தலைப்பிலி கவிதை

  கி.கலைமகள் (இலங்கை)

1.
கைகளை  உள்ளே நுளைத்து 
நீர் கொண்டு பிசைந்து
காய்த பின்னும்  

விரல்களின்; இடுக்குகளில்
உதிராமல் ஒட்டியிருக்கும் 
மண்

மண்ணின் ஓவ்வொரு துகள்களிலும்
ஒட்டியிருக்கும்
ரத்த துளிகள் பற்றி
தெரியாது அவளுக்கு
மீண்டும் கைகளை  உள்ளே நுளைத்து
உருட்டி தட்டி
நீர் கொண்டு பிசைந்து
பிடித்து வைத்துக்கொண்டிருக்கின்றாள் 
2.
என்னைக்  கலைத்துப் போடும்
அருகாமைக்குள்
ஒட்டித் தூங்கும் காமம்

மூலைக்குள் குவிந்து கிடக்கிறது
நான் வெறுத்தொதுக்கிய கனவுகள் போல் காதலும்

எத்தனைமுறை கூட்டி
வெளித்தள்ளினும் – மீண்டும்
அதே இடத்தில் வந்தமர்கின்றன
மீன் திண்ணும் காக்கைள் போல்

           3.
வானுலவும் தேவர்கள் சாபத்தால்
பூமியில் பிறந்த தேவதைகள்

பிற ஆடவர் நோக்கியும் 
மணாளன் சொற்தவறியும்
கற்பு நிலை மாறியும்
சாபங்களால்  சபிக்கப்பட்ட தேவதைகள்

மணாளனை அடைவதே தவமாய் 
இறுதியில் அதுவே மோட்சமாய்
நெடுந்தவம்

என் நினைவின் மீதேறும்
உன் வாசiனையை என்ன செய்வது

நீயும் உன் காதலியை சபிக்கலாம்
பாதாள உலகம் செல்ல
காதலின் நிமித்தம் சாபமிடலாம்
                                                

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *