இரண்டாவது இரவு

சமீலா யூசுப் அலி,(மாவனல்லை,இலங்கை)

27.07.2011

இரண்டாவது இரவு
தாய் தந்தை அன்பை மொத்தமாய் பெற்றவள்
களைத்ததோர் காலையிலே நான் ஜனித்தேன்.

மூத்ததைப்போல் மூக்கில்லை
முன்நெற்றி ரோமமில்லை
அவள் அசல் நான் நகல்

அவள் ஆட்டத்தில் கால் நொண்டும் தொட்டில்
அவள் அணிந்து அரைப்பழசாய் போன ஆடைகள்
அவள் விளையாடி காது பிய்ந்த கரடி பொம்மை
அவள் புதுவாசம் நுகர்ந்து,ஓரம் சுருண்ட ‘ஏழுநிறப்பூ’
பல் பதிந்த அழிறப்பர்,கம்பீரமிழந்த பென்ஸில்
அவள் திருமணம் குதியுயர் காலணியாய் அதிர நடக்க
என் மணமோ ஏழைச்செருப்பாய் நொய்ய நடந்தது.
ஒவ்வொரு விரலிலும் இவ்விரண்டு பரிசு மோதிரமாய் அவள்
மருதாணி விரல்களில் பாதி தேய்ந்தோர் மோதிரம் வெட்க நான்

அதிகமாய் வலித்ததன்று.
அவள் பார்த்து நிராகரித்த ஆண்மகனுடன் என் முதலிரவு.
அது முதலிரவன்று, ‘இரண்டாவது இரவு’

1 Comment on “இரண்டாவது இரவு”

  1. கவிதை வரிகளில்
    கவலை கொப்புளிக்கிறது…
    மணம் கணத்து ரணப்படுகிறதே…!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *