இந்நாடகத்தின் நோக்கம் எழுத்தாளர் பாமா எழுதிய மொளகாப்பொடி என்னும் கதையை மையமிட்டதாகும். இக்கதை பாமா எழுதிய “ஒரு தாத்தாவும் எருமையும்” என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறுகிறது. கதையில் வரும் கெங்கம்மா கதாப்பாத்திரம் சமூக தளத்தில் மேல்மட்டத்திலிருக்கும் நிலவுடைமையாளர்களுக்கான தொனியை, அவள் தன் கணவனுக்கு பிறந்த மகனை படுத்தும் பாட்டில் விளக்குகிறது நாடகம் |
இந்நாடகத்தின் நோக்கம் எழுத்தாளர் பாமா எழுதிய மொளகாப்பொடி என்னும் கதையை மையமிட்டதாகும். இக்கதை பாமா எழுதிய “ஒரு தாத்தாவும் எருமையும்” என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறுகிறது. கதையில் வரும் கெங்கம்மா கதாப்பாத்திரம் சமூக தளத்தில் மேல்மட்டத்திலிருக்கும் நிலவுடைமையாளர்களுக்கான தொனியை, அவள் தன் கணவனுக்கு பிறந்த மகனை படுத்தும் பாட்டில் விளக்குகிறது நாடகம். அதுமட்டுமல்லாமல் கெங்கம்மா ஊரையே அலைகழித்து வருகிறாள். ஊரில் இருப்பவர்களும் இவள் வரும் திசையைக் காண்டாலே தலைதரிக்க ஓடிவிடுகிறார்கள். இதற்கெல்லாம் அவளுக்கிருக்கும் சொத்துக்களும்; அவளுடைய உடல்பருத்திருக்கும் – தோற்ற பெருக்கமும் கதையில் வருவதைப் போலவே நாடகக்காட்சிகளிலும் இடம்பெறுபடி செய்திருப்பத்தில் ஸ்ரீஜித் வெற்றி பெற்றிருக்கிறார். அதற்கான பாத்திரத்தை கையிலெடுத்த தாயம்மாரம்யாவின் நடிப்பும் நம்மை வியக்கவைக்கின்றன. ஆனால் அவ்வூரில் இருக்கும் பச்சையம்மாள் மட்டும் கெங்கமாளைக் கண்டு கொஞ்சமும் அலட்டிக்காதவளாக இருக்கிறாள். நாடகத்தில் பச்சையம்மாளின் (லிவிங் ஸ்மைல்வித்யா) அறிமுகம் ஒரு கதாநாயகியின் அறிமுகத்தைப் போல கொண்டாட்டத்துடன் துவங்குவது பார்வையாளர்களை நாடகத்திற்குள் சட்டென்று இழுத்துவிடச் செய்யும் உத்தியாகக் கையாளப்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் பச்சையம்மாளும் அவளது கூட்டாளிகளும் கெங்கம்மாளின் கழனிமேட்டில் காய்ந்துகிடக்கும் புல்லை அறுப்பதைப் பார்த்து கெங்கம்மா பெருங்கோபங்கொண்டு பச்சையம்மாளின் கண்ணில் மொளகாப்பொடியினை தூவிவிடுகிறாள். கெங்கம்மாளின் இக்கொடுரமான செயலுக்குப் பிறகு அவளை ஊரில் இருப்பவர்கள் அனைவரும் மொளகாப்பொடி… மொளகாப்பொடின்னு… … கேளி பேச ஆரம்பிக்கின்றனர். அதற்குப் பிறகு கெங்கம்மாளை ஊர் தெருவில் யார் எங்கு பார்த்தாளும் மொளகாப்பொடி… மொளகாப்பொடின்னு…. கேளியும் கிண்டலுமாகப் பேசி அவளை அவமானப்படுத்துகின்றார்கள். அதற்கான காட்சியமைப்புகளை காலம்காலமாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களின் எதிர்வினையாக, நாடக அரங்கில் காட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார், நாடகத்தை நெறியாள்கைச் செய்திருக்கும் ஸ்ரீஜித் சுந்தரம்.
பச்சையம்மாளின் தூண்டுதலின் பேரில் ஊரிலிருக்கும் அனைவரும் கெங்கம்மாளை கிண்டல் செய்து பேசுவதை நினைத்து கோபங்கொண்ட கெங்கம்மா பச்சையம்மாளை பெரிய அளவில் தண்டிக்க தக்க தருணத்தை எதிர்பார்த்து கருவிக்கொண்டிருக்கிறாள். அச்சமயமும் அவளுக்கு வாய்க்கிறது. பச்சையம்மாளும் அவளுடன் சென்ற அவளது கூட்டாளிகளும் ஒரு நாள் கழினிவெளியில் வேலையிலாத கவலையோடு, இரவு சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று யோசித்தப்படி செல்ல, பச்சையம்மாள் அங்கு விளைந்திருக்கும் பருத்திகளைப் பறிக்கத்தொடங்கி விடுகிறாள். அவளைப்பார்த்து அவளுடன் வந்தவர்களும் காய்ந்தப் பருத்திக்காய்களை பறிக்கத்தொடங்க – அந்நேரம் பார்த்து கெங்கம்மாள் அங்கே வருகிறாள். இவர்கள் செய்யும் திருட்டு வேலையைப் பார்த்ததும் இதுதான் சமயம்என, ஊர் தெருவுக்கு வந்திருக்கும் போலிஸ்காரர்களுக்கு இலஞ்சம் கொடுத்து கழனிகாட்டுக்கே கூட்டுவந்து, இவர்களை போலிஸில் பிடித்துக் கொடுத்துவிடுகிறாள். போலிஸ்காரன் கெங்கம்மாவின் டேக்டர் வண்டியிலேயே இவர்கள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு டேஷனுக்கு புறப்படுகிறான். வழியில் பச்சியம்மாள் அவசரத்துக்கென வண்டியை நிறுத்தச்சொல்லியும், “வண்டி எங்கேயும் நிற்காது எல்லா அவசரத்தையும் டேஷன்ல போயிப்பாத்துக்கலாம்” என்று சொல்லி நேராக போலிஸ்டேஷன் வந்ததும் இவர்களை இறக்கிவிட்டுகிறான். அங்குவரும் இண்ஸ்பெக்டர் இவர்களிடம் எதையும் விசாரிக்காமல் ஆளுக்கு பத்து ரூபாய் தண்டம் (இலஞ்சம்) கட்டினால்தான் வீட்டுக்குப் போகமுடியும் என்று மிரட்டுகிறான். அங்கேயும் பச்சையம்மாள், எங்களிடம் பத்து ரூபாய் இருந்தால் நாங்கள் ஏன் இந்த பருத்திக்காய்களை திருடப்போறோம் என்று பதிலடித்தருகிறாள். எவ்வளவு சொல்லியும் கேட்காத – இவர்களின் அவசரத்தையும் கூட பொருட்படுத்தாத போலீஸ்காரனையும், அவன் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆதிக்க சமூகத்தினரை எதிர்நிலையில் வைத்து அவர்களுக்கான எதிர்வினையாக பச்சையம்மாளும் அவளுடன் வந்த தலித்பெண்களும் அடக்கமுடியாத ஆத்திரத்தை மூத்திரமாக டேஸனில் ஓடவிட்டபடி – மொத்தமாக நின்று யாருடைய கழனி, யாருடைய உழைப்பில் விளைந்தது யாரெல்லாம் காவல்காரர்களாக இருப்பது என்ற ஒட்டுமொத்த சமூகத்தின் மீதுமான கேள்வியை எழுப்பும் பொழுது, நாடகம் நிறைவடைகிறது.
சித்திரைசேனனின் இசையும் இன்குலாபின் பாடல்வரிகளும் விக்டர், அஸ்வினிகாசி ஆகியோரின் ஒளியமைப்பும் மற்ற நவீன நாடகங்களிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருப்பதோடு, நாடகத்தின் பொருண்மைக்கும், புரிதலுக்கும் வெகுவான பங்களிப்பை செய்திருக்கின்றன. பாமாவின் கதையில் வரும் வசனங்கள் நாடகத்தில் அப்படியே கையாளப்பட்டிருப்பது பாராட்டுதற்குரியதாகிறது. அதற்கேற்ற பாடல்வரிகளை தந்திருக்கும் கவிஞர் போற்றுதலுக்குரியவர்.
இந்நாடகத்தின் தனித்துவமே இதன் சிறப்புக்கு முக்கிய காரணம். இதில் பங்கெடுத்திருக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் வெவ்வேறு சமூக சூழ்நிலைகளை அனுபவப்பூர்வமான உணர்ந்தவர்கள் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. இப்படிப்பட்ட ஒரு நாடகக்குழுவையும் ஒருங்கிணைக்க முடியும் என்று சாதித்திருக்கிறார் ஸ்ரீஜித். இது இவர்களின் முதல் முயற்சி. முதல் முயற்சியிலேயே குறைந்தது மூன்று மாத காலங்களில் பத்து அரங்குகளைக் கண்டக்குழு அனேகமாக கட்டியக்காரிக் குழுவாகத்தான் இருக்கும். இதில் வரும் கட்டியக்காரிகள் பல தளங்களிருந்து வரும் ஆண்கள், பெண்கள் அவரவர் அனுபவர்த்துக்கேற்ப விளிம்பு நிலையை உணர்ந்தவர்கள் தான். பரம்பரை கூத்தாடிகள், கணினி மற்றும் ஊடகத்துறை பணியாளர்கள், பால்முறைமை அற்றவர்கள், பாலியல் தொழிலாளிகள் என இந்நாடகத்தில் பல்வேறு தளத்தைச் சார்ந்த விளம்புநிலை மாந்தர்களும் ஒன்றிணைந்து கட்டியம் கூறுகின்றனர். சமூக அளவில் தான் தனக்காக வாழ்வதற்கான அங்கிகாரத்தை அவர்களுக்கு மொளகாப்பொடிக்கான நாடக அரங்கு வழங்கியிருக்கிறது. முதல் முதலாக அதில் அவர்களது உடல் மதிப்போடு பார்க்கவும், காட்டவும் செய்திருப்பது தான் நாடக – நெறியாள்கையாளரின் துணிச்சல். இக்கட்டியக்காரிகள் வெறும் சமூக மாற்றத்தைப் பேசுபவர்கள் மட்டுமல்ல சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர்களும் கூட என்பது வெளிப்படை.
பதிவுக்கு,
ச.அன்பு,
தலைவர்
பிரக்ஞை
(சமூக-கலை-இலக்கிய-அமைப்பு.)
செய்யாறு – 604 407.
பேச : 9003598016
செய்யாறு, அக்.09,
பிரக்ஞை சமூக-கலை-இலக்கிய-அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கட்டியக்காரி வழங்கும் எழுத்தாளர் பாமாவின் மொளகாப்பொடி என்னும் நாடகம், செய்யாறு, ஆர்.சி.எம். பள்ளி வளாகத்தில், மாலை 6.30 மணிக்கு நிகழ்ந்தது. இந்நிகழ்வில் எழுத்தாளர் பவா செல்லதுரை தலைமையேற்று பேசினார். அவரைத்தொடர்ந்து மொளகாப்பொடி என்னும் கதையை எழுதிய கதையாசிரியரான பாமா கதை உருவான சூழல் குறித்து பேசினார். அதைத் தொடர்ந்து ஸ்ரீஜித் சுந்தரத்தின் நெறியாள்கையின் கீழ், மொளகாப்பொடி நாடகம் நிகழ்த்தப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் மொழிபெயர்பாளர் கே.வி.ஷைலஜா, மற்றும் செய்யாறு கலைக் கல்லூரி பேராசியர்கள், செய்யாறு நகர முக்கிய ஆர்வளர்கள், பொதுமக்கள் என சுமார் 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, நிகழ்வினைக் கண்டுமகிழ்ந்தனர். நிகழ்வின் முடிவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கும், நாடக உறுப்பினர்களுக்கும் பிரக்ஞை சமூக-கலை-இலக்கிய-அமைப்பு, நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தது. நிறைவாக, பிரக்ஞை அமைப்பின் தலைவர் ச.அன்பு நன்றி கூற நிகழ்வு இனிதே முடிந்தது.