|
மார்க்சியத் தத்துவம் உண்மையிலேயே குடும்ப உறவை நிராகரிக்கிறதா? பொதுவுடைமைச் சமுதாயத்தில் குடும்பம் என்பதே இல்லாமல் போய்விடுமா?குடும்ப அமைப்பை அழிக்க புதிதாக ஒன்று பிறந்துவரத் தேவையில்லை. இன்றைய உலக-உள் நாட்டு முதலாளித்துவமும், அதன் பாதுகாப்பில் இருக்கும் பண்ணைச் சமூகமும் அந்த வேலையைத்தான் செய்துகொண்டிருக்கின்றன. |
ஒருவர் எவ்வளவு ஏழையாக இருக்கிறார் என்பது பற்றி நான் கவலைப்படவில்லை; அவருக்கு ஒரு குடும்பம் இருக்குமானால் அவர் செல்வந்தர்தான்.” -ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் இடம்பெற்ற மேற்கோள் இது. குடும்பம் என்ற சமூக அமைப்பு பற்றிய விவாதங்கள் வருகிறபோதெல்லாம் மார்க்சியவாதிகள் மீது இரண்டு வகையான கண்டனக் கணைகள் பாய்வதுண்டு. ஒன்று, இன்றைய சுரண்டல் சமு தாய அமைப்பு மாறிவிடக்கூடாது என்று நினைக்கிறவர்கள் தொடுக்கிற கணை. “கம்யூனிசம் வந்துவிட்டால் குடும்பம் என்பதே அழிந்துவிடும்,” என்று பூச்சாண்டி காட்டியே மக்களை மார்க்சிய இயக்கத்திலிருந்து விலக்கிவைக்கிற முனைப்பு தான் அந்தக் கணையின் முனை. இன்னொரு கணை அறிவுத்தளத்தில் செயல் பட்டுக்கொண்டிருப்போரில் ஒரு பிரிவினரால் தொடுக்கப்படுவது. “குடும்பம் என்பதே இற்றுப் போய்விட வேண்டும் என்பதே மார்க்சியக் கருத்தியல்; ஆனால் இன்றைய மார்க்சியக் கட்சிகள் குடும்ப உறவைப் பாதுகாக்க விரும்புவதால், அடிப்படை மார்க்சியத்திலிருந்தே விலகிப்போய் விட்டன,” என்று தள்ளுபடி செய்வதே இவர்கள் தொடுக்கும் கணையின் கைப்பிடி.
மார்க்சியத் தத்துவம் உண்மையிலேயே குடும்ப உறவை நிராகரிக்கிறதா? பொதுவுடைமைச் சமுதாயத்தில் குடும்பம் என்பதே இல்லாமல் போய்விடுமா?குடும்ப அமைப்பை அழிக்க புதிதாக ஒன்று பிறந்துவரத் தேவையில்லை. இன்றைய உலக-உள் நாட்டு முதலாளித்துவமும், அதன் பாதுகாப்பில் இருக்கும் பண்ணைச் சமூகமும் அந்த வேலையைத்தான் செய்துகொண்டிருக்கின்றன. உலக வாழ்க்கையின் எல்லாக் கூறுகளும் முதலாளித்துவ சமுதாய அமைப்பின் விதிகளால் தீர்மானிக்கப்படுகின்றன. நீங்கள் கோடை வெயிலில் எந்த குளிர்பானத்தைக் குடிக்க வேண்டும், தாகம் தீர்க்க எந்தத் தண்ணீரைப் பருக வேண் டும், மாலை நேரக் குறும்பசி நீங்க எந்த உருளைக் கிழங்கு வறுவலைக் கொறிக்க வேண்டும் என்றெல்லாம் சுதந்திரச் சந்தையின் பெயரால் முதலாளித்துவமே முடிவு செய்கிறது. அது வாழ்க்கை முறையிலும் மாற்றங்களைக் கொண்டுவருகிறது.
இந்த மாற்றங்களின் தாக்கங்கள் குடும்பங்களிலும் எதிரொலிக்க, எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், தலைமுறை இடைவெளி என முரண்பாடுகள் முற்றுகின்றன. சின்னக் கசப்புகள் பெரும் பிணக்குகளாக மாறுகின்றன. முதியோர் இல்லங்கள் முளைக்கின்றன. இதை விட குடும்ப அமைப்பை சீர்குலைக்க வேறொன்று தேவையில்லை.குடும்பமே வேண்டாம் என்று மார்க்சியம் சொல்கிறதா? உலகிற்குப் பொதுவுடைமைக் கோட்பாட்டு அறிவிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வெளியிட்ட மார்க்ஸ்-எங்கெல்ஸ் இரு வரும், முதலாளித்துவ குடும்ப முறையின் போலித்தனங்களைச் சாடினர். முதலாளித்துவச் சுரண்டலும் அடக்குமுறையும் உட்பொதிந்த குடும்ப முறை, பொதுவுடைமைச் சமுதாய வளர்ச்சியில் மறைந்துவிடும் என்றனர்.இன்றைய நடைமுறைகளை மேலோட்டமாகப் பார்த்தால் வீட்டில் எதையும் தீர்மானிப்பவள் பெண்ணே என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற் படுத்தப்பட்டிருக்கிறது. எங்கே வீடு கட்டலாம், எந்த உறவினரோடு பழகலாம், குழந்தைகளை எந்தப் பள்ளியில் சேர்க்கலாம், பையனுக்கு எந்தப் பெண்ணை மணமுடிக்கலாம் என்றெல்லாம் முடிவு செய்கிறவள் பெண்தானே என்றால், ஆமாம் அதுதான் உண்மை என்று பெண்களே கூட பேசு வார்கள். ஆனால் சமூகத்தளம் பற்றிய புரிதலோடு இதை ஆராய்ந்தால், குடும்பத்தில் தீர்மானிக்கிற பெண் கூட, தான் சார்ந்திருக்கிற ஆணின் நலன் கள் அடிப்படையிலேயே தேர்வு செய்கிறாள் என்பது தெளிவாகும்.
இந்தியச் சமுதாயத்தின் சாதியக் கட்டமைப்பு போன்ற நுட்பமான ஏற்பாடு இது. மேலோட்டமாகப் பார்த்தால் பார்ப்பணர் அல்லாத மற்ற ஆதிக்க சாதியினர்தான் மிகக்கொடுமையான சாதியப் பாகுபாடுகளைப் பின்பற்றுவது போலத் தெரியும். நுணுகிப் பார்த்தால்தான், இதைக் கட்டிக்காக்கிற மனுவாதமாகிய பிராமணீயம் கோலோச்சிக்கொண் டிருப்பது தெரியும்.அதே போல், பெண்ணின் ஆணைப்படியே எல்லாம் நடக்கிறது என்பதாகக் காட்டிக்கொண்டு, ஆனால் தானாகவே எல்லாம் தன் விருப்பப்படி இயங்க வைத்திருப்பது நுட்பமான ஆணாதிக்கம். சகல அலங்காரங்களுக்கும் ஆணின் சொத்துடைமையோடு சேர்ந்த ஒன்றாகவே பெண் இருக்கிறாள். இன்றளவும் திருமணமான பெண்ணின் பெயர் கண வனின் பெயரோடு சேர்த்து திருமதியாகவே அடையாளப்படுத்தப்படுகிறது என்பது ஒரு சான்று. குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கிறபோது, பெற்றோர் இருவரது பெயர் முதல் எழுத்துகளையும் குறிப்பிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட பிறகும் அது நடைமுறைக்கு வந்துவிடவில்லை என்பது இன்னொரு சான்று. இப்படி பல சான்றுகள்.பெற்றோருக்கிடையேயான இந்த அதிகார ஏற்றத்தாழ்வு, குழந்தைகளைக் கையாள்வதில் இன்னும் அப்பட்டமாகிறது. குழந்தைகளை என்னதான் கொஞ்சினாலும், குழந்தையின் குணத்தை தெய்வத்தோடு ஒப்பிட்டாலும், பெரியவர்கள் சொல்வதை எதிர்த்துக் கேட்காமல் ஏற்றுக்கொள்வதே நல்லொழுக்கம் என்ற அடிமைத்தனமே கற்பிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் என்னவாக விருப் பம் என்பதில் ஒவ்வொன்றிலும் பெற்றோர் எதிர்பார்ப்பே – அதிலும் தந்தையின் எதிர்பார்ப்பே – குழந்தையின் ஆசையாக ஊட்டப்படுகிறது. சுய மாய்ச் சிந்தித்து தனக்கென ஒரு வளர்ச்சிப் பாதை யைத் தேர்ந்தெடுக்கிற குழந்தைகளுக்கு தறு தலைப் பட்டம் தயாராகக் காத்திருக்கிறது.
சுய சிந்தனையாளர்களாகவோ, கலை – இலக் கியப் படைப்பாளிகளாகவோ, அறிவியல் ஆய்வாளர்களாகவோ – அரசியல் தலைவர்களாகவே கூட – உருவாகிறவர்கள் ஏன் மிகக் குறைவாக இருக் கிறார்கள் என்ற கேள்விக்கான பதில், குடும்பத்தின் இந்த சர்வாதிகார அமைப்புக்குள் இருக்கிறது.
இந்த மனப்போக்கில் முளைவிடுகிற, சொல்பேச்சுப்படி வளர்கிற தலைமுறைகள்தான் சுரண் டல் வர்க்கத்திற்குத் தேவை. கேள்வி கேட்காத ஒரு நவீன உழைக்கும் படைதான் இன்றைய உலக-உள்நாட்டுப் பெருமுதலாளிகள் கூட்டத்துக்குத் தேவை.“குழந்தைகளை அவர்களது பெற்றோர் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாங்கள் விரும்புகிறோம் என்று குற்றம் சாட்டுகிறீர்கள். அந்தக் குற்றத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்,” என்று மார்க்ஸ்-எங்கெல்ஸ் கூறினர். குடும்பத்தின் இன்றைய ஆதிக்க அமைப்புதான் பொதுவுடைமைச் சமுதாய அமைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து போகும். குடும்பம் என்ற சமுதாய அலகு உதிர்ந்துவிடாது – அது இன்றைய வடிவத்திலிருந்து பல வகைகளில் மாறுபட்டதாக, குடும்ப ஜனநாயகம் முழுமையாய் நிலை நாட்டப்பட்டதாக வளர்ச்சி பெற்றிருக்கும். பூக்களும் இலைகளும் காம்புகளும் தண்டுகளும் இல்லாமல் மரம் இல்லை; அதே போல் குடும்பம் என்று அடிப்படை அலகு இல்லாமல் சமுதாயம் என்ற அழகு இல்லை. கல்வி உள்பட குழந்தைகளைக் கவனிப்பதில் தனியொரு குடும்பமாக மட்டும் இல்லாமல், சமூகமே ஒரு குடும்பமாகத் துணை நிற்கும். குடும்பத்தை இயக்குகிற விசையாக அன்பும் காதலும் சமத்துவமும் மையம் கொண்டிருக்க, அதிகார அமைப்பு படிப்படியாகப் பட்டுப்போயிருக்கும்.
சமுதாயப் புரட்சி நடந்தபின் வரப்போகிற மாற்றத்திற்கும் இன்று உலகக் குடும்ப நாள் கொண்டாடுவதற்கும் என்ன தொடர்பு? வர்த்தக நிறுவனங்களைப் பொறுத்தவரையில், குடும்பங்களுக்கும் வீடுகளுக்கும் தேவையான தட்டுமுட்டுச்சாமான்களை விற்றுத் தள்ளுவதற்கான இன்னொரு ஏற்பாடு. சுயநியமன பண்பாட்டுக் காவலர்களுக்கு, தற்போதைய பெண்ணடிமைத்தனமும் குழந்தையடிமைத்தனமும் கொண்ட குடும்ப அமைப்பை அப்படியே பாதுகாப்பதை வலியுறுத்துகிற இன்னொரு கட்டுப்பாடு. புரட்சியை லட்சியமாகக் கொண்டோருக்கு குடும்ப ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் எடுத்துரைக்கிற இன்னொரு ஈடுபாடு.
குடும்பமாய் ஒன்றிணைப்பது ரத்தமும் சதையுமான உறவு அல்ல; அன்பும் அரவணைப்புமான மானுட உணர்வு.
நன்றி(http://www.maattru.com/)