ஸர்மிளா ஸெய்யித் (இலங்கை)
விழுது
தும்பைப் பூவைப்போல் நான் பிரகாசிக்கிறேன்
எனது விழிகளில் என்றுமில்லாத
ஒளியைக் காணுகிறேன்
பிறப்பினாலும்
குலப் பாரம்பரியங்களினாலும்
வழி வழியாக வந்ததும் கேட்டதுமான
புராண இதிகாச கதைகள்
பாடப்புத்தகங்கள், சமய போதனைக@டாகவும்
எனக்குள் உள்நுழைந்திருந்த
ஒழுக்கத்தை மெல்ல மெல்ல களைகிறேன்
அதன் வரம்புகளிலிருந்து முடிந்த மட்டும்
விடுபட முற்படுகிறேன்ஒழுக்கத்தின் வெறும் பொருள்கோடல்களை
புறந்தள்ள முனையுமென் உணர்வுகள்
என்னை மென்மையாக்குகிறது
நான் கட்டுக்களை தகர்த்தெறிந்தவள்
வரம்புகளை கடந்து தெறிக்கும் காற்று
வானம் முழுதும் பவனியாகும் மேகம்
முற்றிலும் புத்தம் புதிய உணர்வுகளுடன்
சாலையில் இறங்கி நடக்கிறேன்
சேலை முந்தாணையை சரிபடுத்துவதிலும்
இழுத்து இழுத்து இடுப்பை மறைப்பதிலுமே
என் கரங்கள் மிகக் கவனமாயிருப்பதுணர்ந்து
வியப்புதான் எனக்கு;
களைந்தெறிந்து விட்டதாகவும்,
தகர்த்தெறிந்ததாகவும்
நான் இறுமாந்த ஒழுக்கத்தின்
வேர்கள் அதற்குள் தளைத்தது எங்ஙனமென்று.
கடலின் காதலி
என் மென் பாதங்களை
ஈரக் கரங்கள் தளுவுகையில்
நானதை உணர்ந்தேன்
கடல் ஆண்
தீமூட்டலும் குளுமை மயக்கமும்
திருப்தியாய் நிகழ்ந்ததன்
அடையாள அணுக்களை
மோதிக் கொப்பளிக்கும் அதன்
நுரையில் கண்டேன்
தீராத காதலை குளிர் தென்றலிடம்
எனக்கு தூதனுப்பிற்று
என் காதுமடல்களை இதமாய் தடவி
கிளர்ந்து ஆசை மூட்டியது
கடலின் ஈர விரல்கள்
கரையில் எனைக் கண்டதுமே
வா வந்தென்னை அணை
எனக்கூவிற்று
உலர்வறிய இன்முகத்தோடும்
தாழிடமுடியா காதலோடும்
எனை தழுவி இறைந்து மகிழ்ந்தது
கூவிக் கூவி மீண்டும் மீண்டும்
அணைத்து என்னை ஆறுதலூட்டியது
என் தாகங்களின் சிற்றிடத்தையும்
ஈரத்தால் நிரப்பியது
என் தூய்மையில் அது தன்னை
கழுவி திருப்தி கண்டது
அலைக் கரங்களால் என்னையது
வாரியணைக்கும் ஒவ்வொரு கணமும்
எல்லையற்ற இன்பத்தைக் கொப்பளிக்கிறேன்
தொலைவறியா அண்டமொன்றை
எனக்குள் சுமந்துகொண்டு
பிரசவிக்கவோர் இடம்தேடிக் காத்திருக்கிறேன்.
என் கவிதைகளைப் பிரசுரித்தமைக்கு நன்றி. கடலின் காதலி என்ற கவிதையில் வரிசை ஒழுங்குகள் மாறியுள்ளன. தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.
அன்புடன்,
ஸர்மிளா ஸெய்யித்