மூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (Sajeewani Kasthuriarachchi,-சிங்கள மொழியில்)
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
—
இது என்ன விசித்திரமான தேசம்
கைக் குழந்தைகள் தவிர்த்து
ஆண் வாடையேதுமில்லை
எல்லோருமே பெண்கள்
வயதானவர்கள்
நடுத்தர வயதுடையோர்
யுவதிகள்
எல்லோருமே பெண்கள்
விழிகளில் வியப்பைத்தேக்கிய நண்ப
பாழ்பட்டுச் சிதைந்து வெறுமையான
இவ் விசித்திர நகரில்
எஞ்சியுள்ள
எல்லோருமே விதவைகள்
எமக்கெனவிருந்த கணவர்களைத் தந்தையரைச்
சகோதரரைப் புத்திரர்களை
சீருடை அணிவித்து
வீரப் பெயர்கள் சூட்டி
மரியாதை வேட்டுக்களின் மத்தியில்
புதைத்திட்டோம்
செத்துப்போனவர்களாக