ஜெயப்பிரகாஷ், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி (jayajnu@gmail.com )
ஊடறு, விடியலின் வெளியீடாக வந்த “பெயரிடாத நட்சத்திரங்கள்” (2011) எனும் கவிதைத் தொகுப்பில் 26 ஈழப்பெண் போராளிகளின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் நகுலா எழுதிய “பெயரிடாத நட்சத்திரங்கள்” எனும் கவிதையின் தலைப்பே இத்தொகுப்பிற்கும் வைக்கப்பட்டுள்ளது. கவித்துவம் நிரம்பிய இத்தொகுப்பு வாசிப்பாளனுக்கு ஈழப்பெண் போராளிகளைப் பற்றிய புதிய அனுபவங்களைத் தருகிறது. |
கோடிக்கணக்கான யானைகளில் ஆயிரம் தேசங்கள் படையெடுத்து வந்தாலும் கண்ணில் பயம் அறியாது நெஞ்சிலே வீரத்தையும் தோளிலே துப்பாக்கியையும் ஏந்தி ஈழவிடுதலைக்காக போராடிய பெண் போராளிகளின் கவிதைத் தொகுப்பு “பெயரிடாத நட்சத்திரங்கள்” ஆயுதம் தாங்கிய போரிலக்கியம்.
ஊடறு, விடியலின் வெளியீடாக வந்த “பெயரிடாத நட்சத்திரங்கள்” (2011) எனும் கவிதைத் தொகுப்பில் 26 ஈழப்பெண் போராளிகளின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் நகுலா எழுதிய “பெயரிடாத நட்சத்திரங்கள்” எனும் கவிதையின் தலைப்பே இத்தொகுப்பிற்கும் வைக்கப்பட்டுள்ளது. கவித்துவம் நிரம்பிய இத்தொகுப்பு வாசிப்பாளனுக்கு ஈழப்பெண் போராளிகளைப் பற்றிய புதிய அனுபவங்களைத் தருகிறது. “இதுவல்லோ கவிதை” என்கிற எண்ணம்தான் ஒவ்வொரு கவிதையின் வாசிப்பிலும் உணரமுடிகிறது. இந்நூலை வாசிக்கத் தொடங்கும்போது பிடித்தமான வரிகளை அடிகோடிடுவதற்கு வண்ணம் பூசும் பேனாவை எடுத்துக்கொண்டேன். ஒவ்வொரு கவிதையின் வாசிப்பிலும் உணர்கிறேன், பிடித்தமான வரிகளை வண்ணமிடுவதென்றால் எல்லா வரிகளையும் வண்ணமிட வேண்டும். இருப்பினும் சில வரிகளையாவது வண்ணமிட்டு வைத்துக் கொள்ளலாம் என நினைத்து வண்ணமிட்டால் வண்ணமிடப்படாத வரிகளைப் பார்த்து நான் ஒரு வகையான குற்ற உணர்ச்சிக்குத்தான் ஆளாக நேர்கிறது. இதை அவரவர்களின் வாசிப்பில்தான் உணரமுடியும். சாதியம் வேரோடிபோன இந்திய மண்ணில் அதன் அதிகாரத்தை எதிர்த்து “யாருக்கும் நான் அடிமை இல்லை” என்றார் டாக்டர் அம்பேத்கர். இந்த எண்ணம் எந்த ஒரு மனிதனையும் தலைநிமிர்வோடு வாழச்செய்கிறது. யாருக்கும் நான் அடிமை இல்லை என்கிற உணர்வைத்தான் இவர்களின் கவிதைகளில் பெரும்பாலும் காணமுடிகிறது. இது அடிப்படையில் மேல், கீழ் என்கிற உணர்வையே தகத்தெறிகிறது.
பொதுவாக, சமூக மாற்றத்தை விரும்பி எழுதுகிறவர்கள் களத்தில் நின்று போராடுவதில்லை. களத்திலே போராடுகிறவர்கள் எழுதுவதுமில்லை. களத்தில் நின்று போராடி மக்களின் விடுதலைக்காக தம் வாழ்வை அர்ப்பணிப்பவர்கள் எழுதுகிறபோது, உண்மையிலேயே அவ்வெழுத்துக்கள் வலிமையோடு இருக்கின்றன. இந்த வகையில் “பெயரிடாத நட்சத்திரங்கள்” சிறப்புத்தன்மை பெறுகிறது. போர்க்களத்தில் ஆயுதமேந்திப் போராடிய பெண் இராணுவ வீரப்புலிகளின் கவிதைகள் துடிப்புள்ள நம் இரத்தங்களை இன்னும் சூடேற்றுகிறது.
“கண்ணுறக்கம் தவிர்த்த நடுநிசி
எல்லை வேலியில்
நெருப்பேந்துகிறது என்னிதயம்
ஓராயிரம் விழிகளின் உறக்கத்துக்கான
என் காவலிருப்பு”
இனவெறியர்களிடமிருந்து மக்களை காப்பாற்ற காவலிருக்கும் கவிஞர் அம்புலிக்கு யுத்தம் பிடிக்காது என்றும் கால நிர்ப்பந்தமே அவரை கட்டாயப்படுத்தியிருக்கிறது என்றும் கூறுகிறார். யுத்தத்தை அம்புலி வெறுத்தாலும், யுத்தம் செய்தே ஆக வேண்டும் என்கிற நெருக்கடி வருகிறபோது அவருடைய மறப்பண்பு வெளிப்படுகிறது. “அஞ்சியும் கெஞ்சியும்/ பணிந்தும் குனிந்தும்/ வாழ்வதல்ல என் விதி” இவ்வரிகள் அடிமைபட மறுத்த அம்புலியின் வீர உணர்வு. இக்கவிஞர்களிடத்தில் எப்பொழுதும் ஒரு வெற்றியுணர்வை காணமுடிகிறது. அது வீரத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது; கோழைத்தனத்திற்கும் வீரம் கற்பிக்கும் இவர்களின் வரிகள். போர்க்களத்தைப் பாத்திராத, அதைப் பற்றி அறியாத கவிஞர்களுக்கு வாய்க்காத வரிகள் இவர்களின் கவிதைகளில் காணமுடிகிறது என்றால் அதுதான் அவர்கள் வாழ்ந்த வரலாறு. கவிஞர் கலைமகளின்
“மீட்சி பெறுகின்ற என்
உணர்வுகளில் உறுதி பிறக்கிறது
சற்றுத் தூரத்தை
உற்றுப் பார்க்கிறேன்
சலனமற்று சாவை எதிர்பார்த்து
எனக்காகக் காத்திருக்கிறது
பகைவீடு”
எனும் வரிகள் போர்க்களத்தில் அவர் தன்மீது கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. இத்தொகுப்பில் சிலகவிதைகள் இந்தியாவைப் பற்றியும் பதிவுசெய்து இருக்கின்றன. “இந்தியா என்கின்ற இமாலயம்/ எங்கள் மனப்பரப்பில் இடிந்து/ நொறுங்குகின்றது” என்கிறார், கவிஞர் ஆதிலட்சுமி. இதைப் பற்றி விரிவாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தின் விளைவால் ஏற்பட்ட உள்ளக்குமுறல் அது. ஆதிலட்சுமியின் மற்றொரு கவிதையில் இந்திய இராணுவம் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. மக்கள் தங்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்த ஓரிடத்தில் இந்திய இராணுவம் செய்த அட்டூழியம் பற்றியது.
“இங்கேதான்
இந்தியன் ஆமி குடியிருந்தது
கதிரை, மேசை
கதவு, ஜன்னல் எல்லாம் உடைத்து
சப்பாத்தி சுட்டது.
பள்ளி வளவில் உயர்ந்து நின்ற
தென்னைகளைத் தறித்து
வீதிக்குத் தடையாய்ப் போட்டது”
ஆதிலட்சுமியின் இந்த கவிதை வரிகள் இந்திய இராணுவம் செய்த அட்டூழிய கொடுமைகளில் ஒரு சிறிய இம்மியினுள் ஒரு கூறைத்தான் இங்கே படம்பிடித்துக் காட்டியுள்ளது. உண்மை வெளிப்பட்டே தீரும் என்பதை சொல்லுவதற்குக் கூட ஆதிலட்சுமிக்கு “உண்மை ஒருபோதும்/ புதைகுழிக்குள் உறங்காது” என்று போர்க்களம் சார்ந்த சொல்லே வசப்படுகிறது. இவர் “அரச பயங்கரவாதத்தின் அடிமைகளல்ல நாம்” என்பதை எதிரிகள் உணரவேண்டும் என்று நினைத்தவர்.
கவிஞர் வானதி அவர்களின் போர்க்கவிதை பெண்பற்றிய சிந்தனையையும் முன்வைக்கிறது. “ஆணாதிக்கப் புயலால் அடுப்படியில் அகதியாகி தீயோடு மௌனயுத்தம் நடத்துபவளே புறப்பட்டு வா” என விளிக்கும் வானதி
“எம் இதயம் நேசிக்கும்
தேசத்து விடுதலை
எமக்கு எட்டும்போது – அங்கே
பெண்ணடிமைக்கு
சமாதி கட்டப்படும்
சமுதாயத்தின் பிற்போக்கு சிந்தனைகளுக்கு
புதைகுழி தோண்டப்படும்” – என்கிறார்.
நாம் எதிர்பார்த்திருந்த ஈழவிடுதலை நிகழ்ந்திருக்குமேயானால், அதன்பிறகு ஈழப்பெண்கள் வானதி கருதுவது போன்று நடத்தப்பட்டிருப்பார்களா? அல்லது கடந்த கால பெண்ணின் வாழ்க்கைமுறை போன்றே பிற்போக்குசிந்தனைகளின் பாதையில் அவர்களின் வாழ்க்கை நடத்தப்பட்டிருக்குமா? என்பன போன்ற கேள்விகள் இருந்தாலும் ஆணின் அடக்குமுறையில் வாழ்ந்த பெண்கள் போர்க்காலத்தில் தம் தேசத்து ஆண்களைப் போலவே எதிரிதேசத்து ஆண் இராணுவ வீரர்களுக்கு எதிராக போர்முனையில் ஆயுதம் ஏந்தி போராடிய வரலாறு கடந்த காலத்தில் பல நூற்றாண்டுகளாக ஆணதிகார சமூகத்தில் நிலவிவந்த பெண்பற்றிய சிந்தனையை முறித்துப் போட்டிருக்கிறது.
“மழையில் நனைந்து
அடுத்த ஆடை மாற்றாது
‘பொஸிசனில்’ நின்றதை
பசி மறந்து
தூக்கம் மறந்து
எதிரி எல்லையை மீறுவதெனில்
எம் உடல்களின் மேலாகத்தான் என
உறுதியோடு காவலிருந்ததை
கூறுவாயா?”
இதுபோன்ற வானதியின் கவிதைகள் ஒரு உத்வேகத்தை தருகின்றன. கவிஞர் கஸ்தூரியின் கவிதைகள் ஈழத்தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனைகளை நாட்டாமை செய்வதாய் சென்ற அயல்நாட்டைப் பற்றி அதிகமாகவே பேசுகிறது. நேரடியாக ஒளிவு மறைவுயின்றி மூஞ்சிலே காரியை துப்புவதைப் போலத்தான் இருக்கிறது. இதுபற்றி கஸ்தூரியின் காலம் அவளது கைபிடித்து நகர்கிறது, அவை வெற்றுடல்கள் அல்ல வெடிமருந்துப் பொதிகள், வல்லரசுகள் போன்ற கவிதைகள் பேசுகின்றன. “வல்லரசுகளே/ நீங்கள் வாழ்வதற்காக/ வாழ்பவர்களை வதைப்பவர்கள்/ உங்கள் வல்லமை/ ஆய்வு செய்யப்படுகையில்/ வளர்முக நாடுகளே/ வாழா வெட்டியாகின்றன/ நீங்கள்/ நிலவில் வரலாறு படைக்க/ மண்ணை மானபங்கம் செய்பவர்கள்” இப்படி வல்லரசுகளின் முகங்களை கூர்மையான கவிதை நகங்களால் கீறும் கஸ்தூரியின் கவிதைகள் வல்லரசு நாடுகளைப் பற்றிய போலிமுகத்தையும் திரையிட்டு காட்சிப்படுத்துகிறது.
நாமகள் என்ற கவிஞரின் கவிதை தன்னுடைய காதல் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளது. இருவர்களுமே ஆயுதமேந்திய போராளிகள். வேறொரு முகாமிற்கு மாற்றப்பட்ட காதலனைப் பார்க்க முடியாமல் தவிக்கும் காதலி எத்தனையோ முறை பார்க்க முயற்சி செய்தும் பார்க்க முடியாமல், அவர்களின் உணர்வுகளைப் பறிமாறிக்கொள்ள கடிதங்களே துணைசெய்கின்றன. இப்படியே நீடீக்கிற வாழ்க்கையில் “எப்போதாவது தெருவில்/ அவசர இயக்கத்தில்/ கண்டுவிட நேர்கையில்/ சந்திப்பை வரவேற்பதாய் அவன்/ கண்கள் ஒருமுறை விரியும்/ மறுகணம் ஆழ்ந்து மூடிக்கொள்ளும்./ அவனுக்குத் தெரியும்/ எனக்கு அது போதுமென்று” என்கிறார், கவிஞர் நாமகள். போர்க்காதல் விடுதலையை வென்றெடுக்கத் துடிக்கும் துப்பாக்கிகளே. கவிஞர் வானதி 1991-இல் ஆனையிறவு சமரின்போது ‘எழுதாத என் கவிதை’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியுள்ளார். அக்கவிதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதை வானதி (கேப்டன்) எழுதிக்கொண்டிருந்தபோது அவருடைய அருகில் இருந்தவர் போராளி நாதினி. 2000- ஆம் ஆண்டில் ஆணையிறவுத் தளம் மீட்டெடுத்ததின் பின் போராளி நாதினி ‘எழுதாத உன் கவிதை’ என்ற தலைப்பில் கேப்டன் வானதியின் எண்ணம் நிறைவேற்றப்பட்டதற்கு எழுதியுள்ளார். அக்கவிதையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. எழுதாத என் கவிதை என்பது வானதியின் கடைசிக் கவிதையென்றால் எழுதாத உன் கவிதை என்பது நாதினியின் முதல் கவிதை.
“ ‘எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்’ எனும்
உன் கவிதை எழுதப்பட்டுவிட்டது.”
“உன் துப்பாக்கி முனையை விட
உனது பேனா கூர்மையானதால்,
எழுதாது போன உன் கவியை
எழுதுவதற்காக இவர்
உயிரைக் கோலாக்கி
உதிரத்தை மையாக்கினர்.
எழுதாத உன் கவிதையை எழுதிவிட்டு
எம் செல்வக் குழந்தைகள்
உன்னிடமே வந்துவிட்டனர்.”
நாதினியின் இந்த கவிதையை முழுமையாக வாசிக்கிறபோது இது முதலில் கவிதை எழுதத் தொடங்கும் ஒருவரின் கவிதை இது என்று சொல்லும்படியாக இல்லை. கவிதை இலக்கியத்தை எழுதி எழுதி பயிற்சிப் பெற்ற ஒருவர் எழுதிய கவிதை போன்றே உள்ளது. இது நாதினியின் முதல் கவிதை என்றால் அவரின் வாழ்வின் பின்னணி அவரை இந்த அளவிற்கு எழுதத் தூண்டியுள்ளது எனலாம்.
கவிஞரும் போராளியுமான கஸ்தூரியின் மறைவுக்குப் பின்னர் பாரதி என்ற போராளி கஸ்தூரியைப் பற்றி எழுதுகையில் அவரின் இலக்கியத்தை விமர்சனம் செய்வதாகவும் அமைந்துள்ளது. அது பின்வருமாறு அமைகிறது. “உனை இனங்காணத் தவறிய/ இலக்கிய உலகின்/ இதயத்திற்கு/ இப்போதாவது தெரிந்திருக்கும்/ நீ இமயமென்று./ துப்பாக்கி மட்டுமே/ தூக்கத் தெரிந்தவர்கள் என்ற/ தப்பான வெற்றுக் கோள்களுக்கு/ நீ வெடிகுண்டு”. பாரதி கஸ்தூரியை இலக்கிய இமயம் என்று வருணித்துள்ளார். இவர்களுடைய இலக்கியங்களும் ஆயுதக்கருவிகளாவே இருந்துள்ளன. இவர்கள் ஏந்துகின்ற பேனாக்கள் ஆயுதக் கருவிகளை உற்பத்திச் செய்யும் தொழில்கூடமாகவும், இவர்கள் எழுதிய கவிதையைத் தூக்கிச் சுமந்த காகிதங்கள் ஆயுதக்கிடங்குகளாகவும் இருந்துள்ளன.
1988-ல் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் செய்த படுகொலை தொடர்பாக கவிஞர் தூயவள் “அந்நியன் பிடியில் எங்கள் கிராமம்” எனும் தலைப்பிட்ட கவிதையை எழுதியுள்ளார். “இறந்து கிடப்பவர்கள் ஈழத் தமிழர்கள் அல்ல இந்தியாவின் மனிதாபிமானமும் ஜனநாயகமும்தான்” என்று கூறும் தூயவள் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிடுகிறார். இந்திய இராணுவத்தின் மீது அவள்கொண்ட கோபம் எரிமலையாய் கொழுந்துவிட்டு திமிறி எழுகிறது.
“இத்தனைக்கும்
பதில் சொல்ல வேண்டும்
எம்மால் இயன்றவரை
இறப்பதற்கு முன்னர்
ஓர் இந்திய ஆமியையாவது
அழிக்க வேண்டும் என்ற வெறி
கொழுந்து விட்டு எரிகிறது.”
கவிதைகளின் அம்சத்தைப் பொறுத்து பலவகையில் சிறப்படையும் “பெயரிடாத நட்சத்திரங்கள்” எனும் இக்கவிதைத் தொகுப்பில் 31.10.1996-ல் யாழ்ப்பாணம் மாணவர் ஒன்றியம் செம்மணி புதைகுழி பற்றி வெளியிட்ட துண்டுப்பிரசுரமும் பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இத்துண்டுப் பிரசுரம் “அமைதி நகரின் மன்னம்பெரிகள்” எனும் தலைப்பில் அமைந்துள்ளது. மன்னம்பெரி என்பது ஒரு போராளியின் பெயர். அவரை 1971-ல் ஏற்பட்ட கிளர்ச்சியின் போது கைதுசெய்து, கடுமையாக சிதைத்து, வீதி ஊர்வலமாக இழுத்துச்சென்று பின் துப்பாக்கியாள் சுட்டுக்கொண்டுள்ளனர்.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளை இயற்றிய 26 கவிஞர்களின் கவிதைகளைப் பற்றி நாம் இங்கு விரிவாகப் பேசவில்லை. இந்த தொகுப்பை வாசிப்பவர்களுக்கு இக்கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளைக் குறித்து முழுமையாக அறிய வாய்ப்புண்டு. இத்தொகுப்பில் 26 பெண்போராளிகளைப் பற்றிய குறிப்பு கொடுக்கப்பட்டிருந்தால் இந்நூலை வாசிப்பவர்களுக்கு அது பயனுள்ளதாக அமையும். இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் விருதுகளுக்காக எழுதப்படாமல், விடுதலைகளுக்காக எழுதப்பட்டவை. இவற்றில் அஞ்சிய வார்த்தைகளோ, கெஞ்சி நடுங்கும் சொற்களோ இல்லை. எதிரிகளின் இரக்க மனப்பான்மையையோ இன்ன பிறர்களின் உதவியையோ கேட்கவில்லை. கோடிக்கணக்கான யானைகளில் ஆயிரம் தேசங்கள் படையெடுத்து வந்தாலும் கண்ணில் பயம் அறியாது நெஞ்சிலே வீரத்தையும் தோளிலே துப்பாக்கியையும் ஏந்தி ஈழவிடுதலைக்காக போராடிய பெண் போராளிகளின் கவிதைத் தொகுப்பு “பெயரிடாத நட்சத்திரங்கள்” ஆயுதம் தாங்கிய போரிலக்கியம்.
nice