– ஆங்கிலத்தில்: மம்தா காலியா-
– தமிழில்: லறீனா அப்துல் ஹக் (இலங்கை)
– தமிழில்: லறீனா அப்துல் ஹக் (இலங்கை)
திருமணமுடித்து வருடங்கள் எட்டாக…
முதன்முறையாய் – எந்தன்
பிறந்தகம் சென்றேன்.
“நீ மகிழ்வோடிருக்கிறாயா?”
பெற்றோரின் கேள்வியின் அபத்தம் புரிந்து
வாய்விட்டுச் சிரித்திருக்க வேண்டும் – பதிலாய்
விம்மியழுது விட்டேன்
விம்மல்களுக்கிடையில் ‘ஆம்” என்பதாய்த்
தலையசைத்தேன்.
எனக்குச் சொல்லவேண்டும் போலிருந்தது,
செவ்வாய்க் கிழமை நான்
மகிழ்ந்திருந்தது பற்றி…
புதன்கிழமையன்று
துக்கத்துடனிருந்தது பற்றி…
ஒருநாள் 8 மணி போல்
களிப்புற்றிருந்தது பற்றி…
8.15 அளவில் நான்
இடிந்துபோயிருந்தது பற்றி…
(இப்படி எல்லாவற்றையுமே)
எனக்குக் கூறவேண்டும் போலிருந்தது.
எப்படி ஒருநாள் எல்லோருமாயொரு
முலாம்பழம் சுவைத்து
வாய்விட்டுச் சிரித்தோம் என்பதனை…
எப்படி ஒருமுறை இரவெலாம் அழுதழுது
கட்டிலில் கிடந்தேன் என்பதனை…
என்னையே நான் வெறுத்து
நொந்து வருந்துவதைத் தவிர்க்க
எவ்வாறெல்லாம் போராடினேன்
என்பதனை…
பன்னிருவர் வாழுமொரு குடும்பத்தில்
மகிழ்வுடன் வாழ்வது இலகுவல்ல
எனுமொரு சேதியினை…
(இப்படி அனைத்தையும்)
சொல்லவேண்டும் போல்
இருந்தது எனக்கு.
ஆனால்… அவர்களோ
ஆட்டுக் குட்டிகளாய்த்
துள்ளித் துள்ளியோடும்
என்னிரண்டு பிள்ளைகளையே
வைத்தவிழி வாங்காது
பார்த்தபடி இருக்கக் கண்டேன்.
சுருக்கங்களோடும் கைகள்…
சோர்ந்துபோன வதனங்கள்…
பழுப்புநிற இமைமயிர்கள்…
இவையெல்லாம்…
நம்பவே முடியாதளவு
இயல்பாகவே இருந்தன.
எனவே நான்…
அனைத்தையும் விழுங்கியவளாய்
மிகவும்
திருப்தியானதொரு புன்னகை பூத்தேன்!