸ் ஆகியோர் உரையாற்றினார்கள். மனோ ஜெகேந்திரன் மற்றும் சௌந்தரி கணேசன் இருவரும் இணைந்து 26 பெண்போராளிகளுக்கும் வணக்கத்தை கவிதையினூடாக அர்பணித்தார்கள். யதுகிரி லோகதாசன் தனது இனிய குரலில் கவிதையொன்றுக்கு உயிர்கொடுத்து இசையோடு பாடினார். மாத்தளை சோமு அவர்கள் தலைமையேற்று மேடை நிகழ்வை சிறப்பாக்கினார். பாமதி சோமசுந்தரம் தனது நன்றியுரையில் இந்நிகழ்வை பெண்களாக பாமதி மதுபாஷினி சௌந்தரி ஆகியோர் இணைந்து நடாத்தினாலும் இந்நிகழ்வின் சிறப்பிற்கு பலரது ஒத்துழைப்பும் ஊக்கமும் கிடைக்கப்பெற்றது மகிழ்ச்சியான விடயமென்றும் இனிவரும் காலங்களில் இப்படியான வேலைத்திட்டத்தை தாம் முன்னெடுப்பதற்கு இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மிகுந்த நம்பிக்கையை கொடுத்திருக்கின்றது என்றும் இந்த நிகழ்வைச் சிறப்பாக்கிய அனைவருக்கும் தமது நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.

syney 5

 சிட்னியில் இயங்கிவரும் தமிழர்களுக்கான அமைப்புகள் ஒரே இடத்தில் ஒன்றாக சேர்ந்து இந்நிகழ்வை சிறப்பாக்கியது பலராலும் வரவேற்கப்பட்டது. இப்படிப்பட்ட நூல்களை தொடர்ந்தும் வெளியிடுவதற்கு ஆரோக்கியமான ஓர் சூழலை உருவாக்கியுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.சிட்னியில் இயங்கும் 15 அமைப்புகளிலிருந்து  அதன் அங்கத்தவர்களை மேடையில் அழைத்து இந்நூலை வெளியிடுவதன் மூலம் அவ்வமைப்புகள் எமது தாயக உறவுகளுக்கு தொடர்ந்து செய்து வரும் பணியை கௌரவப்படுத்துவதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தார்கள். தமிழ் சமூகத்தில் எல்லோராலும் விரும்பப்படுகின்ற மூத்த உறுப்பினரும் எழுத்தாளருமாகிய வானொலிமாமா நா மகேசன் அவர்கள் இந்நூலை வெளியிட்டு கௌரவப்படுத்தினார்.

 

பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற கவிதைநூல்பற்றிய கருத்தரங்கொன்றை ஒழுங்குபடுத்த வேண்டும் அதிலுள்ள கவிதைகள் வாசிக்கப்பட்டு அவைபற்றிய பார்வைகளையும் விமர்சனங்களையும் வாசகர்கள் சுதந்திரமாக பேசுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தவேண்டும் என்று பலரும் கேட்டுக்கொண்டார்கள். அத்தோடு இந்நூலை மற்றய மொழிகளிலும் வெளியிட்டு பரவலாக்கம் செய்யப்பட வேண்டும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதும் நூல்வெளியிட்டுக்கு வந்தவர்களின் கருத்தாக .இனிய சிற்றுண்டிகளுடன் நூல் வெளியீட்டு விழா குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே நிறைவடைந்தது.

பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற இந்நூல் மே மாதம் 13ம் திகதி மெல்பேர்ணில் நடைபெறவுள்ள எழுத்தாளர் மகாநாட்டில் வெளியிடப்படவுள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்.

syney 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *