புதியமாதவி மும்பை
“மக்கள் அவர்கள் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு கேம்ப் பகுதிக்கு வந்தாக வேண்டும். இக்காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்க அரசு பேருதவி செய்ய தயாராக இருக்கிறது. சரணடைய மறுக்கும் கிராமங்கள் தீக்கிரையாக்கப்படும். இந்தச் செய்தியை ஊடகத்திற்கு எடுத்துச் செல்ல முனையும் பத்திரிகையாளர், செய்தியாளரைக் கண்ட இடத்திலேயே சுட்டுத்தள்ளுங்கள்…..” |
“மக்கள் அவர்கள் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு கேம்ப் பகுதிக்கு வந்தாக வேண்டும். இக்காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்க அரசு பேருதவி செய்ய தயாராக இருக்கிறது. சரணடைய மறுக்கும் கிராமங்கள் தீக்கிரையாக்கப்படும். இந்தச் செய்தியை ஊடகத்திற்கு எடுத்துச் செல்ல முனையும் பத்திரிகையாளர், செய்தியாளரைக் கண்ட இடத்திலேயே சுட்டுத்தள்ளுங்கள்…..”“மக்கள் அவர்கள் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு கேம்ப் பகுதிக்கு வந்தாக வேண்டும். இக்காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்க அரசு பேருதவி செய்ய தயாராக இருக்கிறது. சரணடைய மறுக்கும் கிராமங்கள் தீக்கிரையாக்கப்படும். இந்தச் செய்தியை ஊடகத்திற்கு எடுத்துச் செல்ல முனையும் பத்திரிகையாளர், செய்தியாளரைக் கண்ட இடத்திலேயே சுட்டுத்தள்ளுங்கள்…..”“மக்கள் அவர்கள் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு கேம்ப் பகுதிக்கு வந்தாக வேண்டும். இக்காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்க அரசு பேருதவி செய்ய தயாராக இருக்கிறது. சரணடைய மறுக்கும் கிராமங்கள் தீக்கிரையாக்கப்படும். இந்தச் செய்தியை ஊடகத்திற்கு எடுத்துச் செல்ல முனையும் பத்திரிகையாளர், செய்தியாளரைக் கண்ட இடத்திலேயே சுட்டுத்தள்ளுங்கள்…..” இந்த அதிகார வர்க்கத்தின் குரல் வந்தது ஈழத்தில் இருந்து அல்ல. இந்தியாவிலிருந்து இந்திய மக்களுக்கு எதிராக வந்தக் குரல்தான் இது. பிஜப்பூரின் காவல்துறை அதிகாரி தனக்கு கீழ் பணி புரியும் காவல்துறைக்கு வயர்லஸ் மூலமாக பிறப்பித்த உத்தரவு… அதிகாரியின் பெயர் டி. எஸ். மன்ஹர்.
கண்ணுக்குத் தெரியாத போர்க்களம் இது. இங்கே அந்நிய சக்திகளின் ஊடுருவல் இல்லை. எல்லைக்கோடுகளின் பிரச்சனைகள் இல்லை. எந்த ஒப்பந்தங்களும் மீறப்பட்டு விட்டதாய் அடிக்கடி சொல்லப்படும் அபத்தமான காரணங்கள் கூட இல்லை. ஆனால் இந்திய அரசு தன் சர்வ வல்லமைப் படைத்த இராணுவ, போலீஸ், எல்லைப் பாதுகாப்பு படைகளை ஏவி இந்த மக்களுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கிறது.
யார் இவர்கள்?
இவர்களை இப்படி வேட்டை நாயாக இந்திய அரசு துரத்தி துரத்தி விரட்டுகிறதே? ஏன்? எவருக்காக நடக்கிறது இந்தப் போர்? இவர்கள் செய்தப்பாவம் எல்லாம் உங்களையும் என்னையும் போல ஒரு நகரத்திலோ நகரமயமாகும் கிராமத்திலோ பிறக்காமல் வனங்களில் பிறந்தது மட்டும் தான். அதுவும் அந்த வனப்பிரதேசம் இந்திய மண்ணின் இயற்கை வளங்களை, தாதுப்பொருட்களை அதுவும் வல்லரசுகளுக்கு வல்லரசுகளாகவே தொடர தேவையான தாதுப்பொருட்களை தன் வேர்களின் அடியில் கொண்டு இருப்பதுதான் காரணம்.
கிராமம் கிராமமாக இந்த மலைப்பிரதேச மக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து துரத்தப்படுகிறார்கள், பிச்சைப்போடுவது போல எப்போதாவது அவர்களுக்கு இழப்பீடு தொகை என்ற பெயரில் எலும்புத்துண்டுகள் வீசப்படுகின்றன. குடும்பம் குடும்பமாக
மக்கள் அதிகாரவர்க்கத்தின் ஆணையை மீறமுடியாமல் வெளியேறுகிறார்கள். பெரும்பாலோர் பெருநகரங்களில் கூலிகளாக, அவர்கள் பெண்டிர் பலாத்காரமாக பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் வாழ்வாதாரமான நிலம் அவர்களிடமிருந்து அபகரிக்கப்படுகிறது. அவர்கள் வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே பெருமுதலாளிகளுக்காக இந்தக் கங்கானி வேலையைச் செய்கிறது. அவர்களுக்கு அவர்கள் பாதுகாப்புக்கு என்று எந்த இந்தியச் சட்டமும் இல்லை அவர்களைத்தான் இந்திய அரசு மாவோயிஸ்டுகள் என்று சொல்கிறது.
நேற்றைய (15/9/11) டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கூட நம் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அலறுகிறார்.. “தீவிரவாதிகளை விட மாவோயிஸ்டுகளால் இந்தியாவுக்கு இருக்கும் ஆபத்து மோசமானது” என்று.
அஹிம்சை வழியில் சுதந்திரம் வாங்கியதாய் அறுபது வருடங்களாய் சரித்திரப்பாடம் நடத்தி வெற்றி கண்ட இந்திய அரசு இவர்களைக் கண்டு பயப்படுகிறதாம்! இந்தியக்குடியரசுக்கு இவர்களால் பேராபத்தாம்! ஜன்னி கண்டவன் பிதற்றுவது போல தங்கள் வாழ்வாதரங்களுக்காய் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டவர்களைக் கண்டு வல்லரசு ஆகப்போகும் இந்தியக்குடியரசு
“ஆபத்து ஆபத்து ” என்று அலறுகிறது.
வில்லும் அம்பும் ஆயுதமாக ஏந்திய தோள்களில் கலவரத்தின் போது கையகப்படுத்தப்பட்ட துப்பாக்கிகளுடன் அந்தக் காட்டுமனிதர்கள் திரிகிறார்கள். அவர்களை அடக்க இந்திய அரசின் செண்ட்ரல் ரிசர்வ் போலீஸ் படை, எல்லைப் பாதுகாப்பு படை, இந்திய திபேத்திய எல்லைப் பாதுகாவல் போலீஸ் படை என்று தன் இராணுவப்படைகளைக் குவித்திருப்பது போதாது என்று இந்திய வான்படை தற்காப்புக்காக அவர்களை எப்போது வேண்டுமானாலும் சுட்டுத்தள்ளும் அதிகாரத்துடன் வலம் வருகிறது. இந்திய அரசு இந்தியக் குடிமக்களை தன் சொந்த இராணுவப்பலம் கொண்டு அடக்குவதுடன் அவர்களை அவர்கள் மண்ணிலிருந்து விரட்டி பாக்சைடு சுரங்க முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கிறது.
தண்டகாரண்ய காடுகளில் 19 மாவோயிஸ்டுகளைச் சுட்டுக்கொன்றுவிட்டதாக சொன்ன போலீஸ் அதிகாரியிடம் “இவர்கள் மாவோயிஸ்டுகள் என்பதற்கான அடையாளம் என்ன?” என்ற கேள்விக்கு அந்த அதிகாரி சொன்ன பதில்: “அவர்களிடம் மலேரியா வியாதிக்கு மருந்துகளும் டெட்டால் பாட்டில்களும் இருந்தன” என்பதுதான். இந்தச் செய்தியை எந்த 24 மணிநேர தொலைக்காட்சியும் காட்டுவதில்லை. எந்தப் பத்திரிகையும் இச்செய்திகளை செய்திகளாக்குவதில்லை. செய்தி ஊடகங்கள் அனைத்தும் அதிகார வர்க்கத்தின் நலன் பேணுவதில் கூட்டுக்களவாணிகளாக இருக்கின்றன.
ஊடகங்கள் தனியார் நிறுவனங்களின் கைப்பாவைகளாக இருக்கின்றன. செய்திகளை அவர்கள் உடனுக்குடன் வெளிக்கொண்டுவருகிறார்கள் என்பதுடன் செய்திகளையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள் என்பது தான் நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான
செய்தி. மே, 2010ல் மேற்கு வங்கம் ஜார்க்கிராம் பகுதியில் நடந்த ரயில் விபத்தும் அதில் 150 பேர் பலியானதும் உண்மையானச் செய்தி. ஆனால் அதற்கு காரணமானவர்கள் மாவோயிஸ்டுகள் என்பது ஊடகங்கள் உருவாக்கிய செய்தி. அந்தச் செய்திக்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.
ஆதாரமற்ற அந்தச் செய்தியினைக் கொண்டு கற்பனையில் உருவாக்கப்பட்ட செய்தி:”மாவோயிஸ்டுகள் தாங்கள் கொலை செய்த போலீஸ்காரரின் உடலைச் சிதைத்து… ” என்று கொடூரக்கற்பனைகளைத் தன் முதல் பக்கத்தில் கொட்டு எழுத்துகளில் அச்சிட்டு பரபரப்பான விற்பனைக்கு வழி வகுத்துக் கொள்கிறது. ஆனால் ‘இது உண்மையல்ல” என்று போலீஸ் நிர்வாகமே மறுப்பு கொடுத்தச் செய்தியை மட்டும் தபால்தலை அளவுக்கு சின்னதாக தன் பக்கங்களுக்கு நடுவில் எங்காவது புதைத்து வெளியிடுகிறது.
ஒரிசா மாநிலத்தில் ராயக்கடா மாவட்டத்தில் , டிசம்பர் 2000ல் ஹிண்டல்கோ கம்பேனியை (Hindalco – Birla grp) எதிர்த்து (Prakrat Sampad Suraksha Parisad – PSSP) இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். ஒரிசாவில் அதிகமாக இருக்கும் பாக்சைடு தான் ஹிண்டல்கோ , மிட்டல், டாடா, ஜிண்டால், எஸ்ஸார், பாஸ்கோ, ரியோ டிண்டோ, வேதாந்தா என்று பல முதலாளித்துவ முதலைகளின் பசிக்கு ஒரிசாவைத் தீனியாக்க துடித்தது. இந்திய அரசும் வழக்கம்போல பெருமுதலைகளின் பசி ஆற்றவே முன்வந்தது. 15 டிசம்பர் 2000ல் வெளியூரிலிருந்து லாரிகளில் ஆட்களைக் கொண்டு வந்து பாக்ஸைடு சுரங்கங்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியது பணமுதலைகள். அங்கிருந்த ஆதிவாசிகள் அவர்களை விரட்டி அடித்தனர். ஆயுதம் தாங்கிய சிறப்புக் காவல்படை வந்திறங்கியது,. 3 ஆதிவாசிகள் காவல்படையின் துப்பாக்கிச் சூட்டில் பலியானர்கள். அவர்களின் நினைவாக இன்றும் குச்சைய்படர் (Kuchaipadar) கிராமத்தில் கறுப்புக்கொடி ஏற்றுகிறார்கள். அதுவும் இந்திய பேரரசின் சுதந்திரதினமான ஆகஸ்டு 15லும் , குடியரசு தினமான ஜனவரி 26 லும் கறுப்புக்கொடி ஏற்றப்படுகிறது.
தண்டகாரண்ய காடுகளில் மருத்துவமனைகள் கிடையாது. இந்தியாவிலேயே ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் இங்கே தான் பிறந்து வளர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். கல்விக்கான பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. ஆனால் மாணவர்களோ ஆசிரியர்களோ கிடையாது. ஆசிரியர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்காமலேயே மாதச் சம்பளம் கிடைக்கிறது. பள்ளி கூடங்களில் இந்திய அரசின் சீருடை அணிந்த போலீஸ் பாதுகாப்புபடை பத்திரமாகத் தங்கி இருக்கும் கூடாரங்களாக மாற்றப்பட்டுவிட்டன. அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை எல்லாம் அந்தந்த கிராமத்து மக்களை அவர்கள் இருப்பிடத்திலிருந்து விரட்டுவது தான்.
இந்திய அரசு அவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கிறது. எதற்காக தெரியுமா? அவர்கள் எத்தனைப் பேரைச் (மாவோயிஸ்டுகளை) சுட்டுக்கொல்கிறார்களோ அதற்கேற்ப அவர்கள் ஊக்கத்தொகையும். அதனாலேயே கிணற்றிலும் குளத்திலும் காட்டிலும் மேட்டிலும் தெரு முனையிலும் திரிந்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை விரட்டி விரட்டிக் கொலை செய்கிறது. அப்படிக் கொலைச் செய்யப்பட்டவர்கள்
மாவோயிஸ்டுகள் தான் என்று நிருபீக்க போலீசே மாவோயிஸ்டுகள் சீருடையை அவர்களுக்கு அணிவித்து காவல் நிலையத்தில் காட்டி சன்மானம் பெற்ற பின் அவர்கள் உடலை வீசி எறிகிறது…! அப்படிக்கொலை செய்யப்பட்டவர்களின் இறந்த உடலை வாங்க அவர்கள் வாகனத்தின் பின்னாலேயே ஓடும் தாயின்/ சகோதரியின்/மனைவியின் அவலம்.. வார்த்தைகளுக்குள் அடங்காது.
இதை எல்லாம் இந்திய அரசு யாருக்காக செய்கிறது? ஏன்? இந்தக் காடுகளில் மலைகளில் மண்ணடியில் புதைந்துக்கிடக்கும் இயற்கை தாதுப்பொருட்களுக்காக. அதிலும் குறிப்பாக பாக்சைடு பாக்சைடிலிருந்து அலுமினியம் தயாரிக்கப்படுகிறது. ஒரு டன் அலுமினியம் தயாரிக்க ஆறு டன் பாக்சைடு தேவைப்படுகிறது. அதுமட்டுமல்ல, ஆயிரம் டன்களுக்கு அதிகமான தண்ணீரும் அதிகமான மின்சாரமும் தேவைப்படுகிறது. இதனால் தான் இக்காடுகளில் பெரிய அணைக்கட்டுகள் கட்டப்பட்டு நீர்த்தேக்கி வைக்கப்படுகிறது. யாருக்காக எதற்காக இவ்வளவு அலுமினியம் தயாரிக்க வேண்டும்? இந்த அலுமினியம் தான் ஆயுதம் தயாரிக்கும் தொழிலில் மிக முக்கியமான ஒரு கலவைப் பொருளாக இருக்கிறது. இந்த அலுமினியம் தயாரிப்பில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் மேற்கத்திய நாடுகள் இந்த தயாரிப்பு வேலைகளைச் செய்ய இந்திய போன்ற நாடுகளைக் குத்தகைக்கு எடுத்திருக்கின்றன.
இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் சோனியகாந்தியின் கைப்பாவை..! என்று தலையங்கம் எழுதி சில பத்திரிகைகள் புரட்சியாளர்களாய் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றன. ஆனால் அந்தப் புரட்சியாளர்களும் வெளிப்படையாக தெரியும் இச்செய்திக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வேறு சில நிஜங்கள். மேற்கு வங்க நிதி அமைச்சராக இருந்த அசோக் மித்ரா தன் வாழ்க்கை வரலாற்றை எழுதும் போது ஒரு உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்.கைதவறிப் போட்டதா? இல்லைக் காட்டுக்கொடுத்தக் காரியமா? தெரியவில்லை!
1991ல், இந்திய அரசு தன் பொருளாதர சரிவை சமாளிக்க உலக பன்னாட்டு நிதி நிறுவனத்திடம் (International monetary fund) கடன் கேட்கிறது. அந்நிறுவனம் இரண்டு நிபந்தனைகளை வைக்கிறது. ஒன்று பொருளாதர சீர்திருத்தம் (அதாவது தாராளமயம், தனியார்மயம்) இரண்டாவது மன்மோகன்சிங்கை இந்தியாவின் நிதித்துறை அமைச்சராக்க வேண்டும்! சாட்சாத் அதே மன்மோகன்சிங் அவர்கள் தான் இப்போது இந்தியாவின் பிரதமராகவே இருக்கிறார். வெள்ளை வேட்டி பளபளக்க டில்லியில் வலம் வரும் உள்ளாட்சி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் நாளை ஒருவேளை பி.ஜே.பி யோ அல்லது மூன்றாவது கூட்டணியோ யார் ஆட்சிக்கு வந்தாலும் அப்போதும் அமைச்சராக வலம் வரக்கூடும். அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
கர்நாடக அரசின் லோகாயுத அறிக்கைப்படி, சுரங்கத்தில் எடுக்கப்படும் ஒரு டன் இரும்புக்கு அரசுக்கு கிடைக்கும் தொகை ரூபாய் 27/ சுரங்க முதலாளிக்கு கிடைக்கும் தொகை ரூபாய் 5,000/. பாக்சைடு சுரங்கங்களில் சுரங்க பெரு முதலாளிகளுக்கு கிடைக்கும் தொகை இதைவிட பலமடங்கு! இந்தப் பணம் தான் இந்தியாவில் ஒரு கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தை உருவாக்கி ஆட்சி செய்கிறது.
இந்தியாவில் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாராளுமன்றத்தைவிட வலிமையானது கார்ப்பரேட் ராஜ்யம். பணமுதலைகளின் பன்னாட்டு கருப்புப்பணப் பேரரசு. இந்தக் கார்ப்பரேட் ராஜ்யம் பண்டித ஜவஹர்லால் நேருவின் காலத்திலேயே இலைவிட்டது
என்று சொல்லலாம். உண்மையில் இதன் வளர்ச்சி இன்னொரு ராஜியமாகி இந்திய அரசுக்கே ஆப்பு வைக்கும் என்கிற கலக்கம் நேருவுக்கு இருந்ததோ என்னவோ… நேரு இங்கிலாந்தின் பொருளாதர நிபுணர் நிக்கலோஸ் கால்டரின் தலைமையில் ஓர் ஆய்வுக்குழுவை ஏற்படுத்தினார். பெரும்பணக்காரர்களின் ஆண்டு உயர் வருமானத்தில் 75 விழுக்காடு நேரடியாக வருமானவரியாக வசூலிக்க வேண்டும் என்ற பரிந்துரையை அரசு ஏற்றது. 1956 ஆம் ஆண்டில் செல்வவரி, நன்கொடை வரி, இறப்பு வரி, செலவு வரி, மூலதன இலாப வரி (Wealth tax, gift tax, expenditure tax, capital gains tax) என்ற துணைவரிகளை விதித்து வரி ஏய்ப்பைத் தடுக்கலாம் என்று கால்டர் குழு வலியுறுத்தியது. ஆனால் காலப்போக்கில் இந்த வரிகளில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. உலக மயமாதல், தாராள மயமாதல், தனியார் மயமாதல் என்று இந்தியாவின் பாதை திரும்பிய காலக்கட்டத்தில் நடுவண் அரசு (கவனிக்க IMF ன் நிபந்தனைகளை) பல்வேறு வரிச்சலுகைகளை அள்ளி அள்ளி வழங்கி இருக்கிறது.
மத்திய அரசின் தணிக்கை அறிக்கையின்படி, 2010ஆன் ஆண்டில் மட்டும் நிறுவன வரிக்கு வழங்கபட்ட சலுகையால் அரசிற்கு ஏற்பட்ட நிதியிழப்பு ரூபாய். 35000 கோடி. 1990 முதல் 2010 வரை மத்திய அரசு வழங்கியுள்ள வரிச்சலுகை 100 இலட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
மேற்கண்ட அபரிதமான வரிச்சலுகைகளைப் பெற்றவர்களுக்கும் அதாவது தனியார்மய ஜாம்பவான்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையே எந்தச்சக்திகளாலும் உடைக்க முடியாத பிரிக்க முடியாத ஓர் உறவு இருக்கிறது. அதாவது கள்ளத்தனமான உறவு வலுவாக இருக்கிறது. இந்த secretive society தான் இந்தியாவை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆண்டுக்கொண்டிருக்கிறது. அரசின் கோட்பாடுகளை, விதிகளைத் தீர்மானிக்கும் சக்திவாய்ந்தது இந்தக் கார்ப்பரேட் சாம்ராஜ்யம்.
திரைப்படம், ஊடகம், மத நிறுவனங்கள், இங்கெல்லாம் இவர்களின் பெரும்பணம் புகுந்து விளையாடிக்கொண்டிருக்கிறது. இந்த அபரிதமான பெரும் பணப்பெருக்கத்தைக் கொண்டுதான் இந்தியாவின் தேர்தல் ஓட்டுகளை, அரசாங்கத்தை, நீதித்துறையை, தொலைக்காட்சிகளை, பத்திரிகைகளை, தொண்டு நிறுவனங்களை, கல்லூரிகளை, பல்கலை கழகங்களை, விளையாட்டுகளை (குறிப்பாக கிரிக்கெட்) மருத்துவமனைகளை…. என்று அனைத்தையும் தன் கையகப்படுத்தி இருக்கிறது கார்ப்பரேட் சாம்ராஜ்யம்.
இவைகளை எல்லாம் அறிந்துக்கொள்ளும் வசதியும் ஆற்றலும் கொண்ட அறிவுசார்ந்த /படித்த நடுத்தர வர்க்கம் இந்தக் கார்ப்பரேட் ராஜ்யங்களின் சமஸ்தானங்களை கட்டி மேய்க்கின்ற வேலையை திறன்பட செய்கிறார்கள். படித்த நடுத்தர வர்க்கம் இன்றைக்கு பல ஆயிரங்களில் மாத ஊதியம் பெறுகின்ற பெரும் பேற்றை அடைந்திருப்பதற்கு இந்தக் கார்ப்பரேட் சாம்ராஜ்யங்கள் காரணமாக இருக்கின்றன. இந்த நடுத்தர வர்க்கம் தான் அந்தக் கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தின் தாராளமய தனியார்மய சந்தையின் நுகர்வோராகவும் இருக்கிறார்கள். கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தின் பணம் இப்படி சுழற்சி முறையில் அவர்கள் கஜானாவுக்கு மீண்டும் வந்தடைகிறது
.
எனவே தான், இந்தப் போராட்டக்களத்தில் நிற்பவ்ர்கள் ஆதிவாசிகளாகவும் சட்டத்திற்கு எதிராக செயல்படும் அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள்
ஆபத்தான மாவோயிஸ்டுகள் என்றும் , தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
ஆய்தப்போராட்டம் எதற்கும் தீர்வாகிவிட முடியாது. அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று சில அறிவுஜீவிகள் சொல்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் மாவோயிஸ்டுகள் சொல்லும் பதில் ஒன்றுதான். முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள். உங்கள் சிதம்பரத்திடம் சொல்லுங்கள் பசுமைவேட்டையை நிறுத்து என்று!
அந்த வனப்பகுதியிலிருந்து ஒலிக்கிறது அவர்களின் குரல்:
நம்மை இன்று அதிகாரம் செய்பவர்கள் ஒரு காலத்தில் நமக்குப் பக்கத்தில் வசிப்பதற்காக வந்தார்கள். நாம் அவர்களுக்குப் பழங்களையும் கிழங்குகளையும் கொடுத்தோம். நமது தாய்கள் அவர்களுக்குப் பால் கொடுத்தனர். நமது தந்தையர் அவர்களுக்கு உணவு கொடுத்தனர். வந்தவர்கள் வெறும் கையொடு வந்தார்கள் இன்றைக்கு அவர்கள் பன்னாட்டுக் கம்பேனிகளின் பங்குதாரர்கள். அவர்களது அரண்மனை போன்ற வீடுகளை அலங்கரிக்க நமது தலைகளைக் கேட்கிறார்கள். அவர்கள் அதைக் கேட்பது வெறும் வாழ்தலுக்காகத்தான் என்றிருந்தால்
அதையும் கொடுத்திருப்போம் பலியிடுதலின் மரியாதை தெரிந்தவர்கள் நாங்கள் என்ற வகையில்.அவர்களது உல்லாசத்துக்கு நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்க மாட்டோம்
அநீதிக்கு எதிராக எங்கள் கருத்தை உயர்த்த உயர்த்த போலீஸ் பூட்ஸ் கால்களின் சத்தமும் ஆபாசமான குற்றச்சாட்டுகளும் பல்கிப் பெருகி பயமுறுத்துகின்றன.
ஆமாம் நாம் அங்கிருக்கும் வரையிலும் நமது கடைசி மூச்சுவரை இசைக்கருவியின் அலுத்துப்போன தந்திக்கம்பிகளை
ஒழுங்கமைப்போம்.
அப்போதுதான் ந்மது வாழ்வையும் இருத்தலையும் உயர்த்திப் பிடிக்க முடியும்
கட்டுரைக்குத் துணைநின்ற நூல்கள்:
1.அருந்ததிராய் – Broken republic
2.சிந்தனையாளன் -ஜூலை 2011
3.பாடல் : அஞ்சையா, கோயா மலைப்பகுதி: இந்திரனின் கடவுளுக்கு முன்பிறந்தவர்கள் ஆதிவாசிக்கவிதைகள் தொகுப்பிலிருந்து.
நெஞ்சத்தை உலுக்கும் ஆழமான எழுத்து. “பேசாப் பொருளினைப் பேசி”யுள்ள கட்டுரையாளர் மிகுந்த போற்றுதலுக்கு உரியவர். அநீதிக்கு எதிரான குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் ஊடறுவுக்கு ஒரு சபாஷ்!
மிக்க அன்புடன்,
லறீனா அப்துல் ஹக்.