மறுஉருவாக்கம் என்பதன் அர்த்தம் அரசியலற்று நிர்வாணியாக உருமாறுவது என்பதல்ல. மாறாக முன்னாள் போராளிகளின் மறுவாழ்வில் அரசியல் முரண்பாடுகளை கூர்மைப்படுத்தாமல் சாத்தியமான எல்லா வகைகளிலும் அவ்வாறான முயற்சிகளுக்கு பக்கபலமானதொரு பின்தளமாக தங்களை தகவமைத்துக்கொள்ள முன்வருவது அவசியமாகும். |
முன்னாள் போராளிகள் என்றதும் முதலில் முன்னர் படித்த நாவலொன்றின் சம்பவங்களே நினைவுக்கு வருவதுண்டு. அது உலகப்புகழ்பெற்ற கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ எழுதிய ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ (Devil on Cross). அது கென்ய விடுதலைப் போராட்ட அனுபவங்களை சித்தரிக்கும் ஒரு அரசியல் நாவல்.
கென்யாவை காலனித்துவத்திலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு மாவ் மாவ் என்னும் விடுதலை இயக்கம் (Mau Mau Revolt – 1952 – 1960) தலைமைதாங்கி வெற்றி பெற்றது. போராட்டத்தின் போது மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்த மாவ் மாவ் இயக்கப் போராளிகள், போராட்டத்தின் பின்னர் வாழ்வை கொண்டு நடத்த இயலாத கையறு நிலைக்கு தள்ளப்பட்டதை மிகவும் தத்ரூபமாக தியாங்கோ சித்தரித்திருக்கிறார். காலனித்துவத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்கப் போராடியவர்கள் பின்காலனித்துவ (Post- Colonialism) எஜமானர்களிடம் தங்கள் வாழ்க்கைக்காக யாசகம் செய்யும் இழி நிலைக்குத் தள்ளப்பட்ட அவலத்தை நாவல் சிறப்பாக வெளிக்கொணர்ந்திருந்தது.
இந்த நாவலை படித்த காலத்தில் நமது சூழலில் அப்படியொரு நிலைமை வருமென்று எவரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் புதிர்கள் நிறைந்த வரலாற்று ஊர்வலத்தில் அனைத்தும் சாத்தியம்தான் என்பதை விளங்கிக் கொள்ள முடியாதளவிற்கு நமது அறிவுக் கண்களை வெற்றிக்களிப்பு என்னும் மாயமான் அலைக்கழித்திருந்தது. இப்போது எல்லாமே தெளிவாகத் தெரிகிறது ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும் என்றுதான் விளங்கவில்லை.
இன்று தமிழ்ச் சமூகம் என்பது ஒரு பின்போர் சமூகம் (Post- war society) என்பதை எந்தளவிற்கு நமது ஆய்வாளர்களும் அரசியல்வாதிகளும் விளங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். யுத்தம் மிகவும் மூர்க்கமாக இடம்பெற்ற நிலங்களில் எல்லாம் இப்படியான நிலைமையை நாம் பார்க்க முடியும். இதனை ஒரு அமெரிக்க இணையம் மிகவும் சரியாக ‘யுத்தம் பழிவாங்கிய நிலம்’ (War- revenged land) என்று வர்ணித்திருக்கிறது.
இன்று நமது மக்களும் குறிப்பாக போரில் நேரடியாக அகப்பட்ட மக்களின் வாழ்நிலையும் இப்படியான ஒன்றுதான். பச்சையாகச் சொன்னால், தோல்வியடைந்த ஈழத் தமிழர் போராட்டம் ஒரு கையறு (Vulnerable Society) நிலைச் சமூகம் ஒன்றின் உருவாக்கத்திற்கு வழிவகுத்திருக்கின்றது. இதில் எந்தவிதமான பின்பலமுமற்ற ஏழை மக்கள் தொடங்கி முன்னாள் போராளிகள் மற்றும் அவர்கள்தம் குடும்பங்கள் வரை அடக்கம். ஆனால் இந்தப் பத்தி முன்னாள் போராளிகள் குறித்தே சில விடயங்களை சுட்டிக்காட்ட எத்தனிக்கின்றது.
இந்தப் பத்தி ஏன் முன்னாள் போராளிகள் குறித்து பிரத்தியேக கவனம் செலுத்த விழைகிறது? பொதுவாகவே ஆயுத விடுதலைப் போராட்ட அமைப்புக்களில் பின்தங்கிய பகுதியைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளே அதிகளவில் தங்களை இணைத்துக் கொள்வதுண்டு. இது இயக்கங்களுக்கான ஆளணி என்ற அர்த்தத்தில் எங்கும் பொதுவான ஒன்றாகவே இருக்கிறது. நமது சூழலை எடுத்துக் கொண்டால், ஈழத் தமிழர் அரசியல் மிதவாத தலைமைகளின் கைகளிலிருந்து ஆயுதரீதியான இயக்கங்களின் கைகளுக்கு மாறிய போது, அவற்றில் அதிகளவில் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளே தன்னிச்சையாக இணைந்து கொண்டனர்.
அவர்களில் தொண்ணூறு வீதமானவர்கள் சிறுவயதில் கல்வியை பாதியில் விட்டுவிட்டு வந்தவர்கள். இவர்கள் சார்ந்த இயக்கங்கள் ஒவ்வொன்றினதும் வீழ்ச்சி இவ்வாறான பல்லாயிரக் கணக்கானவர்களை நிராதரவான நிலைக்குத் தள்ளியது. இதற்கு சிறந்த உதாரணம் புரட்சியின் மூலம் சமூகத்தை புரட்டியெடுக்கும் கனவுடன் போன பல EPRLF கீழ்மட்டப் போராளிகள் அதன் தலைமை தங்கள் குடும்பங்களுடன் ஓடியபின்னர் மேசனாகவும், கூலித்தொழிலாளர்களாகவும், ஆட்டோ ஓட்டுனர்களாகவும் தங்கள் காலத்தை கழிக்க நேர்ந்தது. ஆனால் அங்கும் வசதியான குடும்பப் பின்னனிகளைக் கொண்டவர்கள், படித்தவர்கள் தாங்கள் சார்ந்த இயக்கங்களின் வீழ்ச்சிக்கு பின்னரும் தங்கள் வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொண்டனர். இன்று வெளிநாடுகளில் வாழும் முன்னாள் போராளிகள் பலரும் அவ்வாறான வாய்ப்புக்களைக் கொண்டிருந்தவர்களே! ஆனால் எதுவுமற்றவர்களின் வாழ்க்கைதான் கேள்விக்குறியுடன் கழிய நேர்கிறது.
விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரேயொரு தனிப்பெரும் இயக்கமாக உருவெடுத்த பின்னர், அது பெரும் சாதனைகளை நிகழ்த்தியதாகச் சிலாகிக்கப்பட்ட காலத்தில் எல்லாம் அதன் ஆதாரமாக இருந்தவர்கள் அனைவரும் நாம் மேலே பார்த்த அந்த ஏழைகளின் புதல்வர்களும் புதல்விகளும்தான். இந்தக் காலத்தில் மதில்மேல் பூனையாக இருந்த தமிழ் மத்தியதர வர்க்கம் தங்களது பிள்ளைகளை படிப்பித்துக் கொண்டு ஏழைகளின் வெற்றிக்கு சீனவெடி போட்டுக் கொண்டிருந்தது.
இன்று அனாதரவாகியிருக்கும் போராளிகள் அதிகாரத்தில் இருந்த காலத்தில், அவர்களை தங்கள் உறவுகள் என்று சொல்லிக் கொள்வதில் பலரும் பெருமைப்பட்டதுண்டு. அவர்களுடன் நின்று படம் எடுப்பதிலும் அதனை மற்றவர்களுக்குக் காட்டி மகிழ்வதிலும் நம்மில் பலரும் முன் வரிசையில் நின்றனர். பிரபாகரன் ஒரு வகையில் எங்களுக்கு தூரத்து உறவு என்று சொல்லிக் கொண்டவர்கள் ஏராளம். ஆனால் இன்று?
இன்று விடுவிக்கப்பட்ட போராளிகள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். ஒரு புறம் மிகுதிக் காலத்தை எவ்வாறு வாழ்வது என்ற கேள்வி, மறுபுறம் சொந்த சமூகத்தாலேயே அன்னியமாகப் பார்க்கப்படும் நிலை என்று அவர்கள் பிரச்சனை தனித்துத் தெரிகிறது. விடுவிக்கப்பட்டவர்களை தங்களது உறவுகள் என்று சொல்லிக் கொள்ள உறவினர்களே தயங்குகின்றனர். இதுபற்றி விடுவிக்கப்பட்ட ஒரு மூத்த உறுப்பினர் சொல்லும் போது, தனது சொந்த அக்காவே தன்னை வீட்டுப்பக்கம் வரவேண்டாமென்று கூறுவதாகக் குறிப்பிட்டார்.
விடுவிக்கப்பட்டவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளவும் எவரும் முன்வருவதில்லை. இப்படியாக சமூகரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் முன்னாள் போராளிகள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். விடுதலை வாங்கித்தரப் புறப்பட்டவர்கள் இப்போது ஒரு வேளை உணவுக்காக எப்படி போராடுவது என்று தெரியாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் விடுவிக்கப்படும் முன்னாள் போராளிகள் தங்கள் வயிற்றுப் பாட்டுக்காக சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது தவிர்க்க முடியாத ஒன்றாக அமையலாம்.
இவ்வாறானவர்களின் வாழ்வை செம்மைப்படுத்தும் பொறுப்பை யார் எடுப்பது? இந்த இடத்தில்தான் புலம்பெயர் சமூகம் குறித்து கேள்வி எழுகிறது. நமது புலம்பெயர் சமூகம் முன்னாள் போராளிகள் குறித்து உண்மையிலேயே என்ன கருதுகிறது? அவர்கள் தோல்வி அடைந்தவர்கள் இனி அவர்கள் குறித்து பேசுவதற்கு எதுவுமில்லை என்று கருதுகிறதா?
போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் புலம்பெயர் சமூகம் போரில் புலிகள் வெல்ல வேண்டுமென்னும் நோக்கில் பணத்தை வாரி வழங்கியது. வருடமொன்றுக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவ்வாறு வழங்கப்பட்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது.
புலம்பெயர் சமூகம் புலிகளின் பின்தளமாக இருந்த காலத்தில்தான் அரசியல்ரீதியாக தமிழ்ப் புலம்பெயர் சமூகம் (Tamil Diaspora) என்னும் ஒரு விடயம் முக்கியத்துவம் பெற்றது. ஆரம்பத்திலிருந்தே புலம்பெயர் சமூகத்தின் முக்கியத்துவத்தை அங்கு இயங்கிய தேசியவாதிகள் என்போர் மிகவும் குறுகிய அர்த்தத்திலேயே நோக்கி வந்தனர். தங்களது பங்களிப்பு என்பது வெறுமனே நிதியைக் கொடுப்பது மட்டுமே, அந்த நிதியைக்கொண்டு போராட வேண்டிய பொறுப்பு களத்தில் இருப்பவர்களுடையதாகும் என்ற மனோநிலையே அவர்கள் மத்தியில் இருந்தது. புலிகள் பலமாக இருந்த காலம் முழுவதும் அவர்களும் அவ்வாறானதொரு சிந்தனையைத்தான் புலம்பெயர் செயற்பாட்டாளர்களுக்கு ஊட்டியும் வந்தனர்.
ஆனால் இன்று புலிகள் களத்தில் முற்றாக அகற்றப்பட்டிருக்கும் சூழலில் சரணடைந்த போராளிகளை தேவையற்றவர்கள் என்று புலம்பெயர் தேசியவாதிகள் கருதுகின்றனரா என்ற சந்தேகமே எழுகிறது. பெரும்பாலான புலம்பெயர் ஊடகங்கங்களிலும் அவர்கள் குறித்த கரிசனை வெளிப்படவில்லை. இத்தனைக்கும் புலம்பெயர் சமூகம் என்று நாம் எல்லோரும் பிரஸ்தாபிப்பதற்கான அச்சாணியாக இருந்தவர்களே அவர்கள்தான். புலம்பெயர் தேசியவாதிகள் என்போர் தங்கள் பேரப்பிள்ளைகளைக் கூட பேணிக்கொண்டுதான் புலிகளை போரிடும்படி தூண்டினர். எனவே இன்று கையறு நிலையில் கிடக்கும் மக்களை புறம்தள்ளிவிட்டு அடுத்த கட்ட அரசியலை நோக்கிச் செல்லவதாகச் சொல்வது எந்தவகையில் பொருத்தமானதாக இருக்க முடியும்?
ஆனால் அனாதரவான போராளிகள், அவர்கள்தம் குடும்பங்கள் என்பவற்றை மீளமைக்கும் பாதையை நோக்கி புலம்பெயர் சமூகம் இனியாவது வரவேண்டும் என்பதைத்தான் இந்தப் பத்தி குறித்துரைக்க முயல்கிறது. புலம்பெயர் சமூகம் தனது முக்கியத்துவத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப மறுஉருவாக்கம் செய்ய வேண்டியிருக்கின்றது.
மறுஉருவாக்கம் என்பதன் அர்த்தம் அரசியலற்று நிர்வாணியாக உருமாறுவது என்பதல்ல. மாறாக முன்னாள் போராளிகளின் மறுவாழ்வில் அரசியல் முரண்பாடுகளை கூர்மைப்படுத்தாமல் சாத்தியமான எல்லா வகைகளிலும் அவ்வாறான முயற்சிகளுக்கு பக்கபலமானதொரு பின்தளமாக தங்களை தகவமைத்துக்கொள்ள முன்வருவது அவசியமாகும். ஒரு வகையில் இது புலம்பெயர் சமூகத்தைப் பொறுத்தவரையில் தமது முன்னோர்களுக்குச் செலுத்தும் பிதிர்க்கடன் காணிக்கையாகும்.