கவிஞை “சௌந்தரி” யுடனான உரையாடல்

உரையாடல்

புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் கவிஞை,எழுத்தாளர், சமூகஆர்வலர், மற்றும் வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்,  பெண்ணியச் செயற்பாட்டாளர் என பல கோணங்களில் தன்னை ஈடுபடுத்தி வரும் கவிஞை சௌந்தரி அவர்களை  மார்ச் 8  பெண்கள் தினத்தையொட்டி  அவருடனான சிறப்பு உரையாடல் ஒன்றை ஊடறு சார்பாக இங்கு தருகின்றோம்

sounthary

ஈழத்தமிழர்களது போராட்டமானது பெண்களுக்கான சம உரிமையை வென்றெடுப்பதில்  பங்கை வகித்தது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் யுத்தமுனையிலும் அனைத்து தொழில்துறைசார் நடவடிக்கைகளிலும் ஈடுபட வாய்ப்பும் சந்தர்ப்பமும் கொடுத்தது. அதனால் ஈழத்துப் பெண்களுடைய வாழ்நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. பெண்கள் தமது சுயத்தை உணர்ந்து மேல்நிலைக்கு சென்றதால் தமிழர் மத்தியில் பெண்கள் பற்றிய பெரிய சிந்தனைமாற்றம் ஓன்று ஏற்பட்டது–சௌந்தரி?. அவுஸ்திரேலியாவில் முழுநேரத் தொழில் வல்லுநராக இருக்கும் நீங்கள் வானொலி நிகழ்ச்சிகளை நடத்துதல், மேற்படிப்பு, தமிழ்ப்பாடசாலையில் கற்பித்தல், கட்டுரை கவிதைகளில் ஈடுபாடு, இணையத்தில் எழுதுதல், சமூக சேவை என பல வழிகளிலும் உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தி வருகிறீர்கள். தொடர்ச்சியாக பல வருடங்கள் இவற்றில் நீங்கள் ஈடுபட்டு வருவது மிகவும் வரவேற்புக்குரிய விஷயம். இவற்றுக்கான உந்துதலும், ஆக்க எழுச்சியும் எங்கிருந்து கிட்டுகிறது என்று நீங்கள் நம்புகிறீர்கள்?

என்னைப்பற்றி அதிகமாக கூறுவதற்கு ஒன்றுமில்லை. எனது ஆளுமையில் ஓர் ஆரோக்கியமான வளர்ச்சி தென்படுவது என்னவோ உண்மைதான். அவற்றை ஓர் படிமுறை வளர்ச்சியாகவே நான் கருதுகிறேன்;. எனது ஆளுமை உருவாக்கத்தில் முக்கிய பங்கு எனது தந்தை பண்டிதர் பொன் கணேசனுக்கே உரியதாகும். அவரோடு வாழ்ந்த காலப்பகுதியில் நான் அனுபவித்த குதூகலமான நினைவுகள் எனது சிந்தனை விரிவாக்கத்திற்கு இன்றும் துணைநிற்கின்றன. எனக்குத் தமிழில் ஆர்வம் ஏற்படக் காரணம் எனது தந்தையின் மொழித் திறமையும் அவரது மேடைப்பேச்சு ஆற்றலும்தான். எனது தந்தையைப்பற்றிய பல பெருமைகள் எமக்குண்டு. அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையுள்ளவர். கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லுரியின் அதிபராகவும் பின்பு வேலணை வட்டாரக் கல்வியதிகாரியாகவும், பருத்தித்துறை கல்வியதிகாரியாகவும் பணியாற்றி உடல் நலமின்மை காரணமாக 55 வயதில் ஓய்வுபெற்றார். தனது 58 வது வயதில் இவ்வுலகைவிட்டே சென்றார். இன்றுவரை எனது தந்தையின் இழப்பை என்னால் ஈடுசெய்ய முடியவில்லை. அவரது விமர்சனங்களையும் கருத்துக்களையும் கேட்டறிந்து அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை சந்தித்துப் பழகியதால் இப்போதும் எனது தந்தையின் முகம் அவ்வப்போது தேவைப்படுகின்றது. அதுமட்டுமல்ல நான் சிந்திப்பதை, உணர்வதை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவும் பெரும் அதிஸ்டமாக கிடைத்த சிறந்;த நட்புறவுள்ள தந்தையை எனது வளர்ச்சிப் பாதையின் நடுவே இழந்தது எமது துர்அதிஸ்டமே!.

அப்பாவிடம் தமிழ் ஆங்கிலம் என இரண்டு மொழிகளையும் கற்ற மாணவர்கள் இன்று உலகமெங்கும் பரந்து வாழ்கின்றனர். கல்வியதிகாரியாக முழுநேரப்பணி, காலையும் மாலையும் வீட்டிலும், ரியூசன் சென்ரரிலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் வகுப்புகள், கவியரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம் மற்றும் இலக்கியக் கூட்டங்கள், குடும்பம் என்று சுழன்று கொண்டேயிருக்கும் அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது கைபிடித்து நடந்ததால் அவரது ஆளுமையின் ஒரு துளி எனக்குள்ளும் விதையாக விழுந்துள்ளது என்று கூறலாம்.

hand

மனிதனின் வளர்ச்சியில் பிள்ளைப் பருவம் மிகவும் முக்கியமானது. எனது இளமைக்காலம்  சுவாரசியமானதாகவும் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி சுதந்திரமாக செயல்படும் வகையில் அமைந்தது. எமது பெற்றோர்கள் நல்ல வசதியான சிறுவயது வாழ்க்கையை அக்கா கௌரிக்கும் எனக்கும் அமைத்துத் தந்தார்கள். அக்கா அமைதியான பெண்ணாகவும் நானோர் சுட்டிப் பெண்ணாகவும், துணிவுள்ள பெண்ணாகவும், பிரச்சனைகளை முரட்டுத்தனமாக சந்திக்கின்ற பெண்ணாகவும் வளர்ந்தோம். அக்கா கௌரி யாழ் பல்கலைக்கழக கலைத்துறையில் தனது தமிழ் பட்டப்படிப்பை முடித்து தற்போது பாரிஸில் தன் குடும்பத்துடன் வசிக்கின்றார். எனது தாயார் சாதாரண யாழ்ப்பாணத்து அம்மா, என்மீது அதிகமான அன்பும் அதைவிட அதிகமாக என்னைப்பற்றிய பயமும் கவலையும் கொண்டவர். ஆனால் எனது தந்தை என்னை சரியாக புரிந்து வைத்திருந்தார், என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவர் எனக்கு அடிக்கடி கூறும் வார்த்தை “உனது ஒவ்வொரு செயலுக்கும் அதன் விளைவுகளுக்கும் நீதான் பொறுப்பு, தோல்வியை சந்தித்தாலும் அதிலிருந்து வெளியேறும் திறமையை வளர்த்துக்கொள்”; என்பதே. சமுதாயம் வரையறுக்கும் வட்டங்களுக்குள் வாழாது நான் நானாக வாழ்வதால் பல சிக்கல்களை சந்தித்திருக்கின்றேன் ஆனால் அதற்காக யார் மீதும் பழிபோடவுமில்லை, சந்தித்த எதிர்மறையான விளைவுகளைக் கண்டு பின்வாங்கவுமில்லை. தொலைந்துபோனதைப்பற்றி புலம்புவது எனக்கு பிடிக்காதவிடயம். நான் சந்தோசமாக இருக்கின்றேனா? எனது வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் முழு மனதுடன் வாழுகின்றேனா? என்ற கேள்விகளை என்னிடம் அடிக்கடி கேட்டுக் கொள்வேன். அதற்கான பதில் மனதுக்கு இதமாக இருப்பதனால் எனது ஆளுமையை தொடர்ந்தும் வளர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கின்றதுஎன்னால் முடியாது” என்று சொல்லும் பழக்கம் என்னிடம் கிடையாது, எனக்குத் தெரியாதவற்றை மேலும் அறிந்து கொள்ளவேண்டுமென்று நினைப்பதுண்டு ஆனால் முடியாதென்று சொல்லி வருகின்ற சந்தர்ப்பங்களை தவிர்த்துவிடுவதில்லை. “என்னால் முடியும்” என்னும் சிந்தனையே எனது பலம் என்று கூறுவேன். அதுமட்டுமல்ல நேரத்தையும் காலத்தையும் என் வசம் வைத்திருப்பதால் கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சரிவரப் பயன்படுத்த முடிகின்றது.  கடந்த கால சிந்தனைகளில் நேரத்தை விரயமாக்காது நடப்பு விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதும் கிடைக்கின்ற ஓய்வு நேரத்தை நல்ல பணிகளில் அதாவது எனது ஆர்வத்தை தூண்டுகின்ற பணிகளில் செலவிடுவதும் சில காரியங்களை பின்போடாமல் அப்போதே செய்து முடிக்கும் தன்மையும் என்னோடு எனது நேரத்தை வைத்துக் கொள்ள உதவுகின்றது. எனக்கு கிடைக்கின்ற நேரத்தை அதன்போக்கில் விட்டுவிடாமல் திட்டமிட்டவாறே செலவு செய்ய வேண்டும் என்பதில் கவனமாகயிருப்பதால் பல தளங்களிலும் என்னால் இயங்கக்கூடியதாக இருக்கின்றது.

? பாடசாலைக்குச் சென்ற காலம், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நீங்கள் படித்த காலங்களில் உங்களுக்கு வாய்த்த வாழ்வுச் சூழ்நிலையைப் பற்றிக் கூறமுடியுமா?  (பாடசாலை, பல்கலைக்கழகம், ஊர், நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தவர், சுற்றம் சூழல்…..குறித்து).

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கரவெட்டியில். யாழ்ப்பாணத்தில் வடமராச்சியில் மிகவும் உன்னதமான மனிதர்கள் நிறைந்திருக்கும் எளிமையான ஓர் கிராமம் கரவெட்டி. ஆலயங்களும் திருவிழாக்களும், நெல்லு வயல்களும், சுற்றியிருக்கும் குளங்களும், பனைமரக் காணிகளுமென வசீகரிக்கும் அழகையெல்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது எனது கிராமம். கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியும் பருத்தித்துறை மெதடிஸ்ட் உயர்தர பெண்கள் பாடசாலையும் என்னைப் பலவழிகளிலும் பண்படுத்தி எனக்கான ஒரு வழியைக் காட்டின. யாழ் பல்கலைக் கழகம் திரும்பப் பெறமுடியாத அழகிய அனுபவங்களையும் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களையும் எனக்கு கற்றுத்தந்தது.  எல்லோரைப் போலவே சராசரியான வாழ்க்கை ஓட்டத்தில் அங்கமாக இருப்பவள்தான் நானும். நான் வளர்ந்த சூழலும் வாழ்ந்த சூழலும் எப்போதும் எனது முயற்சிகளை ஊக்கப்படுத்துகின்ற வகையில் அமைந்தது எனது அதிர்ஸடம் என்றே கூறவேண்டும். இரத்த சம்பந்தமான உறவுகளைவிட இதய சம்பந்தமான உறவுகளுடன் எனது ஒட்டுதல் அதிகம்.  என் நண்பர்களின் வட்டம் மிகப்பெரியது. அவர்களுடன் ஆடினேன் பாடினேன் நாடகங்களில் நடித்தேன். மேடைப் பேச்சுக்கள், பட்டி மன்றம், கவியரங்கம் என்று எந்த மேடையையும் விட்டுவைக்கவில்லை. தன்னிச்சையாக எனக்கு நானே விதித்துக் கொண்ட தர்மங்களுக்கேற்ப வாழும் எனது வாழ்க்கையில் மனிதர்களின் நேசம் என்பது முக்கியமான தேடல்களில் ஒன்று. அதனால்;தான் எல்லோரையும் என்னால் நேசிக்கக்கூடியதாக இருக்கின்றது. சில சமயங்களில் முரண்பாடுகள் ஏற்படும், அவ்வப்போது கண்டிப்பேன், விலகிச்செல்வேன், வருந்துவேன் ஆனால் யாரையும் இதுவரை நான் வெறுக்கவில்லை. ஆனாலும் ஏனோ தெரியவில்லை எனது மனதுக்கு மிக நெருக்கமானவர்களென்று இருப்பவர்கள் மிகவும் சொற்பமே. வாழ்க்கைச் சிக்கல்கள் நீண்ட இடைவெளிகளை இடையிடையே திணித்தவண்ணம் இருப்பதால் எனது தேடல்கள் மிகவும் ஆரம்பநிலையில்தான் உள்ளது. நான் எதையும் பெரிதாக சாதித்து விடவில்லை. ஆனால் எனக்குள் சோர்வற்ற தேடல்கள் இருப்பதனால் தொடர் போராட்டம் என்பது என்வரை நிச்சயமாகின்றது.

?. தஸ்லிமா நஸ்ரினின் எழுத்து உங்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். நம் புலம்பெயர் சூழலில் அவரின் எழுத்துக்கள் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன என்பதைப் பற்றிச்  சிறிது விளக்க முடியுமா? Are those writings relevant to us women living in diaspora?, Please explain how?)

taslima

தஸ்லிமா நஸ்ரினின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது எழுத்துக்கள்  செயற்கைத்தனமற்றவை, அவரது பார்வைகள் கூர்மையானவை, சமூக அக்கறையுள்ளவை. மதங்களின்  பிற்போக்குத்தனங்களை கேள்வி கேட்காது ஏற்றுக்கொள்வதையும், பெண்களுக்கெதிரான அடக்கு முறைகளை சமயம் என்ற போர்வைக்குள் திணிப்பதையும், பெண்களின் உடல்சார்ந்த வன்முறைகளின் தொடர்ச்சியையும் அவர் தனது கவிதைகளினூடாக காட்டமாக விமர்சித்திருக்கின்றார். தனது சமூகத்தையும் தனது சமயத்தையும் தஸ்லிமா ஆழமாக நேசிக்கின்றார் அவர்களோடுதான் தனது தொடர்புகளும் உறவுகளும் வளரவேண்டுமென்ற ஆர்வத்தோடு அவர்களை நோக்கியே செல்கின்றார். ஆனால் அதற்காக தனக்கு ஒவ்வாத கருத்துக்கள் தோன்றும்போது மௌனிக்க அவரால் முடியவில்லை தனது வாழ்க்கையை பேனா என்னும் ஆயுதமேந்தியபோராளியாகவே வாழ்ந்துவருகின்றார். ஈழத்தமிழர்களது போராட்டமானது பெண்களுக்கான சம உரிமையை வென்றெடுப்பதில்  பங்கை வகித்தது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் யுத்தமுனையிலும் அனைத்து தொழில்துறைசார் நடவடிக்கைகளிலும் ஈடுபட வாய்ப்பும் சந்தர்ப்பமும் கொடுத்தது. அதனால் ஈழத்துப் பெண்களுடைய வாழ்நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. பெண்கள் தமது சுயத்தை உணர்ந்து மேல்நிலைக்கு சென்றதால் தமிழர் மத்தியில் பெண்கள் பற்றிய பெரிய சிந்தனைமாற்றம் ஓன்று ஏற்பட்டது. பெண்களது வாழக்கைமுறை முன்பு இருந்ததுபோல் இன்றில்லை. தன் தேவைகளுக்காக உழைத்து கௌரமாகவும் சுயநெறியுடனும் வாழ அவளால் முடிகின்றது. ஆனாலும் பெண்களின் வளர்ச்சியை ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை பின்தங்கிய நிலையில்தான் உள்ளது.  வித்தியாசமான சிந்தனைகளோடு உலாவரும் பெண்களை மேற்கொண்டு பயணிக்கவிடாமல் தடுக்கும் மரபில் தோய்ந்த மனங்கள் புலத்திலுமுண்டு என்பது கசப்பான நிஐமாகும்.பெண்களுக்கு சம உரிமையையும் நீதியையும் கொடுக்கும் சமுதாயத்தைத்தான் தஸ்லிமா நேசிக்கின்றார். மனித உரிமையென்பது அனைத்துக் கலாச்சாரத்துக்கும் பொதுவானது. எங்கிருந்து அடக்குமுறைகள் எழுந்தாலும் அவற்றை எதிர்த்து நின்று முகம் கொடுக்கும் துணிவு புலத்திலும் தாய் நிலத்திலும் வாழுகின்ற சகல பெண்களுக்கும் சொல்லப்படவேண்டியதே.

?. புலம்பெயர்வு உங்களுடைய வெளிகளைத் திறந்து விட்டுள்ளதா? புலம்பெயர்வால் உங்களுக்குக் கிட்டியிருக்கும் சந்தர்ப்பங்கள் (opportunities) கிடைத்திருக்கும் நன்மைகள் எவை என நீங்கள் நினைக்கிறீர்கள்?

fb-revolutionary woman

புலம்பெயர்வென்பது எனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய திருப்புமுனை என்றே கூறலாம்.  பல்லகலைக்கழக படிப்பு முடிந்த கையோடு சாம்பியா என்ற நாட்டிற்கு கணவருடன் புலம்பெயர்ந்தேன். ஆசிரியராக கடமையாற்றினோம்;. பணம் புரண்டது ஆனால் எனக்குள் இருந்த தேடலுக்கு சரியான தீனி கிடைக்கவில்லை. அதன்பின்பு நியூசிலாந்தில் ஆசிரியராக பணிபுரிந்தேன். அங்கும் எனது செயல்களும் அதன் விளைவுகளும் பெரிதாகத் திருப்தியைத் தரவில்லை. அதனால் மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தோம். கணிதத்தில் சிறப்புப் பட்டம் பெற்று தொடர்ச்சியாக கணிதத்தையும் இரசாயணத்தையும் கற்பித்ததால் மாற்றம் தேவைப்பட்டது கணக்கியலில் எனது மேல்படிப்பை தொடர்ந்து தற்போது கணக்கியல் துறையில் நிறைவாக எனது பணியைத் தொடர்கின்றேன். கிளைகள் பரப்பி செழித்து நின்ற வேளையில் மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி புலம்பெயர்ந்த இடத்தில் என்னைப் பதியவைத்தேன். இந்த மண்ணோடும் எனது வேர்கள் ஒத்துப்போவதால் புலம்பெயர் வாழ்வையும் என்னால் ரசிக்க முடிகின்றது.  புலம்பெயர்வு எனது கனவுளில் சிலவற்றை நிஐமாக்குவதற்கு பல சந்தர்ப்பங்களை உருவாக்கித் தந்தது. எனது நாட்டில் இதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்குமா? ஒருவேளை கிடைத்தாலும் சமூக கட்டமைப்புகள் என்னோடு இணக்கமாக இருந்திருக்குமா என்ற கேள்வி என்னிடமுண்டு.

வாழ்வுச் சிக்கல்களிலிருந்து சுலபமாக விடுபட இலக்கியப்பணியும் சமூகப்பணியும் எனக்குப் பெரிதும் கைகொடுக்கின்றது. இலக்கியம் சார்ந்த புலமையைவிட சமூகம் சார்ந்த புலமைகளில்தான் எனக்கு அதிக நாட்டமுண்டு. சமூகப் பிரதிநிதியாக நின்று சமுதாய முறைமைகளை விமர்சிக்கும் திறமையை படிப்படியாக வளர்;த்துக் கொண்டு வருகின்றேன். வாழ்வியல் பிரச்சனைகள் குறித்து சமூகத்தவர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் எனது வானொலி நிகழ்ச்சிகளை ஆரம்பித்தேன். தாய் நிலம் மீதான எனது ஏக்கத்தை தீர்த்துக் கொள்ள புலம் பெயர் வானொலிகளும் தனது வாசல்களை எனக்காகத் திறந்தன. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்;பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் கடந்து 10 வருடங்களாக கடமையாற்றுகிறேன். மிகுந்த மனத்திருப்தியுடன் ஊதியமற்ற சேவையாக வாரம் தோறும் சனிக்கிழமைகளில் கவிதை பேசும் நேரம் என்னும் நிகழ்ச்சி மூலம் பலரும் தாம் வாசித்த, ரசித்த, எழுதிய கவிதைகளை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியாகவும், சிந்தனைச் சிதறல் என்ற கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவதன் மூலம் உலகத் தமிழருடன் தரமான சிந்தனைப் பரிமாற்றமும் புதிய உறவுகளின் தொடர்புகளும் தொடர்ச்சியாக ஏற்படுகின்றது.
இனம் மொழி இரண்டையும் பாதுகாக்கும் பெரும் பணி புலம்பெயர்ந்த ஒவ்வொரு தமிழனுக்கும்  இருக்கின்றது. ஒரு மொழியின் வாழ்வும் வளமும் அந்த மொழியின் பாவனையில்தானே உள்ளது.  இளம் தலைமுறையினரின் தாய் மொழிப்பற்றையும் மொழி ஆர்வத்தையும் வளர்க்கும் நோக்கில் அவுஸ்திரேலியாவிலும் பல தமிழ் பாடசாலைகள் இயங்குகின்றன. எமது குழந்தைச் சமூகத்தின் தமிழ் மொழிக் கல்வி வளர்ச்சியை நோக்காக் கருதும் தமிழ் பாடசாலையில் ஆசிரியராகவும் கடமையாற்றுவது மிகுந்த திருப்தியை கொடுக்கின்றது.

ஈழத்தமிழரின் வரலாற்றில் மிக மோசமான காலகட்டத்தை எமது தாயகத்து உறவுகள் கடந்த சிலவருடங்களில சந்தித்திருக்கின்றார்கள். போரின் பாதிப்புக்களிலிருந்து மீளமுடியாத நிலையில் இருக்கும் எமது இனத்திற்கு அவுஸ்திரேலியாவில் இயங்கும் பல தொண்டு நிறுவனங்கள் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன. அவர்களுடன் இணைந்து அவர்களது உதவித்திட்டங்களிற்கு என்னாலான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் தொடர்ச்சியாக செய்துவருகின்றேன்.  எல்லாவற்றுக்கும் மேலாக எனது மனநிறைவுக்காக மிகுந்த விருப்பத்துடனும் படைப்பூக்கத்துடனும்  செயல்படுவது “பூபதி” என்ற இணையத்தள பதிவுகள். அதில் எனது உணர்வுகளைத் அவ்வப்போது  பதிவு செய்வேன். எனது பதிவுகளின்மூலம் எதனையும் சாதித்ததாகக் கருதவில்லை ஆனால் எனது ஈடுபாட்டை நிறைவேற்ற எனக்கான ஒரு தளத்தை உருவாக்கியிருப்பது மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருகின்றது. எனது செயல்பாட்டுத் தளங்களை பலவாகப் பிரித்து ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தாது ஒருமித்து இயங்குகின்றபோது தனியானதோர் உத்வேகம் எனக்குள் உண்டாகின்றது. ஒரு தளத்தில் ஆழமாகக் காலூன்றுவது தனித்துவமான வெற்றியை பெற்றுத்தரலாம் ஆனால் பல தளங்களில் தீவிரமாக இருக்கும் போது பல்வேறுபட்ட அனுபவங்களும் புதிய பாதைகளும் வௌ;வேறு தொடர்புகளும் ஏற்படுகின்றன என்பதும் உண்மையே. சமூகம் மற்றும் இலக்கிப்பணிகளில் பங்கெடுப்பது எனது தேடலுக்கு நான் வழங்கும் சத்துணவுகள். எனது மூளைக்கு எப்போதும் வேலை கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும் அப்போதுதான் அது உற்சாகம் அடையும். தோல்விகளால் பின்தங்காது சிறிய வெற்றியில்;கூட மகிழ்வதால் எனது மனம் இளமையின் வலிமையுடன் இருப்பதாகவே நான் உணர்கின்றேன்.

?. Salmon Rushdie எம்மைப் போன்ற புலம்பெயர் சமூகத்தினரின் அடையாளம் பற்றிப் பேசும்போது “எங்களது அடையாளம் பன்முகப்பட்டதாயும், முழுமையற்றதாகவும் ஒரே சமயத்தில் இருக்கிறது. சில சமயங்களில் நாங்கள் இரண்டு கலாச்சாரங்களில் சவாரி செய்யவதைப்போல இருக்கிறது, சில சமயங்களில் அவற்றின் இடைவெளிகளுக்குள்ளே வீழ்ந்து போவது போலத் தோன்றுகிறது. ஆனால் இந்தப் புலம்பெயர் நிலையின் தளம்  எவ்வளவுதான் ஸ்த்ரமற்று இருந்தாலும்இ படைப்பாளிகளைப் பொறுத்தவரையில் புலம்பெயர்வுத் தளம் மிகவும் செழுமையானது” என்கிறார். பல தளங்களிலும் இயங்கும் நீங்கள் இதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

salman

முஸ்லீம்களான சல்மான் ருஸ்டியும் தஸ்லீமா நஸ்ரினும் இஸ்லாம் சமயத்தைப் பற்றிய தமது கருத்துக்களை எழுதியதால் உயிர் அச்சுறுத்தல்கைள எதிர்கொண்டு அதிலிருந்து தப்பி வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. nஐய்ப்பூர் இலக்கிய விழாவிற்கு சல்மான் ருஸ்டி கலந்து கொள்ளாமல் போனதால் சல்மான் ருஸ்டியைப்பற்றி பரபரப்பாக ஊடகங்களில் பேசப்பட்டது. சல்மான் ருஸ்டியைப்பற்றி அறிந்திருக்கின்றேன் ஆனால் அவரது நூல் எதையும் நான் வாசிக்கவில்லை.   ஆங்கிலப் புத்தகங்களை தொடர்ச்சியாக வாசிப்பதற்கு சரியான மூட் வரவேண்டும். எனது நூலகத்தில் பல ஆங்கில நூல்கள் இன்னும் தூங்கிக் கொண்டுதானிருக்கின்றன.   சல்மான் ருஸ்டி விவகாரம் எழுத்தாளர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதையே எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் படைப்பாளிகளின் உரிமைகள் பறிக்கப்படுவதொன்றும் தமிழர்களாகிய எமக்கு புதிதல்லவே. சல்மான் ருஸ்டி புலம்பெயர் எழுத்தாளர்களின் மனோநிலையைப்பற்றி கூறிய கருத்து ஓரளவு நியாயமானதுதான்.
தமிழினத்தின் வளர்ச்சி பல்வேறு நிலைகளை இன்று எட்டியுள்ளது.

ஈழப்போராட்டமானது உலகம் முழுவதும் தமிழர்களை புலம்பெயரச்செய்து வேற்றினக் கலாச்சாரங்களின் வேர்களை ஊடுருவிச்சென்று தமிழ் சமூகத்தை ஓர் சிந்திக்கும் சமூகமாக மாற்றியுள்ளது. ஒரு பெரிய தீமைக்கு கிடைத்த நன்மையென்றுகூட இதைச் சொல்லலாம். கவிஞர் காசி ஆனந்தனின் “வியர்வை சிந்தாத உன்னாலும் மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்துவிட முடியாது” என்ற வரிகளின்படி சமூகம் சார்ந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய சமூகப் பொறுப்பிருக்கின்றது. இதில் எழுத்தாளனுக்கு இருக்கும் சமூகப்பொறுப்பு முக்கியமானதும் அவசியமானதும் ஆகும். அந்த வகையில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் மண்ணின் உணர்வுகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளாமல் தமது இனத்தின் அவலத்தையும், மண்ணின் ஞாபகங்களையும், புலம்பெயர் மண்ணில் சந்திக்கும் பிரச்சனைகளையும் பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் தமது படைப்புகளினூடாக வெளிப்படுத்திக் கொண்டிருதான் இருக்கிறார்கள். அவர்களது படைப்பாக்க ஆளுமையின் வளர்ச்சி பெருமைப்படும் விதத்தில் அமைந்துள்ளது.
இரட்டைக் கலாச்சாரத்தில் வாழ்ந்தாலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்கள் தங்கள் மொழியையும் மரபுகளையும் பேணி தமிழருக்குரிய முக்கியத்துவத்தையும் மரியாதையையும் பெறுவதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றிற்கான முயற்சிகளை எடுத்தவண்ணம்தான் இருக்கின்றார்கள். ஆனால் தரமான படைப்புக்கள் வெளிவருவதற்கு ஒரு படைப்பாளிக்கு கட்டற்ற சுதந்திரம் தேவை, அந்த சுதந்திரம் எமது நாடுகளில் சாத்தியமாகுமா? யாரும் எதைப்பற்றியும் பகிரங்கமாக விமர்சிக்க முடியுமா? இது சாத்தியமில்லை என்பதுதானே உண்மை. ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் பொதுவாக சுதந்திரமும் பாதுகாப்பும் பேச்சுரிமைகளும் பேணப்படும் நாடுகளில் வாழ்வதால் அந்த சலுகைகளை அவர்கள் ஓரளவிற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவதால் அவர்களுக்கான தளம் செழிப்பாக உள்ளது என்றே கூறலாம்.

?. அவுஸ்திரேலியாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் முதல் பெண் பிரதமர் ஜூலியா கில்லர்ட்டை இந்நாட்டு வெகுஜன ஊடகங்கள்  அணுகும் முறையையும், அவரைச் சித்தரிக்கும் விதங்களையும் பற்றி – ஊடகவியளாளர் என்ற முறையிலும்,  மூன்றாம் உலக நாடொன்றில் இருந்து முதலாம் உலக நாடொன்றிற்கு புலம்பெயர்ந்து, சோர்ந்து போகாது செயற்படும் – வெற்றியின் படிகளில் நிற்கும் பெண் என்ற ரீதியிலும் எவ்வாறு நீங்கள் பார்க்கிறீர்கள்?

ausralia

நவீன உலகில் எத்தனையோ பெண்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் பல்துறை நிபுணிகளாய் சாதனையாளர்களாய்த் திகழ்ந்து வருகின்றனர். அதில் அவுஸ்திரேலிய நாட்டின் 27 வது முதல் பெண் பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட யூலியா கிலாட்டும் ஒருவர். அவர் பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட விதம் விமர்சனத்திற்கு ஆளானதென்பது உண்மையென்றாலும் மிகவும் கஷ்டமானதும் நெருக்கடிகள் மிக்கதாகவுமிருந்த தேர்தலில் வெற்றியீட்டி மீண்டும் அவுஸ்திரேலியாவின் பிரதமரானார்.    ஆளும் தொழிற்கட்சியின் அரசியல் தந்திரங்களை வென்று தனது பதவியை தக்க வைப்பதே பெரிய சிக்கலாக இருக்கின்ற வேளையில் சுய விளம்பரத்திற்காக சாதாரண விடயங்களைக்கூட பெரிதுபடுத்தி பூதாகரமாகக் காட்டும்; ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மையை சமீப காலங்களில் அவதானிக்க முடிகிறது. யூலியா கிலாட் தலமை வகிக்கும் கட்சியின் அரசியல் கொள்கைகள் சரியானவையா அவற்றை பிரதமராக இவர் எப்படி நடைமுறைப்படுத்துகின்றார் அவற்றின் மாற்றங்கள் எப்படி அமையவேண்டும் என்பதுபற்றி பெரிதாக யாரும் கவலைப்படவில்லை. முக்கியமாக யூலியா கிலாட் என்பவரை ஒர்; வளர்ச்சியடைந்த  நாட்டின் பிரதமராக அடையாளப்படுத்தி அவரது செயல்பாடுகளை விமர்சிப்பதைவிட ஓரு பெண் பிரதமர் என்ற வகையில் அவரைபற்றிய விமர்சனங்கள்தான் முன்வைக்கப்படுகின்றன.      மேல்நாட்டுக் கலாச்சாரத்திலும் ஆண்கள் உயர்நிலையை அடையும்போது அவைகள் உயர்வாக மதிக்கப்படுவதையும், பெண்கள் அதே உயர்நிலையை அடையும்போது அவற்றை கொச்சைப்படுத்துவதையும் அவதானிக்கமுடிகின்றது.  இந்த நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் பெண்களின் ஆளுமையை திறமையை வெளிப்படுத்த விடாமல் முடக்குவதற்கான கூக்குரல்கள் கோஷங்கள் வெளிப்பட்டவண்ணம்தான் இருக்கின்றன. ஆனாலும் அவற்றைப் பொய்பித்து எதிர்கொள்ளும் இடர்பாடுகளையெல்லாம் வெற்றிகொள்வதுதானே சாதனையாகும்.இந்த வேளையில் அவுஸ்திரேலியாவிலும் பழங்குடியின மக்கள் தமது நில உரிமை மற்றும் பல்வேறு கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடுவது பற்றியும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள கிடைத்த சந்தர்ப்பத்திற்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். ஊடறு என்னும் இணையப் பத்திரிகையை நீண்டகாலமாக வாசிப்பவர்களில் நானுமொருத்தி. ரஞ்சியையும் ரவியையும் சந்திக்கவேண்டுமென்ற ஆவல் நீண்டகாலமாக இருந்தது. கடந்த வருடக் கடைசியில் எனது ஆசை நிறைவேறியது. பெரிதாக அறிமுகம் இல்லாதபோதும் அளவுக்கு அதிகமாக அங்கீகரித்து எம்மை வரவேற்றதை இப்போது நினைத்தாலும் மனம் சிலிர்க்கின்றது. பொறுப்புணர்ச்சியுடனும், அக்கறையோடும் மொழிக்கும் இலக்கியத்திற்கும் சமூகவாழ்வின் மேம்பாட்டிற்கும் உதவும் ஊடறுவின் பணி மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்…..


ஊடறு வில் வெளி யாகிய சௌந்தரியின் சில ஆக்கங்கின் லிங்

http://www.oodaru.com/?p=2899

http://www.oodaru.com/?p=3802

http://www.oodaru.com/?p=4180

3 Comments on “கவிஞை “சௌந்தரி” யுடனான உரையாடல்”

  1. சவுந்தரியின் உரையாடல் மிகவும் சிறப்பானது அவரின் பல ஆக்கங்களை நான் ஊடறுவில் தான் வாசித்து வருகிறேன். ஊடறுவின் பணி தொடர எனது வாழ்த்துக்கள் மிக அழகாக எடிட் பண்ணும் உங்கள் கலை என்னை பல முறை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது தருணத்திற்கு ஏற்றாற் போல் உங்கள் பணி தொடர்ந்து இருப்பதும் செயற்படுவதும் கண்டு நான் பொறாமை கொள்கிறேன் மகளிர் தின வாழ்த்துக்கள் ஊடறு முக்கியமாக றஞ்சிக்கு எனது பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *