தமிழில் சந்தியா (யாழ்ப்பாணம்)
இலங்கை ஒரு பௌத்த நாடு என்ற வகையில் 2600 வது சம்புத்த ஜெயந்தியை முன்னிட்ட நிகழ்வுகள் முக்கியமானதாக இருக்கும். ஆனால், பௌத்த மதத்தின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் ஆட்சியாளர்கள் போரின் போது பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வு குறித்து யோசித்திருப்பார்கள்’ என ஊடகவியலாளர் மாலினி மானெல் பெரேரா தனது செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். |
போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் இலங்கைப் படையினரால படைத்தரப்பினரால் நடாத்தப்பட்டு வரும் வியாபார நிலையங்களில் தமது கைத்தோலைபேசிக்கு காசு போட செல்லும் கணவனை இழந்த பெண்களுடைய கைத் தொலைபேசி இலக்கங்களைக் குறித்துக் கொள்ளும் படைத்தரப்பினர் இரவு வேளைகளில் இப்பெண்களுக்குத் தொலைபேசி எடுத்து தொல்லை கொடுத்து வருவதாக ஊடகவியலாளர் மாலினி மானெல் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
‘போரின் போது தமது கணவனை இழந்த பெண்களின் வறுமை காரணமாக மன்னாரின் ஒரு பிரதேசம் பாலியல் தொழில் செய்யும் பகுதியாக மாறியுள்ளது என்பது மிகவும் துயர்தரும் செய்தியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் போரில் கணவனை இழந்து குழந்தைகளுடன் வாழும் இப் பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த எத்தகைய திட்டங்களும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.’ என்றும் போருக்குப் பின்னரான மீள்குடியேற்றம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தின் உண்மையான அர்த்தத்திற்காக இம்மக்கள் தொடர்ந்தும் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது செய்திக் கட்டுரையில் தெரிவித்த முக்கிய விடயங்கள்
– வடபகுதி மக்கள் தங்களின் துயரங்கரளைப் பேசுவதை விட அமைதியாக இருப்பதே மேலானது எனக் கருதுகின்றார்கள். சிறிலங்கா அரசாங்கத்தின் உதவிகள் அவர்களுக்கு கிடைத்து வந்தாலும் பெரும்பாலான மக்கள் இதுவரை முகாம்களிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.
– போரின் போது இடம்பெயர்ந்த வடபகுதி மக்கள் மீளக் குடியமர்தப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறி வந்தாலும், அவர்கள் இன்னமும் இடைத்தங்கல் முகாம்களில் தான் வாழ்ந்து வருகிறார்கள். இம்மக்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளை அமைக்க தனிய பத்துத் தகரங்களைத் தான் பெற்றிருக்கிறார்கள். பலருக்கு உலர் உணவுக்கான உதவியும் நிறுத்தப்பட்டிருக்கிறது.தொழில் வாய்ப்புக்களும் அற்ற நிலையில், உலர் உணவுக்கான உதவியும் இல்லாது இம்மக்கள் பெரும் நெருக்கடியைஎதிர்கொண்டுவருகின்றார்கள். இத்தகைய காரணங்களாலும், மன அழுத்தங்களாலும் இது வரை 48பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
– இவர்களுள் வயதானவர்கள், இளையவர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாரும் அடங்குவர். இவர்களில் பலர் நன்கு கல்வி கற்றவர்கள். ஆனால் இவர்கள் தற்கொலை செய்ததற்கான காரணம் எதுவும் இதுவரை மர்மமாகவே உள்ளன இவற்றிற்கான காரணங்களும் தெரியவில்லை.
– வடபகுதியில் பெருமளவிலான நிலங்கள் இலங்கைப் படைத்தரப்பினராலும், பல்தேசிய நிறுவனங்களாலும் கையகப்படுத்தப்பட்டு வருகின்றது. இக்காணிகளின் உரிமையாளர்களோ என்ன செய்வது என அழுத வண்ணமுள்ளனர்.
– வடபகுதியின் பலவிடங்களில் இன்னமும் உயர்பாதுகாப்பு வலயங்கள் நடைமுறையில் இருக்கின்றது. பெரும்பாலான பிரதேசங்களில் சிறிலங்கா படைத்தரப்பினர் நிர்வாகத்தை நடாத்தி வருகிறார்கள். இப்;பகுதிகளில் ஆட்கடத்தல்களும், காணாமல் போதல்களும் பாலியல் வல்லுறவுகளும் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணமுள்ளது.
இப்பகுதிகளில் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் என அம்மக்கள் விருப்பம் கொண்டுள்ள போதிலும், தமக்கான நீதியும், தமது வாழ்வும் தமக்கு கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றார்கள். தங்களுக்கு எல்லா அநியாயங்களும் இழைக்கப்பட்டுள்ளதாக கூறும் இம்மக்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் இழப்புக்கள் குறித்தும், காணாமல் போனவர்கள் குறித்தும் மிகவும் நொந்துபோய் இருக்கின்றார்கள். தங்களுடைய வாழ்வின் கௌரவத்தை முற்றாக இழந்து இன்று தெருவில் நிற்பதாக அவர்கள் உணர்கின்றார்கள்.
ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரையான பிரதான வீதியில் சிறிலங்கா படைத்தரப்பினர் 60 உணவு விடுதிகள் மற்றும் தங்குவிடுதிகளையும் நடத்தி வருகின்றனர். தங்களின் வாழ்வாதாரத்திற்காக எதுவும் செய்யப்படாமல் சிறிலங்கா படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய தொழில் முயற்சிகள் குறித்து இம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வடக்கில் பிரயாணம் செய்யும் ஒருவருக்கு அநுராதபுரம் மற்றும் பொலநறுவை ஊடாகப் பயணிப்பதான ஒரு உணர்வே ஏற்படும். கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் ஆங்காங்கே அரச மரங்கள் நடப்பட்டு, அதற்குக் கீழ் புத்தருடைய சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
போர் முடிவடைந்த இவ்விரு வருடங்களிலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பெருமளவில் அச்சத்துடன் வாழ்ந்து வருவதை பல உதாரணங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
மதத்தலைவர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள் எனப் பலதரப்பட்டவர்களும் பாதிக்கப்பட்ட இம்மக்களுடைய பிரதேசங்களுக்குச் சென்று உண்மைகள் குறித்து அறிந்துள்ள போதிலும், இந்த உண்மைகள் அவர்களுடைய குறிப்புப் புத்தகங்களில் மட்டும் இருப்பதாகவே காணப்படுகின்றது.
குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இந்த உண்மைகளை ஊடகங்களுக்கு வழங்க வேண்டும் என்ற உணர்வுகூட அவர்களுக்கு இல்லாதிருப்பது தான் வேதனை.
இத்தகைய கசப்பான உண்மைகள் ஊடகங்கள் மூலம் வெளியுலகுக்கு தெரியவருமாயின் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைத் துடைக்க அது உதவும். பாதிக்கப்பட்ட இந்த மக்கள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வந்த கிறிஸ்தவ மதகுருமார்கள் கொட்டியா என முத்திரை குத்தப்பட்டார்கள்.
எவ்வாறாயினும், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உண்மையான அமைதியையும், நல்லிணக்கத்தையும் உருவாக்குவதற்கு இதுவொரு அரிய வாய்ப்பு என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
2600வது சம்புத்த ஜெயந்தியை சிங்களப் பௌத்தர்கள் கொண்டாடும் இவ்வேளையில் தமிழ் மக்கள் மீளமுடியாத துன்பத்தில் மூழ்கியிருக்கின்றனர்.
இலங்கை ஒரு பௌத்த நாடு என்ற வகையில் 2600வது சம்புத்த ஜெயந்தியை முன்னிட்ட நிகழ்வுகள் முக்கியமானதாக இருக்கும். ஆனால், பௌத்த மதத்தின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் ஆட்சியாளர்கள் போரின் போது பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வு குறித்து யோசித்திருப்பார்கள்’ என ஊடகவியலாளர் மாலினி மானெல் பெரேரா தனது செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.