பெண்கள் தினம்: வரலாறுச் சுருக்கம் மற்றும் “மண்ணு”க்கேற்ற கோரிக்கை

கொற்றவை

march2011 3 மார்ச் 8 – சர்வதேசிய பெண்கள் தினமாக கொண்ட்டடப்படுகிறது. இந்த தினம் பெரும் அரசியல் போராட்ட வரலாற்றைக் கொண்டது, ஆனால் உலகமயமாக்கல் சூழலில் அதன் அரசியல் தன்மை குலைக்கப்பட்டு வெறும் ‘சொகுசு வாழ்வுமுறை’க்கான ஒரு கொண்டாட்ட தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

பெரும் சமூக கொந்தளிப்புக்களுக்கிடையேயும், அரசியல்நெருக்கடிகளுக்கிடையேயும் நடைபெற்ற பணி சார்ந்த உரிமைகள் அரசியல் உரிமைகள், கூலி உரிமைகளை வலியுறுத்தி நடந்த போராட்டங்களை உள்ளடக்கியது பெண்கள் தின வரலாறு. 1844ல் 10 மணி நேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைத்திடக் கோரி லோவெல் உழைக்கும் பெண்கள் சீர்திருத்த சங்கம் போராடியது. அதைத் தொடர்ந்து 1857ல் மார்ச் 8 அன்று பல்வேறு தொழிலாளர்கள் பிரிவினர் பெண்களுக்கான ஓட்டுரிமை, எட்டு மணி நேர வேலை, கூலி உயர்வு என தங்கள் உரிமைகளை வலியுறுத்தி போராடினர். பாட்டாளி வர்க்க அசைவியக்கத்தில் பெண்களுக்கான ஓட்டுரிமை என்பதை மிக அவசியமான ஒன்றாக அலெக்சாண்ட்ரா கொலண்டையும், க்ளாரா ஜெட்கினும் உணர்ந்தனர். பின்னர் சோசலிஸ்ட் செயல்திட்டத்தில் அதை இணைத்தனர். 1907ன் துவக்கத்தில், சோசலிசப் பெண்களின் முதல் மாநாட்டில் க்ளாரா ஜெட்கின் தலைமையில் செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. க்ளாரா ஜெட்கின் தலைமையில் 1907ல் உருவான செயற்குழுவில் வாக்குரிமை, எட்டு மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற கூலி ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

women 2012அதைத் தொடர்ந்து, 1908 மார்ச் 8 அன்று நியுயார்க் நகரில் 15,000க்கும் மேற்பட்ட பஞ்சாலை பெண் தொழிலாளர்கள் கடும் குளிருக்கு மத்தியில் மேற்சொன்ன கோரிக்கைகளை வைத்து பெருமளவில் ஆர்பாட்டங்களை நடத்தினர். இப்போராட்டம் மற்ற நாடுகளுக்கும் பரவியது. 13 நாள் போராட்டம் நீடித்தது, கடுமையான அடக்குமுறை கொடுமைகள், உயிரிழப்புகளுக்குப் பிறகு அமெரிக்க அரசு வேறு வழியின்றி கோரிக்கைகளை சட்டமாக்கியது. உலகெங்கிலும் ஓயாத போராட்டத்தால் அனைத்து நாடுகளிலும் ஓட்டுப்போடும் உரிமை சட்டமாகியது. உழைக்கும் வர்க்கப் பெண்களின் உறுதிப்பாட்டையும், போர் குணத்தையும் அதன் மூலம் அடைந்த வெற்றியையும் பறைசாற்றும் நாள் சர்வதேச மகளிர் தினம். உலகமயமாக்கலுக்குப் பின் பெண்கள் தினக் கொண்டாட்டத்தில் சோசலிச, கம்யூனிச, வர்க்கப் போராட்டப் பின்னணிகள் புறந்தள்ளப்பட்டுவிட்டது, முதலாளித்துவ சாயம் ஏற்றப்பட்டு, ஆணாதிக்க சமூக அமைப்புக்கு உகந்த ஒருத்தியாக பெண்ணை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகள் ஆணாதிக்க முதலாளித்துவக் கல்வியின் பெயரால் நடந்து வருகின்றன. முதலாளித்துவ பெரு வளர்ச்சிக்கு துணை நிற்கும் பெண் தொழில் முனைவோராக, (women entrepreneurs) பெண் முதலாளிகளாக, பொருளாதார சுதந்திரம் பெற்றுவிட்ட மேட்டுக்குடி பெண்களை ஆணாதிக்க சமூக விசுவாசிகளாக தயார் படுத்தும் கையூட்டு வேலைகள் மட்டுமே பெண்கள் தினக் கொண்டாட்டத்தின் ’கரு’வாக மாறியுள்ளது. ஒரு புறம், மீண்டும் மீண்டும் இக்கொண்டாட்டங்கள் தந்தைவழிச் சமூகம் வடிவமைத்த ‘பெண்மை’ எனும் கருத்தாக்கத்தை சுற்றியே வலம் வருகிறது. மறுபுறம், முதலீட்டியப் பெருக்கத்திற்கான பண்பாட்டு மூலதனத்தில் பெண் உடல் என்பது வெறும் பாலியல் பண்டமாக மாற்றப்பட்டு, ‘சுதந்திரம்’ என்ற பெயரில் ஆணின் பார்வைக்கு படையல் வைக்கப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

நவீனச் சூழலில் பெண்கள் கல்வியறிவு பெறுவது உயர்ந்திருக்கிறது, பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்கின்றனர், சொத்துரிமை கிடைத்திருக்கிறது, இரவுகளில் பணிக்கு செல்கின்றனர், பாலியல் சுதந்திரம் பெற்றுள்ளனர் இதற்கு மேலும் என்ன வேண்டும் என்று கேள்விகள் வைக்கப்படுகின்றன. பல போராட்டங்களுக்குப் பிறகு ‘சில’ உரிமைகள் கிடைத்துள்ளன, அதிலும் சில உரிமைகளே பெண்களாக கேட்டு பெற்றவை, மற்றவையெல்லாம் பெண்களுக்கு ஆணாதிக்க முதலாளித்துவ அதிகார மையம் பரப்புரை செய்பவை. மேட்டுக்குடி பெண்களும் எந்தக் கேள்வியின்றி ஏற்றுக் கொண்டவை. ஆணாதிக்கம் வழங்கியிருக்கும் சில ‘சுதந்திரங்கள்’ அவர்களுக்கு களிப்பூட்டும் வகையில் இருப்பதால் அவற்றை ஆதரிக்கின்றனரேயன்றி அறிவுத்தளத்தில் முன்வைக்கப்படும் ’கருத்து’ சுதந்திரங்களுக்கு ஆணாதிக்கம் இன்னும் இடைஞ்சல்கள் செய்தே வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ‘பெண் சிசுக் கொலை’ மூலம் பெண்ணின் இருப்பும் கூட மறுக்கப்படும் நிலை பெருகிவருகிறது. அவ்வகையில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்திலிருந்து தொடங்குகிறது சமத்துவமின்மைக்கான ஆதாரங்கள். இன்றைய நிலவரப்படி ’குழந்தை பால் விகிதம்’ (child sex ratio) மார்ச், 2011ல் வெளியிடப்பட்ட தகவலின் படி 1000 ஆண் குழந்தைக்குஇ 914 பெண் குழந்தைகளே உள்ளன. சுதந்திரம் பெற்ற 64 ஆண்டுகளில் இந்த வருடம்தான் இருப்பதிலேயே மிகவும் குறைவான பெண் குழந்தைகள் விகிதம் உள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. 2001ல் 927ஆக இருந்த விகிதம் 2011ல் 914 என்று குறைந்துள்ளது. பெண் சிசுக் கொலைக்கெதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டும், ஆண் குழந்தைக்கான முக்கியத்துவம் குறையவில்லை என்பதே உண்மை.

march2011 3இதற்கடுத்து கல்வி, உடல் ஆரோக்கியத்துக்கான ஊட்டச்சத்து, அரசு பதவிகள், பாராளுமன்றத்தில் 33வீதம் திருமணம் குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம், பாலியல் அத்துமீறல்களிலிருந்து பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, சமமான கூலி (குற்ப்பாக விவசாயத் தொழிலில்)இ கருத்துச் சுதந்திரம், குடும்ப வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு, சமூகக் பங்களிப்புக்கான உரிமை, குடும்ப அமைப்பில் இருந்து கொண்டு அரசியலில் பங்கு பெறுவதற்கான உரிமை, குழந்தைப் பேறு காலத்தை தீர்மானிக்கும் உரிமை, குழந்தைப் பேற்றை மறுக்கும் உரிமை, பெண் உடலுக்கான சுயமரியாதை என்று எல்லாமே இன்னும் எட்டா கனியாகவே இருந்து வருகிறது. மேற்சொன்ன உரிமைகளில் சில மேட்டுக்குடி பெண்களுக்கும், ’முற்போக்கு’ கொள்கையோடு வாழும் துணைகளுக்கும் ஓரளவுக்கு கிடைத்து வருகின்றன ஆனால் ‘பொது புத்தியில்’ இன்னும் பெரும் மாற்றங்கள் நிகழவில்லை. தந்தை வழிச் சமூக அமைப்பு மாராத காரணத்தாலும், முதலாளித்துவ வளர்ச்சியின் விளைவாக தலை நகரங்களில் மட்டும் பெற்றுவிட்ட பெரு வளர்ச்சியினாலும் பெண்களுக்கான உரிமை எவை என்பதில் கூட சமமற்ற தன்மையே நிலவி வருகிறது.

கிராமப்புரங்களில் வாழும் பெண்கள், தலித் பெண்கள், அவர்களுக்கும் கீழ் தள்ளப்பட்டிருக்கும் மேலும் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள், பழங்குடிப் பெண்கள் ஆகியோரின் நிலை சமூக தளத்தில் துயர் மிகுந்ததாய் உள்ளது. அத்தகைய விளிம்பு நிலைப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே உள்ளது. இவ்வன்கொடுமைகள் பொது தளங்களில் மட்டும் என்றில்லாமல், அரசியல் பிரதிநிதித்துவ தளங்களிலும் நடந்து வருகிறது. ஆதிக்க சாதி பெண்கள் பெறும் உரிமையை, அங்கிகாரத்தை விளிம்பு நிலைப் பெண்கள் அரசியல் அமைப்பில் பெறுவதில்லை, அதற்கு மேலும் அவர்கள் உடல் ரீதியான கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர்.கல்வி கற்கும் வாய்ப்பு பெண்களுக்கு மிக தாமதமாகவே கிடைத்தது. அவ்வாய்ப்பும் ஆதிக்க சாதி மற்றும் உயர் படிநிலை கொண்ட பெண்களுக்கே பெரும்பாலும் பயனிளித்துள்ளது. வாழ்வாதார போட்டிகு ஈடுகொடுக்கும் வகையில் கல்வியை ஒரு முதலீட்டாக கருதி பிற்கால வரவை குறிவைத்து ஓடி ‘குடும்பத்தை’க் காக்க வேண்டிய சூழலில் பெண்கள் பொது அறிவை, மாற்று அறிவை பெறுக்கிக்கொள்ளும் சூழல் குறைவாகவே உள்ளது. பெண்களுக்கு கல்வி உரிமைகள் கிடைத்து அறிவு விரிவடைவதற்குள் அவளுக்கு ஆணாதிக்க ‘பெண்மை’க் கல்வியும், பெண்மைக் களங்களும் அறிமுகப்படுத்தப்ப்ட்டு விட்டன. அது அவளை ‘ஆணின் பெண்ணாக’ உருமாற்றம் செய்து வைத்திருக்கிறது. இதிலிருந்து குறைந்த சதவிகிதத்தினர் பெண் என்பவள் உண்மையில் யார் என்பதை தேடும் முயற்சியில் ஈடுபட்டு தங்கள் சுயத்தை கண்டறிவதில் வெற்றி கண்டுள்ளனர்.

அத்தகையப் பெண்கள் தாங்கள் கண்டறிந்த உண்மையை இந்த ஆணாதிக்க சமூகத்தில் பிரகடனம் செய்வதில் பல்வேறு எதிர்ப்புகளை, அவமதிப்புகளை, வன்கொடுமைகளை சந்தித்து சில வேளைகளில் உயிரையும் இழந்திருக்கின்றனர். உலகெங்கிலும் உள்ள நிலை இதுதான். நம் மண்ணில் கூட எண்ணற்ற பெண்கள் ஆணாதிக்க கொடுமைகளை எதிர்த்து நின்றுள்ளனர், குறிப்பாக அரசியல் களத்தில் பெறும் புரட்சிகளை செய்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால், தெலுங்கானா போராட்டம், பழங்குடியினர் வாழ்வாதாரப் போராட்டம் தொடங்கி இன்றைய கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் வரை ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழ்நாட்டிலும் பெரியாரைப் பின்பற்றி சுயமரியாதை இயக்கங்களில் பங்குபெற்ற ‘சுயமரியாதை வீராங்கனைகள்’ ஆற்றியுள்ள பணிகள் போற்றத்தக்கவை. அம்பேத்கர் உருவாக்கிய ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியலமைப்புச் சட்டங்கள்இ வன்கொடுமைக்கெதிரான சட்டங்கள், மற்றும் பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் ஆகியவை பெண்களுக்குப் பெரும் உறுதுணையாய் இருப்பவை. அவரைத் தொடர்ந்து தலித் அரசியல் முன்னெடுக்கப்பட்ட பின்னர் விளிம்புநிலைப் பெண்களும் கல்வி கற்கும் சூழல் விரிவடைந்து வந்துள்ளது. இன்று தலித் பெண்ணியம் என்பதும் ஒரு முக்கியப் பெண்ணியக் களமாக உள்ளது.

பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனைகள் சாதிய அடைப்படையிலான ஒடுக்குமுறைகள் குறித்த விழிப்புணர்வை பெருக்கியுள்ளது. அத்தோடு பொருளாதார கட்டமைப்பை புரிந்து கொள்வதற்கும், பொதுவுடைமை சமுதாயத்தை உருவாக்குவதற்கும் வழிகாட்டியாக மார்க்சியம் இருந்து வருகிறது. ஆனால் சமத்துவத்தைப் போதிக்கும் இம்மூன்று தத்துவங்களும் ’அரச கல்வியின்’ வாயிலாக மக்களுக்கு கிடப்பதில்லை. ஆண்களுக்கேயுரிய சலுகைகளாலும், வெளிஉலக தொடர்பு வட்டங்களாலும் ஆண்கள் மாற்று அறிவை பெறும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பெண்களுக்கு இவ்வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அதுமட்டுமல்லாமல், ’மாற்று’ அறிவைத் தேடிப் பெற்ற பெண் ஒடுக்குமுறைகளுக்கு துணை நிற்பது இயலாத ஒன்று, அநீதிகளை சகித்துக் கொள்ளும் போக்கு அவளிடம் இருக்காது. அத்தகைய சூழலில் தந்தை வழிச் சமூகம் கட்டமைத்திருக்கும் குடும்பம் எனும் நிறுவனத்திற்கு அவள் விசுவாசமாக இருக்க முடிவதில்லை. ஆணாதிக்க சமூக அமைப்பில், பெண் தனித்து வாழ்வது ஆபத்து நிறைந்ததாய் உள்ளது. குடும்பம் எனும் அமைப்பை விட்டல் பெண்ணுக்கு பாதுகாப்பில்லை எனும் கட்டமைப்பு பின்னர் அவ்வமைப்புக்கான கடமைகள்இ குழந்தைப்பேறு, தாய்மை ஆகியவை பெண்ணின் சமூக அக்கறையை உட்செரித்துவிடுகிறது. ஆண்களுக்கு இது பொருந்தும் என்றாலும், ஆண் அநீதியை தட்டிக் கேட்பதும், அரசியலில் பங்குபெறுவதும் அவனது பிறப்புரிமை, அறிவுஜீவித்தனம், வீரம் எனும் வகையில் இங்குப் பார்க்கப்படுவதால் அது அவனுக்கு பெறுமை சேர்க்கும் ஒன்றாகவே இருக்கிறது. அதற்கான நேரம், அனுமதி ஆணுக்கு கேள்வியின்றி கிடைத்து விடுகிறது. ஆனால் பெண்கள் ‘பொது வாழ்க்கை’யில் பங்களிப்பு செய்வதென்பது அவளது தனிப்பட்ட வேட்கைகளுக்காகவும், பாலியல் சுதந்திரத்திற்காகவும், குடும்பத்திற்கு கட்டுப்பட்டு இருக்க முடியாத ‘ஊதாரித்தனத்திற்காகவும்’ எனும் பார்வையே நிலவுகிறது. இதனால் பெண்கள் சமூக அறிவை தேடிப் பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒடுக்குமுறைகளை மீறி அது நடந்தாலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்வு பெறும் போராட்டங்கள் நிறைந்ததாகவும், இழப்புகள் நிறைந்ததாகவும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

இத்தருணத்தில் ஆணாதிக்கவாதிகளுக்கு ஒன்றை சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது. பெண்ணின் உரிமைகளை மறுக்கும் இந்த ஆணாதிக்க சமூக கருத்தாக்கமே உங்கள் அன்பு மகள்களை, குழந்தைகளை வன்புணர்வுக்குள்ளாக்குகிறது. குழந்தைகளைக் கடத்தி பணம் பறிக்கும் செயல்களைச் செய்கிறது. பொருளாதார உயர்வுக்காக, உங்கள் மனைவியரை, பெண்களை பாலியல் வியாபராத்திற்காக கடத்துகிறது, சீரழிக்கிறது. படிநிலை அச்சுறுத்தல்களை விதைத்து குடும்பம் எனும் அமைப்பை வெறும் நுகர்வுக்கான இலக்காக கைகொண்டு எளிய சந்தோசங்களை, உறவுப் பிணைப்புகளை சிதைத்து வருவதும் இந்த ஆணாதிக்க முதலாளித்துவ சமூக அமைப்பே. அதுமட்டுமல்லாமல் ஆணாதிக்க அதிகாரமையத்தில் ஒன்றான ‘மதம்’ எனும் நிறுவனம் மனிதரோடு மனிதர் பகைக் கொள்ளச் செய்கிறது, அதனால் மூளும் சண்டைகளில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளும். இந்த சமூகக் கொடுமைகளை களைய வேண்டுமானால் ‘பால்பேதத்தை துறந்து, சாதியத்தைத் துறந்து’ பாட்டாளி வர்க்கம் அதிகாரம் பெறவேண்டும். இதன் ஒரு பகுதியாக பொதுவுடமைச் சிந்தனையினைக் கொண்ட பெண்ணியக் கல்வி பரவலாக்கம் செய்யப்பட வேண்டும். பெண் விடுதலையின்றி சமூக விடுதலை முழுமை பெறாது. பெண் விடுதலையென்பது ஒடுக்கப்பட்ட இனத்தின் தளத்திலிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு இழந்த அதிகாரத்தை, தனி மனித உரிமைகளை மீட்டெடுத்தல் என்பதாகும். இவ்விடுதலையை அடைவதற்கு பெண்ணியக் கல்வி மிக, மிக அவசியம். பெண்ணியம் என்பது பெண் எனும் பாலியத்துக்கான விடுதலை என்பதைத் தாண்டி, பாலற்ற தன்மையையும் உள்ளடக்கியதாக இன்று விரிவடைந்து வருகிறது. உலகில் பிறந்துள்ள அத்தனை உயிர்களுக்குமான ‘இருத்தலையும்’,

‘உரிமையையும்’ நிலைநாட்டுவதாய் முன்னேற்றம் கண்டுள்ளது. பெண் கல்வியியல் மகளிரியல் (Women’s Studies)என்றும் அறியப்படுகிறது.முதுகலைப் பட்டம், முனைவர் பட்ட ஆய்வு என்று மட்டுமல்லாமல், மகளிரியல் (பெண்ணியக் கல்வி) 11ம் வகுப்பிலேயே தினிப்பாடமாக அறிமுகம் செய்யப்படவேண்டும். அதற்கு முன்னர் இருக்கும் ஆணாதிக்க வரலாற்றுப் பார்வையைக் கொண்ட கல்வியும் மாற்றியமைக்கப்பட வேண்டும். பதின் பருவ வயது முதலே பாலியல் கல்வியளிக்கப்பட வேண்டும். சமூக விடுதலைக்கு முக்கியப் பங்களிப்பினை செய்யும் பெண்ணியச் சிந்தனையை மேலும் வளர்த்தெடுப்போம். அப்பாதையில் குறுக்கிடும் முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சார பெண் விடுதலைச் சிந்தனைகளைப் புறக்கணிப்போம். நமது சுதந்திரம், நமது பிறப்புரிமை. இந்த பெண்கள் தினத்தன்று எமது கோரிக்கை: “பால்பேதம் தகர்ப்போம், பெண்ணியக் கல்வி மூலம் மனிதம் மீட்போம்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *