ரதன்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் அதிர்ச்சியளித்த செய்தி ஒரு நடிகைக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும் 90 கசையடிகளும் என்பதே. இந்த நடிகை ஈரானைச் சேர்ந்த Marzieh Vafamehr ஆவார். இவர் அவுஸ்திரேலிய தயாரிப்பில் உருவான My Tehran for Sale(எனது தெஹரான் விற்பனைக்கு) என்ற படத்தில் நடித்தமைக்காகவே இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஊடகங்களும் கலாச்சாரமும் என்ற அரச சட்டத் திணைக்களத்தினாலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவரது கணவரும் திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான கருத்துத் தெரிவித்த போது “விசாரணை இத் திணைக்களத்திற்கு வெளியே நடைபெறுகின்றது. விசாரிப்பவர்களுக்கு கலை பற்றிய எந்தவித ஆழமான அறிவற்றவாகள். இவர்களால் எவ்வாறு ஒரு நீதியான விசாரணையைக் மேற்கொள்வார்கள் “ எனத் தெரிவித்தார். Marzieh Vafamehr இப் படத்தில் (My Tehran for Sale) ஆபாசமாக நடித்தமைக்காகவே கைது செய்யப்பட்டார். ஆபாசம் என்றவுடன் ஹொலி-கொலிவ+ட் படங்களே ஞாபகத்துக்கு வரும். ஈரானிய படங்களில் அப்படியெல்லாம் எதிர்பார்க்க முடியாது. இவர் இப் படத்தில் முக்காடு போடாமைக்கும் தலைமயிரை கழுத்தளவிற்கு; வெட்டி நடித்தமைக்குமே இத் தண்டனை.
1979 இஸ்லாமிய புரட்சியின் பின்னரும் சரி அதற்கு முன்பாகவும், ஈரானில் பெண்கள் சினிமாவில் நடிப்பதற்கு பல தடைகள் இருந்தன. ஆண் நடிகர், பெண் நடிகரை தொட்டு நடிக்கக் கூடாது, அதே போல் பெண் நடிகை ஆண் நடிகரை தொடமுடியாது. பேண்கள் முக்காடுடன் கண்கள் மட்டுமே தெரியும் அளவிற்கு உடைகள் அணிய வேண்டும். போன்ற கட்டுப்பாடுகள் இருந்தன. இதனால் பெண்கள் நடிப்பதற் முன் வரவில்லை. Sheida என்ற படத்தில் பெண் தாதி, காயம் பட்ட நோயாளியை தொட்டுத் தூக்கிய காட்சிக்கு எதிராக குரல் கொடுக்கப்பட்டது. இவ்வாறன காட்சிகள் தடை செய்யப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது. 1930ல் தயாரிக்கப்பட்ட முதல் மௌனப்படத்தில் நடிக்க பெண்கள் எவரும் முன் வரவில்லை. Sedighe Saminejad Mehranghiz முதல் பெண் நடிகையானார். இவர் வீதியில் சென்ற பொழுது, மக்கள் கற்களால் எறிந்தனர். Tahmineh Milani என்ற ஈரானிய பெண் இயக்குனரின் “இரு பெண்கள்” என்ற படம் மிக முக்கியமானது. இவர் இந்தப் படம் தயாரிப்புக்கான அனுமதிக்கு எட்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. The Fifth Reaction என்ற Milani ன் படத்துக்கு ஈரானிய “இஸ்லாமிய கலாச்சார வழிகாட்டி”( Ministry of Culture and Islamic Guidance) அமைச்சு அனுமதி கொடுத்த பின்னரே படம் தயாரிக்கப்பட்டது. படம் வெளியான பின்னர் எழுந்த எதிர்ப்பால் இவரை சிறையில் தள்ளிவிட்டார்கள். Hidden Half என்ற இவரது மற்றொரு படத்தின் பின்னரும் இவர் சிறையிலடைக்கப்பட்டார்.
இந்த வருடம் வேறு பல இயக்குனர்களையும் திரைப் படைப்பாளிகளையும் கைது செய்துள்ளார்கள். பி.பி.சியில் வெளியான பார்சிய மொழி விவரணத்திரைப் படத்திற்கான படத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களையும் விசாரித்துள்ளது ஈரானிய அரசு. இதைத் தவிர நடிகை Pegah Ahangarani (Women’s Prison) என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளருக்காக வெளிப்படையாக பிரச்சாரம் செய்தார். உலக பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்ள செல்வதற்கு முன்பாக இவர் கைது செய்யப்பட்டார். பெண்கள் உதைபந்தாட்ட அரங்கினுள் செல்ல அனுமதிக்க வேண்டும் என பிரச்சாரத்தில் ஈடுபட்ட Maryam Majd என்ற புகைப்பட பத்திரிகையாளரும் கைது செய்யப்பட்டார். இவர்களைத் தவிர Mahnaz Mohammadi (இயக்குனர்)யும் கைது செய்துள்ளது. நிழல்களின்றி பெண்கள் (Women with out Shadows) என்ற விவரணத் திரைப்படத்தை இவர் இயக்கியுள்ளார்.Mohammad Rasoulof ,Jafar Panahiasser Saffarian, Hadi Afariden, Shahnama Bazdar தயாரிப்பாளர் முயவயலழரn ளூயாயடிi போன்றோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் ,Jafar Panahiasser க்கு திரைப்படங்கள் தயாரிக்க 20 வருட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.This is not a Film என்ற படத்தின் இணை இயக்குனர் Mojtaba Mirtahmasb ம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இப் படத்தினை ஒரு USB தடியில் பதிவு செய்து கேக் ஒன்றினுள் வைத்தே கான்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொண்டார். கைது செய்யப்பட்ட இயக்குனர்களின் படங்களை கான்ஸ் திரைப்படவிழாவில் திரையிட்டதை ஈரான் கண்டித்துள்ளது.
2.
My Tehran for Sale (எனது தெஹரான் விற்பனைக்கு)
நான் சிறுமியாக இருந்த பொழுது வண்ண உடைகள் உடுப்பதற்கு தடைசெய்யப்பட்டிருந்தது. ஜீன்ஸ் அணியக் கூடாது. வெள்ளை நிற சொக்ஸ், ளநெயமநசள தடைசெய்யப்பட்டிருந்தது. பாடசாலையில் சிரித்தால் கூட குறை கூறுவார்கள். அது இஸ்லாமிய புரட்சிக் காலம். எப்பொழுதும் துக்கத்துடனேயே இருக்க வேண்டும். கேள்விகள் கேட்கக் கூடாது. எழுதப்படாத விதிகள் பல. இவற்றையும் சட்டங்களை நாங்கள் கடைப்பிடிக்கவேண்டும். இந்த நடைமுறை பாடசாலை, பல்கலைக் கழகம் வேலைத்தளம் என தொடர்கின்றது. எனது கதையே இப் படம் என்கின்றார் இயக்குனர் Granaz Moussavi இவரும் ஒரு பெண் இயக்குனர். 1974ல் பிறந்த இவரது தந்தை தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒரு ஒலிப்பொறியியலாளர். இவர் 17வது வயதில் தனது முதலாவது இலக்கிய விமர்சனத்தை வெளியிட்டார். இவர் ஒரு கவிஞருமாவார். நாடகங்களிலும் நடித்துள்ளார். 1997ல் அவுஸ்திரெலியாவிற்கு குடி பெயர்ந்து அங்கு திரைப்பட இயக்குனர் பயிற்சியும் பெற்றுள்ளார்.
“நான் ஈரானுக்கு திரும்பி வந்த பொழுது Marzieh Vafamehr ஐ சந்தித்தேன். அவர் தன்னை ஒரு நடிகையாக நிலைநாட்ட பல கடினமான படிகளைச் சந்தித்தார். நெறி, ஒழுக்க முறைகள், கட்டுப்பாடுகள் போன்றவற்றிற்கூடாக தன்னை நடிகையாக நிலையாக்க கடினமாக உழைத்தார். பல சவால்களைச் சந்தித்தார். எங்களது கதையைக் கூற வேண்டும் என விரும்பினேன்” என இயக்குனர் Granaz Moussavi இப் படம் பற்றி கூறியுள்ளார்.
Marzieh ஒரு நடிகை ஒரு Fashion Designer. தெஹரானில் வாழ்ந்து வருகின்றார். ஈரானின் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் தன்னை நிலை நிறுத்த முடியாமல் திண்டாடுகின்றார். கலைத் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் உள்ளது. இதனால் இவர் underground வாழ்விற்கு தள்ளப்படுகின்றார். அங்கு வெளிநாட்டில் உள்ளவரை திருமணம் செய்வதன் மூலமே நாட்டை விட்டு வெளியேறலாம் என்ற கருத்து வெளிப்படுகின்றது. அவ்வாறான ஒரு இரவு விருந்தில் சமனைச் சந்திக்கின்றார். இருவரது நட்பும் நெருக்கமாகின்றது. ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். திருமணம் செய்ய நினைக்கின்றனர்.இவர் அவுஸ்திரேலிய ஈரானியன்;. சமன் Marzieh ஐ அவுஸ்திரெலியா வருமாறு அழைப்பு விடுக்கின்றார். அழைப்பை ஏற்று அவுஸ்திரெலியா செல்கின்றார். அங்கு அவருக்கு புதிய சவால்களை; காத்திருக்கின்றன. ஈரானில் செய்ய முடியாதவற்றை அவுஸ்திரெலியாவில் சாதித்தாரா? முதலில் Marzieh விசா மறுக்கப்படுகின்றது. பின்னர் அகதி கோரிக்கையும் நிராகரிக்கப்படுகின்றது.
இப் படம் ஈரானின் இறுக்கமான உள் கட்டமைப்பிற்குள் சிறுவர்கள் இளைஞர்கள் படும் உளவியல் ரீதியான பிரச்சினைகள வெளிப்படுத்துகின்றது. வெளி உலகத்திற்கு தெரியும் ஈரான் நிஜமானதல்ல. அதனுள் ஒரு Underground உலகமே உள்ளது. சட்டங்களுக்கும் விதிகளுக்கும் எதிராக அனைத்துச் செயற்பாடுகளும் செய்யப்படுகின்றன. இதனைக் கண்டித்து கடுமையான தண்டனைகளும் உள்ளன. அப்படி இருந்தும் அதனை மீறவே விரும்புகின்றனர். பெண்கள் தங்களது சுதந்திரங்களை இவ் நிழல் உலகத்தில் அனுபவிக்கின்றனர். இது ஈரானில் மட்டுமல்ல ஆங்காங்கே பல நாடுகளில் காணப்படுகின்றன. அண்மையில் கனடாவில் மொன்றியல் நகருக்கருகாமையில் Lev Tahor என்ற ய+த கிராமம் இவ்வாறான கட்டுப்பாட்டுக்குள் இயங்குவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒரு உலகத்தில் இருந்து மற்ற உலகத்திற்கு சுதந்திரத்துக்காக செல்லும் போது பல சவால்களைச் சந்திக்கநேருகின்றது. அவுஸ்திரெலியா அகதியாக வருபவர்களை மிகவும் கடுமையாக நடாத்துகின்றது. இது உலகறிந்த விடயம். ஒரு சில காட்சிகள் மூலமே இதனை இவ் எதிர்வினையை இயக்குனர் வெளிப்படுத்தியுள்ளார். இப் படம் 2009 ரொரண்ரோ சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. வேறு பல திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டுள்ளன. இப் படத்தில் வழமையான ஈரானிய திரைப்படங்களில் காணப்பட முடியாத நெருக்கமான காட்சிகள் சில உள்ளன. இப் படம் முழுக்க முழுக்க ஈரானில் படமாக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்புக்கு பின்னான கோர்வைகள் அனைத்தும் அவுஸ்திரெலியாவில் செய்யப்பட்டுள்ளன. இப் படத்தை தயாரிப்பாளருக்கு ஈரானில் திரையிடும் எண்ணமிருக்கவில்லை.
ஈரானின் பெண்கள் சந்திக்கும் துயரங்களைப் பற்றி பல படங்கள் வெளிவந்துள்ளன. Underground உலகமும் பல படங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுடன் ஒப்பிடும் பொழுது இப் படம் ஒரு படி பின்னாலேயே உள்ளது. ஆனால் ஈரான் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் இப் படத்தை பலரை பார்க்கச் செய்வதுடன், மீண்டும் ஒரு தடவை ஈரானின் பெண்களுக்கு எதிரான காட்டுமிராண்டித் தனமான சட்டங்களுக்கு எதிரான குரலை வலுப்படுத்தியுள்ளது.
இறுதியாக கைது செய்யப்பட்ட நடிகை தனது முக நூலில் எழுதிய வாசகம் இது. இது அவரது வலியை வெளிப்படுத்தியுள்ளது. “சுதந்திரத்துக்கு சுவர்கள் இல்லை. கனவியல் கோட்பாட்டாளர்கள் இக் கருத்தை நிராகரிப்பார்கள். ஞாபகத்தில் வைத்திருங்கள் மெய்க்கோல் என்பது சுதந்திரம், உண்மை மற்றும் மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பதாகும். அதன் பின்னர் நீங்கள் என்ன எந்த இயலையும் கூறலாம்”
இயக்குனர் Granaz Moussavi; செவ்வியை கேட்க பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்
http://blog.globalfilm.org/?p=706