மூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்)
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், –இலங்கை
உயர்ந்திருக்கும் அம் மலையின் உச்சி மீது
வெற்றுப் பார்வையுடன் ஒரு பெண்
அவளது இரு புறமும்
சிறு குழந்தைகளிரண்டு
கீழே
முற்புதர்கள் கற்சிதறல்கள்நாகம், விரியன், மலைப்பாம்புகள் நிறைந்திருக்கும்
பாதாளம்
அகன்ற வாயைத் திறந்துகொண்டு
அவளது தலைக்கு மேலே
இரவின் கனத்த இருட்டு
ஊளையிடும்
மழையும் கோடை இடியும்
வெற்றியுடன் ஒன்றிணைந்து
ஏற்றி விட்டவர் எவரோ
இவளை
இந்த மா மலை மீது
மெதுவாகக் காலடியெடுத்து வைத்தபடி
கீழ் விழிகளால் இருபுறமும் பார்த்தபடி
அவளைக் கைவிட்டு அவர்களெல்லோரும் சென்றுவிட்டாலும்
கீழே மரக் கிளையொன்றில்
மறையக் காத்திருக்கும் சூரிய ஒளியில்
பிசாசொன்றைப் போல காற்றுக்கு அசையும்
இற்றுப் போன புடைவைத் துண்டொன்று
சீராக முட்புதர்களை வெட்டியகற்றி
பாதையொன்றை அமைத்தபடி
இந்தக் கொடுமையிலிருந்து தப்பித்து
நாளைக் காலையில்
அவள் வருவாளா ஊரொன்றுக்கு
நாளைய சூரியன் உதிக்கும் வேளை
இருக்குமோ
அவளது ஆடையும்
மரத்தின் கிளையொன்றில் சிக்கியபடி
தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்
http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html