— லறீனா அப்துல் ஹக– (இலங்கை)
உன்னுடன் வாழ்வு
பிணைக்கப்பட்ட போதே – என்
பெயரை… சுயத்தை…
தொலைத்துவிட்டேன்
பின்தூங்கி முன்னெழுதல்
பூமியாய்ப் பொறுமை பேணல்
இன்னும்-
முடிவில்லாப் பல பணிகள்
எழுதாத விதியாயின
நீ-
வேண்டும் போதெல்லாம் – உனது
உணர்வுந்தலின்
வடிகாலானேன்;
உன்னில் பாதி
நானென நம்பினேன்!
அந்தோ!
எந்தன் உணர்வுகள்
கிளர்ந்தெழும் பொழுதுகளில்
நீ-
மரமானாய்;
எனது நிசிக்களில்
நிலா சூரியனானான்;
என்னுடைய விடியல்களில்
பூச்செடிகள் தோறும்
முட்களே மலர்ந்தன…
நான் –
முகமிழந்து “வெறும்” மனுஷியாய்…!
—