புதியமாதவி (மும்பை)
சயந்தனின் ஆறாவடு நாவல் வாழத்துடிக்கும் ஒரு மனிதனின் கதை. அவன் தனி மனிதன் மட்டுமல்ல. அவன் வாழ்விடமும் வாழும் காலமும் அவன் கதையை தனி மனித வட்டத்தை விட்டு விசாலமான இன்னொரு தளத்திற்கு நகர்த்தி இருக்கிறது. போரிலக்கிய வரிசையில் போர்க்காலத்தில் நடந்த சம்பவங்களையும் அதன் பின்னணிகளையும் மட்டுமே சொல்லிச் சென்றிருக்கும் கதையல்ல ஆறாவடு. |
சயந்தனின் ஆறாவடு நாவல் வாழத்துடிக்கும் ஒரு மனிதனின் கதை. அவன் தனி மனிதன் மட்டுமல்ல. அவன் வாழ்விடமும் வாழும் காலமும் அவன் கதையை தனி மனித வட்டத்தை விட்டு விசாலமான இன்னொரு தளத்திற்கு நகர்த்தி இருக்கிறது. போரிலக்கிய வரிசையில் போர்க்காலத்தில் நடந்த சம்பவங்களையும் அதன் பின்னணிகளையும் மட்டுமே சொல்லிச் சென்றிருக்கும் கதையல்ல ஆறாவடு. போர்க்காலத்தில் வாழத்துடித்த ஓரிளைஞனின் பயணமிது. போர், காதல், சண்டை, சச்சரவு , பணம், அதிகாரம், கதை, கவிதை எல்லாமே எதற்காக…? மனிதன் தன் இருத்தலை எப்போதும் உணர்ந்து கொள்ளும் தேடலுக்காக. அந்த தேடலின் பயணத்தில் போரும் காதலும் அதிகாரமும் அவனைப் பாதிப்பதும் அந்தப் பாதிப்புகள் எழுப்பும் கேள்விகளுக்கான பதில் தேடும் பயணமும் தொடர்கின்றன. சயந்தனின் ஆறாவடு நாவல் இப்படியான ஒரு தேடல்தான். இந்தத் தேடல் அமைதியான சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் ஒரு விதமாகவும் போர்க்கால சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் வேறுவிதமாகவும் இருக்கிறது. ஈழப்போரட்ட வரலாற்றில் போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல் என்ப்தால் இந்த நாவலின் ஒவ்வொரு வரியும் கவனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இயக்கம் சார்ந்து (நாவலில் இயக்கம் என்ற சொல் பொதுவாக விடுதலைப் புலிகள் இயக்கத்தையே குறிக்கிறது) செயல்படும் சூழலும், இயக்கத்திற்கு எதிரான நிலையில் செயல் பட வேண்டிய கட்டாய சூழலும் சிலருக்கு ஏற்பட்டதையும், அந்தச் சூழல்களை இயக்கம் எவ்விதமாக அணுகியது என்பதும் மிகவும் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
காதல் செய்கின்ற தனிமனித உரிமைக்குத் தடையாக இயக்கம் இருந்ததா? என்ற குற்றச்சாட்டுக்கும் திருமணத்திற்குப் பின் இயக்கத்தை விட்டு விலக அனுமதிக் கோரும் இளைஞனின் நிலைமை என்னவாக இருந்தது என்பதையும் போகிற போக்கில் நண்பன் ஒருவனின் அனுபவமாக சொல்லிச் செல்கிறார். “விலகுவதற்கான துண்டைக் கொடுத்தால் பங்கர் காலத்தையும் உள்ளிட்டு எப்படியும் மூன்று வருடங்களுக்காவது பனிஸ்மெண்ட் கிடைக்கும். அப்படியொன்றை நினைத்துப் பார்க்க விசர் பிடிக்குமாற்போல இருந்தது. முன்னர் சண்டைகளில் அறிமுகமான நண்பனொருவன் திருமணத்தின் பின் விலகுதற் பொருட்டு இப்பொழுது த்ண்டனை அனுபவித்தப்படி இருந்தான். தொடக்கத்தில் அவனை ஆறு மாதங்கள் பங்கரில் போட்டார்கள். உடல் இளைத்து கண்கள் உட்சென்று அடையாளம் தெரியாதபடிக்கு உருமாறியிருந்தான்.” அவனைச் சந்தித்த போது அவன் கேட்டான்… “காதலித்தது பிழையாடா மச்சான்” என்று. இந்தச் சந்திப்பின் தாக்கத்தில் அமுதனுக்கு தன் காதலுக்குத் தடையாக “ஒரு பெரும் தனிக்கோடு துப்பாக்கியைப் போல இதயத்தைக் குறுக்கறுத்துப் போனது. அந்தக் கோட்டினை நான் இயக்கம் என்று குறித்தேன்” என்று விவரிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பில் இன்னொரு முக்கியமான செய்தியையும் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறான அமுதன்.
அதாவது அவன் அகிலாவைச் சந்திக்கும் முன் நண்பனுக்குச் சொன்ன பதிலும் அகிலாவைச் சந்தித்து காதல் வயப்பட்டு திருமணம் செய்ய முடிவு செய்தப் பின் அவனுக்குள் ஏற்படும் மேற்கண்ட உணர்வும் மிகவும் நுண்ணிய கவனிக்கத்தகுந்த மாற்றம் எந்த ஒரு தனிமனிதப் பிரச்சனைக்கும் தீர்வு காணும் போது அந்தப் பிரச்சனையுடன் நேரிடையாக சம்பந்தப் பட்டவனின் பார்வையை விலக்கி வைத்து அமைப்பு சார்ந்தோ இயக்கம் சார்ந்தோ எடுக்கின்ற கூட்டு முடிவுகளும் பொத்தம் பொதுவான முடிவுகளும் எவ்வளவு சிக்கலானவை என்பதையும் அவற்றால் அவன் பிரச்சனைக்கான தீர்வை முழுமையாகக் கண்டடைய முடியாது என்பதையும் வாசகனுக்கு உணர்த்துகிறது.
போராட்ட வரலாற்றை எழுத வரும் எவராலும் இந்திய அமைதிப்படை ஈழ மண்ணில் நடத்திய பாலியல் வன்கொடுமைகளை எழுதாமலேயே இருக்க சாத்தியமில்லை என்பதற்கு இந்த நாவலும் விதிவிலக்கல்ல. தேவியின் கதை இந்த நாவலில் இடம் பெற்றிருப்பது இதற்காகத்தான்.
போர்க்காலத்தில் உயிருடன் தப்பித்து பிழைக்க வேண்டும் என்று அலையும் ஓரிளைஞனும் அவன் குடும்பமும் அவன் காதலியும் எம்மாதிரியான பிரச்சனைகளை எல்லாம் அனுபவித்தாக வேண்டும் என்பதை தன் அனுபவமாக்கியோ அல்லது தன் சுய அனுபவத்துடன் தான் கண்டதைக் கேட்டதை அறிந்ததை எல்லாம் சரியான அளவில் சேர்த்துக் கொடுத்திருப்பதில் ஆறாம் வடு வெற்றி பெற்றிருக்கிறது என்றாலும் இப்படைப்பின் இலக்கிய அந்தஸ்தை இக்கதையின் முடிவாக அமையும் குறியீடு தீர்மானித்திருக்கிறது. .
கதை முடிவில் , மரணிக்கும் தருவாயில் அமுதன் தன் செயற்கை காலைக் கழட்டி விட அது மிதந்து சென்று இத்திரிஸ் கிழவனின் கைகளில் கிடைப்பதாக முடித்திருப்பது. இத்திரிஸ் எரித்திரிய விடுதலை இயக்கத்தில் இருந்தவன். சூடானில் தப்பித்து வந்து வாழ்ந்தவன். ” ஓ வழிப்போக்கனே, உன் வழியில் என் எரித்திரிய தாயைப் பார்த்தால் கூறு, அவள் விடுதலையை நானே பெற்றுத் தருவேன் என்று”
என்ற பாடல் வரிகளை எப்போதும் பாடிக்கொண்டிருப்பவன். ஒரு செயற்கை காலுக்காக காத்திருப்பவன்… அவன் கையில் கிடைக்கிறது அமுதனின் பைபர் க்ளாஸினால் ஆன வழுவழுப்பான செயற்கை கால்” விடுதலைப் போராட்டங்களை எவருடைய மரணமும் நிறுத்திவிட முடியாது. போராட்டத்தில் காலை இழக்க வேண்டி வரலாம், செயற்கை காலுடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படலாம், அப்போதும் கூட பயணத்தில் வரும் இடையூறுகளால் சென்றடைய வேண்டிய இலக்கை அடையும் முன்பே தனி ஒருவனின் பயணம் மரணத்தில் முடிந்துப் போகலாம், ஆனால் விடுதலை ? எப்படியும் வந்தே தீரும். இளைஞனால் முடியாததை கிழவன் செய்து விட முடியும், ஆணால் சாதிக்க முடியாததை பெண்ணால் சாதித்துவிட முடியும்… விடுதலைக்கான போராட்டங்கள் எல்லா சமூகத்திலும் உரிமைகள் மறுக்கப்பட்ட எல்லா மண்ணிலும் அந்த மனிதர்களின் வாழ்க்கையில் தொடர் சங்கிலியாகத் தொடரும், விடுதலை வந்தே தீரும்” இப்படியான பன்முகப் பார்வையைக் காட்டும் குறியீடாக வருகிறது இத்திரிஸ் கிழவனும் அவனுக்கு கிடைத்த இளைஞன் அமுதனின் செயற்கை காலும்.
கள்ளத்தோணியில் தப்பித்துச் செல்லும் ஈழத்து தமிழரும் அவருடன் சிங்களவர்களும். தமிழர்கள் மட்டுமே தப்பித்து செல்ல பயணித்தார்கள் என்று காட்டாமல் அவர்களுடன் பத்து சிங்களவர்களும் இருந்ததாகச் சொல்வதன் மூலம் உயிர்ப்பிழைக்க தப்பித்து ஓட வேண்டிய கட்டாயம் அந்தச் சமூகத்திற்கும் ஏற்பட்டது என்பதையும் உணர்த்திவிட முடிகிறது
உயிர்வாழ்தலுக்கான தப்பித்துச் செல்லும் வாழ்க்கையில் சொந்த நாட்டில் கையும் களவுமாகப் பிடிப்பட்ட போது போலீஸ்காரன் கேட்கிறான் லஞ்சமாக பல இலட்சங்கள். கடவுச்சீட்டு வாங்க ஏஜன்ஸிக்காரன் கேட்கிறான பல இலட்சங்கள். அதிலும் பலர் ஏமாற்றிவிடுகிறார்கள். இதை எல்லாம் தாண்டி கள்ளத்தோணியில் ஏறி இத்தாலிக்கு கொண்டு செல்வதாகக் கூறி பயணிக்கும் போது சோமாலிய கடற்கொள்ளைக்காரர்கள் இவர்களின் சொற்ப பணத்தையும் கொள்ளை அடிக்கிறார்கள். வழி நெடுக தப்பித்தலுக்கான இவர்கள் பயணத்தில் இவர்கள் ஏமாற்றப்படுவதும் தண்டிக்கப்படுவதும் கொள்ளை அடிக்கப்படுவதும் தொடர்கிறது என்பதை கதை நெடுக ஒவ்வொரு அனுபவங்களின் ஊடாகவும் குறியீடாகவும் எழுதிச்செல்கிறார் சயந்தன்.
இயக்கம் குறித்த சில கருத்துகளை விமர்சிப்பதற்கென்றே மொழிபெயர்ப்பாளராக வரும் நேரு அய்யாவின் கதாபாத்திரம் , நேரு அய்யாவின் கருத்துகளை ஆரம்பத்தில் வெறுப்பதும், நேரு அய்யா யாருக்காவும் காசு வாங்கிக்கொண்டு மொழி பெயர்த்துக் கொடுப்பார் என்று விமர்சிப்பதும் என்று ஆரம்பித்து கதைப் போக்கில் நேரு அய்யா சொன்ன சில கருத்துகளை நினைத்துப் பார்க்கும் விதத்தில் கருத்து விமர்சனப் பார்வையை முன்வைப்பதும் மிகச்சிறப்பாக இப்படைப்பில் கையாளப்பட்டிருக்கிறது.
ஈழத் தமிழ்ச் சமூகத்தில் சாதியம் கெட்டிப்ப்ட்டிருந்தது என்பதையும் தவறாமல் பதிவு செய்திருக்கிறது இந்நாவல். பள்ளியில் நாடகம் அரங்கேற்றிய நிகழ்வில் பண்டாரவனியன் திட்டமிட்டு பழிவாங்கும் வகையில் வசனத்தை மாற்றிப்பேச அதற்கு அமுதனும் கெட்ட வார்த்தைகள் பேச, இறுதியில் பள்ளி அதிபர் அமுதனை இழுத்துச் சென்று உதைப்பதுடன் உதிர்க்கும் வார்த்தைகள் “”எளிய பறை நாயே, நீ மேடையில் தூசனம் கதைக்கிறியோ…” உணர்த்துகிறது.
யாழ்ப்பாணத்தில் இங்கிலீஷ் கடைப்பெயர்கள் எல்லாம் தமிழுக்கு மாறிக்கொண்டிருந்தன என்பதை கேலியும் கிண்டலுமாக பதிவு செய்ததுடன் சேர்த்தே பாக்டரியில் சம்பளத்திற்கு வேலை செய்த ஏழு பேர் கருகிச் சாம்பாலனதையும் அவர்களுக்கு இயக்கம் நாட்டுப்பற்றாளர் விருது கொடுத்தது என்றும் அதே தொனியில் எழுதியிருப்பது இயக்கத்தார்கள் வாசித்தால் கூட ரசிக்கும் படியாகத்தான் இருக்கிறது.
கதை நெடுக இயக்கம், இயக்கத்தின் நடவடிக்கைகள், அதனால் நேரடியாக மறைமுகமாகவோ பாதிக்கப்படும் சமூகம், தப்பித்து உயிர்வாழ்தல் பொருட்டு திசை தெரியாமல் பயணித்த மக்கள்… கதைப்போக்கில் இயக்கம் குறித்தும் தமிழ்ச் சமூகம் குறித்தும் பல்வேறு விமர்சனங்களையும் கருத்துகளையும் வைத்திருந்தாலும் அதனால் இயக்கத்தின் மீது வெறுப்போ ஆத்திரமோ வாசகனுக்கு வரவில்லை. ஏனேனில் இயக்கத்தில் சாதியம் இருந்ததாக தெரியவில்லை. இயக்கம் பெண்களை , (சிங்களப் பெண்களையும் கூட)பாலியல் வல்லாங்குச் செய்ததாக எவராலும் சொல்ல முடியவில்லை. இயக்கம் போரில் ஊனமுற்ற எவரையும் பாரமாக நினைக்கவில்லை.
எப்போதும் இயக்கம் குறித்தப் பெருமைகளாகப் பேசப்படும் இச்செய்திகளை ஆறாவடுவும் உறுதி செய்திருக்கிறது.