வடபகுதிக்கு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பின்னர் தமது சொந்த ஊரை நோக்கித் மீளத்திரும்பிய முஸ்லிம்களின் தற்போதைய வாழ்க்கை நிலை மிகவும் வறுமைக்குட்பட்டதாகவே உள்ளது. வசதி உள்ள சிலர் (முஸ்லிம்கள்) வசதியற்ற சிலருக்கு தற்காலிக வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளார்கள். பெரும்பாலானோர் அடிப்படையான சுகாதார வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படாத நிலையில் உள்ளார்கள். மலசல கூடவசதி கிணறுகள் இல்லாத காரணத்தால் அயலில் உள்ளோரிடம் தேவை நாட வேண்டியுள்ளார்கள். இதனால் பிறரின் வெறுப்பிற்கும் இவர்கள் ஆளாக வேண்டியுள்ளது. திரும்பியவர்களில் பெரும்பாலானோர் தமது காணிகள் வீடுகளை ஏற்கனவே யுத்த சூழலில் விற்ற காரணத்தால் இன்று அவர்களுக்கான இருப்பிடம் இல்லாதுபோய் உள்ளது. இருப்பினும் தாம் பிறந்து வாழ்ந்த இடம் என்ற காரணத்தால் திரும்பவும் பெரும் எதிர்பார்ப்போடு வந்த பலருக்கு யாழ்ப்பாணத்து சூழல் ஏமாற்றத்தையே கொடுத்தள்ளது. இவ்வாறு மீளத் திரும்பியவர்களில் பெண்களே அதிகளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிலும் ஏற்கனவே குறிப்பிட்டது போல தனித்து விடப்பட்ட பெண்கள் நிலை கவலைக்கிடமானது. ஏனெனில் இப்பெண்கள் தொழில் வாய்ப்பைப் பெறுவதென்பது மிகவும் கடினமாகவே உள்ளது. புதிய சூழலில் தமது அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத வருமானப் பற்றாக்குறை காரணமாக பல குடும்பத்துப் பெண்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆரம்பத்தில் திரும்பியவுடன் அதாவது 1990 களில் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து சென்று 20 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் பிறந்த இடத்திற்குத் திரும்பிய போது அவர்களுக்காக UNHCR – சில வீட்டுப் பொருட்களையும் அரசு ஒரு கிழமைக்கான முத்திரைப் பொருட்களையும் 5000 ரூபா பணத்தை மட்டுமே கொடுத்தது. உறவினர்கள் உதவியுடன் தற்காலிக வீட்டை அமைத்தும் பாடசாலையிலும் தெரிந்தோர் வீடுகளிலும் மீண்டும் இடம்பெயர்ந்த வாழ்க்கை முறையிலேயே இவர்கள் வாழ்கின்றார்கள். இது தொடர்பாக மீளத் திரும்பியோர்களில் ஒருவர் குறிப்பிடும் போது கணவர் காணாமல் போய்விட்டார். அவர் இல்லாததால் அவருக்கு முத்திரை இல்லை. அவரை வெளியூரில் இருக்கிறார் எனப் பதிந்துள்ளார்கள். சொந்தக் காணி இல்லை. பிறந்த ஊர் என வந்துள்ளோம். தொழில் இல்லை. வடை வண்டில் போட விருப்பம். மாகாண சபையில் அனுமதி கேட்டம். அதற்கும் முதல் 5000 ரூபா தேவை. குடும்ப அட்டை எடுக்க 1400 ரூபா வேணும். குழந்தையுடன் கஷ்டப்படுகிறேன். எங்கட வீட்டில மலசல கூடம் இல்லை. அரசு இடம்பெயர்ந்தோர் என்ற வகையில் எமக்கு உதவுவது இல்லை. அதுவும் எம்மைப் போன்ற பாதிக்கப்பட்ட பெண்களை கவனிப்பதே இல்லை” எனக் குறிப்பிட்டார்.
கணவன் காணாமல் போனதால் அவதியுறும் மற்றொரு பெண் குறிப்பிடுகையில் “எனக்கு வயது 33 புத்தளத்தில் 12 வருட இடப்பெயர்வு வாழ்வுக்குப் பிறகு 2010.10 மாதம் யாழ்ப்பாணம் வந்தோம். எனது கணவர் வேறு மதத்தில் இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர். ஆனால் அவரது அப்பா முஸ்லிம். தில்லையடி புத்தளத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. நீர்கொழும்பு பெரிய முல்லையில் இருந்தோம். அவர் உடுப்பு வியாபாரம். வீட்டோடு வைத்து செய்து வந்தார். அந்த வேளையில் வேறு மதத்தில் இருந்து இஸ்லாத்துக்கு வந்தோரைக் கடத்தினார்கள். 2006.08.12 அன்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்புக்கு வேலைக்காகப் போனவரை காணவில்லை. பிற்பகல் விசாரித்தபோது புகையிரத நிலையத்துக்கு அருகில் வைத்து யாரோ வானில் பிடித்துப் போனதாக சொன்னார்கள். இது கூட இரண்டாம்; நாள்தான் தெரிந்தது. இதுவரை தேடுகிறோம். ஆனால் இன்னும் அவர் வரவில்லை. 5 வயதுக் குழந்தையுடன் வாழுறேன். அவர் காணாமல் போனபோது பிள்ளைக்கு 9 மாதம். வருமானம் இல்லை. உணவு சமைத்து தெரிஞ்சவங்களுக்கு கொடுத்து வாறன். சொந்தக்காரருடன் இருக்கிறன்”.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை காதி நீதிமன்றம் இல்லாத காரணத்தால் மனைவியை விட்டு வேறு திருமணம் செய்த ஆண்களிடம் இருந்து தாபரிப்பு பெறும் பெண்களும் விவாகரத்து கோரும் பெண்களும் அதிக சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இவர்களுக்கான காதி நீதிமன்றம் இன்னும் யாழ்ப்பாணத்தில் இயங்கவில்லை. புத்தளத்தில் வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்தோருக்கான காதிநீதி மன்றத்திற்கே செல்லல் வேண்டும். மேற்கூறப்பட்ட வறுமை நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளத்திற்கான பிரயாணச் செலவைப் பொறுப்பெடுக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் இல்லை. இதனால் காதிநீதிமன்றுக்கு முறைப்பாடு செய்ய முடியாது பலர் உள்ளார்கள். ஆண்கள் சிலரோ இதனை நன்கு உணர்ந்து கொண்டு வெளி மாவட்டங்களில் குடும்பமாக வாழ்கின்றார்கள். சிலர் புத்தளத்தில் காதிநீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட தாபரிப்புப் பணத்தைக் கூட ஒழுங்காக செலுத்தாது ஏமாற்றி வருகின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஓர் பெண் குறிப்பிடுகையில் “ எனக்கு இருதய நோய். நோயைத் தெரிந்து விளங்கிக் கொண்டு திருமணம் செய்தார். ஒரு மகன் இருக்கிறார். 2008 ஆம் ஆண்டு; வேறு திருமணம் செய்து போய்விட்டார். காதிகோட் 2 நாளுக்கு 150 ரூபா தாபரிப்பு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு சொன்னது. சில நாள் தந்தார். திரும்ப எங்கோ போய்விட்டார். எங்கு எனத் தெரியாது. அம்மாவோடு இருக்கிறேன். அவர் மட்டி பிடிக்கப் போகிறவர். சகோதரங்கள் ஏதாவது தருவினம். எனக்கு மருந்து எடுக்க காசு தேவை. சின்ன முகைதீன் பாடசாலையில் இருக்கிறம். எம்மோடு 14 குடும்பம் வசிக்கின்றது. இது தவிர கதீஜா பாடசாலையிலும் 15 குடும்பம் வரையில் இருக்கிறார்கள். நிறுவனங்கள் கூட பெண்கள் அதுகும் தனித்த ஏழைப் பெண்கள் என எதுவும் செய்யவில்லை. அரசாங்கமும் அப்பிடித்தான். இருக்க இடம் இல்லை. யாழ்ப்பாணத்தில் காதி நீதிமன்றம் இல்லை. ஆண்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். தாபரிப்பை ஒழுங்காகக் கட்டுவதில்லை. முதலில் புத்தளக் காதிக் கோட் தான் விசாரித்து தீர்ப்பளித்தது. எனது கணவர் எங்கையெனத் தெரியாது. அவரைத் தேடிப்போக என்னால் முடியாது. பணம் இல்லை. யாரும் உதவுவதில்லை. என்னை மாதிரிப் பெண்களுக்குத் தாபரிப்பு என்பது முக்கியமானது. அதை ஒழுங்காகக் கிடைக்கச் செய்தால் எங்களுக்கு பிரச்சினை இல்லை”.
காதிக்கோட் இல்லாத காரணத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலையில் வாழும் மற்றொரு பெண் கருத்துக் கூறும் போது “சமையல் செய்து வாழ்கிறேன். எனது கணவர் என்னை விட்டு போய் வேறு பெண்ணோடு வாழ்கிறார். சந்தேகம் அவருக்கு. இதால தினம் சண்டை பிடிப்பார். அடித்து உதைப்பார். விவாகரத்து கேட்டு அடிப்பார். என்னோடு வாழப் பிடிக்கவில்லை என்று சண்டை பிடிப்பார். கொடுமை தாங்காது விட்டு விலகி விட்டேன். இன்னும் தாபரிப்பு எதுவும் தாறதில்லை. காதிக்கோட்டில் வழக்குப் போடணும். ஆனால் யாழ்ப்பாணத்தில் காதிக்கோட்டில்லை. அதனாலே புத்தளம் வரண்டாம். எனக்கு அங்கு போக வசதி இல்லை. தாபரிப்பு ஏதாவது கிடைத்தால் நல்லம். பிள்ளைகளோடு கஸ்டம். எனக்கு காணி எனது பெயரிலேயே இருக்கிறது. அதில் அவரது அம்மா இருக்கிறா. வீடு எனது மகளது பெயரில் இருக்கிறது. ஆனால் அவர் வாடகைக்கு விட்டு உழைக்கிறார். நான் வீடில்லாமல் இருக்கிறேன். சிலர் என்னை சமாளித்துப் போக சொல்கிறார்கள். புத்தளத்தில் காதிக்கோட்டுக்கு அறிவித்தேன். அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திரும்ப போய் முறையிட பண வசதி இல்லை. காதிக்கோட் பெண்களுக்காக எதுவும் செய்வதில்லை. எங்களது கருத்தை கேட்பதில்லை. எங்களுடைய இடத்தில் காதி கோட் இருக்க வேணும். பிள்ளைகளோடு இருக்கிற எங்களால் ஒவ்வொரு தவணைக்கும் எப்பிடிப் புத்தளம் போக முடியும்? அத்தோடு காதிக்கோட்டில் ஆண்களே இருக்கினம். இயல்பாகவே தனிப்பட்ட பிரச்சினையை பிறரோடு பகிர்ந்து பேசிப்பழகவில்லை. அதனால எங்கடை குடும்பப் பிரச்சினைகளை விளக்கிச் சொல்ல கூச்சமாகவும் இருக்கும். சொல்லா விட்டால் எங்களிலை பிழை போலவும் இருக்கும். யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிக்கும் எனது பிரச்சினையை அறிவித்துள்ளேன். இன்னும் முடிவு கிடைக்கவில்லை” எனக் குறிப்பிட்டார்.
வடக்கில் வாழ்கின்ற கணவனால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்கள் பலருக்கான நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதில் எவருமே அக்கறை காட்ட முன்வரவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மௌனம் சாதிக்கின்றார்கள். பெண்கள் பிரச்சினைகள் பலருக்கும் பெரிய பிரச்சினையாகத் தோன்றவில்லை. இடப்பெயர்வு வாழ்க்கையில் கணவனால் ஏமாற்றம் பிள்ளைகளது எதிர்காலம் வருமானம் இல்லாத வறுமைநிலை அடிப்படை வசதிகள் இல்லாத வாழ்க்கை முறை இவ்வாறு சொல்ல முடியாத சிக்கல்களை பெண்கள் நாளாந்தம் அனுபவிப்பதை எம்மில் பலர் கண்டும் காணாமலும் செல்கின்றோம். பெண்கள் அமைப்புகளால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் கூட பல சந்தர்ப்பங்களில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இவற்றை வெளிக் கொண்டு வருவதில் பல தரப்பினரும் தயக்கம் காட்டுகின்றனர். இவ்வாறான சில பிற்போக்குத்தனமான காரணங்களால் வடபகுதியில் மீளத்திரும்பிய தனித்துவிடப்பட்ட முஸ்லிம் பெண்கள் சமூகமானது கவனிப்பாரன்றி தனித்துவிடப்பட்டதாக உள்ளமை வேதனைக்குரியது
நல்ல கட்டுரை. இன்ஷா அல்லாஹ் எல்லாம் வல்ல இறைவன் நம் எல்லோருக்கும் சாந்தியையும் சமாதானத்தையும் தந்தருள்வானாக – azifair-sirkali.blogspot.com