– மா.நீனா.
புலம்பெயர் நாடுகளில் இலங்கை தமிழ் பெண்களை தூற்றுவதும், அவதூறு வெளியிடுவதும் புலிகள் சார்ந்த ஊடகங்கள் தான். குறிப்பாக இளம் பெண்கள் கைத்தொலைபேசிக்காகவும், உடுபுடவைக்காகவும் இராணுவத்துடன் விபச்சாரம் செய்வதாக எழுதுகிறார்கள். முன்னாள் பெண் போராளிகள் மற்றும் வன்னியை சேர்ந்த பெண்கள் இப்படி விபச்சாரத்தில் ஈடுபடுவதாக இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். |
முன்னணி இதழ் 04 (கார்த்திகை-தை 2012nஇல் வெளிவந்தஇந்த நேர்காணலை நாம் எமக்கு உடன்பாடில்லாதவைகள் உள்ள போதிலும் தேவையும் அவசியமும் கருதி இந் நேர்காணலை http://www.ndpfront.com/?p=27928முன்னணி இதழுக்கு நன்றி தெரிவித்து பிரசுரிக்கின்றோம். –ஊடறு ஆர்
முற்குறிப்பு:
ஜனனி செல்லத்துரையுடனான இந்தப் பேட்டி 2011 புரட்டாதி மாத ஆரம்பத்தில் எடுக்கப்பட்டது. மேலும் பாதுகாப்புக் காரணங்களினால் கடந்த இதழில் இப்பேட்டி வெளியிடப்படவில்லை. தற்போது அவர் பாதுகாப்பான சூழலில் உள்ளதனால் அவரின் சம்மதத்துடன் இப்பேட்டி இங்கு பிரசுரிக்கப்படுகிறது. அத்துடன் அவரின் பெயர் மற்றும் தனிப்பட்ட விபரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எல்லாத்தையும், எல்லோரையும் நடுத்தெருவில கொண்டு வந்து விட்டதற்கு, உங்கள் மாதிரி புலம் பெயர்ந்தவர்கள் தான் காரணம். இப்போ வந்து முதலைக்கண்ணீர் விடுகிறதில எந்த லாபமும் இல்லை. அதாவது எந்த லாபமும் மக்களுக்கு இல்லை. பாசிசம், பிற்போக்குத் தேசியம் என்றெல்லாம் சொல்லி எம் தேசம் அழிந்துள்ள இன்றைய நிலைமைக்கு காரணம் கூற முயற்சிக்கிறீர்களே, நீங்க பாசிசம் என சொல்லுற அமைப்பை விட பல பத்து மடங்கு அதிகமானவர்கள், அதை விமர்சிப்பவர்களாக இருந்தீங்க. அப்போ, ஏன் அதற்கு எதிராக மக்களை அணிதிரட்டாமல் நாட்டை விட்டு ஓடினீர்கள்? முன்னணிக்காக கேள்வி கேட்டு பேட்டிகாணவும், உரையாடவும் வந்த என்னிடமே கேள்விக் கணைகளை தொடுத்தார் ஜனனி செல்லத்துரை. ஜனனியை 2004 ஆம் ஆண்டில் நான் முதன்முதலாக சந்தித்தேன். சந்தித்த இடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். அன்று அவர் சமூகவியல் முதலாம் வருட மாணவி. நான் அப்போது வடபகுதி தமிழ் இளையோரும் தற்கொலையும் என்ற தலைப்பில் களஆய்வுப் பணியை, யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டேன். அந்த ஆய்வுப்பணியின் ஒரு பகுதியாக வர்க்கம், பால், மதம் போன்ற சமூகப் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தவல்ல இளையோரை, தற்கொலை பற்றி தயாரித்து வைத்திருந்த கேள்விகளின் அடிப்படையில் பேட்டி கண்டேன். அவ்வாறு பேட்டிகண்டவர்களில் ஒருவர்தான் இந்த ஜனனி.
உங்களை நான் கடைசியாக 2004இல் சந்தித்ததற்கும் இன்று உங்களை சந்திப்பதற்கும் இடையில் ஆறு ஆண்டுகள் கடந்துள்ளன. இந்தக் கால இடைவெளியில் அரசியல், சமூகம் மற்றும் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்து மட்டங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அவைபற்றி… என் கேள்வி முடிவதற்குள் அதற்கான பதில் கரைகடந்த அலையாக பிரவாகித்தது.
எங்கிருந்து ஆரம்பிக்கிறது? நீங்க சொல்லுறமாதிரி அரசியல், சமூகம், தனிப்பட்ட வாழ்க்கை என்று பிரித்துப் பார்த்து பதில் சொல்லுறது இலகுவாக இருந்தாலும், எனது வயதுடையோரின் வாழ்நிலையில், இந்த மூன்று நிலைகளையும் பிரித்துப் பார்த்து பதில் சொல்வது இலகுவானதல்ல. உங்களுக்குத் தெரியும் நாங்கள் யுத்தகாலத்தில் பிறந்து, யுத்தத்தின் அனைத்து கொடுமைகளுக்கிடையிலும், அரசியல் அநீதிகளுக்கு மத்தியிலும் வளர்ந்தவர்கள். யுத்தம் நிகழும் ஓர் சமூகத்தில் தனி மனிதத்தின் விருப்பு வெறுப்பின் அடிப்படையின் அதன் சீவியம் கட்டமைக்கப்படுவதில்லை. யுத்தமில்லாச் சமூகத்தில், மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலுள்ள தனி மனிதருக்கிருக்கும் தெரிவுகள், எமக்கு எம் வாழ்நாளில் இருந்ததில்லை. அரசியல் தலைமைகளின் முடிவுகளும், யுத்த தந்துரோபாயங்களும் அவைகளின் பார்ப்பட்ட விளைவுகளுமே எமது வாழ்க்கையை, அதன் திசையை முடிவுசெய்யும் சக்திகளாகவிருந்தது. இன்றும் இருக்கிறது. உங்களை சந்தித்த பின்னான காலத்தில் நான் சமூகவியலில் இளம் கலை படித்து முடித்து விட்டு 2007இல் முதுகலை கற்கையை தொடங்கினேன். ஆனால் அன்றிருந்த சூழலில் பல்கலைக்கழகம் ஒழுங்காக இயங்கவில்லை. எனது சக மாணவர்கள் பலர் கொழும்புக்கும், வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்தனர். சிலர் அந்த சூழ்நிலையிலும் தமது கல்வியை தொடர்ந்தனர். என்னைப்போன்ற சிலர் வன்னிக்கு சென்று புலிகளுடன் இணைந்துகொண்டோம். அன்றிலிருந்து வைகாசி 2009 வரையான காலத்தில், நான் களத்தில் நின்றேன். இப்போ திரும்பவும் யாழ் – பல்கலைக்கழகத்தில் சமூகவியல் முதுமாணி கற்கையை தொடர்கின்றேன்.
எதிர்காலத்திற்கான போராட்டம் ஏதோ ஒருவகையில் தொடரும் என்பது எனது நம்பிக்கை..!
இதில் நான் இருந்த இயக்கம் பற்றி, அது ஏன் தோற்றது, அதைவிட ஈழவிடுதலைப்போராட்டம் ஏன் தோற்றது, போன்ற அரசியல்ரீதியான கேள்விகளும், எமது போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்து வைகாசி மாத இறுதிநாட்கள் வரை நடந்த விடயங்கள் எவ்வாறு தமிழ் இனத்தை சமூக, கலாச்சார, பொருளா தாரரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன, என்பது போன்ற ஆயிரம் கேள்விகள்.., இக் கேள்விகளுக்கு பதில் காண வேண்டிய தேவை எனக்கும் எம் சமூகத்திற்கும் முன்னுள்ள மிக முக்கிய விடயம். ஆனால் ஒரு தனிமனிதனாக நானோ, எனது ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமோ இக் கேள்விகளுக்கான பதிலை தேடும் மனநிலையிலோ அல்லது சூழ்நிலையிலோ இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதேவேளை ஆரம்பத்தில் நான் கூறியது போல, எல்லாத்தையும் நடுத்தெருவில விட்டிட்டு தப்பியோடியவர்கள், இப்போ புலத்திலிருந்தபடி ஈழவிடுதலைப் போராட்டம் ஏன் தோற்றது? புலி எந்த வர்க்கத்தைச் சேர்ந்தது? பாசிசமா, அல்லது தேசியமா புலிகளின் அரசியல் குணாம்சம் என்ன? போன்ற கேள்விகளுக்கு விளக்குப் பிடித்து பதில் தேடுவதாக நடித்தபடி, அவர்கள் ஏற்கனவே பாடிய அதே மந்திரங்களையே பாடுகிறார்கள். இது ஒரு பக்கமிருக்க, புலிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் எந்தவித சுயசிந்தனையோ, தேடலோ இன்றி தவறுகளை மூடிமறைத்தபடி, தமது இருப்பை காப்பாற்ற எமது தோல்விக்கான காரணங்களென ஏதேதோ கூறுகிறார்கள். சர்வதேச அரசியல் காரணிகளும், காட்டிக் கொடுப்புகளும் தான் தோல்விக்கு காரணம் என கதை விடுகிறார்கள்.
என்னைப் பொறுத்தளவில் இவ்விரு கும்பலும் சுயநலம் பிடித்த, தப்பியோடிய யாழ் மேலாதிக்க சமூகத்தின் பிரதிநிதிகளே. இவர்களின் அரசியல் முனைப்புகளும், அரசியல் ஆய்வுகளும் எமக்கு இழந்த எதையும் மீட்டுத் தரப்போவதில்லை…, தொடர்ந்தும் நாம் தான் போராடவேண்டும்..!
பதிலில் ஆத்திரமும் கோபமும் மிகுந்திருந்தது. 2004இல் சந்தித்தபோது எனது மிக நீண்ட கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளில் வேண்டாவெறுப்பாக தாழ்ந்த குரலில் பதில் சொன்ன ஜனனிக்கும், இன்று கேள்வி கேட்டு முடிக்கு முன்பே பல கோணங்களில் வரையறுத்து, துல்லியமான குரலில் அதற்கான நீண்ட பதிலை வழங்கும் ஜனனிக்கும் உள்ள வித்தியாசம் ஒருவகை ஆச்சரியத்தையும், சிறு நம்பிக்கையையும் என்னுள் ஏற்படுத்தியது. அதேவேளை அவரின் பதில்களில் செறிந்திருந்த ஆத்திரத்தினதும் கோபத்தினதும் பின்னணியில், கையறு நிலையில் உருவாகும் சோகம் மிகவாக இழையோடியது. இரு சந்தர்ப்பங்களில் உணர்ச்சிவசப்பட்ட அவரின் குரல் உயர்ந்தபோது, அவருடன் கூட வந்த சக மாணவி அவரை ஆசுவாசப்படுத்தி சகச நிலைக்கு கொண்டுவந்தார்.
உங்கள் பதிலில் உள்ள உள்ளடக்கத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் அரசியல் அடிப்படையில் முற்றுமுழுதாக என்னால் உங்களுடன் உடன்பட முடியவில்லை என என் கருத்தை பதிவு செய்தபடி வட பிரதேசத்தின் இன்றைய நிலை பற்றி அவரிடம் கருத்துக்கேட்டேன். இன்றைய வடபகுதி நிலை பற்றி கேட்டீர்கள். இந்த கேள்விக்கும் சும்மா மேலோட்டமாக பதில் சொல்ல முடியாது.
புலிகளின் அழிவின் பின்பு இங்கு அரசியலில் இரு துருவங்கள் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு சொல்லியபடி, தமிழ் மக்களின் ஏகபோக தலைவர்கள் தாங்கள் தான் எனவும், அரசு உட்பட மாற்றுக் கட்சிகள், அரசியல் முயற்சிகள் அனைத்தும் தமிழ் மக்களுக்கு எதிரானவை என ரீல் விட்டபடி அரசியல் செய்கிறார்கள். இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பான்மையான தமிழ் ஊடகங்களும் இதே கருத்தையே பிரச்சாரம் செய்கின்றன. ஆனால் எல்லோருக்கும் தெரியும், கூட்டமைப்பு அரசியல்வாதிகள் பலருக்கு இலங்கை அரசுடனும், அதில் உள்ள மந்திரிகளுடனும் பின் கதவால் நல்ல உறவுண்டு எண்டது. உதாரணமாக பிரேமச்சந்திரன் போன்றவர்களுக்கும் மஹிந்த குடும்பத்துக்கும் மிக நெருக்கமான உறவு உள்ளது என்பது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயந்தானே. இப்போ யாழ்ப்பாணத்தில் கட்டிட ஒப்பந்தம் பெறுதல், ஹோட்டல் மற்றும் மது விற்பனைக்கான அனுமதி பெறுதல் போன்ற அரசு சார்ந்த விடயங்களுக்கு, மஹிந்த குடும்பத்துடனான உறவு வெகுவாக பாவிக்கப்படுகிறது. இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள பல நிறுவனங்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் – இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்களினது தான். அவர்களின் பினாமிகளாலும், உறவினர்களாலும் அந்த நிறுவனங்கள் நிருவகிக்கப்படுகிறது. அதேவேளை அரசினதும் மக்களினதும் பிரதிநிதி தான் தான் என்பதுபோல இங்க ஒருவர் வில்லன் அரசியல் வேற செய்யிறார். நான் யாரைப் பற்றிச் சொல்லுறன் எண்டது உங்களுக்கு விளங்கும். ஆம் டக்லஸ் பற்றித்தான் சொல்லுறன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தனியார் நிறுவனங்களையும், வடபகுதியின் பொருளாதாரத்தையும் தாங்கள் தான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல, டக்ளசும் அவரது கும்பலும், அரச நிறுவனங்களை தமது கட்டுப்பாட்டில் வைச்சிருக்கினம். இங்குள்ள அரச நிறுவனங்களில் ஒரு சிற்றூழியர் வேலை பெறுவதெண்டாலும் டக்ளஸ் கும்பலின் தயவு தேவை. உதாரணமா இங்கு பல்கலைக்கழகத்தில் பணம் பதவி சார்ந்த அனைத்து விடயங்களும் epdp யின் அடிவருடிகளாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் அரசினால் நியமிக்கப்பட்ட துணை வேந்தரின் அதிகாரங்கள், நடைமுறையில் இங்குள்ள epdp ஆதரவாளர்களான சில முன்னாள் துணைவேந்தர்களினாலேயே பிரயோகிக்கப்படுகிறது. அதைவிட இந்தமுறை யாரைத் துணை வேந்தராக நியமிப்பதெண்ட முடிவை எடுத்து, அதை நடைமுறைப்படுத்தியது நுPனுP தானே? கல்வி கற்றவர்கள் நிறைந்துள்ள ஓர் நிறுவனமான யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலேயே இப்படி எண்டால்.., இங்குள்ள மற்ற அரச நிறுவனங்களின் நிலைமை எப்படி இருக்குமென எண்ணிப்பாருங்கோவன்.!
என்ன இருந்தாலும், இப்போதுள்ள துணைவேந்தர் பெண்ணென்பது பெருமைப்பட வேண்டிய விடயந்தானே? அதேபோன்று இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்கள் அரசுசார் நிறுவனங்களிலும், அரசியல் பொறுப்புகளிலும் உள்ளனர்.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர், மற்றும் அரசியலில் யாழப்பாண மேயர், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.மகேஸ்வரன் போன்றவர்களை குறிப்பிடலாம். இவ்வாறு பெண்கள் பதவிக்கு வருவது பெண்ணிய முன்னேற்றமில்லையா? நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீயள்?
என்னடா இவ்வளவு நேரமும் பெண்கள் பற்றி இவர் கேள்வி கேட்கவில்லேயே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மறக்காமல் கேட்டதற்கு நன்றி. முதலில் இன்று தமிழ் பிரதேசத்தில் பெண்களின் நிலை பற்றி கொஞ்சம் சொல்லிவிட்டு, பிறகு நீங்கள் கேட்ட பெண்ணிய கேள்விகளுக்கு பதில் சொல்லுறன். பெண்களின் கல்வி நிலையை எடுத்துக்கொண்டால் அது நான் பிறப்பதற்கு முன்பு, எண்பதுகளில் இருந்த நிலைமையை விட படுமோசமாகவுள்ளது. இப்போ ஆரம்பக் கல்வியிலும் உயர் கல்விக்கு முன்பான A/L வரையான கல்வியிலும், பெண்கள் தொகை ஆண்களை விட அதிகம். அதேவேளை நூற்றுக்கு முப்பது வீதமான மாணவிகள் கல்வியை இடை யிலேயே நிறுத்திக்கொள்கிறர்கள். அதையும் மீறி கல்வியை தொடர்பவர்களில் பத்துவீதத்தினரே உயர் கல்விக்குள் நுழைகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் திருமணம், வெளிநாடு போதல் போன்ற காரணிகளால் கல்வியை இடையில் நிறுத்துகிறார்கள். இதில் பலர் கல்வியை நிறைவு செய்தாலும், எந்தவித தொழிலிலும் ஈடுபடுவதில்லை. மிகச் சிறுவீதத்தினரே கல்வித் தகமையின் அடிப்படையில் ஏதாவது வேலையில் இணைகின்றனர். இந்நிலைக்கு யுத்தம், மற்றும் “சிங்கள அரசுகளால் எமது கல்விசார் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்படவில்லை” என்பது போன்ற காரணிகள் மட்டும் காரணம் என்று மேலோட்டமாக சொல்லிவிட முடியாது. பொருளாதார வறுமை, எமது சமூகத்தால் கவனத்தில் எடுக்கப்படாத பெண்களின் உடல் உளவியல் பாதிப்புகளும் வேதனைகளும், வெளிநாட்டு பொருளாதராத்தில் தங்கியிருக்கும் நிலை, இறுக்கமடைந்துள்ள ஆணாதிக்க சிந்தனை, வெளிநாடு போகும் கனவு போன்ற எமது சமூகத்தின் உள்ளார்ந்த காரணிகளும், பெண்கள் கல்வியில் சோபிக்க முடியாதற்கான அடிப்படைகளாகும்.
சிங்களப் பிரதேசங்களை பார்த்தீர்களானால், அங்குள்ள சில பெருநகரங்களுக்கு வெளியில் கல்விசார் உட்கட்டமைப்பு பெரிய அளவில் அபிவிருத்தி செய்யப்படவில்லை. அப்பகுதிகளும் இருபது வருடங்களுக்கு மேலான யுத்த பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதிகளில் பெண்களின் உயர்கல்விப் பங்கெடுப்பும், தொழில் ஈடுபாடும் அதிகரித்துள்ளது. பெண்களுக்கான கல்வி, அவர்களை வறுமையிலிருந்து வெளியேற உதவும் ஏணியாக கருதும் நிலை சிங்கள சமூகத்தில் பரந்துபட்ட அளவில் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு உணரும் நிலை, எமது சமூதாயத்திலும் வரவேண்டும். அந்நிலை வரும்போது, பெண்களின் வாழ்வாதாரம் வலுவடைய வாய்ப்புள்ளது. கல்விதான் பெண் விடுதலைக்கான அடித்தளம் என்பது எனது ஆணித்தரமான நம்பிக்கை. இதை விடுத்தது இரண்டு அல்லது மூன்று பெண்கள் உயர் பதவிக்கு வந்தார்கள் என்பதை பெண் விடுதலையின் அறிகுறியாக காட்ட நினைப்பது அடி முட்டாள்தனம். இவர்களின் பதவிகளை அனைத்து பெண்களின் விடுதலைக்கான முனைப்பாக காட்ட முயல்வதும், நினைப்பதும் கூட ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான்…, அப்படியானால் இலங்கைதான் உலகத்தில் முதல் பெண் பிரதமரை உருவாக்கியது. அதேபோன்று இந்தியா இந்திராகாந்தியை உருவாக்கியது. அதன் அடிப்படையில் குறைந்தது இந்திய, இலங்கைப் பெண்களினது அரசியல் பிரதிநிதித்துவமாவது இந்நாடுகளில் உயர்ந்திருக்க வேண்டுமே? மேற்தட்டு வர்க்கப் பெண்கள் பதவிக்கு வருவது, சமூதாய கட்டுமானங்களையும், கருத்தியலையும் உடைத்து அல்ல. பெண்களுக்கு எதிரான சமூகக் கட்டுமானங்கள் உடையாதவரை, இந்தமாதிரி பெண்கள் பதவிக்கு வருவது வெறும் குறியீட்டு அரசியலே ஒழிய வேறோண்டுமில்லை.
இதைவிட மிக முக்கியமானதொரு விடயம், நான் இங்கு சொல்லவேணும். மேற்படி யாழ்ப்பாணப் பெண்கள் பதவிக்கு வந்தபின்பு யாழ்ப்பாணத்தின் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது, பாலியல் தொழில் நடக்கிறது, கருக்கலைப்பு நடக்கிறது என அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதில் குறிப்பாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் தரவுகளுடனும், வரைவுகளுடனும் அறிக்கை விடுகிறார். இவர் விடுகின்ற அறிக்கைகளை பார்த்தீர்களானால் இங்கு நடக்கும் அனைத்து சமூக அவலங்களுக்கும், சீரழிவுகளுக்கும் பெண்களே காரணம் என நேரடியாகவும் மறைமுகமாகவும் குறிப்பிட்டிருப்பார். உண்மையில் என்ன நடக்கிறது. முன்பு கிராமங்களுக்கு அழைத்துக் கொண்டுபோய் கைவைத்தியம் செய்து கருக்கலைப்புகள் செய்தார்கள். பணவசதி உள்ளவர்கள் சில ரகசிய வைத்தியர்களிடம் அதனைச் செய்து கொண்டார்கள். யுத்தத்தின் பின்பு, இந்த ரகசியக் கட்டமைப்புகளும் கைவைத்திய முறைகளும் அழிந்துவிட்டது. இப்போ அரசாங்க வைத்தியசாலையில் அல்லது தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யும் நிலைமை உள்ளது. இதனால் இன்று கருக்கலைப்பு செய்வோர் தொகை பதிவு செய்யப்படுகிறது. இந்த தகவல்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு, இப்போது தான் தமிழ்க் கலாச்சாரம் பாதிக்கப்பட்டது போல பிரச்சாரம் செய்வது என்ன நியாயம்? இவர்களுக்கு உண்மையிலேயே பெண்கள் முன்னேற்றத்தில் கவனமிருந்தால், பெண்களின் சுயவிருப்பிலான பாலியல் உறவுகொள்ளும் உரிமைக்காக குரல்கொடுக்க வேண்டும். அத்தோடு இவர்களுக்குள்ள பதவிகளை பாவித்து பாலியல் விழிப்புணர்வை சமூகத்தில் உருவாக்க இவர்கள் வழிசெய்ய வேண்டும். இதை விடுத்து தம்மை கலாச்சாரக் கண்ணகிகளாக இவர்கள் காட்டமுனைவது வெறும் அரசியல் விபச்சாரமே..!
நீங்கள் சொல்வதில் பெரும்பான்மையான விடயத்தில் என்னால் உடன்பட முடியும்.ஆனாலும் நீங்கள் இப்போதும் புலி அரசியற் கருத்தியலில் நின்று கதைக்கின்றீர்களோ என்பது போன்ற ஐயம் எனக்குள் எழுகிறது..?
புலம்பெயர் நாடுகளில் இலங்கை தமிழ் பெண்களை தூற்றுவதும், அவதூறு வெளியிடுவதும் புலிகள் சார்ந்த ஊடகங்கள் தான். குறிப்பாக இளம் பெண்கள் கைத்தொலைபேசிக்காகவும், உடுபுடவைக்காகவும் இராணுவத்துடன் விபச்சாரம் செய்வதாக எழுதுகிறார்கள். முன்னாள் பெண் போராளிகள் மற்றும் வன்னியை சேர்ந்த பெண்கள் இப்படி விபச்சாரத்தில் ஈடுபடுவதாக இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். இதற்கான பதிலும், நான் கருக்கலைப்பு சம்பந்தமாக சொன்னது போலத்தான். இன்றுள்ள சமூகச் சூழலில் விபச்சாரம் போன்ற சீரழிவுகளை தவிர்க்கமுடியாது. ஆனால் அதை இப்போதுதான் புதிதாக எம் சமூகத்தில் நடப்பதாகவும், அது அதிகரித்துள்ளதாகவும் சொல்ல முனைவது வெறும் அரசியல் பித்தலாட்டம். அதை புலிகள் செய்தாலென்ன, உங்களுடன் சேர்ந்த பெண்ணியவாதிகள் செய்தாலென்ன. அடிப்படையில் இவ்வாறு கதை பரப்புவது தவறு. பத்துக்கும், பதினையாயிரத்துக்கும் இடையில் சம்பளம் வாங்கும் ஒரு இராணுவத்தினர், மூவாயிரம் – நாலாயிரம் செலவழித்து மொபைல் டெலிபோன் கொடுத்து, தமிழ்ப் பெண்களை வல்லுறவு செய்கிறார்கள் என்பது வெறும் அபத்தம். ஒன்று இரண்டு சந்தர்ப்பங்களில் அவ்வாறு நடந்திருக்கலாம். ஆனால் அச் சம்பவங்களை ஒட்டுமொத்த வடபகுதி இளம் பெண்களை விபச்சாரிகள் என்று சொல்வதற்கு ஆதரமாக பயன்படுத்த முடியாது. இப்படியான பிரச்சாரங்கள் அரசுக்கும் இராணுவத்திற்கும் எதிராக நடத்துவதாக எம்மவர் பலர் நினைத்தாலும், நீண்ட காலப்போக்கில் பாதிக்கப்படப்போவது நமது சமுதாயம் தான் என்பதை நாம் மறுக்க முடியாது.
இவ்வளவு விபரமாக் கதைக்கும் நீங்கள், நான் கேட்ட ஒரு கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லை. அதாவது உங்களின் உரையாடலில் மறைந்திருக்கும் புலியரசியல்..?
உங்கள் கேள்வியில் ஒரு நியாயம் இருக்கு என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல நானும், என்னைப்போன்று ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும், நாம் பட்ட காயத்தை ஆற்றும் முயற்சியிலேயே இன்றும் உள்ளோம். நாம் கடந்த காலத்தை ஆய்வு செய்யும் நிலைக்கு இன்னும் வரவில்லை. வெளிநாட்டில் உள்ள உங்களைப் போன்றவர்கள் (நீங்கள்) வேண்டுமானால் சாப்பிட்ட சாப்பாடு சமிபாடடைய புளிச்சல் ஏவறையான முடிவுகளுக்கு வரலாம். அது உங்கள் தெரிவு. அதை எம்மிடமிருந்து எதிர்பார்ப்பது வெறும் அறிவு மேலாதிக்க வன்முறை. இன்றுள்ள ஸ்தம்பிதநிலை மிக விரைவில் மாறும்.., அப்போ எதிர்காலத்திற்கான போராட்டம் ஏதோ.., ஒருவகையில் அது தொடரும் என்பது எனது நம்பிக்கை. நம்பிக்கை என்ற வார்த்தையை ஜனனி சொல்லி முடித்த பின்பு, நான் கேட்கத் திட்டமிட்டிருந்த கேள்விகள் எதனையும் கேட்க முடியவில்லை. நேரடியாக என் சார்ந்த அரசியல் பற்றி அவர் விமர்சித்தாலும், அதற்கு எதிராக பதில் சொல்ல எனக்கு நாவும் எழவில்லை, அதற்கு மனமும் விடவில்லை.
நல்லதொரு பதிவு. துணிகரமாய், ஆணித்தரமாய் தன்பக்கக் கருத்து முன்வைப்புக்காய் ஜனனியைப் பாராட்டலாம். அவ்வாறே, தமக்கு உடன்பாடு இல்லாத கருத்துக்கள் இருக்கும் நிலையிலும், கருத்துச் சுதந்திரத்தை மதித்துச் செயற்படும் “ஊடறு”வின் நடுநிலையும், ஊடக தர்மத்தைப் பேணும் திடமும் வியந்து போற்றத்தக்கது. 🙂
மிகவும் நல்ல முயற்சி. எமது சமூகத்தினை மிகப் பாரிய சரிவிலிருந்து மீட்டெடுக்க முதல் தேவை இந்தகைய கலந்துரையாடல்களும் கருத்துப் பரிமாற்றங்களும் மிக அவசியம். இந்த பேட்டியினை கண்ட மா. நீனாவிற்கு எனது நன்றிகள்.