ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித்திட்டம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகிய அமைப்புகளின் உதவியுடன் உலக பொருளாதார மன்றம் ஒரு அறிக்கையினை தயாரித்து சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கையில் உலகின் எந்த நாட்டிலும் பெண்கள் ஆண்களுக்கு சமமாக ஊதியம் பெறுவதில்லை என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இலாபமொன்றையே குறிக்கோளாகக்கொண்டியங்கும் நிறுவனங்களில்/தொழிற்சாலைகளில் தொழிலாளிகள் தினந்தோறும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம். ஊதியக்குறைவு, மோசமான பணிச்சூழல், மரியாதையின்றி நடத்தப்படுவது, அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படுவது, இவற்றையெல்லாம் எதிர்த்துக்கேட்டால் வேலையைவிட்டே அனுப்பிவிடுவது – இவைதான் இன்றைய தொழிற்சாலைகளின் இயங்குமுறை. அதிலும்பெண் தொழிலாளர்களின் நிலை சொல்லிமாளாது. பணியிடத்தில் ஒரே மாதியான வேலை செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக ஊதியமோ மரியாதையோ தரப்படுவதில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித்திட்டம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகிய அமைப்புகளின் உதவியுடன் உலக பொருளாதார மன்றம் ஒரு அறிக்கையினை தயாரித்து சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கையில் உலகின் எந்த நாட்டிலும் பெண்கள் ஆண்களுக்கு சமமாக ஊதியம் பெறுவதில்லை என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நாடு
ஆண்களுக்கு கொடுக்கும் ஊதியத்தைவிட பெண்களுக்கு எத்தனை சதவீதம் குறைவாக கொடுக்கப்படுகிறது?
ஐஸ்லாந்து
15 %
நார்வே
16 %
ஜெர்மனி
25 %
இங்கிலாந்து
25 %
அமெரிக்கா
26 %
இலங்கை
28 %
ரஷ்யா
30 %
பிரான்ஸ்
30 %
இஸ்ரேல்
31 %
சிங்கப்பூர்
31 %
சீனா
31 %
இத்தாலி
33 %
ஜப்பான்
35 %
இந்தியா
39 %
பாகிஸ்தான்
45 %
ஆண்களைவிட பெண்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் கொடுக்கிற பட்டியலில் பாகிஸ்தானும் இந்தியாவும்தான் ஆசியாவிலேயே கடைசி இடங்களை பிடித்திருக்கின்றன. இப்புள்ளிவிவரங்களை சேகரிக்க இயலாமற்போன ஏராளமான மூன்றாமுலக நாடுகளில் இந்நிலை எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு மோசமாக இருக்குமென்று அஞ்சப்படுகிறது. தனியார் நிறுவனங்களிலும் முறைசாரா தொழிலிலும் ஆண்-பெண் ஊதிய வேறுபாடானது மிக அதிகமாக இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளின் வளர்ச்சி விகிதம் அப்படியே தொடர்ந்தால், ஆணும் பெண்ணும் சமவூதியம் பெறுவதற்கு இன்னும் 150 ஆண்டுகள் ஆகலாம் என்கிறார் லண்டன் பொருளாதார நிபுணர் ஆலன் மானிங்.
கதைச்சுருக்கம்: ஐரோப்பாவின் மிகப்பெரிய (உலகிலேயே நான்காவது பெரிய) கார் தயாரிக்கும் “போர்ட்” நிறுவனத்தின் தொழிற்சாலையொன்று லண்டன் தேம்ஸ் நதிக்கரையிலிருக்கும் டேகன்காம் என்கிற இடத்தில் இருக்கிறது. அத்தொழிற்சாலையில் 1968 ஆண்டில், 55 ஆயிரம் ஆண் தொழிலாளர்களும் 187 பெண் தொழிலாளர்களும் வேலை செய்துவந்தார்கள். ஆண் தொழிலாளர்களைவிட பெண் தொழிலாளர்களுக்கு மிகமிகக் குறைவான ஊதியம் கொடுக்கப்பட்டுவந்தது. அதோடு மட்டுமன்றி அவர்களை, “பயிற்சித்திறன் தேவைப்படாத வேலை” (unskilled labour ) என்கிற வகையில் நிறுவனம் கணக்கில் கொண்டதால், மரியாதையும் ஊதியமும் ஒருசேர குறைவாகவே கிடைத்தது பெண் ஊழியர்களுக்கு. ஆண்களும் ஆணாதிக்கமும் ஆக்கிரமித்திருந்த நிர்வாகம், தொழிற்சங்கம், ஊடகம், முதலாளிகள், அரசு ஆகியவற்றை எதிர்த்து எவ்வாறு அவர்கள் ஒருங்கிணைந்து போராடி வெற்றி பெற்றார்கள் என்பதே இத்திரைப்படத்தின் கதை. போர்டு நிறுவனத்தில் அப்பெண்கள் பெற்ற வெற்றியானது, உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகத்திகழ்ந்தது.
திரைக்கதை:
மிகமோசமான பணிச்சூழலில் ‘போர்ட்’ கார்களுக்கான இருக்கைகள் தைக்கும் பணியினை 187 பெண்கள் செய்துவந்தார்கள். மிகவும் நுட்பான வேலையாக இருப்பினும், “பயிற்சித்திறன் வேண்டா உழைப்பு” என்ற வகையிலேயே இவ்வேலையினை நிர்வாகம் சொல்லிவந்தது. அதனால் மிகக்குறைந்த ஊதியமும் அப்பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதனை மாற்றவேண்டுமென்று அப்பெண்கள் அனைவரும் தொழிற்சங்கத்தின் உதவியை நாடுகிறார்கள். தொழிற்சங்க பிரதிநிதியான ஆல்பர்ட் அப்பெண்களின் கோரிக்கையினை தொழிற்சங்கத்தில் எடுத்துரைத்து, அதன்மூலம் நிர்வாகத்தின் பார்வைக்கும் கொண்டுசெல்வதாக உறுதியளிக்கிறார்.
இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கத்தை நிர்வாகம் அழைக்கிறது. ஆல்பர்ட் இதனை மிகவும் மகிழ்ச்சியோடு பெண் ஊழியர்களிடம் அறிவிக்கிறார். பேச்சுவார்த்தைக்கு தானும் (ஆல்பர்ட்டு), மான்டியும் (மற்றொரு தொழிற்சங்க பிரதிநிதி) தொழிற்சங்கம் சார்பாக கலந்துகொள்ளவிருப்பதாகவும், பெண்களிலிருந்து இரண்டுபேர் வரவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறார். கோனி என்கிற பெண், மூத்த ஊழியர் என்பதால் அவரை தேர்ந்தெடுத்துவிட்டு, மற்றொருவர் யார் வருகிறீர்களென்று ஆல்பர்ட் கேட்கிறார். ஆனால் யாருமே முன்வரவில்லை. முன்வரிசையில் நின்றுகொண்டிருந்த ரீட்டாவை பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு கேட்கிறார். துவக்கத்தில் ரீட்டா தயங்கினாலும், பின்பு எல்லோரும் ரீட்டாவை ஆதரிக்க, ரீட்டாவும் ஒப்புக்கொள்கிறாள். அடுத்தநாள், ரீட்டா, கோனி, ஆல்பர்ட் மற்றும் மான்டி ஆகியோர் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராகினர். கூட்ட அறைக்கு உள்ளே செல்வதற்குமுன், ரீட்டா மற்றும் கோனியிடம்,
மான்டி : “பேச்சுவார்த்தையின்போது நிர்வாத்தில் யாராவது ஏதாவது கேள்வி கேட்டால், எதுவுமே பேசாமல் தலையை குனிந்து கொள்ளுங்கள். நான் பதில் சொல்லிக்கொள்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, நான் தலையாட்டினால் நீங்களும் தலையாட்டவேண்டும்.”ஆப்கின்ஸ் (நிர்வாக அதிகாரி) : “பெண்களின் கோரிக்கை என்ன என்பது எங்களுக்கு புரிகிறது. ஆனால் அதையெல்லாம் உடனடியா தீர்த்து வைக்க முடியாது. கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கென்று ஒரு நடைமுறை இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு திடீரென ஒரு முடிவெடுக்கமுடியாது.”
என்று சொல்லிவைத்தே அவர்களை பேச்சுவார்த்தை அறைக்கு அழைத்துச் செல்கிறார் மான்டி.
அனைவரும் பேச்சுவார்த்தை நடைபெறும் அறைக்குள்ளே செல்கிறார்கள்.
மான்டி : “நான் எப்போதும் நியாயமாத்தான் பேசுவேன்னு உங்களுக்கே தெரியும்”
மான்டி : “சரி. நாம ஒரு இரண்டு வாரம் கழித்து மீண்டும் கூடுவோம். அப்போது நீங்கள் பெண்களின் கோரிக்கையினை பரிசீலிக்கிறோமென்று உத்திரவாதம் கொடுங்கள். இன்றைய பேச்சுவார்த்தையின்மூலம் பெண்கள் வேலைநிறுத்தத்தை திரும்பப்பெற்றுக்கொண்டார்களென்று நீங்க உங்க மேலதிகாரிகளிடம் சென்று சொல்லிவிடுங்கள். நாங்களும் பெண்களிடம் சென்று, இன்னும் சில வாரங்களில் நிர்வாகம் பெண்களுடைய பிரச்சனையைத்தான் முதன்மையானதாகக் கருதி பரிசீலக்கத்துவங்கிவிடும் என்று சொல்லிவிடுகிறோம்.”
ரீட்டா (பெண்களின் பிரதிநிதி) : “மூன்று மணிநேரம் நாம் இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்க எல்லாரும் பெண்களுக்கு கொடுக்குற மதிப்பு இவ்வளவுதானா?”
தன்னுடைய கைப்பையிலிருந்து சில தோல் துண்டுகளை (லெதர் பீஸ்) எடுத்து மேசையின்மீது வைத்து, நிர்வாக அதிகாரியைப்பார்த்து பேசுகிறாள்,
ரீட்டா (பெண்களின் பிரதிநிதி) : “இந்த துண்டுகளையெல்லாம் சரியாக வைத்து, கார் இருக்கைக்கு ஏற்ற மாதிரி தைத்துத் தாருங்கள் பார்க்கலாம். உங்களால முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஏனென்றால், அனுபவமோ, பயிற்சியோ இல்லாமல் இவ்வேலையினை செய்யமுடியாது. இந்த மாதிரி ஏராளமான வேலைகள் நாங்க செய்றோம். இது ஒரு ‘பயிற்சித்திறன் தேவைப்படாத வேலை’ அல்ல.”
ஆப்கின்ஸ் (நிர்வாக அதிகாரி) : “உங்களோட கோரிக்கை நிர்வாகத்திற்கு புரிகிறது’
ரீட்டா (பெண்களின் பிரதிநிதி) : “எங்களின் கோரிக்கையினை புரிந்து கொள்வது எளிது என்றாலும், எனக்கென்னவோ நீங்கள் புரிந்துகொண்டது மாதிரியே தெரியல.”
ரீட்டா (பெண்களின் பிரதிநிதி) : “எங்களையெல்லாம் ‘ஓரளவு பயிற்சித்தேவைப்படுகிற வேலையினை’ செய்கிறவர்கள் பட்டியலில் இணைக்கவேண்டும். அதற்கேற்ப ஊதியமும் கொடுக்கவேண்டும். இக்கோரிக்கையினை நாங்கள் வைத்தே பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரைக்கும் நீங்கள் எதுவுமே செய்யவில்லை. ஏன் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். இதுவரைக்கும் பெண்கள் எப்போதுமே வேலைநிறுத்தம் செய்ததே இல்லை. எங்களோட கோரிக்கையினை நீங்கள் மறந்துவிடலாம், நாங்களும் எங்களுடைய வேலையைப்பார்க்க சென்றுவிடுவோம் என்றுதானே நினைத்தீர்கள். ஆனால் நாங்கள் எங்கேயும் போகப்போவதில்லை. நாங்கள் சொல்லியதை செய்யப்போகிறோம். முதன்முறையாக…….அடுத்த 24 மணிநேரம் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்போகிறோம்.”என்று சொல்லிவிட்டு, ரீட்டா அப்பேச்சுவார்த்தை அறையிலிருந்து வெளியேறுகிறாள்.
ரீட்டாவின் கொந்தளிப்பைக்கண்டு ஆல்பர்ட் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். ரீட்டாவும் கோனியும் தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு வருகிறார்கள். பேச்சுவார்த்தை என்னவாகியிருக்குமோ என்கிற ஆர்வத்தில் எல்லோரும் அமைதியாக ரீட்டா மற்றும் கோனியின் முகங்களையே பார்க்கிறார்கள். ரீட்டா மெதுவாக அருகிலிருக்கும் மேசையின்மீது ஏறி நிற்கிறாள். ஒரு சில வினாடிகள் என்ன சொல்வது, எப்படி சொல்வது என்று யோசித்துக்கொண்டே எல்லோரையும் பார்க்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,
ரீட்டா : “எல்லாரும் வெளிய போலாம் வாங்க. நாம் வேலைநிறுத்தம் பண்ணப்போறோம்”
என்று அறிவிக்கிறாள் ரீட்டா.
பெண்கள் அனைவரும் மகிழ்ச்சி போங்க, துள்ளிகுதித்து வெளியே செல்கிறார்கள்.
என்ற முழங்கிக்கொண்டே தட்டிகளையும் பதாகைகளையும் ஏந்தியபடி ‘போர்டு’ தொழிற்சாலை வாயிலில் போராட்டத்தை துவங்குகிறார்கள் அப்பெண்கள். முதன்முறையாக தங்களது உரிமைக்காக போராடியதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் ரீட்டாவிற்கு எல்லோரும் நன்றிதெரிவித்துவிட்டு மாலைவீடு திரும்பினர். அமெரிக்காவிலிருக்கும் போர்டு நிறுவன தலைமைச்செயல் அதிகாரியான போர்டிற்கு பெண்களின் போராட்டம் குறித்த செய்தி சொல்லப்படுகிறது. அவர் அதிர்ச்சியாகிறார். ரீட்டா வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் வேளையில் ஆல்பர்ட் ரீட்டாவை பார்த்துவிடுகிறார். ரீட்டாவிடம் தனியாக பேசவேண்டுமென்று சொல்லி அருகிலிருக்கும் தேநீர் விடுதிக்கு அழைத்துச்செல்கிறார்.
ஆல்பர்ட் : “ஆண்களைவிட பெண்களுக்கு குறைவான ஊதியம் கொடுத்தால் போதும் என்கிற வசதி அவர்களுக்கு இருப்பதால்தான், போர்டு நிறுவனம் இப்படி ஒரு அநியாயத்தை செய்கிறது. இது இங்கே மட்டுமல்ல. நாடெங்கிலும் இதேநிலைதான். பெண்கள் என்பதாலேயே அவர்களுக்கு குறைவான ஊதியம் வழங்குகிறார்கள். மிக மிக அடிப்படையான பிரச்சனைகளுடனே நீங்கள் எப்போதும் போராடிக்கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது. அதனால் சமவூதியம் பெறப்போராடுவது மிகமிக அவசியம்”
ரீட்டா : “உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் இப்பிரச்சனையில்?”
ஆல்பர்ட் : “எங்கம்மா தனியாக உழைத்து, அதில் கிடைக்கும் அரைச்சம்பளத்தை வைத்தே என்னையும் என் சகோதரர்களையும் வளர்த்தாங்க. வாழ்க்கை முழுவதும் அவங்க பட்ட துயரம் என்னை மிகவும் பாதித்திருக்கிறது.”
ஆல்பர்ட் : “யாராவது இந்த சுரண்டலை தடுத்துநிறுத்தனும்.” என்று ரீட்டாவிடம் சொல்கிறார் ஆல்பர்ட்.
அடுத்தநாள் எல்லோரும் வேலைபார்த்துக்கொண்டிருக்கும்போது, நிர்வாகத்திடமிருந்து ஒரு சுற்றறிக்கை வருகிறது. வேலைநிறுத்தத்தை நடத்திய பெண் ஊழியர்களை கடுமையான வார்த்தைகளால் கண்டித்து எழுதப்பட்டிருந்தது அவ்வறிக்கை. அதைக்கண்டதும் கடும் கோபத்திற்குள்ளாகிறார்கள் அவர்கள். இனியும் பொறுப்பதற்கில்லை என்று ரீட்டா, மற்ற பெண்களின் கருத்தினையும் கேட்டுவிட்டு தொடர் வேலைநிறுத்தத்தை அறிவிக்கிறாள்.
அவர்கள் வேலை செய்கிற டேகன்காம் கிளையில் மட்டும் இப்போராட்டத்தினை முடக்கிவிடாமல், போர்டின் அனைத்து கிளைகளுக்கும் சென்று அங்கிருக்கும் பெண் ஊழியர்களிடமும் ரீட்டாவும் மற்ற பெண்களும் பேசுகிறார்கள்.
“நம்மை நடத்துகிறவிதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்கு மேலும் நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது”
நம்பிக்கையோடு அவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துச்சென்றாலும், ஊடகங்களும் பொதுமக்களும் அவர்களுக்கு ஆதரவாக இல்லை. ரீட்டா எப்போதும் போராட்டத்திலேயே கவனம் செலுத்துவதால், அவளால் வீட்டு வேலைகளை அதிகமாக கவனிக்க முடியவில்லை. அதனால் ரீட்டா மீது அவளது கணவனுக்கு நிறைய கோபம் வருகிறது. கோபத்தின் விளைவால், அவளிடம் பேசுவதையே குறைத்துவிடுகிறான்.
பெண் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இருப்பதால், கார் இருக்கைகள் தைத்துத்தர ஆளில்லாமல் போர்டு நிறுவனமே தவிக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல், கார்கள் தயாரிப்பையே போர்டு நிறுவனம் காலவரையின்றி நிறுத்திவிடுகிறது. அதனால் ஆயிரக்கணக்கான ஆண் தொழிலாளர்களும் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். அதனால் அவர்களெல்லாம் ரீட்டாவின் மீதும் மற்ற பெண்களின்மீதும் ஆத்திரப்படுகிறார்கள், திட்டித்தீர்க்கிறார்கள். ரீட்டாவின் கணவனும் ரீட்டாவிடம் பேசுவதை நிறுத்திவிடுகிறான். கோனி போராட்டத்திற்கு சென்றிருக்கும்போது, உடல்நிலை சரியில்லாத அவளது கணவரும் இறந்துவிடுகிறார். அனைவரையும் வறுமை துரத்துகிறது. பெண்களனைவரும் தங்களிடமிருக்கும் சேமிப்பு பணத்தை ஒன்றாக சேர்த்து, அதனை போராட்டசெலவிற்கும் எல்லோரது வீட்டுசெலவிற்கும் பகிர்ந்துகொண்டு நாட்களை நகர்த்துகிறார்கள். பெண்களின் போராட்டத்தை உடைக்க நிர்வாகம் பல வழிகளில் முயல்கிறது. போராட்டக்குழுவில் முக்கிய பங்குவகிக்கும் சாண்ட்ராவிற்கு விளம்பர மாடலாகவேண்டுமென்ற ஆசையிருப்பதை அறிந்துகொண்டு, அவளை போர்டு நிறுவனத்தின் விளம்பர மாடலாக நியமிக்கிறோமென்று சொல்லி நிர்வாகம் அவளை தன்வசம் இழுக்கப்பார்க்கிறது. நிர்வாகத்தின் சூழ்ச்சியறிந்து அவ்வாய்ப்பினை மறுக்கிறாள் சாண்ட்ரா.
பெண்களின் கோரிக்கையை முதன்மையாகக்கருதி ஒட்டுமொத்த தொழிற்சங்கமும் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்லலாமா வேண்டாமா என்று தங்களுக்குள் வாக்கெடுப்பு நடத்த தொழிற்சங்கம் முடிவுசெய்கிறது. ரீட்டா உள்பட சில பெண்களையும் அக்கூட்டத்திற்கு தொழிற்சங்கம் அழைக்கிறது. வாக்கெடுப்பிற்கு ரீட்டா கிளம்பிக்கொண்டிருக்கையில், அவது கணவன் அவளை தடுத்துநிறுத்துகிறான்.
கணவன் : “சமீபகாலமாக நீ செய்வது எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை”
ரீட்டா : “எனக்கு நேரமாகிறது. நான் போகணும். பிறகு வந்து பேசலாம்
கணவன் : “இப்பவே பேசியாகணும். எனக்கும் நிறைய ஆசைகள் இருக்கு. பைக்ல ஊர் சுத்தணும், தினமும் நண்பர்களோட இரவு தண்ணியடிக்கனும். இந்த மாதிரி எதையுமே செய்யமுடியல. எல்லாம் உன்னாலதான். உன்னைய அடிக்க நான் கை ஓங்கினதுகூட இல்ல.”
ரீட்டா : “இப்ப நீ என்ன சொல்ல வர? நீ ஒரு தியாகியா இருக்குற, அப்படின்னு சொல்றியா?”
ரீட்டா : “நாங்கள்லாம் உரிமைக்காக போராடுறோம் இப்போ… ஆனா நீ உன்னோட கூடுதல் சலுகைகள் பறிபோகுதேன்னு பேசிக்கிட்டு இருக்க. எங்களோட அடிப்படை உரிமைக்கான போராட்டம்தான் இது… அதை நீ புரிஞ்சிக்கோ…”
அதற்குமேல் எதுவுமே பேசாமல், ரீட்டா அங்கிருந்து கிளம்பி தொழிற்சங்கக் கூட்டத்திற்கு சென்றுவிடுகிறாள். ஒட்டுமொத்த சமூகத்தின் பொதுபுத்தியிலும் ஆணுக்குப் பெண் சமமாக ஊதியம் பெறக்கூடாது என்கிற எண்ணம் ஆழப்பதிந்திருக்கிறது. அதுவே தொழிற்சங்க ஓட்டெடுப்பில் தங்களுக்கெதிராக அமைந்துவிடுமோ என்று அஞ்சவே செய்கிறார்கள் ரீட்டாவும் மற்ற பெண்களும். சற்று தாமதமாகவே கூட்ட அறைக்குள் நுழைகிறாள் ரீட்டா. அவளை பேச அழைக்கிறார்கள்.
ரீட்டா : “நாமெல்லாம் உழைக்கும் வர்க்கம். நாமெல்லாமென்று நான் சொன்னது ‘ஆண்’, ‘பெண்’ ஆகிய இருவரையும்தான். நாமெல்லாம் பாலினத்தால் வேறுபட வேண்டாம். அடிப்படை உரிமைக்காக நாமெல்லாம் போராடுவோம். ‘பெண்ணுக்கு சமவூதியம்’ என்பதுவும் ஒரு உரிமைதான். அதற்காகவும் போராடனும் நாமெல்லாம் ஒன்றிணைந்து”
என்னும் பொருள்பட பேசிமுடித்து மேடையிலிருந்து கீழிறங்கிவருகிறாள் ரீட்டா.
ரீட்டாவின் கணவனும் கூட்டத்தில் அவள் பேசுவதை கேட்டுவிடுகிறான். தன்னுடைய பேச்சிற்கும் செயலுக்கும் ரீட்டாவிடம் மன்னிப்பு கேட்கிறான். இனி அவளது போராட்டத்திற்கு உறுதுணையாக இருக்கப்போவதாக அவளிடம் உறுதியும் கூறுகிறான்.
அதற்குள் வாக்கெடுப்பின் முடிவு அறிவிக்கப்படுகையில், பெரும்பான்மையானோர் பெண்களின் கோரிக்கைக்கு ஆதரவளித்து வாக்களித்திருந்தது தெரியவருகிறது.
பெண்களின் சமவூதிய கோரிக்கைக்கு ஒட்டுமொத்த தொழிற்சங்கமும் ஆதரவு தெரிவித்த செய்தி, அரசாங்கத்தின் காதுகளுக்கு எட்டுகிறது. போராட்டத்தின் வீரியம் பலமடங்காக உயருகிறது. அரசாங்கத்திலிருக்கும் பெண் தொழிலமைச்சர், போராட்டப் பெண்களை சந்தித்து பிரச்னைக்கு ஒரு முடிவுகட்ட நினைக்கிறார். அதற்கான தேதியும் நேரமும் முடிவு செய்யப்படுகிறது. எந்த முடிவெடுத்தாலும் போர்டு நிறுவனத்திற்கு ஆதரவாகவே எடுக்கவேண்டுமென்று அமெரிக்காவிலிருந்து போர்டு நேரடியாக நாட்டின் பிரதமருக்கே தொலைபேசியில் அழைத்துச்சொல்கிறார். பிரதமரும் அமைச்சருக்கு அதனை ஒரு ஆணையாகயாகவே பிறப்பிக்கிறார்.
பிரதமர் : “கோடிக்கணக்கான பணத்தை நம் நாட்டில் முதலீடு செய்திருக்கிறது போர்டு நிறுவனம். நமது அரசாங்கம் போராட்டக்காரர்களின் பக்கம் நிற்காது என்று நான் ‘போர்டு’க்கு வாக்கு கொடுத்துவிட்டேன். நீங்க என்ன செய்தாலும் சரி… ஆனால் ‘போர்டு’ வருத்தப்படுகிறமாதிரி மட்டும் எந்த முடிவும் எடுக்ககூடாது.”
இச்சூழலில் அமைச்சரும் ரீட்டா குழுவினரும் சந்திப்பதற்குமுன், போர்டு நிர்வாக அதிகாரியே அமைச்சரை நேரில் சந்தித்து, தங்களுக்கு சாதகமாகவே அரசு நடந்துகொள்ள வேண்டுமென்றும் பெண்களின் கோரிக்கையை நிராகரிக்கவேண்டுமென்றும் சொல்கிறார்.
போர்டு நிர்வாக அதிகாரி : “போர்டு நிறுவனம் உங்கள் நாட்டிக்கு எவ்வளவு முக்கியமென்று உங்களுக்கே தெரியும். நாங்கள் இந்நாட்டிலேயே தொழிலை தொடர்ந்து நடத்தவேண்டுமா அல்லது வேறு நாட்டிற்கு செல்லவேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். இவர்களுக்கெல்லாம் தொடர்ந்து குறைந்த ஊதியம் கொடுத்தால்தான் நாங்கள் இலாபமாக நிறுவனத்தை நடத்தமுடியும். இதில் ஏதேனும் மாற்றம் வந்தால், நாங்கள் நிச்சயம் வேறு நாட்டிற்கு தொழிற்சாலையை மாற்றவேண்டிவரும். 40 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்க்கை எங்கள் கையில்தான் இருக்கு. அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்”
போர்டு நிர்வாக அதிகாரியை அந்த அறையிலேயே விட்டுவிட்டு, அமைச்சர் அப்போராட்ட பெண்கள் இருக்கும் அறைக்கு செல்கிறார்.
அமைச்சர் : “நீங்கல்லாம் திரும்ப வேலைக்கு செல்லுங்கள். நிச்சயமாக உங்களுக்கு வெகுசீக்கிரத்தில் ஒரு நல்ல முடிவை நான் சொல்கிறேன்.
ரீட்டா : “அப்படியெல்லாம் போக முடியாது. எங்களுக்கு ஒரு தீர்க்கமான உத்திரவாதம் கொடுத்தாலொழிய நாங்கள் போராட்டத்தை நிறுத்துவதாக இல்லை”
அமைச்சர் : “அரசியலில் சில நேரம் விட்டுத்தான் பிடிக்கணும்” ரீட்டா : “நாங்கள்லாம் அரசியல்வாதிகளில்லை. உழைக்கும் பெண்கள். நீங்களும் தானே?”
அமைச்சர் : “சரி குறைந்தபட்சம் இப்போதைக்கு என்ன வேணும் உங்களுக்கு?”
ரீட்டா : “வெகு சீக்கிரத்தில் சமவூதியம் தரப்படும் என்று அரசு வாக்குறுதி கொடுக்க வேண்டும். அதுவரை உடனடியாக இன்றிலிருந்தே ஆண்களுடைய ஊதியத்தில் 90 சதவீதம் அளவிற்காவது எங்களுக்கு உயர்த்திக்கொடுக்கவேண்டும்.”அதனை கூட்டத்தில் கலந்துகொண்ட மற்ற எல்லாப்பெண்களும் வழிமொழிகிறார்கள். அவர்களின் உறுதியான பேச்சு, அமைச்சரால் எதுவும் பேசமுடியாமல் திணறடிக்கிறது.
சில நிமிடங்கள் கழித்து, அமைச்சரும் ரீட்டா மற்றும் குழுவினரும் வெளியே வருகிறார்கள். பத்திரிகை நிருபர்களின்முன் அமைச்சர் அறிவிக்கிறார்,
அமைச்சர் : “போர்டு நிறுவன பெண் தொழிலாளிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில், அவர்கள் அனைவரும் ஜூலை ஒன்றாம்தேதி முதல் மீண்டும் வேலைக்கு செல்வார்கள் என்று உறுதி கூறுகிறேன். அவர்கள் உடனடியாக ஊதிய உயர்வும் பெறுவார்கள். அதாவது ஆண்கள் பெறும் ஊதியத்தில் 92 % அளவிற்கு பெண்களின் ஊதியமும் இனி இருக்கும். அதோடுமட்டுமல்லாது, அடுத்த இலையுதிர்காலத்திற்குள் சமவூதியச்சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் வாக்குறுதி கொடுக்கிறோம்.”
எல்லோரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்….
“இரண்டா” ண்டுகளுக்குப்பிறகு 1970 இல் இங்கிலாந்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக ஊதியம் வழங்கவேண்டுமென்று வலியுறுத்தி ‘சமவூதியச்சட்டம்’ நிறைவேற்றப்படுகிறது
திரைப்படத்தின் இறுதியில், போர்டு நிறுவனத்தில் 1968 இல் சமவூதியதிற்காக போராடிய பெண்கள் பேசுகிறார்கள்.
“அந்தகாலகட்டத்தில் நாங்க வேலைநிறுத்தம் செய்து போராடுவோம் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை”
“எதனைப் பெறுவதற்காக போராட்டத்தை துவங்கினோமோ, அதனைப் பெறும்வரை நம்முடைய முடிவில் உறுதியாக இருப்போம் என்று சொல்லிக்கொண்டோம்”
“நாங்கள் அவ்வளவு உறுதியாக இருப்போமென்றோ, போர்டு நிறுவனத்தையே இறங்கி வர வைக்கமுடியுமென்றோ நாங்கள் நினைக்கவேயில்லை”
“ஆனால் இறுதியில் எங்களால் எல்லாவற்றையும் செய்யமுடிந்தது”