எவ்வளவிற்குப் பாதிப்பைக் கொடுத்ததோ அதே அளவிற்கே இடப்பெயர்வும் அதன் பின்னரான இராணுவமயமாக்கலுக்குட்பட்ட மீளக் குடியமர்தலும் தொடர்சியான மற்றும் புதுமாதிரியான சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன.குறிப்பாக யுத்தத்தின் பின்னரான காலகட்டத்தில் பெரிதும் தனித்து விடப்பட்ட பெண்கள் அதாவது பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் போன்றவற்றில் பாதுகாப்பு, பொருளாதாரம், சுகாதாரம் என்பன எவ்வளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன? அதுமட்டுமன்றி மீள்கட்டுமானம் என்னும் போது இன்று வரை எவ்வித இருப்பிட வசதிகளும் இன்றி முகாம்களில் வாழ்ந்த போது பயன்படுத்திய தரப்பாள் எனப்படும் கூடாரத்தையே அதிகளவில் பெண்கள் தங்கள் இருப்பிடத்தை அமைப்பதற்குப் பயன்படுத்தியுள்ளனர்.வன்னியில் உள்ள தமது வாழ்வாதாரத்தையே திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாத போது இப்பெண்களால் எவ்வாறு தமது பிள்ளைகளின் கல்விக்காக மற்றும் எதிர்கால சவாலுக்காகப் போராட முடியும்? எங்கோ ஓர் பகுதியில் இருக்கும் சிலருக்கு மட்டும் தையல் இயந்திரத்தையோ அல்லுது சுயதொழில் உபகரணத்தையோ வழங்குவதால் எந்தப் பயனுமில்லை.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் பிரச்சினைகள் தீர்ந்து விடப்போவதுமில்லை. அடிப்படையில் எவ்வாறான சிக்கல்கள் உள்ளன என்பது பற்றி முதலில் தெரிந்து கொண்டு செயலாற்ற முற்படுதல் அவசியம். குறிப்பாக வடகிழக்கு அமைச்சுப் பதவிகளில் அங்கம் வகிக்கும் சிறுபான்மையின அமைச்சர்கள் பெண்கள் தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தயக்கம் காட்டுகின்றனர். வன்னிப் பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் தடுப்பு முகாம் வாழ்க்கையின் பின்னர் பலரும் தமது சொந்த இடங்கள் நோக்கி பெரும் எதிர்பார்ப்போடும் இனியாவது எமக்கு நிம்மதி கிடைக்குமா? என்ற ஏக்கத்தோடுமே சென்றமை அனைவரும் அறிந்ததே. அவ்வாறு சென்றவர்களுக்கு அங்கு நொருங்கிய வீடுகளும் அழிந்து போன விவசாய நிலங்களும் மட்டுமே திரும்பக் கிடைத்தன. சிலருக்கு அதுவும் இன்றி இருப்பிடம் இராணுவ முகாமாக மாறியுள்ளது. வாழ்வாதாரமாக இருந்த தொழில், கால்நடைகள் மற்றும் வாழ்க்கையைக் கொண்டு செல்லக் கூடிய அனைத்தும் அழிந்த போதும் ஏதோ ஓர் நம்பிக்கையின் அடிப்படையில் தத்தமது இடங்களை நோக்கி மக்கள் சென்றடைந்துள்ளனர். இன்று அவர்களுக்குத் தமது பிரதேசத்திற்கு வந்து விட்டோம்
என்ற ஒன்றைத் தவிர வேறு எவ்விதமான நன்மையும் கிட்டவில்லை. ஏனெனில் பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாரும் சந்தேகக் கண்ணோடு தான் இன்னமும் பார்க்கப்படுகிறார்கள். தொடர் கண்காணிப்பின் அடிப்படையிலும் விசாரணைகளின் மத்தியிலுமே அவர்கள் தமது வாழ்நாட்களைக் கழிக்கின்றனர். இவர்களில் அதிகளவில் இராணுவமயமாக்கப்பட்ட தனிச் சூழலில் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவது பெண்களே. ஆண்களின் பாதுகாப்பின்றி வாழும் பெண்களின் வீடுகள் அடையாளம் காணப்பட்டு இரவு வேளைகளில் கதவே இல்லாத வீடுகளில் அத்துமீறி செல்வதுவும், சந்தேகம் இருப்பதாகக் கூறி விசாரணை எனப் பயமுறுத்துவதும், ஏற்கனவே எல்.ரி.ரி யினருடன் தொடர்பு இருந்ததை அறிந்ததாகவும் அதனை தாம் தெரிந்து கொண்டு வந்ததாகவும் இரவு வேளைகளில் யாருமற்ற நிலையில் பெண்களை அடக்குமுறைக்குக் கீழ்படிய வைத்தல் போன்றன அதிகளவில் இடம்பெறுகிறன. அதிகாரிகள் பகலில் மக்களை சந்தித்து “இரவு நேரங்களில் யார் வந்தாலும் உள்ளே அனுமதிக்கதீர்கள்” எனக் கூறுவாரகள். ஆனால் அசம்பாவிதம் இடம்பெறும் இடத்து முறையிடச் செல்லும் பெண்களை விசாரிப்பதற்கு முதல் நாள் இரவு வந்து அத்துமீறல் நடாத்தியவரும் உடனிருப்பார். அதனை விட வேடிக்கை என்னவென்றால் “இரவு உங்கள் வீட்டுக்கு வந்தோரை அடையாளம் காட்ட முடியுமா?” எனக் குறிப்பிட்ட நபரே விசார்ப்பார். அது மட்டுமன்றி “இரவு நேரங்களில் வந்து தொந்தரவு தருவோர் இராணுவத்தினர்தான் என்று எப்படித் தெரியும்?”என்ற விசாரணைகள் மூலம் பல விடயங்கள் வெளிவராது தடுக்கப்படுகின்றன
மீட்கப்பட்டபிரதேசமான வன்னிக்குள் இவ்வாறான கேள்விகள் எவற்றை இன்னமும் சொல்ல முனைகின்றன? அத்தோடு முறைப்பாடு செய்யப் போகும் பெண்களிடம் விசாரணைக்கு அழைப்பதற்கு எனக் கூறி தொலைபேசி இலக்கங்களை வேண்டி வைத்துக்கொண்டு பின்னர் இரவு வேளைகளில் அழைப்பை ஏற்படுத்தி தொந்தரவு செய்வது போன்றன அதிகமாக இடம் பெறுகின்றன. மொழிப் பிரச்சினை வன்னிப் பகுதியில் பெண்கள் அனுபவிக்கும் மிக முக்கியமான பிரச்சினையாகும். தமது முறைப்பாட்டைக் கூட ஒழுங்கான முறையில் முறையிடுவதற்குக் கூட அவர்களால் முடிவதில்லை. பெண்கள் கூட்டாக இணைந்து பெண்கள் பிரச்சினைகளுக்கத் தீர்வு காணுவது தொடர்பாகவோ அல்லது தமது தேவைகள் தொடர்பாகவோ ஒன்று சேர முடியாத சூழல் உண்டு. அதாவது மூன்று பேருக்கு அதிகமாக ஓர் இடத்தில் கூடவோ அல்லது கூடி உரையாடவோ அனுமதி இல்லை. பெரும்பாலும்பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். பாதுகாப்புக் காரணமாக பெண்கள் மற்றும் ஆண்கள் ஒன்று சேர்வது தடை செய்யப்பட்டுள்ளது.அவ்வாறன்றி ஓர் விடயம் தொடர்பாக உரையாட வேண்டுமானால் உதாரணமாக கல்வி, சிரமதானம் போன்ற விடயங்களுக்கு ஒன்று கூடும்போது கூட அயலில் உள்ள முகாமிற்கு அல்லது இராணுவத்தினரிடம் கட்டாயம் தெரியப்படுத்துவதோடு அடையாள அட்டை இலக்கத்தைக் கொடுப்பதும் அவசியமானது. வீட்டில் உணவு சமைக்கும் போது வீட்டில் உள்ள அங்கத்தினருக்கு அளவாக மட்டும் சமைத்தல் வேண்டும் எனவும் ஓரிருவருக்கு அதிகமாக சமைத்தால் அது சந்தேகக் கண்ணோடு விசாரிக்கப்படுகின்றது.
வன்னிப் பகுதிகளில் PTA அனுமதி பெற்ற தொண்டர் அமைப்புகள் மட்டுமே உட்செல்வதற்கு அனுமதி உண்டு. அங்கு இருக்கின்ற குழுக்கள் கூட வருமானத்தைப் பெறாமல் சேவை அடிப்படையில் இயங்குவதாகவே உள்ளன. இவற்றின் நடவடிக்கைகள் செயற்பாடுகள் என்பன தொடர்பாக ஐயங்கள் நிலவுகின்றன. அதாவது மாத வருவாயின்றி யாருக்காக இவர்கள் செயற்படுகிறார்கள் என விசாரிப்பதுவும், அவர்கள் நடவடிக்கைகள் பற்றியும் வெளி இடங்களுக்காக குறிப்பிட்ட பெண்கள் பயணிப்பது பற்றியும் அவதானிக்கப்படுகின்றன. பெண்கள் குழுக்களுடன் இணைந்து செயற்படுகின்ற பெண்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போது அருகில் உள்ள முகாமில் அறிவித்து விட்டே வருதல் வேண்டும். அவ்வாறு வரும் போது தொலைபேசி இலக்கம் தவறாது குறித்துக் கொள்ளப்படும். அதுமட்டுமன்றி குறிப்பிட்ட பெண்கள் தமது கடமையைச் செய்யும் நேரங்களில் அல்லது நிகழ்வுகளில் பங்கு பற்றிக் கொண்டிருக்கும் போது, நள்ளிரவு நேரங்கள் என எவ்வித தயக்கமுமின்றி விசாரணை என்ற பெயரில் அழைப்பை மேற்கொண்டு இம்சைப்படுத்தும் பொறுப்பான பதவிகளில் உள்ளோரும் இருக்கிறார்கள். இதன் காரணத்தால் சொந்த விடயங் காரணமாகவேயேனும் பெண்கள் பிரயாணிப்பது மட்டுப்படுத்தப்படுகின்றது. வன்னிப் பகுதியில் இன்னமும் மின்சார வசதிகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் பெரும்பாலான மக்கள் தற்காலிக தங்குமிடங்களிலேயே இருப்பதால் மின்சாரம் தனிப்படப் பெற முடியாதுள்ளது. தற்போதைய சூழலில் பெரும்பாலானோர் தமது தொடர்பாடல் வசதிக்காக கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர்.
“சாதாரணமான பெண்கள்எதிர்ப்பது அல்லது குரல்
கொடுப்பது என்பதுமுடியாத காரியம்.
ஏனெனில் அவர்கள்தமக்கு எந்த நேரமும்
எவ்விதமான பாதுகாப்பும்
இன்றி இருப்போராகும்.அவர்கள் எப்போதும் எந்த
நேரமும் விசாரணைக்காக
அழைக்கப்படலாம“
அவ்வாறு பயன்படுத்தும் தொலைபேசிகளுக்குத் தமது வீடுகளிலேயே மின்சாரம் இல்லாத காரணத்தால் பொது இடங்களுக்கு கொண்டு சென்று மின்வலுவூட்டவேண்டியுள்ளது. தனியான கடைகளில் தமது தொலைபேசியை மின் வலுவூட்டுவதற்கு ஒருதடவைக்கு 10 ரூபா வீதம் அறவிடப்படுகின்றது. இது அப்பிரதேசத்தைப் பொறுத்தவரை மிக அதிகமான தொகையாகும். இதனால் இலவசமாக மின் வலுவூட்டுவதற்காக வழங்கப்படுகின்ற இராணுவ சிற்றுண்டிச் சாலைகளில் கொண்டு சென்று மின்வலுவூட்டும் போது அங்கு இருக்கும் சிலர் பெண்பிள்ளைகளின் தொலைபேசியில் உள்ள சிம் அட்டையை கழற்றுதல், மாற்றுதல், இலக்கங்களை எடுத்தல்,
இரவு நேரங்களில் அழைப்பை ஏற்படுத்தி குடும்பங்களில் சந்தேகம் மற்றும் பிரச்சினைகளை உருவாக்கதல், தமக்கு ஏற்ப இசைந்து நடக்கும்படி வற்புறுத்தல் மற்றும் மிரட்டுதல், விரசமான படங்களை அனுப்புதல் என்பன சர்வசாதாரணமாக இடம்பெறுகின்றன. இவற்றை வன்னியில் உள்ள சாதாரணமான பெண்கள் எதிர்ப்பது அல்லது குரல் கொடுப்பது என்பது முடியாத காரியம். ஏனெனில் அவர்கள் தமக்கு எந்த நேரமும் எவ்விதமான பாதுகாப்பும் இன்றி இருப்போராகும். அவர்கள் எப்போதும் எந்த நேரமும் விசாரணைக்காக அழைக்கப்படலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் உத்தியோகத்தர்கள் சிலர் கூட நீதிப்படி நடக்காது பாதிக்கப்படுகின்ற பெண்கள் பக்கத்தினையே குற்றம் சாட்டுதல், அசட்டுத்தனமாகப் பெண்கள் பிரச்சினையை எடுத்தல், பக்கச்சார்பாக நிற்றல், மத அடக்குமுறை, பெண்கள் குழுக்களுடன் வன்முறையாளர்கள் முரண்படல், வீட்டுவன்முறைகளை சாதாரண விடயமாகக் கருதல் போன்றன இடம்பெறுகின்றன. ஆகவே எல்லாவிதமாகவும் பெண்கள் சுரண்டலுக்கு உள்ளாகுவதனால் எதிர்காலத்தில் அவர்கள் தமது பிரச்சினைக்கு தீர்வு கேட்டு எங்கு செல்ல முடியும்?
மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் வன்னியைப் பொறுத்தவரை சமூகத்தில் பலவாறான சீரழிவுச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக கசிப்புக் காய்ச்சுதல், விற்றல் என்பன வெளிப்படையாக எவ்வித அச்சமும் இன்றி இடம்பெறுகின்றன. கைது செய்யப்பட்டவர்கள் சில நிமிடங்களில் விடுதலை செய்யப்படுவதும் மீண்டும் அவர்கள் தொடர்ந்து அதே வேலையைச் செய்வதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பெண்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சுயதொழில் முயற்சிக்கு ஆதரவு கிடைப்பதில்லை. வறுமை மற்றும் பொருளாதாரம் ஈட்ட முடியாமை போன்ற காரணங்களால் மேற்கூறப்பட்டவை மட்டுமன்றி பெண்களை தவறான வழிக்கு இடடுச் செல்லும் நிலையும் உருவாகின்றன. அத்தோடு பெரும்பாலான வியாபார மற்றும் உணவுச் சாலைகள் போன்றவற்றை இராணுவத்தினரே கொண்டு நடாத்துகின்றனர். தொலைபேசி அட்டைகள் முதல் குளிர்பானங்கள் என்றவாறாக அதிகம் விற்பனை ஆகின்ற பொருட்கள் பாதுகாப்புப் பிரிவினரிடத்திலிருந்து விற்கப்படுவதால் பெண்பிள்ளைகள் அங்கு செல்ல வேண்டிய தேவைஇருக்கின்றது. இதனால் தேவை இல்லாத பிரச்சினைகள் மட்டுமன்றி பெரும்பாலானோர் தாம் மேற்கொள்ள வேண்டிய தொழில் வாய்ப்பை செய்ய முடியாது இருக்கின்றனர். வன்னிப் பகுதியில் ஆகக் குறைந்தது வீட்டுக்கு ஒருவரேனும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.மாணவர்களின் கல்வி இன்னமும் சரியான முறையில் தொடரவில்லை. அவர்கள் தம்முள் இன்னமும் எவ்விதமான பொருளாதார முன்னேற்றத்தையும் கொண்டிராத போதும் கூட ஊனமுற்ற இராணுவத்தினருக்கென பற்றுச் சீட்டுப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அவர்களிடம் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் பெண்கள் மற்றும் சமயக் குழுக்களினூடாக விற்கப்படும் பற்றுச் சீட்டுக்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் தம்மிடையே எவ்விதமான புனர்வாழ்வு தொடர்பான விடயங்கள் பற்றி சிந்திக்க முடியாதுள்ளது.
தடுப்பு முகாமில் உள்ள பெண்கள் பற்றியும் தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது எதிர்காலம் பற்றியும் சிந்திக்கும் போது, சமூகத்தின் பார்வை பல இடங்களில் பிழையான கண் கொண்டே பார்க்கின்றது. ஏனெனில் விடுவிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்கள் ஒழுக்கம் தொடர்பான விடயங்கள் பற்றிய ஐயங்கள் எம்மத்தியில் உள்ளோரால் முன்வைக்கப்படுகின்றன. முன்னாள் போராளிப் பெண்கள் விடுதலை தொடர்பாகவும் கல்வி, எதிர்காலம், குடும்ப வாழ்க்கை, தொழில் வாய்ப்புப் போன்ற அடிப்படை உரிமைகள் மற்றும் தேவைகள் பற்றி பெண்களே கதைக்க வேண்டியது பொருத்தமானதாகும்.
சந்தேகத்தின் பேரில் கைதாகி விடுவிக்கப்பட்டோர் விடுதலையின் பின்னர் கூட சந்தேகத்தின்அடிப்படையில் பின் தொடரப்படுவதால் இயல்பாக வாழ முடியாமலும், அச்சுறுத்தல் மற்றும் வீடுகளில் இருக்கும் போது கூட தினமும் உன்னிப்பாக கவனிக்கப்படுதல் என்பன அவர்களைப் பழைய வாழ்விலிருந்து இன்னமும் மீள முடியாது செய்கின்றன. அவர்கள் சமூகத்தோடு இணைவதில் தயக்கம் காட்டும் நிலை இதனாலேயே உண்டாகின்றது. ஆகவே மீளக்குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற பெண்கள், சிறுவர்கள் தொடர்பான வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் கல்வி, புனர்வாழ்வுக்கு அவசியமான விடயங்களைக் கருத்தில் கொள்வதோடு மட்டுமன்றி அவற்றினை மேற்கொள்ளும் போது பெண்கள் குழுக்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளின் கருத்துகள் அபிப்பிராயங்களைக் கருத்தில் கொண்டு எவ்வாறான பிரச்சினைகள் உள்ளன, அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் போன்ற விடயங்களில் கலந்தாலோசித்து செயற்பட வேண்டியது இன்றியமையாததாகும். இவ்வாறு செயற்படும் சந்தர்ப்பங்களில்;, பெண்களுக்கெதிராக இடம்பெறுகின்ற வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் பாரபட்சங்கள் போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
கோசத்திலிருந்து ஊடறுவிற்காக சந்தியா