கிளைகளுக்கு நீரூற்றிக்கொண்டே
வேர்களை வெட்டியெறியும்
ஒரு தோட்டக்காரன்!
மனச் சருகு மிதிபடும் சத்தம்
இரும்புச் சப்பாத்துக்களின்
செவிகளை எட்டவேயில்லை!கெல்லிக் கெல்லி – என்
கணுக்களைச் சிதைக்கிறாய் – மீள
உயிர்த்தலைத் தவிர்த்திடும்
நஞ்சினைப் புதைக்கிறாய்!
கொத்திக் குதறும் – உன்
மண்வெட்டிக் கைப்பிடிக்கு
எந்தன் முதுகெலும்பையே
இரவலாய்க் கேட்கிறாய்!
காதலின் கருணையின்
காணிக்கை என்று சொல்லி – என்
நாளையை, வாழ்தலை
கனவுகளைப் பறிக்கிறாய், நீ !
சுவர்களை, மதில்களை
உயரமாய் எழுப்பியோர்
இருள்வெளிக் குகையுளெந்தன்
இருப்பினை வரையறுத்தாய்!
ஆதிக்கம், அதிகாரம்
உன்வசமே கொண்டாய் – மனித
நீதிக்கும் விலங்கிட்டாய்
நாடியதை நீ செய்தாய்!
என் வலியில் என் தவிப்பில்
என் இழப்பில் எல்லாம்
வெற்றிவாகை சூடியதாய்
பெருமிதங்கள் கொண்டாய்!
அன்புக்கும் அருளுக்கும்
உன்பெயரே என்றாய் – எனை
அழிப்பதிலும் ஒழிப்பதிலும்
அயர்விலாது நின்றாய்.
அன்புக்கும் அகிம்சைக்கும்
உன்பெயரே என்றாய் – எனை
அழிப்பதிலும் ஒழிப்பதிலும்
அயர்விலாது நின்றாய்.
அடையாளம் எதுவுமற்ற
அகதியென்று சொன்னாய்
இனி சூரியனே ஒளிர்தலற்ற
வானமெனக் கென்றாய்!
மொழியற்ற உயிரி என – என்
மௌனத்தை மொழிபெயர்த்தாய்!
எனக்கென ஓர்
வரலாறே இல்லையென்று
வதந்திகளும் பரப்பினாய், நீ!
வார்த்தைகளால் வஞ்சனையால்
வீழ்த்துகின்ற போரில் – என்
வாழ்வுதனைக் காவுகொள்ளும்
வீண்கனவில் ஆழ்ந்தாய்!
(கெல்லிக் கெல்லி – என்
கணுக்களைச் சிதைக்கிறாய் – மீள
உயிர்த்தலைத் தவிர்த்திடும்
நஞ்சினைப் புதைக்கிறாய்!
கொத்திக் குதறும் – உன்
மண்வெட்டிக் கைப்பிடிக்கு
எந்தன் முதுகெலும்பையே
இரவலாய்க் கேட்கிறாய்!
காதலின் கருணையின்
காணிக்கை என்று சொல்லி – என்
நாளையை, வாழ்தலை
கனவுகளைப் பறிக்கிறாய், நீ !)
ஆனாலும்…
அறிக என் தோழனே!
வெட்டியும் கொத்தியும்
ஒட்டவே நறுக்கினாலும்
மிதித்தாலும் நசித்தாலும்
மரணத்தை விதித்தாலும்
புதையுண்டு போதலில்லை – ஆல்
விதையென்று ஊன்றி வீழ்வேன்!
சிதைவுறுதல் சிறிதுமின்றி
என் ஆன்மாவைக் காப்பேன், நான்!
நசுங்குண்ட சருகையெல்லாம்
உரமென்று ஏற்பேன் – நான்
நஞ்சுண்டும் மாளமாட்டேன்
நிமிர்ந்தெழுந்து உயிர்ப்பேன்!
கிளைபரப்பி இலையடர்த்து
சிலிர்த்து நான் நிமிர்வேன் – கீழே
வீழ்ந்தரற்றி நீ அழுதால் எழ
விழுதுனக்கும் தருவேன்!
அட! உள்ளார்ந்து கனன்று எழும் – என்
உயிர்த்தீயின் முன்னே – உன்
கயமைகள் நீர்த்தழியும் – நான்
காலத்தை வெல்வேன்!
கிளைபரப்பி இலையடர்த்து
சிலிர்த்து நான் நிமிர்வேன் – கீழே
வீழ்ந்தரற்றி நீ அழுதால் எழ
விழுதுனக்கும் தருவேன்!