ஸர்மிளா ஸெய்யித்தின் இரண்டு கவிதைகள்
இரத்தமூறும் காயங்களின் களிம்பு
பலசாலிகளும், கடுமையாக போரிட
பயிற்றுவிக்கப்பட்டவர்களுமாக
பெரும் சேனையொன்று
எங்களுரின் எல்லைகளை
முற்றுகையிட்டிருந்தது
தாமிழைத்த வலைகளுக்குள் சிக்கி
தப்பிக்க வழியற்ற சிலந்திகள்
புற்றுகளுக்குள் ஒழிந்திருந்த எறும்புகளுக்காக
நாங்கள் பிணையாக்கப்பட்டிருந்தோம்போரின் பண்டைய தர்மங்களையும்
ஆகமங்கள் போதிக்கும் நியாயாதிக்கங்களையும்
தளபதியுட்பட சேனையில் யாரும்
அறிந்திருக்கவோ, கடைப்பிடிக்க
பயிற்சி பெறவோயில்லை
கத்தும் குழந்தைகள், கர்ப்பிணிகள்
கூன் விழுந்து குருடான எதிர்க்கப்பலமற்ற
கிழங்களின் நெஞ்சுகளிலும்
அம்பை எய்வதற்கு அவர்கள் குறிபார்த்தனர்
செத்தல் மிளகாய் இதழ்களுடன்
மஞ்சளாய் கனிந்திருந்த எலுமிச்சைகளை
அது முற்றளோ, இளகளோ
கசக்கிப் பிழிந்து ருசிபார்த்தனர்
கூவிக் கூப்பாடிற்ற
வேலிகள், தோட்டக் காவலர்கள்
போராயுதங்களால் பதமிடப்பட்டனர்
அவர்களே அதற்கு மருந்திட்டும் காப்பாற்றினர்
இரவினதும் பகலினதும் முடிச்சுகள்
மாறிமாறி அவிழ்ந்தது ஆயினும்
நாங்கள் விடுவிக்கப்படவேயில்லை
ஊரின் எல்லைகளில் இருந்த முற்றுகை
வாசற்கதவுகளை தட்டி
எங்களையும் விழுங்க ஆரம்பித்தது
எறும்புகளின் புற்றுகளை தகர்ப்பதற்காக
அவர்கள் தயாரித்த வெடிமருந்துகளாலும்
சிக்கிச் சிதறுண்டு இறந்ததில் அதிகம்
நாங்களும் எங்களுர் மக்களும்தான்
பொறுமையை இழந்தோம்
போக்கிடமறியாது எங்களுரருக்குள்ளே
இடமாறித் திரிந்தோம்
ஆபத்து, அச்சுறுத்தல்களை
தோல்களில் சுமந்து நடந்தோம்
பேரழிவொன்றின் முடிவாக
சேனையின் வெற்றிக் கொடி
கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது
ஊரின் கதவுகள் திறக்கப்பட்டு
எங்களது விடுதலைப் பத்திரம்
உலகுக்கே கேக்குமாப்போல் வாசிக்கப்பட்டது…
நாங்களோ
எறும்புபோல இரைதேடுகிறோம்
சேனையின் வீரர்களின் வாள் உறைகளுக்குள்
கடத்தப்பட்ட களிம்புகளை தேடுகிறோம்
இன்னமும் இரத்தமூறும் எங்கள் காயங்களுக்கு….
என்னை உயிர்ப்பிக்க அழைக்கிறேன்..
இறக்கைகளை விரித்துப் பறக்கிறேன்
கிழக்கும் மேல் திசையும் எனக்கேயெனும்
பவ்விய உணர்வெனை ஆட்கொண்டுள்ளது
ஆழ்கடலும் அதன் இருளும்கூட
புலப்படுகிறதெனக்கு
அலைகள் மூடிக்கொள்ள
அதற்குமேல் மற்றோர் அலை
அதற்குமேல் மேகமென
இருளின் மேல் இருளாக காணுகிறேன்
சூரியனின் நிழல்
நீண்டு குறைவதையும் அது
குறைந்து குறைந்து இரவு ஆடையாக
பகலில் விழுவதையும் காணுகிறேன்.
அசையாதென திடமாக நம்பியிருந்த
மலைகள் நகர்வதையும்
கோளங்கள் பல சுழன்றுவர
வானிலும் தங்குமிடங்கள்
ஆக்கப்பட்டிருந்த விந்தைகளையும் ஏற்கிறேன்
இறந்த பூமி என்னை
உயிர்ப்பிக்கும் மழையைத் தேடி
இந்த அண்டமெல்லாம் அலைகிறேன்
என்னை எரித்து எரித்து
இறக்கச் செய்யும் அக்கினி
அணையாமல் சுடர்கிறது
என் சம்மதத்துடன் சிலபோதும்,
என் சம்மதேமில்லாமல் சிலபோதுமாக
என்னிலிருந்து தீ பந்தங்கள்
ஏற்றப்படுவதும் நிகழ்கிறது இயல்பாக…
என்னையும் என் அக்கினியையும் முழுவதுமாக
விழுங்கிக் கொள்ள முன்வரும் அவனிடத்தில்
எனது இறக்கைகளை சுருளமடித்து
முழந்தாழிட்டுப் பணிவதில்
துளியும் நாணமில்லை எனக்கு
இதோ என்னிரு கரங்களை விரித்து அழைக்கிறேன்
குளிர்காய்வதற்கான தீப்பந்தங்களை
ஏற்றித் தரவும் சம்மதிக்கிறேன்
என்னையும், எனக்குள் சுடர்ந்தெரியும்
அக்கினியையும் விழுங்கி
என்னை உயிர்ப்பிக்க சம்மதமா யாருக்கேணும்….