யோகா-ராஜன்
“அப்பாவின் மறுமணத்தை அங்கீகரிக்கும் சமூகம், அம்மாவின் பாலியல் ஆர்வத்தைப் பற்றி உணர்வதில்லை“ –நிவேதா தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தரை இது ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல்! மேற்குலகக் கலாச்சாரத்தின் பிம்பமாகவும் தோன்றலாம். |
“அப்பாவின் மறுமணத்தை அங்கீகரிக்கும் சமூகம், அம்மாவின் பாலியல் ஆர்வத்தைப் பற்றி உணர்வதில்லை“ –நிவேதா
ஐரோப்பிய நாடொன்றில் மானிடவியல் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டுவரும் இவர் அண்மையில் 18.12.20011 அன்று சுவிஸ் சூரிச் நகரில் இடம்பெற்ற “பெயரிடாத நட்சத்திரங்கள்’’ ஈழத்துப் பெண் போராளிகளின் கவிதைநூல் வெளியீட்டில் அழுத்தமாகத் தெரிவித்த வார்த்தைகள் இவை.
தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தரை இது ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல்! மேற்குலகக் கலாச்சாரத்தின் பிம்பமாகவும் தோன்றலாம். ஆனால் பொருளாதார வளர்ச்சியில் மட்டுமன்றி, பண்பாட்டு முறைமையிலும் சுமார் 50 ஆண்டுகள் பின்னிற்கும் எமது சமூகத்தின் வளர்ச்சிப்போக்கை முன்னெடுத்துச் செல்ல முனையும் வார்த்தைப் பிரயோகத்தில் இது ஒரு சிறு துளி!
நாம் ஏற்கனவே கூறியதுபோன்று, பழமையின் மீது சம்மட்டி அடிபோடுகின்ற பெரியாரியப் பாணிதான் எமது சமூகத்தின் இன்றைய தேவை! அதன் கோட்பாட்டு வடிவத்தை சமூக அரசியல் என்று கொள்வோம். அதை மிகவும் துணிச்சலுடன் பெண் அணியில் இருந்து ஆரம்பித்து வைத்திருக்கிறாள் இந்த இளந்தலைமுறைக் கவிஞரும் கட்டுரையாளரும் பெண்ணிலைவாதியுமான நிவேதா! இவருக்கு வயது 22 மட்டுமே.
எங்கள் நெருங்கிய நண்பர், தோழர் குஞ்சி. எமது கட்டுரைகளை வாசித்து கனமாக கருத்துரைப்பவர்களில் இவரும் ஓருவர். நீண்டகாலமாக தமிழ்த் தேசித்தின் ஆதரவாளராக இருந்து வருபவர். அண்மையில் அவர் எமக்குரைத்த வார்த்தை “நாட்டில பெரியளவில கலாச்சாரச் சீரழிவு நடக்குதாம். ஏதோ இயக்கம் அழிஞ்சதாலதான் இதெல்லாம் நடக்குதெண்டு சனம் கதைக்குது. இதைப்பற்றி அவசியமா ஒரு கட்டுரை போடுங்கோவன்.“ என்பதுதான். இக்கட்டுரையின் தோற்றத்திற்கு தூண்டுதலாக அமைவது அவரது இக் கூற்றுத்தான் என்பது பொய்யல்ல.
அடிப்படையில் பெண்களின் பாலுறவு நடவடிக்கைகள்தான் பொதுவாக ஈழத்துச் சமூகத்தில் ~~சமூக சீரழிவாக’’ முன்னிலைப்படுத்தப்படுகின்றன. ஊடகங்களிலும் பெரிதுபடுத்தப்படுகின்றன. அவ்வகையில் இளவயதில் காதல் செய்தல், திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்ளுதல், திருமணத்துக்கு முன் கருத்தரித்தல், கருஅழித்தல், கருவை அழிக்க முடியாத நிலையில் தற்கொலைக்கு முற்படுதல் அல்லது பெற்றெடுக்கும் சிசுவை கைவிடுதல், கொலைசெய்தல் போன்ற இன்னோரன்ன வெளிப்பாடுகளே இன்றைய சமூகச் சீரழிவின் உச்சங்களாக முன்னிறுத்தப்படுகின்றன! இதில் பெண்ணுக்குச் சமனாக ஆணுக்கு இருக்கும் பங்கு இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுகிறது, அல்லது கண்டுகொள்ளப்படாமலே விடப்படுகிறது.
நண்பர் ஒருவர் கூறினார்…“கசிப்பு, கள்ளச் சாராயம் காச்சுதல், போதைவஸ்துப் பாவனை, ஒழுக்கமற்ற பாலுறவு என்று எல்லாச் சீரழிவுக்கும் ஆமிக்காரங்கள் துணை போறாங்கள், தூண்டியும் விடுகிறாங்கள்’’ என்று, ஜிரிவி மொழியில் பேசிய இவர், பின் தொடர்ந்து தன்மொழியில் பேசுகின்றபோது… “இவை போக, பேரளவிலான சமூகச் சீரழிவாக இருப்பது நாட்டில ஆண் பெண் உட்பட ஒரு பகுதியினர் எவ்வித உழைப்பிலும் ஈடுபடாமல் இருப்பதுதான்… வெளிநாட்டில் இருந்து வருகின்ற பணத்தில் சீவிக்கின்ற இவர்கள் மோட்டார்ச் சைக்கிள் முதல் ஐபோண், இன்ரநெற், பேஸ் புக் என்று அனைத்துச் சௌகரியங்களுடனும் வாழ்கின்றனர். இவர்கள் வெளிநாடுகளில் இருந்து அண்ணன்மார், அக்காமார் அனுப்புகின்ற பணத்துடன் ஒப்பிடுகின்றபோது ஒருநாள் வேலைக்குச் செல்வதையோ, நாலு பயிர்களை வைத்துத் தண்ணீரூற்றுவதையோ பேர் நஷ்டமாகக் கருதுகிறார்கள். உடம்பை தேவையில்லாமல் ஏன் கஷ்டப்படுத்துவான் என எண்ணுகிறார்கள்’’ என்று.
இன்றைய உலகமயமாக்கல் முறைமையில் உள்ளங்கை அளவுக்கு சுருங்கிக் கிடக்கிறது உலகம். கணணிமயமும் அதனால் உருவான தொழில்நுட்ப முறைகளும் இதனை துரிதப்படுத்தியது. மேலும் இலகுபடுத்தியதுடன் மலினப்படுத்தியுமுள்ளன. உலகமயமாக்கலின் பிரதான அம்சம் பொருளியலில் ஏற்படும் மாற்றங்கள். திறந்த சந்தைப் பொருளாதாரம் என்பது அதன் அச்சாணி! மனிதர்களிடையே நுகர்வுக்கலாச்சாரத்தைத் தக்கவைப்பது அதன் உச்சம்! மனிதர்ளை, சக மனிதன் பற்றிய பிரகஞையற்ற விதத்தில், சுயமாக வாழ்வதற்குரிய சூழலை அல்லது சந்தர்ப்பங்களை உருவாக்கி, (உதாரணமாக மேலை நாடுகளில் வயோதிபர்கள் தவிர வேலையற்ற இளையவர்க்கும் சமூக நலக் கொடுப்பனவுகளை வழங்கி) தனிமனித உற்பத்திகளை மேம்படுத்தி, தனித்தனிக் காலில் நிற்கவைப்பது! இதன் பக்க விளைவாக பிறப்பெடுக்கும் மனிதர்களுக்கிடையிலான கூட்டு முயற்சிகளுக்கான சந்தர்ப்பங்களை தகர்த்துவிடுவது! இவை எல்லாமே குறிப்பிட்ட சில சக்திகள் மட்டும் உலகை ஆளுமை செய்வதற்கான நவீன முறைமைகள்! உலகமயமாக்கலின் ~உன்னதங்கள்’! இந் நிலைமைகளில் உலகமயமாக்கலின் சாதக பாதக அம்சங்களுக்கு அப்பால் அதன் பிடிக்குள் சிக்குப்பட்டதுதான் இன்றைய உலகு என்பதை மறுத்துவிட முடியாது! நாம் மட்டும் அதற்கு விதிவிலக்கானவர்கள் ஆக இருந்துவிட முடியாது.
உலகமயமாக்கல் திறந்துவிடுவது சந்தைப் பொருளாதாரத்தை மட்டுமல்ல. கூடவே மனித மனங்களையும் பரந்த அளவில் கட்டுப்பாடின்றித் திறந்துவிடுகிறது. இதில் விந்தை என்னவெனில், இவ்விதம் மனித மனங்களைக் கட்டுபாடின்றித் திறந்துவிட்டு, தாம் கொட்டி வைத்திருக்கும் விற்பனைப் பொருட்களின் மீது மனிதனின் கவனத்தை ஒன்று குவித்துவிடுகிறது! அது மனிதசிந்தையில் நுகர்வுக் கலாச்சாரத்தை இலகுவில் நுழைத்துவிடுகிறது! இது மனித இரத்தத்தில் கெட்ட கிருமிகள் நுழைவதுபோல் எமது விருப்பு வெறுப்புக்களையும் மீறி நிகழ்கிறது.
கீழைத் தேசங்களில் பேரளவிலான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தாத நிலையிலும், பொருளாதார மாற்றங்களை உண்டுபண்ணியிருக்கிறது உலகமயமாக்கல் முறைமை. இப் பொருளாதார மாற்றங்கள் சமூகங்களிடையே பண்பாட்டுரீதியான மாற்றங்களை துரிதப்படுத்த முனைகிறது. இத்தகைய பண்பாட்டு முறைமையிலான மாற்றங்களுக்கு அறிவியல் வழியில் முகங்கொடுக்க முடியாத சமூகம், இதனை ~~சமூகச் சீரழிவாக’’ நோக்குவதன் மூலம் அழுது புலம்ப முனைகிறது. இத்தகைய மாற்றங்களை அறிவுரீதியில் ஆய்வதும், எதிர்கொள்வது பற்றியும் கூறுவதே இக் கட்டுரையின் உள்ளடக்கம்.
சமூக வளர்ச்சியின் நெம்பு கோலாக அமைவது உழைப்பு! இத்தகைய முக்கியத்துவம்வாய்ந்த உழைப்பில் ஈடுபடாத, உழைப்பை உதாசீனம் செய்கின்ற (மேலே நண்பர் கூறிய) சமூகக் குழுக்கள் பற்றி, தமிழ் ஊடகங்களும் சரி, சமூகமும் சரி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆமிக்காரனின் திட்டமிட்ட செயல் என்று பரப்புரை செய்து போதைவஸ்த்து பற்றி இடையிடையே பேசிக்கொள்வதையும் மறுப்பதற்கில்லை. (எப்போது ஒரு சமூகம் தனது தவறுகளுக்கான காரணங்களை மற்றவன் மீது சுமத்த முனைகிறதோ, அப்போதே அச் சமூகம் தனது சமூகத்தின் தவறுகளுக்கான உண்மைக் காரணங்களை அறிந்துகொள்ளும் திறனை இளந்துவிடுகிறது என்பது இங்கு ஆழ் சிந்தனைக்குரிய விடயம்).
ஆனால் இவைகளுக்கப்பால் இளம் தலைமுறை உறவுகளுகளின் (குறிப்பாக கன்னியரின்) பாலுறவு பற்றியும் அதன் பக்கவிளைவாகத் தோன்றும் சிசுக்கொலைகள் பற்றியுமே பத்திரிகைகள் தொடங்கி படித்தவர்கள், அரச அதிபர் இமெல்டா சுகுமார் அடங்கலாக பதவியில் உள்ளவர்கள் எல்லோரும் பரபரப்பாகப் பேசிக்கொள்கின்றனர்.
ஆகையினால் நாம் இங்கு ஆழமாக நோக்குவது, “சமூகச் சீரழிவு’’ என்பதன் மையப்பொருளாக விளங்குகின்ற பாலியல் அல்லது பாலுறவு பற்றியே! அதேவேளை சமூகத்தில் -கலாச்சாரத்தில்-ஏற்படும் இவ்வித சிக்கலான பிரச்சனைகளை அதன் யதார்த்தத்தின் வழிநின்று தொட விரும்புகின்றோம். அதன் பொருட்டு மேற்குலகின் விழுமியங்களை அதன் முன்னேறிய பக்கங்களைச் சற்றுப் புரட்டிப்பார்க்கவும் எண்ணுகின்றோம். குறிப்பாக நாம் வாழுகின்ற சுவிற்சலாந்தில் 1970ல் தொடங்குகின்ற இவ் வளர்ச்சிபோக்கை இங்கு எமது அணுகுமுறையில் கண்டுகொள்ளலாம்.
பாலியல் பற்றிய எமது புரிதலும் மேற்குலக கலாச்சாரமும்:
மனிதன் அடிப்படையில் ஒரு ஜீவராசி. மானுடவியல் நோக்கில் உயிர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று பாலியல் அல்லது பாலுறவு. பிரபஞ்சம் தோன்றி, உலகம் தோன்றி உலகத்தில் உயிர்கள் தோன்றி, கலாச்சாரங்கள் தோன்றின. மனிதன் கலாச்சாரத்திற்கு முந்தியவன். இன்றைய தந்தை வழிச் சமூகத்துக்கு முந்தைய தாய்வழிச் சமூகத்தில் தாய் மகனுடன் புணர்ந்ததையும், தந்தை மகளுடன் புணர்ந்ததையும் பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. பின் தந்தைவழிச் சமூகத்தின் வருகையுடன் தோன்றிய சொத்துடைமைச் சமூகத்தில் அரசுகளும், மதங்களும், அன்றைய மனிதனின் தேவைகளுக்கு ஏற்ப சில பல கட்டுப்பாடுகளை உருவாக்கிக்கொண்டன. வௌ;வேறு கட்டுப்பாடுகளுக்குட்பட்ட மனிதக் குழுக்கள், வௌ;வேறு சமூகக் குழுக்களாகத் கட்டமைக்கப்பட்டன. இக் கட்டுப்பாடுகள், மனித குழுக்கள் ஒன்று இன்னொன்றுடன், சேர்வதைத் தடுப்பதற்கும், அவரவர்க்குரிய அடையாளங்களை தக்கவைப்பதற்கும் ஏதுவுhக அமைந்தன. அதுவே (அந்தந்தந்தச் சமூகக் குழுக்களுக்குரிய கட்டுப்பாடுகள்) காலப்போக்கில் அவரவர்க்குரிய கலாச்சாரங்கள் ஆயின. பொதுவாக அனைத்துச் சமூகங்களிலும் பெண் ஆண்களின் சொத்துக்களாக வரையறுக்கப்பட்டாள். அதைத் தொடர்ந்து அனைத்துச் சமூகங்களும் பாலியல் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டன. இவற்றையும் மீறி, மனித சமூகத்தின் மறு உற்பத்தியின் அடிப்படையாக, சமூகங்களில் பாலியல் தேவைகள் உணரப்பட்டும், வலியுறுத்தப்பட்டும் வந்திருக்pன்றன.
எமது புராணங்களும் இதிகாசங்களும் கூட மனிதரின் பாலியல் தேவைகளை ஆங்காங்காங்கே வெளிப்படுத்துகின்றன. அதுமட்டுமன்றி பாலுறவின் வௌ;வேறு பரிமாணங்களையும் அவை குறிப்புணர்த்துகின்றன. சிவபெருமானும் கிருஷ்ணரும் புணர்ந்ததையும், அவர்களின் புணர்ச்சியில் பிறந்த பிள்ளையாக ஐயனாரையும் சித்தரிக்கிறது ஒரு புராணக்கதை. தவிரவும் எமது கோயிற் கோபுரங்களை அலங்கரிக்கும் சிற்பங்களும் சிலைகளும் கூட பாலுறவின் தேவைகளைப் பறைசாற்றுகின்றன.
இவற்றுக்கும் அப்பால் „காம சூத்திரா“ வைத் தருவித்த கலாச்சாரத்தின் வழிவந்தவர்கள் என்பதில் நாம் பெருமையடையவேண்டும். மனிதரின் பாலியல் தேவையை அடிப்படையாக்கொண்டு அவர்களது புணரும் வலிமையை மேம்படுத்தும் பொருட்டும், புணர்ச்சியின்போது காமச் சுவையை அனுபவிப்பதற்கான பல்வகை முறைமைகளை வெளிப்படுத்துவதுதான் காமசூத்திரா.
1970 களுக்கு முன்புவரை மேற்குலகிலும் பாலுறவு குறித்து பல கட்டுப்பாடுகள் நிலவிவந்தன. 1970களில் உருவான ஆணுறை உற்பத்தி, மனிதர்களுக்கிடையிலான பாலியல் தேவையில் பெரும் பாய்ச்சலை உருவாக்கியது. திருமணத்துக்கு முந்திய பாலுறவுக்குத் தடைபோடும் திருச்சபைகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நடைமுறையில் அக்கட்டுப்பாடு வலுவிழந்ததாகவே காணப்படுகிறது. மேற்கு ஐரோப்பாவைப் பொறுத்தவரை ஓரடி முன்சென்று போசனவாய்வழி பாலுறவு Oralsex ஆசனவாய்வழிப் பாலுறவு Analsex குழுநிலைப்பாலுறவு, ஓரினச் சேர்க்கை (ஆண் சக ஆண் GAY பெண் சக பெண் Lesbian- என்று) பாலுறவின் பல்வேறு பரிமாணங்களையும் ஏற்றுக்கொள்ளும் சட்டங்களுக்கு அங்கீகாரம் வளங்கியுள்ளது. சுவிசில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பிள்ளைகளைச் சுவீகாரம் செய்துகொள்வதற்கான சட்டங்கள் பற்றியும் பேசப்படுகின்றன. எங்கள் நாடும் சமூகமும் கூட குறைந்த பட்சம் சமூகத்தில் ஓரினச் சேர்க்கை முறையிலான பாலுறவு உண்டு என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கான சட்ட அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும்.
இங்கு கவனிக்கப்படவேண்டிய முக்கிய குறிப்பு, இம் மாற்றங்கள் எதுவும் வெறும் காலஓட்டத்தின் நிகழ்வுகள் அல்ல என்பதுதான். மாறாக பொருளாதார உற்பத்தியின் பரிணாம வளர்ச்சியாகவே பார்க்கப்படவேண்டும். சர்வதேச மயப்படுத்தப்பட்ட இறைய சூழலில் கற்புக்கும், கண்ணகிக்கும் கூட நாம் புதிய வியாக்கியானம் வழங்கவேண்டியவர்களாகவே இருக்கின்றோம். எமது தேசமும் மக்களும், கைத்தொலைபேசி, ரிவி, இன்ரநெற், பேஸ் புக் என்று இன்றைய சர்வதேசமயப்படுத்தப்பட்ட அனைத்துத் தேவைகளையும் நுகர்ந்துகொண்டு, அதற்குப் புறம்பான முறையில் பழைமைக் கலாச்சாரத்தில் திகழ நினைப்பது ஒன்றுக்குப் பின் முரணான செயற்பாடாகும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்தகுடி நாம் என்று பெருமை பேசுவதற்கு, இது ஒன்றும் கற்காலமும் அல்ல!
எமது கலாச்சாரத்தில் பாலியல் பற்றிய கற்பிதங்களும் ஓரினச் சேர்க்கையும்:
பாலியல் என்பது மனித சமூகத்தின் அடிப்படைத் தேவை என்பதை மேலே பார்த்தோம். மனிதனின் குழந்தைப் பருவத்தில் இருந்தே பாலியலுக்கான உணர்வும் தோற்றம் பெறுவதாக, உளவியலாளர்கள் பலரும் ஏற்றுக்கொளகின்றனர். குழந்தைகள் கக்கா கழிக்க்கின்றபோது அவர்களது முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி அவர்கள் பாலியலைத் துய்ப்பதன் அடையாளம் என்கிறார்கள். முலைப்பால் அருந்தும் குழந்தையினால் ஏற்படும் தாயின்பமும் உள்ளகரீதியான பாலுணர்வாகவே உளவியலாளர்களால் ஏற்கப்படுகிறது. ஆனால் இவை எதுவும் இனவிருத்தி சம்பந்தப்பட்ட பாலியல் உணர்வுகள் அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அந்த அடிப்படையில் மனிதனிடம் இயல்பாகத் தோன்றும் பாலுணர்வு, பதின்ம வயதிலேயே சக மனிதரிடம் (ஆண், பெண்) உறவுகொள்ளக் கோருகிறது.
எங்கள் சமூகத்தில் ஓரினச்சேர்க்கை முறை ஒன்று இல்லை என்று அதட்டுபவர்களும் உண்டு. ஆனால் காதலுக்கும் காமத்தேவைகளுக்கும் எமது சமூகத்தில் நிலவும் தடையானது, பாலுறவுத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு இரகசிய முறைகளைக் கையாளும்படி நிர்ப்பந்திக்கிறது. இதனால் எமது சமூகத்தில் ஓரினப் பாலுறவில் ஈடுபடாத பதின்ம வயதினரை இனம் கண்டுகொள்வது கடினமே! விகிதாரசாரத்தில் வேறுபட்டிருப்பினும் இருபாலாருக்கும் பொருந்திய விசயமே இது! ஆனால் இவர்கள் மேற்குலக முறையிலான ஆசனவாசல் வாய்வழியில்(Anal Sex) பாலுறவில் ஈடுபட்டார்கள் என்று கூறிவிடமுடியாது. ஏனெனில் இப்படி ஒன்றிருப்பதையே எமது சமூகம் அறிந்திருக்கவில்லை அல்லது அருவருப்பாகப் பார்த்திருக்கலாம். இதே பதின்ம வயதினர் சுய இன்பம் துய்ப்பதன் மூலமும் தமது பாலுணர்வைத் தளர்த்திக்கொள்கின்றனர்.
இவையெல்லாம் எமது மரபுவழியில் வந்த செயற்பாடுகள் என்பதை, மேலே குறிப்பிட்ட வகையில் புராணங்கள், இதிகாசங்கள் அடங்கலாக கோயிற் சிற்பங்களும், பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் ~கைக்கிளை’ எனும் சொல்லும் ஆதாரப்படுத்துகின்றன. மேலும் மகாத்மா காந்தி அவர்களுக்கு 13 வயதில் திருமணம் நடந்தது என்ற விடயத்தையும் இச்சந்தர்ப்பத்தில் குறித்துக்கொள்ள முடியும். இவற்றைக் கூறுவதன் மூலம் நாம் பாலிய வயதுத் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டுவதாக அர்த்தமல்ல.
தமிழர் கலாச்சாரத்தில் மிகப்பெரும் கற்பிதமாக இருப்பது கற்புடமை. இதுவே பெண்களின் பேருடமையாகவும் கருதப்படுகிறது. உண்மையில் பெண்களை தன்னுடமையாகக் கருதுவதன் வெளிப்பாடுதான் இது. மனதளவில் கூட இன்னொருவரை நினைத்துவிடக்கூடாது என்பதுதான் கற்புடமையின் அடிப்படை. மானிடவியல் நோக்கில் மிகப்பெரும் மனித உரிமை மீறலும் இதுதான்!
மேற்குலகில் பாலியலை வெளிப்படையாகப் பேசப்படவேண்டிய பேசுபொருளாக கருதுகிறார்கள். இன்றைய நவீன உலகும் இதனையே ஏற்றுக்கொள்கிறது. பதின்ம வயதின் ஆரம்பத்துடன் பாடசாலைகளில் இதற்கான பாடங்களும் ஆரம்பிக்கப்படுகின்றன. ஆனால் எமது சமூகம் பாலியலை வெளிப்படையாகப் பேசுமளவிற்கு இன்னும் வளர்ச்சியடையவில்லை. மாறாக பாலியல் என்பது அடக்கப்படும் உணர்வாகவும், ஒடுக்கப்படவேண்டிய விசயமாகவும் கருதப்படுகிறது. இவை அனைத்தையும் மீறி உள்ளகரீதியில் பரமரகசியமான முறையில் பாலியல் சார்ந்து பல குளறுபடிகளுடன் நகர்ந்து செல்கிறது எமது சமூகம். இதன் விளைவு சிசுக் கொலைவரை வந்து நிற்கிறது.
குடும்பமும் பாலியலும்:
குடும்பம் என்பது அடிப்படையில் ஆண் அரசியல் வகைப்பட்டது. இது ஓர் பேரரசுக்குரிய நுண்ணிய (அiஉசழ) வடிமாகச் செயற்படுகிறது. அதாவது பேரரசுக்குரிய தொழிற்பாட்டை சிறிய அளவில் கொண்டிருப்தே குடும்பம். இதன் சிறப்பம்சம் தலைமை உறுப்பினர்களான தாய், தந்தையர்களுக்கிடையிலான பாலியல் உறவு இங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் தமக்குள் பாலுறவைக்கொண்டிருக்கும் இத் தலைமை உறுப்பினர்கள், குடுப்பத்தின் ஏனைய உறுப்பினர்களது பாலியல் (காதலிக்க முயற்சிப்பது, காதலிப்பது போன்ற) நடவடிக்கைகளுக்கு எதிரான முறையில் காவலரண்காளாகச் செயற்படுவர். இது அடிப்படையில் தமது பாலியல் தேவையை ஒரு மானிடத் தேவையாக புரிந்கொள்ளாமையின் வெளிப்பாடே!
எமது சமூகத்தில் பாலியல் தேவைகளை அடைவதற்கான ஒரே ஒரு நிறுவனமாக குடும்பம் மட்டுமே செயற்படுகிறது. இரும்புத் திரையால் மூடப்பட்ட இந் நிறுவனத்தில், பாலியல் உறவு என்பது ஜனநாயக வழிமுறைக்குட்:பட்டதாக இருப்பதில்லை. எமது குடும்பங்களில் இன்றும் கணவன், மனைவிக்கிடையிலான பாலுறவு கணவனின் விருப்பத்தின் அடிப்படையில் பகிரப்படும் ஒன்றாகவே அறியமுடிகிறது. மனைவி தனக்கு விரும்பிய, தனது பாலுறவுக்கான தேவையைக் கோரும்பட்சத்தில், அவள் ஆணின் சந்தேகத்துக்குள்ளாகிறாள். இப்போக்கு இன்றைய இளந் தலைமுறையினரிடமும் தொடர்வதுதான் பேரவலம்.
மூடப்பட்ட இந் நிறுவனத்தில் பாலியல் ஒடுக்குமுறைகளும், சூறையாடல்களும் மிக இயல்பாகவே இடம்பெறும்! இந்நிலைமைகளில் கணவன், மனைவியர்களுக்கிடையிலான பாலுறவில் விரிசல்கள் ஏற்படுகின்றன. இதுவே, (வௌ;வேறு இடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நேரடியாக எம்மால் அவதானிக்கப்பட்ட உரையாடல்களின் அடிப்படையில்) குடுப்பத்தில் பல்வேறு விபரீதங்கள் உருவாகுவதற்கும் கால்கோளாக அமைந்துவிடுகிறது. அத்தகைய ஒரு சூழலில்,
1. ஆண் தனது பாலியல் தேவைகளுக்காக வெளியில் செலகிறான்.
2. பெண்களும் இதே தேவைக்காக வௌ;வேறு வழிகளை நாடவேண்டி நேருகிறது.
3. இதையும் தாண்டி இன்னும் ஒரு பகுதியினர் (பிள்ளைகளின் நலன் கருதி) சமூக ஒழுங்கமைப்புக்குட்பட்டு தம்மைத் தாமே வருத்திக்கொண்டு பாலியல்தேவைகளைத் தியாகம் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் சிலர், மன அழுத்தத்துக்கு உட்பட்டு, இருதய நோய் உட்பட பல்வேறு வகை நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.
தமது பாலுறவுத் தேவைக்காக சமூக நெறிமுறைகளுக்கு பிறழ்வான நடைமுறைகளுக்குட்படும் அதே பெற்றார், தமது பிள்ளைகளின் பாலுறுவுத் தேவைகளை மிக வலிமையுடன் அடக்கி ஒடுக்குவதை இலகுவில் கண்டுகொள்ளலாம்.
திருமணமாகி, சுமார் 5 ஆண்டுகள் வரை அல்லது அதற்கும் மேலாக ஆகக் கூடியது 12 வருடங்கள் வரைதான் கணவன் மனைவிக்கடையிலான பாலுறவு செயலூக்கம் மிக்கதாக நிலைத்திருக்க முடியும் என்று கூறுகிறது இன்னோர் ஆய்வு. அதன் பின்பு பிள்ளை வளர்ப்பு, சமூக நிர்ப்பந்தங்கள் காரணமாகவே கணவன் மனைவிக்கிடையிலான உறவு கட்டமைக்கப்படுகின்றன என்பது இதன் மறு அர்த்தம் ஆகும். இச் சந்தர்ப்பங்களில் கணவன் மனைவிக்கிடையிலான பாலுறவு முறைமைகள் பல்வேறு பரிமாணங்களை (காம சூத்திராவில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு) நோக்கி வளர்ச்சியடைய வேண்டும். ஆனால் எமது சமூகத்தில் ~பாலுறவில் பல்வேறு பரிமாணங்கள்’ என்பதற்கான அர்த்தம் புரிந்துகொள்ளப்பட்ட ஒன்றாகககொள்ள முடியுமா என்பது கேள்வியே! உண்மையைக் கூறின் நாம் காம சூத்திராவைத் தருவித்த ஒரு சமூகத்துக்கு மிக நெருக்கமானவர்களாக இருந்தபோதும், பாலியலுக்கு என்று ஓர் அறிவிருப்தை புரிந்துகொள்வதில்லை.
கணவன் மனைவிக்கிடையிலான புரிதல்களில் விரிசல்கள் ஏற்படும் பட்சத்தில் தமது பிரச்சனைகளை வெளிப்படையாகப் பேசி, ஓர் தீர்மானத்துக்கு வருவதில் மேற்குலகச் சமூகம் மிக முன்னுதாரணமாக திகழ்கிறது. இது அடிப்படையில் மேற்குலகில் (ஒப்பீட்டளவில்) நிலவும் ஒரு மேன்மையான சமூக ஜனநாயகப் பண்பாக ஏற்க முடிகிறது! ஒருமித்த வாhழ்வு என்பது தனித்து கருத்தக்களால் மட்டும் கட்டமைக்கப்பட்ட ஒன்றல்ல. உடலியல் ஒற்றுமையும் இதில் பிரதான பங்கு வகிக்கிறது. இயல்பில் ஓரிச் சேர்கையாளராக இருக்கும் எமது சமூக உறுப்பினர்கள் தம் நிலைமையை வெளிப்படையாக முன்வைப்பதற்கு எமது சமூகப் பண்பாட்டில் இடமில்லை. ஆதனால அவர்கள்; விரும்பியோ விம்பாமலோ திருமண பந்தத்துக்கு ஆட்பட்டு இறுதியி;ல் பாலுறவுப் பிரச்சனைகளாலேயே பிரிந்துவிடுகின்றனர். இவை வெளியில் தெரியமுடியாத சம்பவங்களாக அமுங்கிப் போகின்றன. காம சூத்திரா வழிவந்த சமூகம் என்பதனாலோ அன்றி வேறுகாரணங்களினாலோ எமது சமூக மரபில்… சரி, பிழை அல்லது உண்மை, பொய்மை என்பதற்கு அப்பால் சாதகப் பொருத்தங்களில் யோனிப் பொருத்தம் மிக முக்கிய கூறுகளில் ஒன்றாகக் கருதப்படுவதை உடலியல் ஒற்றுமைக்கு ஆதாரமாக அவதானிக்கலாம்.
திருநங்கையர் (அரவாணிகள்) மீதான எமது அக்கறை:
ஆண் உடம்பு, பெண்ணுக்குரிய உணர்வுகளுடன் இருப்பதுதான் திருநங்கையர் தோற்றத்தின் அடிப்படை. இவ்வகைப்பட்ட மூன்றாவது பாலினத்தை இழிவாகப் பார்க்கின்ற அல்லது அவர்கள் பற்றி கவனத்தில்கொள்ளாத போக்கு எமது சமூகத்தில் இன்னும் உண்டு.
மேலே ஒரு பந்தியில் குறிப்பிட்டது போல் ஐயனாரின் பிறப்பு இவர்களுக்கான பாலுறவு முறைமையின் மேலதிக கற்பனையே! மேலும் சைவ சமயத்தில் அர்த்தநாரீஸ்வரர் என்பது சிவபெருமானுக்குரிய விசேட தோற்றங்களில் ஒன்று. ஒரே உடம்பு! பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் சித்தரிக்கப்பட்டிருப்துதான் இதன் சிறப்பம்சம். இது மனித சமூகத்தில் திருநங்தையரின் இருத்தலை உறுதிப்படுத்துவதுடன், அவர்களுக்கு சமூகத்தில் வழங்ப்படவேண்டிய அங்கீகாரத்தையும்; கோருகிறது. இன்னும் சிவன் தாயுமானவர் ஆகி பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய கதையுமுண்டு. இவையெல்லாம் பெண் ஆணாக மாறுவதும், ஆண் பெண்ணாக மாறுவதும் ஆதிகாலம் தொட்டு சமூகத்தில் இருந்து வந்த இயற்கை முறைமையின் பிரதிபலிப்புகளே!
இன்றைய நவீன சிகிச்சைமுறை பெண்ணாக மாறிய திருநங்கையரின் ஆணுறுப்பை சத்திரசிகிச்சை மூலம் அகற்றிவிட்டு, செயற்கை முறையிலான பெண்ணுறுப்பைப் பொருத்தி ஆணுடனான இயற்கையான பாலுறவுக்கு வழிசெய்கிறது.
இன்று திருநங்கையர்களை மூன்றாவது பாலினமாக அங்கீகரிப்பதும், அவர்களது பாலுணர்வைப் புரிந்துகொள்வதும் கூட மானுடவியல் நோக்கில் ஓர் உயர் கலாச்சாரமாகவே நோக்கப்படுகிறது.
பாலியல் தொழில் பற்றிய எமது புரிதல்:
மனித சமூகத்தில் பாலியல் தொழில் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பழைமை வாய்ந்த ஒன்று. எமது தொன்மை இலக்கியங்களான சிலப்பதிகாரமும், நளாயினி சரிதையும், புராணக்கதைகளும் கூட இதற்கு ஆதாரங்கள் ஆகின்றன. இந்தியாவில் பரமரகசியமாகப் பாதுகாக்கப்பட்டும், பல பிரச்சனைகளுக்குள் அகப்பட்டும் வந்த பாலியல் தொழில், இன்று சட்டவகைக்குட்பட்டு வளர்ந்து வருகிறது. நெதர்லாந்தில் இரு பாலாருக்குமான ஒரு தொழில் முறையாக இது அங்கீகரிக்கப்படடுள்ளது. இந் நிலையில் எமது நாட்டிலும் இது ஒரு தொழில் முறையாக வளர்வதைகக் கண்டு ஆச்சரியம் அடைவதற்கில்லை. 1980ம் ஆண்டுகளில் சுமார் 25000 பாலியல் தொழிலாளிகளைக் கொண்டிருந்த நாடு இலங்கை.
எனவே நாம் இங்கு புரிந்துகொள்ளப்பட வேண்டிய விசயம், பாலியல் தொழில் அழிந்துவிடக்கூடிய, அழித்துவிடக்கூடிய ஒன்றல்ல என்பதுதான். நிலவுகின்ற இத்தொழிலை சட்டரீதியாக அங்கிகரித்து, அதற்குரிய கொடுப்பனவுகளை உரிய முறையில் கையாள்வதற்கும் அரசு முன்வரவேண்டும். மேலும் பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும், வயோதிப கால வாழ்க்கைக்கும் கூட உத்தரவாதம் அளிக்கும் வகையிலும் தொழிற்சட்டங்கள் பலப்படுத்தப்பட வேண்டும்.
அதேவேளை பெண்களையும் சரி அன்றி ஆண்களையும் சரி விருப்பத்துக்கு மாறான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கும், இத்தொழிலில் ஈடுபடுத்த முனைபவர்களுக்கும் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கான முறையில் சட்டரீதியான கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும்.
பாலியல் ரீதியாகக் கொண்டுவரப்படும் இச்சட்ட வடிவங்களும் வழிமுறைகளும் இத் தொழிலில் கையாளப்படும் சூறையாடல்களை தவிர்க்கவும், எமது நாட்டில் குழந்தைகள் மீதான (ஓரினச் சேர்க்கை உட்பட) பாலியல் துஷ்பிரயோகத்தைத் இல்லாதொழிக்கவும் வழி சமைக்கும்.
பிரச்சனைகளுக்கான பிரதான தீர்வுமுறைகள்!
மனித தேவைகளின் அடிப்படைகளில் ஒன்றாக பாலியல் உணர்வுகள் இருப்பதை இதுவரை ஆராய்ந்தோம். ஆனால் எமது சமூகத்தில் “சமூகச் சீரழிவு’’ களின் முதன்மைப் பிரச்சனையாகவே பாலியல் பார்க்கப்படுகிறது! ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கும் இப்பிரச்சனையை எப்படிக் கையாள்வது?
„உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றங்கள் மனிதப் பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும் மாற்றங்களை உண்டுபண்ணுகின்றன“
இது இயங்கியல் விதியின் பிரதான அம்சம். உலகமயமாக்கல் முறைமையில் பொருளாதார மாற்றத்துக்குட்பட்டிருக்கும் இலங்கைச் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் “சமூகச் சீரழிவு’’ எனும் இக் கருத்தியலின் தாக்கத்தையும் இவ் விதியின் மையப்போக்கில் இருந்தே நோக்க முடியும்.
சுவிற்சலந்தில் பதின்ம வயதினரின் பாலுறவு பற்றிய சட்ட விதியின் பிரகாரம்…
1. 16 வயதுக்கு மேல் இருபாலாரின் விருப்பின் அடிப்படையில் புணர்வதற்கு அனுமதியுண்டு.
2. 14 வயதையடைந்தோரும் புணர்ந்துகொள்ளலாம். ஆனால் பாலுறவில் ஈடுபடும் இரு பகுதியினருக்கும் இடையிலான வயது வேறுபாடு ஆகக் கூடியது மூன்று வயதுக்கு மேல் அமையக் கூடாது.
பதின்ம வயதின் ஆரம்பத்துடன் பாலியல் கல்வியாக்கப்படுவதனால் கருத்தரிக்கும் வாய்புக்களையும், எயிட்ஸ் போன்ற நோய்ப் பரவல்களையும் இவர்கள் தவிர்த்துக் கொள்கிறார்கள். இதையும் மீறி உருவாகும் கருக்களை அழிப்பதற்கும் இங்கு அனுமதியுண்டு. கரு முற்றிய நிலையில், அழிக்க முடியாத சூழலில் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கும் போதிய அனுமதியுண்டு. இங்கு இச் சமூகத்தின் சிறப்பம்சம் இக் குழந்தைக்கும், குழந்தையைப் பெற்றெடுத்த தாயாருக்கும் சமூகத்தில் அங்கீகாரம் உண்டு என்பததான். இதனால் சிசுக்கொலைக்கான சந்தர்ப்பங்களும் இங்கு இல்லாமல் போய்விடுகிறது!
இவ்வகையில் எமது படசாலைகளில் பதின்ம வயதில் இருந்தே பாலியல் அறிவு புகட்டப்படணே;டும்.
அதேவேளை கற்பித்தல் என்றபேரில் பாலியற் கிளர்ச்சிக்குட்படுத்தி மாணவர்களை துஷ்பிரயோகம் செய்ய முனையும் ஆசிரிர்கள் மீது சமூகம் விழிப்பாக இருக்கவேண்டும். அதற்கெதிரான சட்டங்களும் ஓட்டை ஒடிசல் இன்றி இறுக்கமானதாக அமையவேண்டும்.
பதின்ம வயதுப் பாலுறவினால் ஏற்படும் கருத்தரிப்பில் பிறக்கும் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பை உடனடியாக அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும். அதேவேளை மறுபறத்தில் அக் குழந்தையையும் குழந்தையைப் பிறப்பித்த தாயையும் அங்கீகரித்துக்கொள்ளும் வகையில் சமூகப் பண்பாடுகள் வளர்த்தெடுக்கப்படவேண்டும். பாலியல் உறவு என்பது அறிவு சம்பந்தப்பட்டது என்பதுடன் சமூக ஜனநாயகம் சம்பந்தப்பட்ட விடயமாகவும் புரிந்துகொள்ளப்படவேண்டும்.
கான் போண் Hand phone ஐ போண் ஐ ; I phone , ஐபொட் I pod> பேஸ் புக் Face book இன்ரநெற் Internet ரிவி, ரிவி நிகழ்ச்சிகள் என்று அனைத்தையும் மேற்குலகில் இருந்து நுகர்ந்துகொள்ளும் நாம், அது சுமந்துவரும் கலாச்சாரங்களை முகர்ந்துகொள்வதும் இயல்பாகிறது. இவ்வகையில் பதின்மவயது விடலைகளின் காதல் உறவுகளும், பாலியல் தொடர்புகளும் கூட சமூகத்தின் இயல்பான நிகழ்வுகளாக மாற்றம் பெறுகின்றன! இரும்புத் திரைகளுக்குப் பின்னால் மறைமுகத்தில் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட இந் நிகழ்வுகள் இன்று வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட ஆரம்பித்திருக்கின்றன!
உலகமயமாக்கலின் திறந்த சந்தைப்பொருளாதார அலையில் கூடவே, நல்லதும் கெட்டதுமான பல விசங்கள் குவிக்கப்படுகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றில் ஒட்சிசனுடன் சேர்ந்து கானீரொட்சைட்டும் நைதரசனும் இன்னும் பல்வகைத் தூசிகளும் கலந்திருப்பது போல! ஆனால் சுவாசப்பை தனது செயற்திறன் மூலம் உடம்புக்குத் தேவையானவற்றை மட்டும் வடிகட்டி குருதியுடன் சேர்த்துவிடுகிறது! திறந்த சந்தைப் பொருளாதாரம், நுகர்வுக் கலாச்சாரத்தையும் தனிமனித உற்பத்திகளையும் மையப்படுத்தும் அதேவேளை, தன்னளவில் தெரிந்தும் தெரியாமலும், மேற்குலக ஜனநாயகப் பண்பையும் கூடவே சுமந்து வருகிறது. ஒப்பீட்டளவில் இன்றைய உலகில் மேற்குலக ஜனநாயகம் மேன்மையானது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்! ஆனால் பண்பாட்டுரீதியில் எம்மிடம் உறைந்திருக்கும் பன்னாடைக் கலாச்சாரத்தின் வடிகட்டும் திறன் தலைகீழானது. இங்குதான் நாம் விழிப்படையவேண்டும்!
இச் சந்தர்ப்த்தில் நாம் முன்னிலைப்படுத்த வேண்டிய முக்கிய கருப்பொருளாக இருப்பது ஜனநாயகப்பண்பு! ஜனநாயகப்பண்பு என்பது அரசிலுக்கும், தேர்தலுக்கும் சில வாக்குவாதம்மிக்க கூட்டங்களுக்கும் மட்டுமே தேவையானவை என நோக்கும் மனநிலை மாறவேண்டும். நவீன உலகில் ஜனநாயகம் பற்றிப் பேசப்படும் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்துகொள்ள முனையவேண்டும். அவ்வகையில் இதுவரை நிலவிவந்த சமூக நெறிமுறைகளைக் கடந்து பல விசயங்களை எமது சமூகம் ஏற்றுக்கொள்ளத் தயாராகவேண்டும்.! அப்போதுதான் அதற்கான தீர்வுகளையும் இலகுவாக எட்டமுடியும்!
இதற்கான ஆரம்பமும், முதலுமாக அரசு வடிவத்தின் நுண்கலனாக விளங்கக்கூடிய குடும்பத்தின் அடிப்படைத் தேவையாக ஜனநாயகப்பண்பு உணரப்படவேண்டும். குடும்பத்தின் தேவையாக உணரப்படும் பட்சத்தில் அது (ஜனநாயகப்பண்பு) சமூகப் பண்பாக உணரப்படுவதற்கு அதிக காலம் எடுக்கப்போவதில்லை! (சமூகப் பண்பு இனத்தின் பண்பாகவும், அரசியற் பண்பாகவும், ஒட்டுமொத்த நாட்டின் பண்பாகவும் மாற்றம் பெறுவது என்பது இன்னோர் விதி).
குடும்பத்தில் ஆளுமை சக்தியாக இருக்கும் தந்தைக்கும்;, தலைமை உறுப்பினர்களான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றங்கள் ஜனநாயக தன்மைக்கு உட்படுத்தப்பட வேண்டும். குடும்பத்தில் வன்முறைரீதியான அணுகுமுறையைத் தளர்த்துவதற்கும் இது உதவியாக அமையும். இவ் வழியாக, குடும்பத்தில் தலைமை உறுப்பினருக்கு அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தேவை, கீழ்நிலை உறுப்பினர்களாக இருக்கக்கூடிய பிள்ளைகளில் வயதானவர்க்கும் உரிய ஒன்றாக உணரப்படவேண்டும். இத்தகைய ஒரு நிலை தோற்றம்பெறும் பட்சத்தில், பிள்ளைகள் தமது காதல் விவகாரங்களை பெற்றோருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பங்கள் இயல்பாகவே பேணப்படும். மனைவி மீதான பாலியல் அடக்குமுறை உடைந்துபோவதற்கும் இது வழிசெய்யும்.
மேற்படி பண்பாட்டு முறைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது இலகுவான காரியமல்ல. சமூக சக்திகளாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் அனைத்துப் பிரிவினரும் இதில் ஈடுபட வேண்டும். முக்கியமாக அரசியல் சக்திகளின் ஒருங்கிணைப்பு இதில் அவசியமாகிறது. ஆனால் வாக்குவங்கிக்காக ஏங்கி நிற்கும் இவர்கள் பழைமைவாத சக்திகளை பகைத்துக்கொள்ள முன் வரமாட்டார்கள் என்பது கடந்தகால வாரலாறுகளில் கற்றுத் தேர்ந்த பாடம். ஆகையினால் பாலியல், பெண்ணியம், சாதியம், வன்முறை, பிரதேசவாதம், சூழலியல் போன்ற இன்னும் பல்வேறு கலாச்சார முறையிலான மாற்றங்களை நாம் முதலில் கூறியதுபோல் ஈவேரா பெரியார் வழியிலான சமூக அரசியல் வழியிலேயே முன்னெடுக்க முடியும். பண்பாட்டு மாற்றத்திற்குரிய இச் சமூக அரசியல் பற்றி அடுத்து வரும் கட்டுரைகளில் நோக்குவோம்.
Well written..!!