இவ்வருடத்தில் 7000 சிறுவர் துஷ்பிரயோகம் –

சந்தியா (யாழ்ப்பாணம்)

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இந்த வருடம் கிடைத்திருப்பதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். சொந்த தந்தைகள், பாதுகாவலர்கள், அறிந்தவர்கள் ஆகியோரினாலேயே அதிகளவிலான துஷ்பிரயோகங்கள் இச்சிறுவர்களுக்கு  மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கான  முறைப்பாடுகள்  கிடைத்திருப்பதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்தது.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக புகார் தெரிவிக்க விசேட தொலைபேசி இணைப்பு சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அநேகமான முறைப்பாடுகள் இந்தத் தொலைபேசி சேவையூடாகவே கிடைத்திருப்பதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவியான அனோமா திசாநாயக்க கூறியுள்ளார்.அரசியல் ரீதியான தொடர்புகளை கொண்டவர்களும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்ற போதிலும் சந்தேகநபர்கள் கொண்டிருக்கும் அரசியல் ரீதியான தொடர்புகளினால் இத்தகைய சம்பவங்கள் வெளிவருவதில்லையெனவும் அவர் கூறியுள்ளார். 15 வயதுடைய இரு சிறுமிகள் தமது காதலர்களினால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸாருக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.  தலை நகரிலிருந்து தூர இடத்தில் இந்த இரு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இதேபோன்ற சம்பவம் கடந்த வாரமும் இடம்பெற்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பொலிஸாரிடம் இவ்வகையான  துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுவது அதிகரித்துவருவதாக அனோமா திசாநாயக்கா தெரிவித்தார். இதேவேளை சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராகக் கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக மகளிர் சிறுவர் நலனோம்பல் விவகாரத்துக்குப் பொறுப்பான அமைச்சர் திஸ்ஸ கரலியத்த சிங்குவா செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.  அதேவேளை, நடைமுறையிலிருக்கும் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவர அரசு கருதுவதாகவும் அதற்கான முனைப்புக்களில் தாம் ஈடுபட்டிருப்பதாகவும்  அமைச்சர் தெரிவித்துள்ள போதிலும் சிறுவர்களுக்கான வன்முறைகளும் துஸ்பிரயோகங்களும் நாளுக்கு நாள் நாள் அதிகரித்தே வருகின்றது.

  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *